http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 71

இதழ் 71
[ மே 15 - ஜூன் 14, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

சமச்சீர் வரலாறு
திருக்கோயில் ஆடலரங்குகள்
சங்க இலக்கியத்தில் விடுகதை - 2
உறந்தை சோழர் அறம் போல! என் காதலே!
சங்கச்சாரல் - 20
சங்கச்சாரல் - 19
இதழ் எண். 71 > கலையும் ஆய்வும்
திருக்கோயில் ஆடலரங்குகள்
மு. நளினி


தமிழர் போற்றி வளர்த்த கலைகளுள் தலையாயது ஆடற்கலை. சங்க காலந் தொட்டே வளமையுடன் வளர்ந்து வந்த இந்தக் கலை சோழர்கள் காலத்தில் பல்கி, விரிந்து பல பிரிவுகளாய்ச் செழுமையுற்றது. ஆடல் நிகழ்த்த வீதிகளையும் மன்றுகளையும் மட்டுமல்லாமல் அரங்குகளையும் அமைத்துப் பயன்படுத்தி வந்த வரலாற்றைச் சங்க இலக்கியங்களிலேயே காணமுடிகிறது. இத்தகு அரங்குகள் பல்லவர், சோழர் காலத்தில் பலவாய் இருந்தன எனினும், அவற்றைக் கோயில்களில் காணப் படும் கல்வெட்டுகளின் வழி அறியமுடிகிறதே தவிர, இன்றைய சூழலில், ‘இதுதான் அது’ என்று எந்த ஒரு பழங்கால ஆடல் அரங்கத்தையும் உறுதிபட அடையாளப்படுத்தக்கூடவில்லை.

இந்த நிலையில்தான், வரலாற்றுச் சிறப்பு மிக்க சோழர் கால ஆடல் அரங்கு ஒன்றைக் கல்வெட்டின் துணையுடன் அடையாளப்படுத்தியுள்ள டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் மதுரையை அடுத்துள்ள அழகர்மலையில் நாயக்கர் கால ஆடலரங்கம் ஒன்றையும் வரலாற்று வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குன்றுகள் சூழ்ந்த ஊர்களைப் பலவாய்க் கொண்டதாகும். அதனால்தான், அந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் குடைவரைக் கோயில்கள் உருவாகியுள்ளன. புதுக்கோட்டைக்கு வடக்கிலுள்ள கீரனூரில் இருந்து ஆதனக்கோட்டைக்குச் செல்லும் வழியில் குன்றாண்டார்கோயில் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரின் நடுவில் பரந்து விரிந்திருக்கும் குன்றொன்றின் கீழ்ப்பகுதியில் மூன்று குடைவரைகள் அகழப்பட்டுள்ளன. அவற்றுள் அளவில் பெரியதாக அகழப்பட்டிருக்கும் நடுக்குடைவரை மட்டுமே முழுமையடைந்த நிலையில் கருவறைத் திருமேனியோடு வழிபாட்டில் உள்ளது. அதன் தென்புறத்தும் வடபுறத்தும் சிறிய அளவிலான குடைவரைகள் முழுமையுறாப் பணிகளாகக் கைவிடப்பட்டுள்ளன. பிற்காலப் பல்லவர் காலத்தைச் சேர்ந்த இந்தக் குடைவரைகளை உள்ளடக்கிய வளாகத்தில் வடபுறம் தெற்கு நோக்கிய அம்மன் கோயிலும் தென்புறம் கிழக்குப் பார்வையாய் அமைந்த அரங்கம் ஒன்றும் இடம்பெற்றுள்ளன.

குதிரைகள் இழுக்கும் தேர் போலச் சக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அரங்கத்தின் வாயில் கபோதபந்தத் துணைத்தளம் பெற்றுள்ளது. தெற்கிலும் வடக்கிலும் யாளித் தலைப் பிடிச்சுவர்களுடன் படியமைப்புக் கொண்டிருக்கும் இவ்வாயிலின் கிழக்குப்புறத்தே உத்திரமொன்றைத் தலையில் தாங்குவனவாய் எட்டுப் பூதங்கள் காட்டப்பட்டுள்ளன. இசைக்கருவிகளை இசைப்பனவாகவும் அதற்கேற்ப ஆடல் நிகழ்த்துவனவாகவும் உள்ள அவற்றுள் ஒன்று பெண்பூதம். பிடிச்சுவரை ஒற்றைக்கால் பஞ்சரங்கள் அழகு செய்கின்றன. தென்வடலாக 5. 67 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 4. 60 மீ. அகலமும் கொண்டுள்ள இவ்வாயில், நிலத்திலிருந்து 1. 37 மீ. உயரம் பெற்று அமைந்துள்ளது.

ஆறு வரிசைத் தூண்களால் ஐந்து பிரிவுகளாகப் பகுக்கப் பட்டிருக்கும் ஆடல் அரங்கம் தென்வடலாக 15. 58 மீ. அகலமும் கிழக்கு மேற்காக 26. 18 மீ. நீளமும் பெற்றுள்ளது. 5. 14 மீ. அகலம் பெற்றுள்ள நடுப்பிரிவை ஒன்று போல் அமைந்த அலங்காரத் தூண்கள் இருபுறத்தும் அணைத்துள்ளன. இத்தூண்கள் ஒவ்வொன்றும் இருவகைத் தூண்களின் இணைவாக உள்ளன. தாய்த்தூண் முச்சதுர, இருகட்டு உடல் பெற, இணைவுத் தூண் சதுரபாதத் தின் மீதெழும் இருசதுர, நான்முக உடல் கொண்டுள்ளது.

தாய்த்தூணின் கீழ்ச்சதுரத்தில் நாகபந்தமும் நடுச்சதுரத்தில் யானை போன்ற சிற்ப வடிவங்களும் அமைய, கட்டுகள் நடுப்பட்டைகள் பெற்றுள்ளன. இணைவுத்தூண்கள் பக்கவாட்டில் உருளைக்கால் வரிகள் அல்லது கொடிக்கருக்குகள் கொண்டு, தலையுறுப்புகள் பெற்று, பலகையின் மேல் அமர்நிலை யாளி கொண்டுள்ளன. தாய்த்தூணின் போதிகைகள் மதலை, நாணுதல் பெற, இணைவுத் தூண்கள் மதலை மட்டுமே கொண்டுள்ளன. ஐந்து பிரிவுகளுள் அகலமான பிரிவாக அமைந்துள்ள இந்நடுப்பகுதி சமுதாயத்தின் மேல் தட்டு மக்களும் அரசு சார்ந்தவர்களும் அமர்ந்து நிகழ்வு காண அமைக்கப்பட்டதாகலாம்.

அதன் இருபுறத்தும் உள்ள 1. 64 மீ. (வடக்கு), 1. 68 மீ. (தெற்கு) அகலப் பிரிவுகளை ஒன்று போல் அமைந்த சதுர பாதத்தின் மீதெழும் உருளைத் தூண்கள் அணைத்துள்ளன. அவற்றின் சதுரங்களில் பேரளவு நாகபந்தங்கள். அடுத்துள்ள 1. 63 மீ. (வடக்கு), 1. 56 மீ. (தெற்கு) அகலப் பிரிவுகளை அணைத்துள்ள தூண்கள் முச்சதுர, இருகட்டு உடலின. அவற்றின் கீழ்ச்சதுரம் நாகபந்தம் பெற, இடைச்சதுரம் மலர்ப்பதக்கம் கொண்டுள்ளது. கட்டுகளில் முப்பட்டைகள். இத்தூண்களின் மேலுள்ள பூமொட்டுப் போதிகைகள் கூரையுறுப்புகளைத் தாங்குகின்றன. ஒழுங்குபட அறுத்த பலகைக் கற்கள் அரங்கிற்குக் கூரையாகப் பாவப்பட்டுள்ளன.

அரங்கத்தின் மேற்குப் பகுதியில் தென்வடலாக 12. 87 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 8. 85 மீ. அகலமும் தரையிலிருந்து 1. 31 மீ. உயரமும் பெற்றுள்ள மேடை அமைந்துள்ளது. மேடையின் பின்வரிசையில் உருளைத் தூண்கள் அமைய, நடுப்பகுதியை அலங்காரத் தூண்கள் அணைத்துள்ளன. ஆடல் நிகழ்த்த ஏதுவாக நன்கு விலகி அமைந்துள்ள இவற்றையும் அரங்கத் தூண்களையும் பலர் கொடையளித்துள்ளனர். சில தூண்களில் கொடையாளிகளின் பெயர்களும் சிலவற்றில் பெயர்களுடன் அவர்தம் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன.

பெருங்களூர் நாடாள்வான் மகன் குன்றன் கொப்பிலி சிங்கதேவன் இரண்டு மலை நாட்டுப் பிள்ளை, வியாபாரி அம்பலவன் கோவிஞ்சாண்டான், பெரும்புலியூரைச் சேர்ந்தவர்களான பிள்ளான் திருந்தான், வியாபாரி அம்பலவனத்தாண்டான், காத்தானான ராஜராஜ முத்தரையன், சோழன் பொன்னன், பெரியகோன் மக்கள், பலபடாரர் ஆகியோர், துவரங்கோட்டை யைச் சேர்ந்த பொன்னதுண்டராயன், இளங்கத்தரையன் மகன் பிள்ளாண்டான், கிளிநல்லூரைச் சேர்ந்தவர்களான மூவரைசியார், மாதன் நிலையான், பேரையர் மக்கள் அரச பண்டாரம் சேயான் பொன்னன், சோழன்காரி ஆகியோர், தெற்றியூரைச் சேர்ந்த பாலையூர் நாடாள்வான் மகன்கள் கயிலாண்டான், எழுவன், வெழச்சிக்குடி சாத்தனான உத்தமசோழ நாடாள்வான், தென்மாவூர் தேவாண்டாரான மழவராயர், மூவன் குன்றந்தை எனும் பத்தொன்பது பேர் தூண் கொடையாளிகளாகக் கல்வெட்டுகள் வழி வெளிப்படுகின்றனர்.

மேடையின் தெற்கிலும் வடக்கிலும் அரங்கத் தரையில் இருந்து மேலேறிச் செல்ல வாய்ப்பாகத் திசைக்கு நான்கு படிக்கட்டுகள் உள்ளன. கபோதபந்தத் தாங்குதளமாக வடிவமைக் கப்பட்டுள்ள மேடை முகப்பு, 6. 52 மீ. அகலத்தில் அமைந்து, பின் மேற்கில் திரும்பி 2. 48 மீ. அளவிற்கு நீண்டு, தெற்கிலும் வடக்கிலும் திசைக்கு 3. 30 மீ. அகலத்திற்கு விரிந்து எழிலார்ந்த தோற்றத்துடன் காட்சிதருகிறது. மேடையின் வடபுறத்தே கலைஞர்கள் மேடையில் நுழைய ஏதுவாக வாயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேடைப் பின்சுவரின் புறப்பகுதியைத் தலையுறுப்புகள் கொண்ட நான்முக அரைத்தூண்கள் அலங்கரிக்கின்றன.

ஐநூறு பேருக்கு மேல் அமர்ந்து பார்க்கக்கூடிய அரங்கமாக அமைந்துள்ள இதை, சோழர்களின் ஆட்சிக்காலமான கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் தென்வாயூரைச் சேர்ந்த பதையா மாலன் அழகிய சோழ நாடாள்வான் என்பார் எடுப்பித்துள்ள தகவலை நடுக்குடைவரை முன்னுள்ள மண்டபத்தின் வடசுவர்க் கல்வெட்டு வழி அறியமுடிகிறது.

திருப்பணியின் காரணமாக அரங்க வாயிலும் சுற்றுப் பகுதிகளும் பிரித்துப் போடப்பட்டுள்ள நிலையிலும் அரங்கத்தின் எழிலும் கம்பீரமும் சற்றும் குறையாமல் மிளிர்வதைக் காணலாம். இக்கோயிலை நிருவகித்துவரும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் முயற்சியில் இவ்வரங்கு மீண்டும் தன் பழைய நிலையை அடையுமாயின், குன்றாண்டார் கோயில் ஊரவர் தங்கள் வீட்டு விழாக்கள் அனைத்தையும் இச்சோழர் கால ஆடல் அரங்கிலேயே நிகழ்த்திப் பெருமை கொள்ளலாம். ஏழு நூற்றாண்டுகளாக நின்று நிலைத்திருக்கும் இவ்வரங்கை எழுப்பிய அழகிய சோழ நாடாள்வாருக்கு அதனினும் சிறந்த கைம்மாறு வேறென்ன செயவல்லோம்!

மதுரைக்கு வடக்கே இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ளது சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில். கோயில் வளாகத்தின் தொடக்கத்திலேயே வடபார்வையாகத் திகழ்கிறது திருமலைநாயக்கர் ஆடலரங்கு. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக விளங்கும் இவ்வரங்கின் நீளம் 14. 79 மீ.; அகலம் 11. 58 மீ.; உயரம் 6. 24 மீ. தென் வடலாகத் தூண் வரிசைகளால் பகுக்கப்பட்டிருக்கும் இவ்வரங்கின் இடைப்பிரிவு 5. 45 மீ. அகலத்தில் விரிந்துள்ளது. இப்பிரிவை அணைக்கும் இருபுறத் தூண் வரிசையில், வரிசைக்கு ஆறு தூண்கள் இடம்பிடித்துள்ளன.

ஒவ்வொரு தூணும் தாய்த்தூண், இணைவுத்தூண் என இரண்டின் கூட்டாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. சதுர பாதத்தில் எழும் தாய்த்தூண் செவ்வகம், கட்டு, சதுரம், கட்டு, சதுரம் என அமைந்து, பூமொட்டுப் போதிகைகள் தாங்க, மேலே உத்திரம். கட்டுகள் அழகிய இடைப்பட்டையுடன் காட்சிதரும் இத்தூண்களின் செவ்வகம், கொடிக்கருக்கு அல்லது சிற்பம் பெற, சதுரங்களில் மலர்ப் பதக்கங்கள்.

தாய்த்தூண் போலவே செவ்வகப்பாதம் பெற்று எழுந்த போதும், இணைவுத் தூண்களின் உடலமைப்பு நான்முகமாக உள்ளது. முன்பின்னாக நிற்கும் இரண்டு கனமான சதுரப் பட்டிகள் போல வளரும் இவற்றின் உடலில் உருளைக்கால் வரியும் கொடிக்கருக்கும் காட்டப்பட்டுள்ளன. தாமரைக் கட்டுடன் கலசம், தாடி என அனைத்துத் தலையுறுப்புகளும் பெற்றுள்ள இவற்றின் போதிகைகள், இரண்டு மதலைகளால் உத்திரம் தாங்க, நாணுதல் தாழ்ந்துள்ளது. மேலே மற்றொரு பலகையில் பாயும் யாளி இடம்பெற, அதன் தலையில் உத்திரம் எனத் தொடரும் உறுப்புகள் முடிவில் கூரையை அணைத்துள்ளன. பக்கப் பிரிவுகளைவிட நடுப்பிரிவின் கூரை நன்கு உயர்ந்துள்ளது.

அரங்கின் கிழக்கிலும் மேற்கிலும் தென்வடலாக நிற்கும் தூண்கள் கிழக்கு, மேற்கு அரங்கப் பிரிவுகளை வெளிப்புறத்தே அணைக்க, நடுத்தூண் வரிசைகள் உட்புறமாய் வரையறுக்கின்றன. கிழக்குப் பிரிவு 1. 64 மீ. அகலம் கொள்ள, மேற்குப் பிரிவு 1. 61 மீ. அகலத்தில் அமைந்துள்ளது. இவற்றின் வெளித்தூண்கள் நடுவரிசையின் தாய்த் தூண்களைப் போலவே உடலமைப்புப் பெற்று வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்க, மேலே வாஜன, வலபித் தழுவலில் கூரை, நடுப்பகுதியினும் தாழ அமைந்துள்ளது. நாகபந்தம் பெற்றுள்ள தூண்களின் செவ்வகங்கள் சிலவற்றில் மீன் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. சதுரங்கள் நடுவரிசை போலவே மலர்ப் பதக்கங்கள் கொண்டுள்ளன.

அரங்கத்தின் புறத்தே காணப்படும் தாங்குதளம் உபானம், துணை உபானம், தாமரையிதழ்களாய் அமைந்த ஜகதி, கம்புகள் தழுவிய சிறிய கண்டம், அழகூட்டல் பெற்ற எண்பட்டைக் குமுதம், தாமரைவரிகளால் அணைக்கப்பட்ட கண்டம், கூடுவளைவுகளுடனான கபோதம் எனக் கபோதபந்தத் தாங்கு தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அரங்கத்தின் தென்கோடியில், அரங்கத் தரையிலிருந்து 33 செ. மீ. உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள அழகிய மேடை 8. 65 மீ. அகலமும் 7. 07மீ. நீளமும் 5. 63 மீ. உயரமும் பெற்றுப் பரந்துள்ளது. மேடையின் இருபுறத்தும் தென்வடலாக வரிசைக்கு நான்கு தூண்கள் என நான்கு வரிசைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் கிழக்கு, மேற்குத் தூண்வரிசைகளுக்கு இடையிலும் தென்வரிசைத் தூண்களுக்கு இடையிலும் சுவரெழுப்பியிருப்பதால், அரங்கத்தில் தற்போது இருவரிசைத் தூண்களே, வரிசைக்கு மூன்றெனக் கண்களுக்கு விருந்தாகின்றன.

அரங்கிலிருந்து மேடைக்கு ஏற வாய்ப்பாகப் படிக்கட்டுகள் உள்ளன. தாமரை ஜகதியில் தொடங்கும் மேடையின் முகப்பு, கம்புகள் தழுவிய கண்டமும் அலங்கரிப்புப் பெற்ற எண்பட்டைக் குமுதமும் பெற்று, மேலுறுப்புகளாகத் தாமரை வரிகள் அணைத்த கண்டம், கூடுவளைவுகளுடனான கபோதம் கொண்டு, பூமிதேசமாய்க் கம்பொன்றைக் காட்டி மேடைத் தரையாக விரிகிறது.

சிதைந்துள்ள மேடையின் பின்சுவர் நாயக்கர் காலக் கட்டுமான உத்திகளைக் கண் முன் வைக்க, கபோதத்திற்கு மேலுள்ள கண்டப்பகுதியில் பாதங்களுக்கு இடைப்பட்டன வாய்ப் பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்டம் சிற்பச் செதுக்கல்களுடன் அரங்கத்திலும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

அரங்க வாயிலருகே உள்ள தூண்களில் பக்கத்திற்கொரு நெடிய சிற்பம் தென்பார்வையாக அமைக்கப்பட்டுள்ளது. நாயக்க அரசின் உயர் அலுவலர்களைப் போல் காட்சியளிக்கும் இவ்விருவரும் சமபாத நிலையில், பட்டாடை, கழுத்தில் பதக்கத்துடனான இருசர நீள்முத்துமாலை, இடுப்பின் வலப்புறம் உறையில் செருகப்பட்ட நிலையில் குறுவாள், கைகளில் வளைகள், தொப்பி இவற்றுடன் இருகைகளையும் குவித்து வணங்கிய நிலையில் நிற்கின்றனர்.

மேடை விளிம்பொட்டி நிற்கும் கிழக்கு, மேற்குத் தூண் களில் நாயக்க அரசர்களின் சிற்பங்கள் உள்ளன. கிழக்குத் தூணில் மேற்குப் பார்வையாகத் திருமலைநாயக்கரின் சிற்பமும் வடபார்வையாக அவர் தேவி ஒருவரின் சிற்பமும் இடம்பெற்றுள்ளன. சமபாதநிலையில் பட்டாடையுடன் காட்சிதரும் திருமலைநாயக்கரின் கைகள் குவிந்து வணக்க முத்திரையில் உள்ளன. கைகளின் மேற்பகுதியிலும் மணிக்கட்டுகளிலும் முத்துவளையல்கள், கழுத்திலும் தோள்களிலும் பல்வேறு அணிகலன்கள் பெற்றுள்ள நாயக்கர் இடுப்பில் முத்துக்கள் கோத்த இடையணியும் வலப்புறம் வாளும் உள்ளன.

பக்கவாட்டில் கொண்டையிட்ட தலையலங்காரமும் விரல்களில் மோதிரங்களும் விளங்க, மீசையுடன் கம்பீரமாய்க் காட்சிதரும் திருமலைநாயக்கரின் வலப்புறத்தே வடபார்வையில் உள்ள அவரது அரசியும் கைகளைக் குவித்து வணங்கிய நிலையில் உள்ளார். பனையோலைக் குண்டலங்கள், சூரிய சந்திரப் பிறைகள் பொலிந்த கொண்டையிட்ட தலையலங்காரம், பல்வேறு மணிகளாலான இடையணிகள் தழுவிய பட்டாடை, கழுத்தணிகள், சிலம்பு இவற்றுடன் மார்க்கச்சும் அணிந்துள்ள தேவியின் திருமுகம் எழிலுற அமைந்துள்ளது.

மேடையின் மேற்குத் தூணில் கிழக்குப் பார்வையாகக் காட்டப்பட்டிருக்கும் ஆடவர் திருமலையின் தம்பியான முத்தியாலு நாயக்கராகலாம். கழுத்தில் பதக்கமாலை, முத்துச் சரம். வாள் செருகப்பட்டுள்ள இடுப்பில் பட்டாடை அணிந் துள்ள அவரது மீசை அடர்த்தியாக உள்ளது. கைகள் வணக்க முத்திரையில் உள்ளன. செவிகள், கைகள், இடை, பாதங்கள், விரல் கள் என உடலின் அனைத்துப் பகுதிகளிலும் அணிகலன்கள்.

வடபார்வையாக உள்ள அவரது தேவி கிழக்குப்புறத் தேவியை ஒப்பிய அணி, மணி, பட்டாடையுடன் வணக்க முத்திரையில் அடர்த்தியான சடை முதுகில் புரளக் காட்சியளிக்கிறார். இந்த அரங்கத்தில் ஆடல் நிகழ்வுகளுடன் சுந்தரராஜப் பெருமாளின் சிறப்பு உற்சவங்களும் நடைபெற்றிருக்கக் கூடும் எனக் கருதுமாறு கிழக்கிலும் மேற்கிலும் நாயக்க அரச மரபினரின் வணங்கிய திருத்தோற்றங்கள் அமைந்துள்ளமை இவ்வரங்கின் தனிச் சிறப்பாகும்.

மேடையின் மேற்குத் தூணொன்றின் கீழ்ச் செவ்வகத்தில் கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் கிழக்கு நோக்கி நடப்பவர் போல வடபார்வையில் உச்சிக் கொண்டையிட்ட ஆடவர் ஒருவரின் சிற்பம் உள்ளது. செவிகளில் முத்துத்தோடுகளும் கழுத்தில் முத்துமாலையும் பட்டாடையும் அணிந்துள்ள அவரது இடையில் இடப்புறம் கத்தி செருகப்பட்டுள்ளது. மேடையருகே உள்ள, மேற்குப்புற அரங்கத் தூணொன்றிலும் இது போன்றதோர் ஆடவர் சிற்பம் காணப்படுகிறது. சமபாத நிலையில் உள்ள இவரது தலைமுடி இடப்புறக் கொண்டையாக முடியப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நாயக்க அரசின் உயர் அலுவலர்கள் ஆகலாம்.

கிழக்குப்புற அரங்கத் தூண்கள் சிலவற்றின் சதுரங்களிலும் செவ்வகங்களிலும் ஆடவர், மகளிர் சிற்பங்களும் கங்காளர் சிற்பமும் விலங்கு, பறவை இவற்றின் வடிவங்களும் செதுக்கப் பட்டுள்ளன. மிதியடிகளுடன் மேற்கு நோக்கிய நடையராய்க் காட்சிதரும் கங்காளரின் பின்கைகளில் உடுக்கையும் கங்காளத் தண்டும் உள்ளன. முன்கைகளுள் வலக்கை சின்முத்திரை காட்ட, இடக்கையில் தலையோடு. சடைமகுடம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம், வலச்செவியில் செவிப்பூ, சுவர்ணவைகாக்ஷம், கழுத்தாரங்கள், பட்டாடை எனக் காட்சிதரும் இறைவனின் மார்பில் முப்புரிநூல் உள்ளது.

அவரைக் கண்டு மயங்கி ஆடைநெகிழ்ந்த தாருகாவன முனிப் பெண்ணையும் சிற்பி விடவில்லை. அடுக்களையில் இருந்து வந்தவர் போல் வலக்கையில் கரண்டியுடன் காட்சிதரும் அம்மங்கையின் இடக்கை, நெகிழ்ந்த ஆடையால் புறந்தெரியும் பிறப்புறுப்பை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உடலெங்கும் அணிகலன்களை நிறைத்துள்ள அப்பெண்ணிடத்தில் பிச்சைபெற இரண்டு கைகளாலும் பிடித்துள்ள பாத்திரத்தைத் தலையில் சுமந்த பூதமொன்றையும் கங்காளர் முன் இருக்குமாறு செதுக்கியுள்ளார் சிற்பி. இப்பூதம் வீரச்சங்கிலி அணிந்திருப் பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு கிழக்குத் தூணின் சதுரத்தில் சமபாத நிலையில் நிற்கும் ஆடவரின் வலக்கை சிதைந்துள்ளது. பனையோலைக் குண்டலங்களும் கழுத்தாரங்களும் பெற்றிருக்கும் அவரது இடக் கையில் தோகையுடன் கரும்பு. அதே சதுரத்தின் மறுபக்கம் கல்லிருக்கையில் அர்த்தபத்மாசனத்தில் ஆடவர் ஒருவரைக் காணமுடிகிறது. வலக்கையைப் பதாகத்தில் கொண்டுள்ள அவரது இடக்கை தியானஅஸ்தமாக உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று காணக்கிடைக்கும் பழங்கால ஆடலரங்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். அவற்றுள்ளும் சிற்பங்களுடன் அமைந்துள்ளவை மிகச் சிலவேயாகும். மதுரை மாவட்டத்திற்கே பெருமை சேர்க்குமாறு போல அமைந்துள்ள இத்திருமலைநாயக்கர் ஆடலரங்கு பெருஞ் சிதைவிற்கு ஆளாகியுள்ளபோதும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சீரமைப்பிற்கு விரைந்து ஆட்படவுள்ளது எனும் தகவல் பெரும் ஆறுதல் தருகிறது.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.