http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 71
இதழ் 71 [ மே 15 - ஜூன் 14, 2010 ] இந்த இதழில்.. In this Issue.. |
நம்பமுடியவில்லை! அப்படித்தானே! ஆனால் இருந்தது. மருதனிளநாகனார் சொல்கிறார். விரைந்து செல்லும் பயணமுடைய சங்க இளையர் ஓய்வெடுக்கும்போது, வந்த வருத்தம் தீரத் தம் இடையில் விளங்கும் கச்சையின் பிணிப்பை நெகிழ்த்திவிட்டுக் கொள்வராம். பல்லவர் காலந்தொட்டு ஆடவர் சிற்பங்களில் இந்த 'அரைச் செறி கச்சை' காணப்படுகிறது. இதன் அமைப்பும், யாப்பும், அதன்வழி நீளும் தொங்கல்களும் சிற்பத்திற்குச் சிற்பம் குறைந்தபட்சம் சிறுசிறு வேறுபாடுகளுடனாவது காட்டப்பட்டுள்ளமை அந்நாளைய மக்களின் நாகரிக நயம் காட்டுகிறது. நற்றிணை : 21 திணை : முல்லை துறை : வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது ஆசிரியர் : மருதனிள நாகனார் விரைப் பரி வருந்திய வீங்கு செலல் இளையர் அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ வேண்டு அமர் நடையர் மென்மெல வருக தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு ஏமதி வலவ தேரே உதுக் காண் உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக் காமரு தகைய கான வாரணம் பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி நாள் இரை கவர மாட்டி தன் பேடை நோக்கிய பெருந்தகு நிலையே தமிழ்நாட்டில், 'கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தாற்போல' என்றொரு பழமொழி வழக்கிலிருப்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்தப் பழமொழியின் விதை நற்றிணையிலிருப்பதை எத்தனைபேர் அறிவர்! 'வழிபடு தெய்வம் கண் கண்டாங்கு' எனும் இந்த விதையைத் தூவியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. நற்றிணை : 9 திணை : பாலை துறை : உடன்போகா நின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது ஆசிரியர் : பாலை பாடிய பெருங்கடுங்கோ அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு அலமரல் வருத்தம் தீர யாழ நின் நல மென் பணைத் தோள் எய்தினம் ஆகலின் பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி நிழல் காண்தோறும் நெடிய வைகி மணல் காண்தோறும் வண்டல் தைஇ வருந்தாது ஏகுமதி வால் எயிற்றோயே மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் நறுந் தண் பொழில கானம் குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே நெடிய தேர்ப்படையை உடைய வலிமிகு சோழப் பெருவந்தர்களே, கொங்கரைப் பணியவைக்கப் பழையனின் வேலைத்தான் நம்பியிருந்தனராம். இந்தப் பழையன், போர் எனும் ஊரின் தலைவர். யானைப்படை கொண்டவர். ஊர்க்கிழவர்கள் துணையின்றி நடுவணரசுகள் வாழ்ந்ததில்லை போலும். நற்றிணை : 10 திணை : பாலை துறை : உடன்போக்கும் தோழி கையடுத்தது ஆசிரியர் : தெரியவில்லை அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும் பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த நல் நெடுங் கூந்தல் நரையடு முடிப்பினும் நீத்தல் ஓம்புமதி பூக் கேழ் ஊர இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர் வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன் பழையன் வேல் வாய்த்தன்ன நின் பிழையா நல் மொழி தேறிய இவட்கே மேற்கண்ட சங்கத் துணுக்குகள் டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் வெளியிடும் வரலாறு ஆய்விதழ் தொகுதி 11-ல் வெளியானவை. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |