http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 62
இதழ் 62 [ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 15, 2009 ] இந்த இதழில்.. In this Issue.. |
மீண்டும் வருவேன் என்கிற பாவனையில் பிரிந்து சென்றுவிட்டான். இன்றுவரை ஏனோ வரவில்லை. இன்று வருவானோ, என்று வருவானோ? காலமென்னும் மீளா நதியில் நாட்கள் மெல்ல மெல்ல நகர்கின்றன. சுவரில் கோடுகள் இழுத்து நாட்களைக் குறிக்கின்றேன். என் வீட்டுச் சுவர் முழுவதும் கரிக்கோடுகளின் ஓவியக்காட்சி. சுவர் போதவில்லை. மண்பானை நிறைய மஞ்சாடிக் குன்றிகளைப் போட ஆரம்பித்துள்ளேன். பானைகள் பல நிரம்பிவிட்டன. அவன் வரவில்லை. உடல் இங்கே, உயிரோ அங்கே அவனோடு. கூடு மட்டும் வாழ்ந்து என்ன பயன்? நீலத்தை இழந்த வானம், உலவ மறந்த தென்றல், வசந்தம் காணாத நந்தவனம். இவை ஒன்றெனும் சுகம் தருமா? அவன் பார்வையில் தொடங்கிய பொழுதுகள் எல்லாம் இப்பொழுது வெறுமையில் தொடங்கி முடிகின்றன. சூடுவேனில் காற்றும் காதோரம் அவன் பெயர் சொல்லி விலகிச் செல்கின்றது. அந்தக் காடுறை கொற்றவைக்கும் படையல் வைத்து வேண்டிக்கொண்டேன். பலனில்லை. அவளுக்கு அருள் புரிய மனமில்லை. மரா மலர்கள் மலர்ந்து உதிர்ந்தன. பாதிரி பூக்களின் காலமும் நிறைவடைந்தது. பாலைப்பண் வாசித்த பாணன் வேற்றிடம் சென்றுவிட்டான். பாலையாழில் சுகராகம் மீட்ட முடியவில்லை. முற்றத்து மூலையில் மௌனராகம் இசைத்துக் கிடக்கின்றது. இருப்பையும் காய்த்து ஓய்ந்து விட்டது. வேனல் காலங்கள் வந்து போய்விட்டன. தனிமையென்னும் தீவினிலே நான் மட்டும் வாழ்கின்றேன். அவன் சென்ற வழியில் மனமும், விழியும் சென்று மீள்கின்றன, தினம் தினம். பிரிதல் கொடுமை என்றால், அதைவிடக் கொடுமை தனிமையில் காத்திருத்தல். பாலை நிலத்துத் தலைவி ஒருத்தியின் நிலை இது. பிரிவிடை மெலிந்த தலைவியின் கூற்றாய் அமைந்த பாடல் இதோ, தலைவி கூற்று குணகடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி மண்திணி ஞாலம் விளங்கக் கம்மியர் சொம்புசொரி பானையின் மின்னிஎவ் வாயும் தன் தொழில் வாய்த்த இன்குரல் எழிலி தென்புல மருங்கின் சென்றற்றாங்கு நெஞ்சம் அவர்வயின் சென்றன ஈண்டு ஒழிந்து உண்டல் அளித்துஎன் உடம்பே விறல்போர் வெஞ்சின வேந்தன் பகைஅலைக் கலங்கி வாழ்வோர் போகிய பேரூர்ப் பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே. ஆசிரியர் : தனிமகனார். நற்றிணை : 153 விளக்கம் கீழைக் கடலிலே சென்று நீரை ஆவி ஆக்கி, நீராவி மேலே எழுந்ததனால் எங்கும் இருள் படர்ந்தது; செம்பிலே பானை செய்கிற கம்மியர் பானையைக் கடைந்தபொழுது தீப்பொறி எழுவதுபோல, மின்னல் அடித்து, இடி முழங்கியது. காற்றுச் செல்லும் திசையில் மேகம் செல்லுதல்போல என் நெஞ்சம் அவரை நாடி அவர் பின்னே ஓடிச்சென்றது. வெஞ்சின வேந்தனின் படையானது அது போரிட்ட ஊரைப் பாழ்படுத்தியது. அவ்வூரில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்தனர். தனியாளாய் ஒரு மகன் அவ்வூரைக் காவல் செய்தான். அத்தனிமகன் போல என் உடல் இவ்வூரில் தலைவன் மீண்டும் வருவான் என்ற நம்பிக்கையில் காத்துக்கிடக்கிறது. பாலைநிலத்துத் தலைவியின் பிரிவு ஏக்கம் இப்பாடல் மூலம் செம்மையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. வாழும் தகுதியை இழந்த ஓர் ஊர் எப்படியிருக்கும்? பாழடைந்த மனைகள், வெறுமையான தெருக்கள், மனித சஞ்சாரமற்று, சப்தமற்ற அந்தகாரம் சூழ்ந்த ஊரில் தனியாளாக ஒருவன் மட்டும் வாழ்ந்தால் எப்படியிருக்கும்? அதே நிலைதான் தலைவியின் நிலையும். தனிமையில் வாழும் ஒருவரைத் தனிமகன் என்று அழைத்ததனால், இப்பாடலைப் பாடிய புலவர் பெருந்தகை 'தனிமகனார்' என்று சிறப்புப் பெயர் பெற்றார். யாருமற்றவன், உறவுகள் அற்றவன், அநாதை என்றெல்லாம் எதிர்மாறாக அழைக்காமல் தனிமகன் என்று பாடியது புலவர்தம் உயர்மனத்தையும், நேர்சிந்தையையும் வெளிப்படுத்துகிறது. சங்கக்கவிகள் தனித்துவம் மிக்கவர்கள். மேன்மையான உயரிய சிந்தனைகளையே தம் பாடல்களில் பதிவு செய்துள்ளனர். தமிழ்மொழி பேறுபெற்ற வளர்மொழி. அந்த வளர்மொழி வாழியவே. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |