http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 62
இதழ் 62 [ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 15, 2009 ] இந்த இதழில்.. In this Issue.. |
அன்புள்ள சிபி,
இக்கடிதத்தை நீ படித்துப் புரிந்துகொள்ளும் வயது வரும்போது, காகிதத்தில் கடிதம் எழுதும் வழக்கமே ஒழிந்து போயிருக்கும். அவ்வளவு ஏன்? நீ பிறந்தவுடன் எழுதப்பட்ட இக்கடிதமே மின்வடிவில்தான் உன்னை வந்தடைகிறது. சில நாட்களுக்கு முன்பு அஞ்சல்துறையில் பணிபுரியும் நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, வருவாய் அஞ்சல்தலைகள் விற்பனையாகும் அளவுக்குக் கடித அஞ்சல்தலைகள் விற்பனையாவதில்லை என்றார். தொலைபேசியின் வரவாலும், தனியார் அஞ்சல் நிறுவனங்களின் விரைவான சேவையாலும் அஞ்சல்துறைக்கு மக்களின் ஆதரவு குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் நம் ஊர் அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சலட்டை, உள்நாட்டுக் கடித உறை, அஞ்சல்தலைகள் போன்றவற்றைக் குவித்து வைத்து விற்பதைப் பார்த்திருக்கிறேன். நான் கூடச் சிறுவயதில் வீட்டுக்குத் தெரியாமல் இலங்கை வானொலியின் என் மனங்கவர்ந்த அறிவிப்பாளர் கே. எஸ். இராஜாவுக்குக் கடிதங்கள் அனுப்பியிருக்கிறேன். அத்தகைய கடிதங்களைச் சில காலங்களுக்கு முன்பு மின்னஞ்சல்கள் இடம்பெயர்த்து, மின்னஞ்சல்களும் இப்பொழுது குறுஞ்செய்திகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றன. இரண்டு மனிதர்களுக்கிடையே உள்ள அந்தரங்க எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளக் கடிதத்தைவிடச் சிறந்த ஊடகம் எதுவுமில்லை. குடும்பத்தார், நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களைப் பலநாட்கள் பிரிந்திருக்கும் காலத்தில், அவர்களின் கையெழுத்தில் வரும் கடிதங்களைக் காணும்போது ஏற்படும் பரவச உணர்ச்சியை எழுத்தில் வடிப்பது கடினம். குறிப்பாக விடுதியில் தங்கிப் படிக்கும் காலங்களில் இதை உணரலாம். நான் கல்லூரியில் படித்த காலத்தில், ஒவ்வொருமுறை வீட்டிலிருந்து கிளம்பும்போதும், 'விடுதியை அடைந்தவுடன் கடிதம் எழுது' என்று என் அப்பா வலியுறுத்துவார். இப்பொழுது கைத்தொலைபேசிகள் வந்தபிறகு, வினாடிக்கும் குறைவான நேரத்தில் மறுமுனைக்குத் தகவல் தெரிவிக்க முடிகிறது. இதனாலெல்லாம் காத்திருந்து கடிதம் வாசிக்கும் சுகம் அருகி விட்டதா என்று தெரியவில்லை. ஆனால் என் கல்லூரிக் காலங்களில் சிலர் கடிதம் எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். 'நலம். நலமறிய நானூறு அனுப்பவும்' என்ற செய்தியைக் கடிதத்தில் அனுப்பினாலென்ன, குறுஞ்செய்தியில் அனுப்பினால்தான் என்ன? அக்கடிதத்தைப் பெறும் தந்தை ஒரே மனநிலைக்குத்தான் தள்ளப்படுவார். ஆனால் தன் மனதில் ஏற்படும் உணர்ச்சிகளை வார்த்தைகளில் விவரித்து, படிப்பவர் மனதில் அதே தாக்கத்தை ஏற்படுத்தும் கடிதங்களால் செய்ய முடிவதை நேருக்குநேர் உரையாடல்களால் செய்யவே முடியாது என்பதுதான் உண்மை. சக மனிதருடன் கண்பார்த்துப் பேச இயலாத சூழ்நிலை இடைவெளிகளைக் கடிதங்கள் நிரப்புகின்றன. ஏன் கடிதங்களைப் பற்றி இவ்வளவு கூறுகிறேன் என்றால், உனக்கு நான் செய்யும் முதல் அறிவுரை, 'அடிக்கடி கடிதம் எழுதப் பழகிக்கொள்' என்பதுதான். குடும்பத்தாராயினும் சரி, நண்பர்களாயினும் சரி, உறவினர்களாயினும் சரி. உன் எண்ணங்களை அடுத்தவருக்குப் புரியவைப்பது மட்டுமின்றி, உன் மனதில் அழுத்தும் நிரடல்களை வெளியே கொட்டுவதற்கும் மிகச்சிறந்த பயிற்சிகள் கடிதமும் நாட்குறிப்பும்தான். எல்லாக் கடிதங்களும் அனுப்பப்பட்டாக வேண்டியவை அல்ல. பல கடிதங்கள் அனுப்பப்படாமல், உணர்ச்சிகளின் வடிகாலாகப் பயன்படுவதற்காகவே எழுதப்படுவதும் உண்டு. அடுத்தவர்களுக்குப் போதிப்பதற்காகவும் கடிதங்கள் எழுதப்படுவதுண்டு. ஜவஹர்லால் நேரு தன் மகள் பிரியதர்சினிக்கு எழுதியதும், பேராசிரியர் மு.வ தம்பிக்கு, தங்கைக்கு, அன்னைக்கு எழுதியதும், பேரறிஞர் அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்களும் இவ்வகையைச் சாரும். நான் உனக்கு எழுதும் கடிதங்களை இப்பெருமக்களின் கடிதங்களுடன் ஒப்பிட முடியாது என்றாலும், என் அனுபவங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்ளவும், அவ்வப்போது அறிவுரை கூறவும் இத்தகைய பெருந்தகைகள் மேற்கொண்ட அதே வழியைப் பின்பற்றுகிறேன். வரலாற்றுப் புனைகதைகளின் வாசகன் என்ற நிலையிலிருந்து முன்னேறி, வரலாற்றாய்வுகளில் ஆர்வம் பிறந்த காலம் அது. முனைவர் கலைக்கோவன் அவர்களுடன் தொலைபேசித் தொடர்பு ஏற்பட்ட காலத்தில், அவர் மேற்கொண்டிருந்த ஆய்வுகள் போலவே நாமும் செய்யவேண்டும் என்று தோன்றியது. இந்தக் காலகட்டத்தைப்பற்றி ஏற்கனவே சில கட்டுரைகளில் பகிர்ந்து கொண்டுள்ளேன். இதுவரை எங்கள் குழுவிற்கு வெளியில் உள்ள நண்பர்களுக்குக்கூடத் தெரியாத விஷயங்களை இக்கடிதத்தின்மூலம் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். பொன்னியின் செல்வன் யாஹூ குழுவின் இரண்டாம் யாத்திரைக்குப் பிறகு நாங்கள் மேற்கொண்ட பயணம் இது. பின்னாளில் வரலாறு.காம் என்றொரு இணைய இதழ் ஆரம்பிப்பதற்கு இப்பயணம் வித்திடும் என்று அப்போது உணர்ந்திருக்கவில்லை. வரலாறு.காம் இதழின் ஆறாவது ஆண்டுத் துவக்கத்தில் வெளியிடப்படும் இராஜேந்திர சோழர் சிறப்பிதழுக்கு இப்பயணம் இலக்காகும் என்றும் தெரிந்திருக்கவில்லை. அப்போது எங்களுக்குத் தோன்றியதெல்லாம், சினிமா, மெகாசீரியல், கிரிக்கெட் போன்று நேரத்தை வீணடிக்கும் பொழுதுபோக்குகளுக்கு மாற்றாக, தமிழுக்கும் தமிழக வரலாற்றுக்கும் தொடர்புடைய ஓர் இலக்கியப்பணி என்பதாகத்தான் இதை நோக்கினோம். அது இவ்வளவு விரைவாக எங்களை உள்ளிழுத்து, ஐராவதி போன்ற நல்முத்துக்களை விளைவிக்கும் என்று கனவிலும் தோன்றியதில்லை. ஒத்த மனநிலையை உடைய நண்பர்களுடன் சேர்ந்து, வரலாற்றாய்வாளர் ஒருவரின் வழிகாட்டலோடு மேற்கொள்ளும் ஒரு வரலாற்றுப் பயணம் என்ற எண்ணத்துடன்தான் ஆறு வருடங்களுக்கு முன்பு (2003) செப்டம்பர் மாதத்தின் ஒருநாளில் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் நின்று கொண்டிருந்த மலைக்கோட்டை விரைவுவண்டியில் ஏறி அமர்ந்தோம். அடுத்தநாள் முனைவர் கலைக்கோவன் அவர்களை அழைத்துக்கொண்டு புதுக்கோட்டை அருகிலுள்ள விசலூர் என்ற ஊரின் கோயிலுக்கு முன் இறங்கியதிலிருந்து எங்கள் பாடம் ஆரம்பமாகியது. கட்டடக்கலை என்றால் என்ன? கல்வெட்டுகளின் பயன்பாடு என்ன? சிற்பங்களின் சிறப்பு என்ன? என்பன போன்றவற்றைப் புரியவைத்த பயணம் அது. அன்று கற்றுக்கொண்டதுதான் இன்று நாங்கள் எழுப்ப முயலும் ஆய்வு மாளிகையின் அடித்தளம். கீழே உள்ள ஒளிப்படத் தொகுப்புகளைப் பார்த்தால் நீயே புரிந்து கொள்வாய். இவை மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களால் எடுக்கப்பட்ட ஆவணப்படங்கள் அன்று. பயிலும் காலத்திலேயே பதிவு செய்து வைத்துக்கொண்டால் பின்னாளில் திருப்பிப் பார்க்க வசதியாக இருக்குமே என்று எண்ணிய மாணவர்களின் ஒளிப்படச் சிதறல்கள்தான் இவை. முதல்பாடம் தொடங்குவதற்கு முன்பு ஒரு கல்வெட்டை வாசிக்கும்படி பணிக்கப்பட்டோம். விசலூரிலிருந்த ஒரு கல்வெட்டைச் சுட்டிக்காட்டி, அதை முழுவதுமாகப் படித்து, அதை வெட்டியவர் யார், எப்போது வெட்டினார், எதற்காக வெட்டினார் என்பன போன்ற விவரங்களைக் கண்டறிய வேண்டும். இதுவரை கல்வெட்டு என்றால், ஏதோ தேவலோகத்திலிருந்து வந்தவர்களால்தான் படிக்க முடியும் என்று எண்ணியிருந்தோம். திடீரென்று இடப்பட்ட கட்டளையைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்தோம். நாங்களா? கல்வெட்டா? எப்படிப் படிக்க முடியும்? என்றெல்லாம் நாலாபுறமிருந்தும் கேள்விகள் பறந்து வந்தன. ஏன் படிக்க முடியாது? உங்களுக்குத் தமிழ் தெரியுமல்லவா? போன்ற எதிர்க்கேள்விகளும் டாக்டரிடமிருந்து உடனடியாக வந்து தாக்கின. கேள்விகள் தந்த உற்சாகத்தில் நாங்கள் கல்வெட்டைப் படித்த அழகைக் கீழே பார்! இக்கல்வெட்டை வாசித்து முடித்ததற்குப் பரிசாகக் கிடைத்ததுதான் கட்டடக்கலைப் பாடம். வாழ்வில் முதன்முதலாகத் தாங்குதளம், உபானம், கண்டம், வேதிகை, சாலை, கிரீவம், சிகரம் முதலான வார்த்தைகளைக் கேட்டறிந்த நேரம். அப்பொழுதெல்லாம் நான்கு சுவர்களும் ஒரு கூரையும் அதன்மேல் ஒரு கூர்மையான வடிவமும் கொண்ட அமைப்புதான் கோயில் என்ற எங்கள் எண்ணம் மாறியது. இன்று நம் மக்களால் அழைக்கப்படுவதுபோல் இராஜகோபுரம் என்ற ஒன்று கிடையவே கிடையாது என்பது புரிந்தது. விமானத்துக்கும் கோபுரத்துக்கும் உள்ள வித்தியாசம் மிக எளிமையாகப் புரிந்தது. கருவறைக்கு மேல் இருக்கும் பிரமிடு போன்ற வடிவம் விமானம் எனப்படும். வாயிலின் மீது உள்ள கூம்பிய செவ்வகம் போன்ற வடிவம் கோபுரம் எனப்படும். இதர உறுப்புகளைக் கீழேயுள்ள படத்தைப் பார்த்து நீயே புரிந்துகொள். கட்டடங்களின் பாகங்களை அறிந்து முடித்தவுடன் நாங்கள் சென்றது ஜேஷ்டை இருந்த இடத்திற்கு. ஒரு சிற்பத்தை எவ்வாறு அடையாளப்படுத்துவது? நாம் பல கோயில்களுக்குச் செல்கிறோம். அங்கு பல்வேறு சிற்பங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் என்னவென்று அறிய நாம் ஆர்வம் காட்டுவதில்லை. ஏதோ கோயிலுக்குப் போனோமா? கன்னத்தில் போட்டுக் கொண்டோமா? அர்ச்சகரிடமிருந்து பிரசாதம் வாங்கிக் கொண்டோமா? திரும்பி வந்தோமா? என்று இருக்கிறோம். சில சமயங்களில் எந்தத் தெய்வத்தை வணங்குகிறோம் என்றுகூடச் சிந்திப்பதில்லை. பல கோயில்களில் பூட்டிய இருட்டறைக்கு முன்பு ஒரு விளக்கை ஏற்றி வைத்திருந்தால் போதும். வரிசையில் நின்று வணங்கத் தயாராகி விடுகிறோம். அவ்வாறில்லாமல், ஒரு பழங்காலக் கோயிலிலுள்ள ஒவ்வொரு சிற்பத்தையும் விளங்கிக் கொள்ள முற்பட்டால், கலையழகைப் பருக முடிவது மட்டுமின்றி, சிற்பிகளின் திறனையும், அவர்களுக்குப் பின்புலமாக இருந்த மன்னர்களையும் மனதாரப் பாராட்டலாம். இப்படி விளங்கிக்கொள்ள எங்களுக்குக் கிடைத்த முதல் வாய்ப்புகள் ஜேஷ்டையும் பைரவரும். எந்தெந்த ஆயுதங்களை வைத்திருந்தால் என்ன தெய்வம், எப்படிப்பட்ட தலையலங்காரம், ஆடையலங்காரம் யார் யாருக்கு இருக்கும் போன்ற ஆரம்பநிலைத் தகவல்களை அன்று நாங்கள் கற்றுக்கொண்டோம். அந்த இரு ஒளிப்பதிவுகளும் கீழே. விசலூரை நீங்கிய பிறகு, மலையடிப்பட்டி மற்றும் குன்றாண்டார் கோயிலிலும் பாடங்கள் தொடர்ந்தன. அடுத்தநாள் கங்கைகொண்ட சோழபுரத்துக்குப் பயணமாவதாகத் திட்டம். அங்குச் சென்ற பிறகு முனைவர் கலைக்கோவன் அவர்கள் விளக்கிய செய்திகளைக் கேட்டபிறகுதான், தமிழக வரலாற்றில் இராஜேந்திரசோழர் எத்தகைய உச்சத்தைத் தொட்டிருக்கிறார் என்பது விளங்கியது. அப்பொழுது பொன்னியின் செல்வன் மட்டுமே படித்திருந்ததால், இராஜராஜரைத் தவிர வேறொருவரை மிக உயர்ந்த நிலையில் நினைத்துப் பார்க்க முடியவில்லை. தந்தையை மீறித் தனயனால் சாதித்துவிட முடியுமா என்ற கேள்விதான் மேலோங்கியிருந்தது. இதுபற்றிப் பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்திலும், வரலாறு.காமின் களப்பயணங்களின்போதும் நிறைய விவாதித்திருக்கிறோம். அந்த விவாதங்கள், தந்தை - மகன் உறவைப் பற்றிய புதியபார்வையை விதைத்தன. சிபி, ஒரு தந்தையும் மகனும் எப்படி இருக்கவேண்டும் என்பதை வள்ளுவர் தாத்தா மிக அழகாக விளக்கியிருக்கிறார். தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல். இந்த இரு குறள்களுக்கும் இலக்கணமாக வாழ்ந்தவர்கள் உலகத்தில் எத்தனையோ பேர் இருந்தாலும், தமிழக வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள் முதலாம் இராஜராஜரும் அவர்தம் புதல்வர் முதலாம் இராஜேந்திரரும்தான். கி.பி. 850ல் விஜயாலய சோழரால் தொடங்கி வைக்கப்பட்ட சோழப்பேரரசு, முதலாம் ஆதித்தர் மற்றும் முதலாம் பராந்தகர் காலத்தில் விரிவடையத் தொடங்கியது. மன்னர்கள்வழி நிலப்பரப்பும் அதன்வழி பொருளாதாரமும், அவர்தம் அரசியர்வழி கோயிற்கலைகளும் அதற்கான நிவந்தங்களும் வளர்ந்து வந்தன. இவ்விரண்டும் சேர்ந்து நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தின. அண்ணன் ஆதித்தகரிகாலன் அகால மரணமடைய, சிலகாலம் சிற்றப்பர் உத்தமர்க்கு வழிவிட்டு, அரியணையேறி இருபத்தொன்பது ஆண்டுகள் நல்லாட்சி புரிந்து, வாழ்வின் இறுதிக்காலத்தில் இராஜராஜீசுவரம் என்ற செயற்கரிய சாதனையைப் புரிந்தவர் முதலாம் இராஜராஜர். அவர் அமைத்துத் தந்த வழியில் ஆட்சிப் பொறுப்பேற்று, நல்லாட்சியைத் தொடர்ந்து, மணிமுடியையும் இரத்தினமாலையையும் ஈழத்திலிருந்து மீட்டு, கங்கைவரை ஆதிக்கம் செலுத்தி, கங்கைகொண்ட சோழீசுவரம் என்ற பெயரில் கங்கைகொண்ட சோழபுரத்தில் தந்தைக்கு இணையான சாதனையைப் புரிந்தவர் முதலாம் இராஜேந்திரர். இருவரில் யார் உயர்ந்தவர்? இன்றைய திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களை மட்டுமே உள்ளடக்கியிருந்த சோழநாட்டைத் தென்னிந்தியா முழுமைக்கும் விரிவாக்கிய இராஜராஜரா? தென்னிந்திய அளவில் இருந்த சோழநாட்டுடன் வட இந்தியாவையும் கிழக்கு நாடுகளையும் இணைத்த இராஜேந்திரரா? தந்தை ஆரம்பித்து வைத்திருக்காவிட்டால், மகனால் மேலும் விரிவாக்கியிருக்க முடியுமா? சிபி, ஆழமாக யோசித்தால், இத்தகைய கேள்விகள் எல்லாம் அர்த்தமற்றவையாகத் தோன்றுகின்றன. இன்றைய உதாரணம் ஒன்றை எடுத்துக்கொள்வோம். அம்பானிகள். திருபாய் அம்பானி கோடிகளைச் சேர்த்துவைத்தது சாதனையா? முகேஷ் மற்றும் அனில் அம்பானிகள் அவற்றைப் பலமடங்காக வளர்த்தது சாதனையா? இரண்டும்தானே? தந்தை அடைந்த புகழை மகன் அடையமுடியாமல் போவதும், தந்தையால் முடியாததை மகன் சாதிப்பதும், இன்றைய உலகவாழ்வில் நாம் காணும் அன்றாடக்காட்சிகள்தானே? இராஜராஜர், இராஜேந்திரர் இருவருக்குமே திறமை இருந்ததால்தான், மரபுவழிவந்த பெருமையையும் தக்கவைத்துக்கொண்டு, புதிய சாதனைகளையும் உலகுக்குத் தரமுடிந்தது. இராஜராஜர் அரியணையேறிய ஆரம்ப காலங்களில், காந்தளூர்ச்சாலை தொடங்கிப் பல போர்கள் நடந்திருக்கின்றன. போர்களில் வெற்றியும் பெற்றுக்கொண்டு, மக்களுக்கு நல்லாட்சியையும் தரமுடிந்தது என்றால், போர்களில் யாராவது உதவியிருக்கவேண்டும். பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் அருமொழியின் உற்றதோழராகச் சித்திரிக்கப்பட்டிருந்தபோதும், சோழர் கல்வெட்டுகள் அதற்கு வெளியிலிருந்துகூட ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே, இராஜராஜருக்குப் போர்களில் உதவியவராக இராஜேந்திரரையே கொள்ள வேண்டியிருக்கிறது. வள்ளுவர் கூறியிருப்பதுபோல் கற்றோர் அவையில் முன்நிறுத்துவதை விடுத்து, போர்முனையில் நிறுத்துவதுதான் தந்தைக்கு அழகா? என்ற கேள்வி எழலாம். அக்காலத்தில் வீரமும் ஒரு கலையாக மதிக்கப்பட்டது; நாட்டு மக்களைக் காக்க வீரமும் அவசியம் என்ற அளவில், வில்வித்தையும் வாட்பயிற்சியும் பெற்ற எதிரி நாட்டு வீரர்களுக்குமுன் நிறுத்தி, 'அவர்களை வென்று வா!' என்று கட்டளையிடுவதை, கற்றோர் நிறைந்த அவையில் புலமை விவாதத்தில் ஈடுபட வைப்பதற்குச் சமானம் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். கலைவரலாற்றுக்கு ஆற்றிய தொண்டு என்ற பார்வையில் நோக்கினாலும், இருவருமே அளவிட இயலாத சாதனையைச் செய்திருக்கிறார்கள். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், நுணுகி ஆராய்ந்தால், இரண்டும் வெவ்வேறு துருவங்கள் என்று சொல்லும் அளவுக்கு இருவரும் இருவேறு திசைகளில் யோசித்திருக்கிறார்கள். தஞ்சைப் பெரியகோயில் ஆண்தன்மையுடன் உள்ளது என்றால், கங்கைகொண்ட சோழபுரத்தை அதன் பெண்வடிவம் என்று கூறலாம் என்று முனைவர் இரா.நாகசாமி அவர்கள் தனது நூலொன்றில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அன்றைக்கு நாங்கள் கங்கைகொண்ட சோழபுரத்தை அடைந்து, புதுப்பிப்பதற்காக வேயப்பட்டிருந்த ஓலைத்தடுக்குகளுக்குள் ஒளிந்திருந்த 180 அடி விமானத்தின்மீது ஏறியபோது அவ்வாறு தோன்றவில்லை. இரண்டின் கம்பீரத்திலும் நூலிழை வேறுபாட்டைக்கூடக் காணமுடியாது. கட்டடக்கலையில் புகுத்திய ஒரு புதுமையால், சற்று வளைந்திருப்பதாகத் தோன்றலாம். ஆனால் அதைப் பெண்மையாகக் கொள்ளமுடியாது. தஞ்சைப் பெரியகோயிலில் தரையிலிருந்து முழு விமானமும் நாகரமாக (சதுரமாக) எழுந்து, கிரீவமும் சிகரமும் மட்டும் திராவிடமாக (பலகோணமாக) மாறியிருக்கின்றன. ஆனால் கங்கைகொண்ட சோழபுரத்தில் தரையிலிருந்து நாகரமாக எழும் விமானம், இடையில் திராவிடமாக மாறி, உச்சியில் வேசரமாக (வட்டமாக) முடிகிறது. இத்தகைய கட்டடக்கலை அமைப்பு தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவிலேயே எத்தகைய கட்டடத்திலும் காணமுடியாத ஒன்று என்று அன்றைக்கு முனைவர் கலைக்கோவன் அவர்கள் வெகுவாக வியந்து போற்றினார். நாங்கள் அன்று கங்கைகொண்ட சோழபுரத்தை அடைந்தபோது, குடமுழுக்குக்காக விமானத்தைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏற்கனவே தொல்லியல் அளவீட்டுத் துறையில் அனுமதி வாங்கியிருந்தபடியால், பெருவுடையார் தரிசனம் முடிந்தபிறகு சாந்தாரநாழியைக் காணச்சென்றோம். அப்போதுதான் அதைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அதனால் உள்ளிருந்த வவ்வால்கள் அமைதியிழந்து, எங்கள் முகத்தில் மோதாமல் பறந்துகொண்டிருந்தன. கரப்பான்பூச்சிகள் தரைக்கும் எங்கள் கால்களுக்கும் வேறுபாடு அறியாமல் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன. வேலை செய்பவர்கள் உள்ளீடற்ற (Hallow) விமானத்தின் உட்புறம் அமைக்கப்பட்டிருந்த சாரத்தின்மீது கழைக்கூத்தாடிகளைப்போல் தாவித்தாவி ஏறிக்கொண்டிருந்தார்கள். சாந்தாரநாழி என்பது இரண்டு அடுக்குச் சுவர்களால் சூழப்பட்ட கருவறையின் இரண்டு சுவர்களுக்கும் இடையிலுள்ள சுற்றிவரும் பகுதி. சாதாரணமாக ஒரு திசையில் மட்டுமே பார்வை செலுத்தும் இறைவடிவத்தைக் கொண்டிருக்கும் கருவறைக்கு முப்பரிமாண அழகு சேர்ப்பது இந்தச் சாந்தாரங்கள்தான். தஞ்சைப் பெரியகோயிலில் தரைத்தளம், முதல்தளம் இரண்டிலுமே இத்தகைய சாந்தாரங்கள் இருக்கின்றன.இரண்டு தளங்களின் சாந்தாரங்களுமே மூலைகளில் செங்கோணமாகவே இருக்கின்றன. விமானம் நாகரமாக இருப்பதால் செங்கோணமாக இருக்கின்றன. ஆனால் கங்கைகொண்ட சோழபுரத்தில், இரண்டாம் தளத்தைத் தாண்டியும் தொடரும் சாந்தாரத்தின் மூலைகள் சற்று வளைந்து இருக்கின்றன. மூன்றாம் தளத்திலேயே நாகரம் திராவிடமாக உருமாறத் தொடங்கிவிடுகிறது. தஞ்சையில் இரண்டாம் தளத்தின் சாந்தாரத்திலுள்ள கூரையைப் பார்த்தால், இரு இணையான சுவர்களும் மேற்றளங்களில் எவ்வாறு இணைகின்றன என்று அறிந்து கொள்ளலாம். கங்கைகொண்ட சோழபுரத்தில் நாங்கள் இரண்டாம் தளத்தை அண்ணாந்து பார்த்தபோது, வெறும் கற்களால் மூடப்பட்டிருந்தது. சற்று சலித்துக்கூடக் கொண்டோம். அங்கு அற்புதமாக அமைந்திருந்ததை இங்கு ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்களே என்று எண்ணினோம். ஆனால் மூன்றாம் தளத்திற்குச் சென்றபோதுதான் அசந்துபோனோம். இரண்டு சுவர்களும் மேல்நோக்கி இணைவது மட்டுமின்றி, வளைந்திருக்கும் மூலைகளில் அந்த இணைவை அமைத்திருந்த விதம், பிரமாதமாக இருந்தது. அன்று சென்றிருந்த அனைவருமே அப்போதுதான் முதல்முறை பார்க்கிறோம் என்பதால், கலைக்கோவன் உட்பட எல்லோருக்கும் பிரமிப்பாகவே இருந்தது. சாந்தாரம் தந்த இன்ப அதிர்ச்சியால் ஒளிப்படத்தைச் சரியாக எடுக்கக்கூடவில்லை. சாந்தாரத்தின் தாக்கத்திலிருந்து மீள்வதற்குள் விமானத்தின் மீதேறினோம். சுற்றிலும் சாரம் அமைத்திருந்தார்கள். எல்லோரும் விமானத்தின் நடுப்பகுதியில் ஒரு பலகையின்மேல் வசதியாக அமர்ந்துகொண்டவுடன் அடுத்த பாடம் ஆரம்பமாகியது. சோழர் கட்டடக்கலையின் சிறப்புகளை டாக்டர் எடுத்துரைத்தார். சாலை, கர்ணகூடம், பஞ்சரம் போன்ற பதங்கள் முதன்முதலாக எங்கள் செவிகளுக்குள் நுழைந்தன. பொதுவாகத் தரைத்தளத்திலிருந்து மேல்நோக்கிச் செல்லச்செல்ல ஒவ்வொரு தளத்திலும் அளவு சிறிதாகிக்கொண்டே செல்லும். ஆனால் இங்கு ஐந்தாம் தளத்தில் மிகப்பெரிய சாலை அமைந்திருந்தது எங்கள் அனைவரையும் வியக்கவைத்தது. பிறகு உச்சிக்குச் சென்று கிரீவத்தைச் சுற்றிலும் அமர்ந்துகொண்டு இளநீர் அருந்தி மகிழ்ந்ததெல்லாம் மறக்கமுடியாத தருணங்கள். கீழே இறங்கிவந்து புல்தரையில் அமர்ந்து நாகரம், திராவிடம், வேசரம் என்று கலவையாக அமைந்திருந்த விமானத்தையே பார்த்தவாறு சிறிதுநேரம் படுத்திருந்தோம். அப்பொழுது எங்கள் மனங்களில் இராஜேந்திரர் மட்டுமே மிகப்பெரியதொரு சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தார். இவ்வளவு அருமையான ஒரு விமானத்தைக் காலத்தின் கரங்களுக்குக் காவு கொடுத்துவிட்டு, சுதையையும், இளஞ்சிவப்பு வண்ணத்தையும் பூசி, அதன் அழகைக் குறைத்துக் கொண்டிருக்கிறோமே என்ற வருத்தம் மட்டும் மனதின் ஒரு மூலையில் உறுத்திக்கொண்டிருந்தது. தென்னிந்திய அளவில் இருந்த சோழப் பேரரசைப் பாரதம் முழுமைக்கும் விரிவுபடுத்திய ஆற்றலாளர் எழுப்பிய ஆலயம் என்ற ஒரு பெருமிதம் அந்த உறுத்தலைப் புறந்தள்ள உதவியது. இராஜேந்திரரின் வெற்றிகள் என்று எண்ணும்பொழுது ஒரு விஷயம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. இந்திய வரலாற்றில், எந்த ஒரு மன்னரும் நாடுபிடிக்க வந்தவர்களை எதிர்த்துப் போரிட்டிருக்கிறார்களே தவிர, அண்டை நாட்டைப் பிடிக்கவேண்டும் என்ற நோக்கில் எந்த மன்னரும் போர் தொடுத்ததில்லை என்றொரு கருத்து உண்டு. இது எப்படிப் பரவியது என்று தெரியவில்லை. ஆனால் அப்துல்கலாம் வரை இதை மேற்கோள் காட்டிப் பேசுகிறார்கள். ஒருவேளை வட இந்திய வரலாறுதான் இந்திய வரலாறு என்று திரிக்கும் நோக்கத்தில் சிலர் பரப்பி விட்டிருக்கிறார்களோ என்னவோ! முதலாம் இராஜேந்திரரின் வரலாறு இக்கூற்றுக்கு எதிராக இருக்கிறது. இராஜேந்திரரின் கிழக்காசியப் படையெடுப்பை வாணிபத்திற்காகச் சென்றதாகக் கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், கடாரம்கொண்டான் என்ற அடைமொழி இக்கருத்துடன் ஒத்துவரவில்லை. ஒன்பது இலட்சம் வீரர்களுடன் அலைகடலேறிப் போனார் என்ற கூற்றும் இக்கருத்தை மறுக்கின்றன. இராஜராஜருக்குப் போர்களில் இராஜேந்திரர் உதவியதுபோல் இராஜேந்திரருக்கும் அவரது பிள்ளைகள் உதவியிருக்கவேண்டும். ஆனால் அவர்களில் யாரும் இவர்கள் அளவுக்குப் புகழடையவில்லை. தஞ்சை பெரியகோயிலும் கங்கைகொண்ட சோழபுரமும்தான் இவர்களுக்கு இத்தகைய அழியாப்புகழைப் பெற்றுக் கொடுத்தன என்றால் மிகையாகாது. இவை இரண்டும் மண்ணில் நிலைத்திருக்கும்வரை இவர்கள் இருவரின் புகழும் அழியாது. இவ்விரண்டு கோயில்கள் தவிர இவர்களின் புகழுக்கு இன்னொரு காரணமும் உண்டு. இக்கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டு சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட இரண்டு சரித்திரப் புதினங்கள். கல்கியின் பொன்னியின் செல்வனும் அகிலனின் வேங்கையின் மைந்தனும்தான் அவை. முதலாவது அருமொழி இராஜராஜராக ஆவதற்கு முன்பு நடந்த கதை. பின்னது இராஜேந்திரரின் இறுதிக்காலத்தில் நிகழ்ந்த கதை. இரண்டிலும் நாயகர்கள் இவர்கள் இல்லையெனினும், வாசிப்பவர்களைக் கவர்பவர்கள் இவர்கள்தான். இவர்கள் இருவரின் வரலாற்றிலிருந்து எத்தனையோ பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். மன்னர்களின் பெயர்கள், ஆண்டுக்கணக்கு, போர்களில் வெற்றி தோல்வி, இவை மட்டுமே வரலாறு அல்ல. இவை வெறும் தரவுகள்தான். இதையெல்லாம் மீறி ஒரு பாடம் இருக்கிறது. இன்றைய பாடத்திட்டத்தில் மதிப்பெண்கள் வாங்குவதற்கு வேண்டுமானால் பயன்படாமல் இருக்கலாம். ஆனால், இவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களிலிருந்து, நம் வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். Partnership, Vision, Values, Savvy, Persistence, Passion, Patience, Wisdom, Common sense, Trustworthiness, Reliability, Creativity, Sensitivity, Zeal, Valour, Dedication, Magnanimity, Humility போன்ற விஷயங்களைப் பாடப்புத்தகங்கள் கற்றுத்தரமாட்டா. நம் அனுபவங்களைக் கொண்டு நாம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் நாமே அனுபவித்துப் பார்த்துக் கற்றுக்கொள்வதென்பது முடியாத காரியம். அதற்கு உதவும் ஒரு கருவிதான் வரலாறு. கடந்தகால அனுபவங்களின் தொகுப்பையே வரலாறு என்கிறோம். The best predictor of the future is the past. எனவே, வரலாறு என்னும் விளக்கின் வெளிச்சத்துடன் எதிர்காலத்தில் தடுமாறாமல் வெற்றிநடைபோட வாழ்த்துக்கள். அன்புடன் அப்பா. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |