http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 71
இதழ் 71 [ மே 15 - ஜூன் 14, 2010 ] இந்த இதழில்.. In this Issue.. |
வாசகர்களுக்கு வணக்கம். இந்த ஆண்டு முதல் ஒன்றாம் வகுப்பிற்கும் ஆறாம் வகுப்பிற்கும் தமிழக அரசு சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மற்ற வகுப்புகளுக்கு விரிவுபடுத்த இருப்பதாகவும் அறிவித்திருக்கிறது. பள்ளிக்கல்விக் கட்டணங்களை வரைமுறைப்படுத்திய இரட்டிப்பு மகிழ்ச்சியில் பெற்றோர்கள் பள்ளிக்கல்வி அமைச்சகத்தைப் பாராட்டிக்கொண்டிருந்தாலும், சிலர் அரசியல் காரணங்களுக்காகச் சமச்சீர்கல்வியை விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய அரசியல் விமர்சனங்களுக்குள் நுழையாமல், அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தமிழ் மற்றும் வரலாற்றுப் பாடத்திட்டத்தைக் கண்ணுற்றபோது நமக்கு ஏற்பட்ட சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே இத்தலையங்கத்தின் நோக்கம். ஒரு மாணவன் குழந்தைப் பருவத்திலிருந்து வெளியேறிச் சற்று மனமுதிர்ச்சி அடைய ஆரம்பித்து, உலகத்தை அறிவுக்கண் கொண்டு நோக்க அவன் பிறந்ததிலிருந்து சுமார் 10 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில் அவனுக்கு அறிவியலும் வரலாறும் முறையாக அறிமுகப்படுத்தப்பட வேண்டியது மிக அவசியம். அப்போதுதான் அவன் மூடநம்பிக்கைகளின் மூளைச்சலவைக்கு ஆளாகாமல் எதையும் அறிவுபூர்வமாகச் சிந்திக்க இயலும். எனவே, ஆறாம் வகுப்புப் பாடத்திட்டம் மாணவனது ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறன்களை வளர்த்தெடுக்குமாறு அமைய வேண்டியது முக்கியம். சமச்சீர் கல்வியின் பாடத்திட்டத்தைத் தயாரித்த ஆசிரியர் குழுவும் இதைக் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடம் கீழ்க்கண்டவாறு தொகுக்கப்பட்டுள்ளது. 1. உரைப்பகுதியை உரிய ஒலிப்புடன் படித்தல், மையக்கருத்தறிதல், வினா உருவாக்குதல், வினாவிற்கேற்ற விடையளித்தல், குறிப்பெடுத்தல், விவரித்தல், தானே கற்றல். 2. சொற்போரில் பங்கேற்று, ஏற்ற இறக்கங்களுடன் பேசுதல், எழுதுதல். 3. கட்டுரை, கடிதம், விண்ணப்பங்களை உரிய வடிவத்துடன், நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்தி எழுதுதல், சிந்தனைத் திறன் அறிதல். 4. பகுதியைப் படித்துக் கருத்துகளைத் தொகுத்து, வகைப்படுத்தி, வெளிப்படுத்த அறிதல். புதிய சொற்கள், பிறமொழிச் சொற்கள், இணைச் சொற்கள், மறுப்புத் திறன் அறிதல். 5. வரலாறு அறிதல் மற்றும் மனித உறவுத் திறன் அறிதல். 6. உரையாடல், நாடகம் அமைத்து எழுதுதல், நிகழ்ச்சி அறிவிப்புகளை நிரல்படவும், சுவைபடவும் கூறுதல், எழுதுதல். 7. பல்துறை அறிவு பெறுதல். (சித்த மருத்துவம், நுண்கலைகள், விளையாட்டு, இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள்) புதிய சொற்களின் பொருளறிதல், அகரமுதலியைப் பயன்படுத்த அறிதல், மறுப்புத் திறன் அறிதல். 8. மொழி நயம் அறிதல். உவமைகள், பழமொழிகள், மரபுத் தொடர்கள், ஒருசொல் பலபொருள், பலபொருள் ஒரு சொல் அறிதல், சொற்களஞ்சியம் பெருக்குதல். 9. நயம் பாராட்டுதல், படைப்பாற்றல். மேற்கண்ட 9 பகுதிகளுமே மாணவனின் சிந்திக்கும் திறனை வளர்ப்பவை. மனப்பாடம் செய்து வெளித்தள்ளினால் மட்டுமே மதிப்பெண்கள் என்ற அவலநிலையை மாற்ற, இத்தகைய பாடத்திட்டம் நிச்சயம் உதவும். குறிப்பெடுத்தல், விண்ணப்பங்களை உரிய வடிவத்துடன் எழுதுதல், மனித உறவுத் திறன் அறிதல் மற்றும் நயம் பாராட்டுதல் போன்றவை அவனது பிற்காலத்தில் அலுவலகப் பணிவாழ்விலும் அவனுக்கு உதவும் என்பதில் ஐயமில்லை. வரலாறும் அதேபோல் ஆரம்பத்திலிருந்து (வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து - Pre-historic period) கால வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடமும் எவ்வளவு ஆழமாக எழுதப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. ஆதிச்சநல்லூர், தாண்டிக்குடி போன்ற அகழாய்வுகளைப் பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது. அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள் தமிழரின் பண்டைய வாழ்வை அறிய உதவுவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. எப்போதுவரை நிகழ்ந்த அகழாய்வுகள் பாடத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. கீழ்க்கண்ட 7 பகுதிகள் வரலாற்றுப் பாடத்தில் காணப்படுகின்றன. 1. வரலாற்றுக்கு முந்தைய காலம் வேட்டையாடுதல், வேளாண்மையின் பொருட்டு கூட்டமாகச் சேர்தல், கிராமங்கள், (புதிய கற்கால பிற்பகுதிக் கலாச்சாரங்களும் - தொல் மனிதர் வாழ்ந்த களங்களும் - இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும்) – ஆதிச்சநல்லூர், திருவள்ளூர், மற்றும் தாண்டிக்குடி. 2. சிந்துவெளி நாகரிகம் - ஹரப்பா நாகரிகமும் அதன் திராவிடக் கூறுகளும். 3. பண்டைத் தமிழகம் - வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம் மற்றும் மூன்று சங்கங்கள் – லெமோரியா கண்டம், வரலாற்று காலம் - சேர, சோழ, பாண்டியர்கள் 4. வேதகாலம் - முற்பட்ட வேதகாலம் - பிற்பட்ட வேதகாலம்- அரசியல், சமூக வாழ்க்கை, உணவு, உடை மற்றும் அணிகலன்கள், சமயம், பெண்களின் நிலை – கல்வி 5. சமணமும், பௌத்தமும் - சமயங்களின் எழுச்சி - எழுச்சிக்கான காரணங்கள் - புத்தர், மகாவீரர் ஆகியோரது போதனைகள் 6. பேரரசுகளின் தோற்றம் - மகாஜனப் பதங்கள் - மௌரியப் பேரரசு – சந்திரகுப்த மௌரியர் - அசோகர் - மௌரியரின் ஆட்சி முறை – அசோகரின் கல்வெட்டுகள் 7. குஷாணப் பேரரசு - கனிஷ்கர் - குப்தப் பேரரசு - முதலாம் சமுத்திர குப்தர் - ஹர்ஷப் பேரரசு – ஹர்ஷர் மதம் என்றால் என்ன என்று அறிய முற்படும் வயதிலேயே சமண, பவுத்த சமயங்களின் எழுச்சியையும் அவற்றுக்கான காரணங்களையும் போதிப்பது ஒரு மாணவன் தான் சார்ந்த மதத்தைப் பற்றி மட்டுமே அறிவதிலிருந்து மாற்றி, மற்ற மதங்களையும் சமத்துவக் கண் கொண்டு நோக்க உதவும். குப்த, ஹர்ஷப் பேரரசுகளின் தொடர்ச்சி ஏழாம் வகுப்பிலிருந்து தொடரும் என நினைக்கிறோம். பாடத்திட்ட அளவில் மிக நுட்பமாகத் தொகுக்கப்பட்டுள்ள இப்பாடங்கள் உரிய பயனை அளிக்கப்போவது அவற்றை ஆசிரியர்கள் எவ்வாறு கற்பிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அறிவியலுக்கும் கணிதத்துக்கும் தரப்படும் முக்கியத்துவத்தைத் தமிழுக்கும் வரலாற்றுக்கும் கொடுத்தால்தான் இத்தகைய உழைப்புகள் விழலுக்கு இறைத்த நீராக ஆகாமல் இருக்கும். தொடர்புடையவர்கள் சிந்திப்பார்களா? அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |