![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 58
![]() இதழ் 58 [ ஏப்ரல் 26 - மே 20, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
முதலாம் இராஜேந்திரனின் திருவொற்றியூர் கல்வெட்டு 1. கல்வெட்டு அமைந்துள்ள இடம் சென்னையை அடுத்துள்ள திருவொற்றியூர் ஆதிபுரீச்வரர் கோயிலின் பிராகாரத்தில் மேற்கு மற்றும் தெற்குச் சுவரில் இடம்பெற்றுள்ளது. இது இரண்டாம் பிராகாரத்தில் இடம் பெற்றுள்ளதாக தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி தவறாகக் குறிப்பிட்டுள்ளது. இவற்றுள் தெற்குச் சுவற்றில் இடம்பெற்றுள்ள கல்வெட்டை மட்டுமே அடையாளம் காணமுடிந்தது. இந்தக் கல்வெட்டு வினாயகருக்குண்டான கோஷ்டத்தின் கீழே இடம் பெற்றுள்ளது. 2. கல்வெட்டின் நிலை எண்ணைய் குளியல் பலமுறை நிகழ்ந்ததால் அழுக்கேறி படிக்க இயலாத நிலையில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் உள்ள பல கல்வெட்டுக்கள் பெயிண்ட் முதலான வண்ணப்பூச்சுக்களால் தன் நிலையிழந்து காணப்படுகின்றன. இவற்றுள் பல முக்கியமான கல்வெட்டுக்களும் அடங்கும். விஜயகம்ப வர்மனின் கல்வெட்டு தரையில் பதிக்கப்பட்டு பலரது பாதங்களையும் தாங்கிக் கொண்டு பொறுமையாகக் காத்திருக்கிறது. 3. எழுத்தியல் எழுத்துக்கள் திருவாலங்காட்டுச் செப்பேட்டு எழுத்துக்களை ஒத்துள்ளன. குறிப்பாக ஸூ என்னும் எழுத்தின் கீழ் வளைவின் சுழி நன்கு வளைந்துள்ளது. தகாரம் நன்கு வளர்ச்சியுற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 4. பதிப்பு வரலாறு இந்தக் கல்வெட்டு 1892 ஆம் ஆண்டறிக்கையின் 105 ஆம் எண்ணாக குறிப்பிடப் பட்டிருந்தது. அதன் பின்னர் தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி நான்கில் 553 ஆம் எண்ணாகப் பதிப்பிக்கப் பட்டது. 5. குறிப்புரை தரும் தகவல்கள் இந்தக் கல்வெட்டிற்குக் குறிப்புரை ஏதும் இடம் பெறவில்லை. 6. கல்வெட்டு வரிகள் (வரி 1) स्वस्तिश्री। तक्ष्णैतच्च्री(*च्छ्री)विमानं बहुविधचरणैस्तोरणैः कूटकोष्ठैन्नी(र्न्नी)डैर्दभ्रैरदभ्रैर्म्मृगपतिवदनैर्न्नासिकाद्यैर्विचित्रम्(।) देवेशस्याधिपुर्यामति (வரி 2) बहुलतरैरश्मभिः कृष्णवर्णै राजेन्द्रस्य प्रसादात् कृतमिह रविणा राजराजस्य सूनोः உ चतुराननचोदितेन तेन त्रितलन्निर्गतदूषणं विमानम्(।) रविणाधि (வரி 3) पुरीशस्य शम्भोः कृतमेत(द्व)रवीरचोळतक्ष्णा।। உ (* - இக்குறியிட்டது என்னுடைய திருத்தம்) 7. பொருள் स्वस्तिश्री। तक्ष्णैतच्च्री(*च्छ्री)विमानं बहुविधचरणैस्तोरणैः कूटकोष्ठै न्नी(र्न्नी)डैर्दभ्रैरदभ्रैर्म्मृगपतिवदनैर्न्नासिकाद्यैर्विचित्रम्(।) देवेशस्याधिपुर्यामतिबहुलतरैरश्मभिः कृष्णवर्णै राजेन्द्रस्य प्रसादात् कृतमिह रविणा राजराजस्य सूनोः உ ஸ்வஸ்திஸ்ரீ தக்ஷ்ணா ஏதத் ஸ்ரீவிமானம் பஹுவித-சரணை: தோரணை: கூடகோஷ்டை: நீடை: தப்ரை: அதப்ரை: ம்ருகபதி-வதனை: நாஸிகாத்யை: விசித்ரம் தேவேசஸ்ய ஆதிபுர்யாம் அதிபஹுலதரை: அச்மபி: க்ருஷ்ணவர்ணை: ராஜேந்த்ரஸ்ய ப்ரஸாதாத் க்ருதம் இஹ ரவிணா ராஜராஜஸ்ய ஸூனோ: வ்ருத்தம் (பாவகை) - ஸ்ரக்தரா (வரிக்கு 21 எழுத்துக்கள்) இந்த ஸ்ரீவிமானம் ராஜராஜனின் மகனான ராஜேந்த்ரனின் அருளினால் பலவிதமான பாதவர்க்கத்தோடும் தோரணங்களோடும் கூடங்கள் மற்றும் கோஷ்டங்களோடும் சிறிதும் பெரிதுமான கூடுகளோடும் சிங்கமுகம் கொண்ட நாஸிகை முதலானவற்றோடும் பலவிதமாக ஆதிபுரியில்(ஒற்றியூரில்) மிக உறுதியான கருங்கற்களைக் கொண்டு ரவி என்னும் தச்சனால் கட்டப்பட்டது. चतुराननचोदितेन तेन त्रितलन्निर्गतदूषणं विमानम्(।) रविणाधिपुरीशस्य शम्भोः कृतमेत(द्व)रवीरचोळतक्ष्णा।। உ சதுரானனசோதிதேன தேன த்ரிதலம் நிர்கத-தூஷணம் விமானம் ரவிணா ஆதிபுரீசஸ்ய சம்போ: க்ருதம் ஏதத் வர-வீர-சோள-தக்ஷ்ணா சதுரானன பண்டிதரால் தூண்டப்பட்ட ரவியென்னும் வீரசோழதச்சனால் குற்றமற்றதும் மூன்றுதளங்களையுடையதுமான இந்த ஆதிபுரியிலுறையும் சம்புவின் விமானம் உருவாக்கப்பட்டது. 8. விளக்கம் இந்தக் கல்வெட்டு சிற்பக் கூறுகளின் பெயர்களைக் கொண்டிருப்பது மிகச் சிறப்பானது. தப்ரம் என்றால் சிறிய என்று பொருள். சிற்றம்பலம் என்பதனை வடமொழியில் தப்ரஸபை என்பர். சிறுத்தொண்டரை வடமொழி பெரியபுராணம் தப்ரபக்தர் என்றே குறிப்பிடுகிறது. மேலும் கூடம், கோஷ்டம், பாதவர்க்கம், சிங்கமுகம் கொண்ட நாஸிகைகள் என்று சிற்பசாஸ்திரத்தின் கலைச்சொற்கள் இது கட்டப்பட்ட விதத்தை விளக்குகின்றன. இந்தக் கோயில் கஜப்ருஷ்ட விமானத்தைக் கொண்டது. மஸூரகம் கபோதபந்தமாகத் துவங்கி எண்பட்டை கைரவத்தோடு பாதபந்தமாக மாறி மீண்டும் வ்ருத்த கைரவ பாதபந்தமாக பத்திரிப்பு முறையில் இடம் பெற்றுள்ளது. ஐந்து கோஷ்டங்களிலும் முறையே, வினாயகர், தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு, ப்ரஹ்மா மற்றும் துர்க்கையின் திருமேனிகள் உள்ளன. ஆயின் இவை இராஜேந்திரனின் காலத்தவையா என்பது தெரியவில்லை. கல்வெட்டு குறிப்பிடும் மூன்று நிலைகள் இருந்தாலும் அவை சுதையால் அமைக்கப் பட்டுள்ளன. இது பிற்காலத்தில் உருவானதா என்பது தெரியவில்லை. கருங்கற்களாலான விமானம் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. சிங்கமுகமான நாஸிகைகள் உருவமே சரியாகத் தெரியவில்லை. இப்படி மூன்று நிலைகள் கொண்ட கஜப்ருஷ்ட விமானத்தின் இலக்கணம் தீப்தாகமத்தின் எட்டாம் படலத்திலும் மயமதத்தின் இருபத்தோராம் அத்தியாயத்திலும் விளக்கப்பட்டுள்ளது. 9. குறிப்பு வீரசோழதக்ஷன் இது தச்சர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு விருது. அன்பில் செப்பேட்டைச் செதுக்கியவரின் பெயர் இறுதியில் இவ்வாறு கொடுக்கப் பட்டுள்ளது. வீரசோள இதி க்யாத தக்ஷ: தக்ஷ ஸ்வகர்மஸு (வீரசோழன் என்று புகழ்பெற்ற தன் செயல்களில் திறமைவாய்ந்த தச்சன்) இரண்டாம் பகுதி சிதைந்திருப்பதால் அவருடைய பெயர் தெரியவில்லை. இந்தக் கல்வெட்டில் ரவி என்னும் வீரசோழதக்ஷன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |