http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 71
இதழ் 71 [ மே 15 - ஜூன் 14, 2010 ] இந்த இதழில்.. In this Issue.. |
சோழ மன்னர்களை எண்ணும்போது வியப்பும் மலைப்பும் ஏற்படுவது இயல்பே. இந்தச் சூர்யவம்சத்து மன்னர்களைப் பற்றிய கதைகளைச் சிறுவயது முதலே கேட்டுள்ளோம். புறாவுக்காகத் தன் சதையை அரிந்து கொடுத்த சிபிச்சக்ரவர்த்தி, பசுவிற்காகத் தன் மகனான இளவரசனைத் தேர்க்காலில் இடறிய மனுநீதிச்சோழன் - அடுக்கிக்கொண்டே போகலாம். அறம், மறம், தியாகம், சோழர்களை மிஞ்ச யார் உளர்? அதற்கு இலக்கியச் சான்று ஒன்று கிடைத்தது. நற்றிணையில், பரத்தை தான் கூடிய தலைவனைப் புகழும் ஒரு பாடல் வருகிறது. அவள் அன்புதான் எத்தகையது? சோழர்தம் அறத்தின் மாட்சிமைதனை உவமையாகக் கூறுகிறாள் தான் கொண்ட காதலுக்கு. அப்பரத்தை மொழி வாயிலாக அவர்களுள்ளும் அன்பினால் சிறந்தவர்கள் உள்ளனர், சோழர்கள் அறநெறி தவறாதவர்கள் எனப் புலப்படுகின்றது. இனிப் பாடலைக் காண்போம். நற்றிணை : 400 திணை : மருதம் துறை : பரத்தை தலைவனைப் புகழ்ந்தது. ஆசிரியர் : ஆலங்குடி வங்கனார் வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும் நெல் விளை கழனி நேர் கண் செறுவின் அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர நினின்று அமைகுவென்ஆயின் இவண் நின்று இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து அறம் கெட அறியாதாங்கு சிறந்த கேண்மையடு அளைஇ நீயே கெடு அறியாய் என் நெஞ்சத்தானே விளக்கம் :- என் நெஞ்சத்தானே! வாழையின் மெல்லிய காற்றின் நுனியில் நாறும் பூவை நிலத்தினின்று ஓங்கி வளர்ந்துற்று அசையச் செய்கின்ற நெற்கதிர் விளையாநின்ற வயலிலே கண்ணுக்கு இனிய சேற்றில், கதிர் அறுக்கும் மள்ளர் அறுத்துப் போட்ட அரிச்சூட்டின் பக்கத்தில் பெரிய கரிய பிடரியையுடைய வாளைமீன் பிறழாநிற்கும் ஊரனே! நீயின்றி யான் பொருந்தியிருப்பேனாயின், இங்கு நின்று இனிமையைத் தராத நோக்கத்துடனே என்ன பிழைப்புண்டு? யாதுமில்லை! மறம் சிறந்த சோழர்தம் உறையூர்க்கண் அவைக்களத்து அறமானது கெடல் அறியாது, நின்று நிலைப் பெற்றாற்போல நீதான் சிறந்த நட்புடனே அளாவி என் நெஞ்சில் நின்று நீங்கும் தன்மை இல்லையாய் இருந்தாய். அதனால், நீ உளனாயிருப்பின் யானும் உளனாவேன் என்று கூறுகிறாள் மருத நிலத்துப் பரத்தை. நான் படித்த மட்டில் சோழரின் உறையூர் அவைக்களத்து அறம், நீதி வழுவாத திறனாட்சி புகழப்படுவதும் உவமையாய் அமைவதும் இப்பாடல் வழியே. நேர்மையான அன்பும், மரியாதையும், நற்பெயரும் தலைவன் தலைவிக்கு மட்டுந்தானா விதிமுறை? பரத்தையரும் பெண்கள்தானே! பொருள் பறிக்கும் தீயவர்களாகவே அவர்கள் சித்தரிக்கப்படுவது ஏன்? அவர்கள் மத்தியிலும் மேன்மையானவர்கள் இல்லையோ? அரசவை நேர்மைத் திறத்தைத் தன் காதலோடு ஒப்பிடும் ஒரு நற்காரிகையைக் கண்டேன் இப்பாடல் வழியே. பரத்தை என்றாலும் அவள் காதலும் உயர்வானதே சோழரின் அறத்தைப் போல. இனிய தமிழச்சிகள் ஹாரி பாட்டர் கதைகளைத் தமிழ்க் குழந்தைகளுக்குச் சொல்வதுபோல் தமிழ் மன்னர்களின் கதைகளையும் சொல்லி வளர்க்கலாமே. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |