![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 70
![]() இதழ் 70 [ ஏப்ரல் 16 - மே 15, 2010 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
"எத்தகைய கொடிய இருட்டையும் கிழக்கின் உறைவாள் கிழிக்காமல் விட்டதில்லை. இருண்ட கண்டமாய் இருந்த இனத்துக்கு வெகுதொலைவில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தின் பெயர்தான் - விஜயாலயன்!". இப்படித்தான் கவிஞர் மு.மேத்தா தனது முன்னுரையில் பிற்காலச் சோழர்களின் முதல்வனை, குலத்தோன்றலை அறிமுகப்படுத்துகிறார். "வெளிச்சம் வேகவேகமாக வந்து கொண்டிருந்தது". நாவலின் முதல் வரியே இதுதான். "மகுடநிலா" தமிழ் உள்ளங்கள் வாசிக்க வேண்டிய நாவல். வரலாற்று ஏடுகளில் சில நூற்றாண்டுகள் முகவரி இல்லாது இருந்த சோழகுலத்திற்கு "வெளிச்சம்" வேகவேகமாய் வந்தது. வீர சோழப்புலி விஜயாலயன் உருவில். பின் என்ன? சோழர்களின் புலிக்கொடி தஞ்சை நகரில் பறந்தது. நான்கு நூற்றாண்டுகள் அக்கொடி தெற்கு ஆசியாவெங்கும் பட்டொளி வீசியது. விஜயனின் வீரப்போராட்டங்கள், ஆதித்தனின் நாட்டுப்பற்று, சோழ பல்லவ உறவு எனப் பலவற்றையும் அரவணைத்துச் செல்கிறது மகுடநிலா. கவிதை சார்ந்த எழிலார்ந்த எளியநடை படிக்கப் படிக்கத் திகட்டவேயில்லை. "வானச் சுவடியில் வைகறைக் கவிதையை யாரோ வரைந்து கொண்டிருந்தார்கள்" - இச்சொற்றொடரைக் கவிஞர் தவிர வேறு யார் எழுத முடியும்? தஞ்சையில் வீரவிழா நிகழும் முன்னே நிசும்பசூதனிக்கு எழுப்பப்பட்ட திருக்கோயிலில் அந்நியரின் நடமாட்டம். ஆதித்த சோழனின் குதிரையைக் களவாடியதோடு நில்லாமல் அம்பு தைத்த ஓலைநறுக்கில் ஒரு சவால். "இன்று உன் குதிரையில் வேறொருவன்.... நாளை உன் சிம்மாசனத்தில்...." யார் இவர்கள்? பல்லவர்களா? பாண்டியர்களா? இல்லை தோற்றோடிய முத்தரையர்களா? நாவலில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. விஜயாலயனின் வெற்றிவாளைக் காதலித்த வனிதை, ஆதரவுக்கரம் நீட்டிய மரக்கல மன்னர், அவர் மனையாள் பெருமனைக் கிழத்தி நெஞ்சில் நிற்கும் பாத்திரங்கள். காதலும் வீரமும் கைக்கோர்த்து வாழும் தமிழன் வாழ்க்கையில் தியாகமும் நாட்டுப்பற்றும் அணியாக விளங்கும் காட்சிகள் வார்த்தை ஓவியங்கள் என வரையப்பட்டிருக்கின்றன. அசையும் அழகின் திருவிழாவாகப் பல்லவ சாருமதி, நாட்டு நலனுக்குக் காதல் தியாகம் செய்யும் தாமரை, பல்லவ அபராஜிதன், மன்னர் நிருபதுங்கன், கம்பவர்மன் எனப் பல கதாபாத்திரங்களுடன் கதை நகர்கின்றது. விஜயாலயன் பற்றி எழுதும் கவிஞர் அமரத்துவமாய் ஒரு கருத்தை வலியுறுத்துகிறார் மரக்கல மன்னர் வாய்மொழி வழியே. "வரலாற்றின் நாயகர்கள் என்று வழிபடப்படுகிறவர்களெல்லாம் ஒரு காலத்தில் கலகக்காரர்கள் என்று கருதப்பட்டவர்களே!". அற்புதமான வரிகள். எத்துணை சத்தியமான வார்த்தைகள்! வரலாற்றின் ஏடுகள் நமக்கு வலியுறுத்தும் உண்மையும் இதுதானே? பல சுவையான கற்பனைக் காட்சிகள், சில வரலாற்று நிகழ்வுகளுக்குப்பின் இறுதியாகப் போர்க்களத்தில் முடிகிறது கதை. அபராஜிதன் சமரச முயற்சி பலனற்றுப்போக, ஆதித்தசோழன் போரில் வெற்றிபெற, நந்திக்கொடி கீழிறங்க, தமிழகத்தில் ஏறத்தாழ 650 வருடங்கள் நடைபெற்ற பல்லவ ஆட்சி அஸ்தமனம் காண்கிறது. சோழ சாம்ராஜ்யத்தின் எழுச்சி உதயசூரியனாய் எழுகின்றது. புலிக்கொடி உயர உயரப் பறக்கும் காலம் தொடங்குகிறது. தமிழனின் பொற்காலத்திற்கு ஒரு புதிய உதயம். "காதலோடும், கண்ணீரோடும் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. கடமைகள் காத்திருக்கின்றன. பாதைகளும் காத்திருக்கின்றன - உன் பாதங்களுக்காக!" - விஜயாலயனின் அந்த உத்வேகமான சொற்களில் முதலாம் ஆதித்தன் ஆறுதல் அடைகின்றான். பல்லவ நட்பு பெரிதா? சோழநாடு பெரிதா? தயக்கமென்ன சோழநாடுதான் பெரிது. ஆயிரமாயிரம் புலிக்கொடிகள் அசைகின்றன ஆதித்தசோழனின் இருவிழிக் கனவுகளில். தமிழினத்தின் வீர அடையாளமாய் வரலாற்றின் புது முகவரியாய் வீறிட்டு எழுகிறது. சோழ சாம்ராஜ்யம் கொண்ட கொள்கையிலும், போராட்டத்திலும், உறுதியாய் வெல்லும் இனமான வீரனாய் விஜயாலயன். அவரைப்போன்ற மாவீரர்களை என்றோ ஒருமுறைதான் வரலாறு சந்தித்து மகிழ்கின்றது, பெருமை கொள்கின்றது. ஆதித்தனின் கனவுடன் நாவல் நிறைவு பெறுகிறது. சில எண்ணத் தூறல்கள்:- 1. தன் சொந்தக் கற்பனைகளையும், இரசனைகளையும் அதீதமாய் வரலாற்று நாயகர்களின்மேல் திணித்து அவர்களுக்கு அநீதி இழைக்காமல் யதார்த்தமாய்ப் படைத்திருக்கிறார் திரு. மு.மேத்தா. 2. இந்நாவலுக்குப்பின் கவிஞர் ஏன் வேறு வரலாற்றுப் புதினங்கள் படைக்கவில்லை என்ற கேள்விக்குறி பிறக்கின்றது. ஒருவேளை வீரம் செறிந்த சோழர்களைப் புகழ்ந்து, பெருமையுடன் எழுதிய பேனாமுனை மற்றவர்களை எழுதத் தயங்கியதோ? 3. ஏனோ, ஈழத்துப் போராளிகளை நினைக்கத் தூண்டியது. அவர்களின் பாடுகளை மனம் அசைபோடும்போது இதைத் திரும்பத் திரும்பப் படித்து ஆறுதல் கொள்வேன். மீண்டும் வரவேண்டும் அந்த ஒரு "விஜயாலயன்". நம்பிக்கையுடன் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். வரலாறு திரும்பும் நாள் வெகுதொலைவில் இல்லை. 4. தமிழர்கள் படிக்கவேண்டிய எளிய நாவல் இது. ஜனரஞ்சகம், மசாலா இல்லாத நாவல். 5. "மகுடநிலா" - கவிஞர் மு.மேத்தா. ஒரு "திருமகள் நிலையம், சென்னை" வெளியீடு இப்புத்தகம். அடுத்த புத்தகத்தெருவில் என்னுடன் பல்லவராயன் வருவார். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |