http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 74
இதழ் 74 [ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2010 ] இந்த இதழில்.. In this Issue.. |
வாசகர்களுக்கு வணக்கம்.
அனைவரும் நலமாக இருப்பீர்களென்று நம்புகிறோம். தமிழகத்தில் அமைந்துள்ள முப்பத்து எட்டாயிரத்து சொச்சம் திருக்கோயில்களுள் தினமும் பத்தாயிரம் அல்லது அதற்கும் குறைவான கோயில்களில்தான் மூன்று காலப் பூஜைகள் நடந்தேறி வருகின்றன. பல திருக்கோயில்களில் ஒரு காலப் பூஜையே சிரமத்துடன்தான் அரங்கேறி வருகிறது. இவற்றைத் தவிர்த்த ஆயிரக்கணக்கான திருக்கோயில்களில் முறையான ஒரு வேளை பூஜை கூட நடைபெறுவதில்லை. திருக்கோயில் எனும் மாபெரும் சமுதாயக்களம் மற்றும் அதனைச் சார்ந்த்த இயக்கங்கள் முற்றிலும் சிதைந்துபோய் அது வழிபாட்டுத்தலமாக குறுகிப் போனமையும் திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை ஊராரும் உடமையாளர்களும் தமதாக்கிக் கொண்டு கோயில்களை ஏமாற்றியமையும்தான் திருக்கோயில் வழிபாடுகள் நின்று போனமைக்கு முக்கியக் காரணிகள் என்று தோன்றுகிறது. இந்த நிலைமை சீரடையவேண்டும். வழிபாடிழந்து நிற்கும் திருக்கோயில்களில் குறைந்த பட்சம் ஒரு காலப் பூஜையாவது நடைபெற வேண்டும் என்கிற எண்ணத்துடன் தமிழக அரசு ஒரு நல்ல திட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் செயல்பாட்டில் இருந்தாலும் ஏனோ பொதுமக்களுக்கு இதனைப் பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இல்லை. அரசும் ஏனோ இத்திட்டத்தைப் பற்றித் தகுந்த முறையில் விளம்பரப் படுத்துவதில்லை. தினமும் நூறு முறை ஓலிபரப்பபப்படும் நூற்றியெட்டு விளம்பரத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் நூற்றில் ஒரு பங்கு கொடுத்தால்கூட இந்தத் திட்டம் பொதுமக்களைச் சென்றடைந்துவிடும். ‘இது நமது அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் அல்ல. ஆகையினால் இதனைப் பற்றி விளம்பரமோ விழிப்புணர்வோ ஏற்படுத்த மாட்டோம்’ என்று ஆட்சியாளர்கள் நினைத்தால் அது சிறுபிள்ளைத் தனமேயன்றி வேறேன்ன? இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களில் எவரும் வழிபாடிழந்திருக்கும் திருக்கோயில்கள் எதற்கேனும் ஓரு வேளை வழிபாட்டிற்கு வகை செய்ய முன்வரலாம். குறிப்பிட்ட திருக்கோயிலின் பெயரையும் இடத்தையும் குறிப்பிட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்குக் கடிதமெழுதி அத்துடன் ரூ. 2500 க்கு காசோலை எடுத்து அனுப்பிவிட வேண்டும். அரசு தன் பங்கிற்கு ரூ.22500 செலுத்தி மொத்தமாக ரூ.25000த்தை வைப்பு நிதியாக வைத்து அதன் மூலம் கிடைக்கும் வட்டியை தினமும் வழிபாடு நிகழ்த்தப்போகும் அர்ச்சகருக்கு நேரடியாக அனுப்பி வைத்து விடும். தினமும் வழிபாடு நிகழ்த்த வேண்டிய பொறுப்பு இனி அர்ச்சகருடையது. இத்திட்டம் நல்ல முறையில் செயல்பட்டால் அதனால் அனைவருக்கும் பயனுண்டு. - பொதுமக்களில் ஒவ்வொருவரும் இத்திட்டத்தில் பங்கு பெறலாம். தமக்குப் பிரியமான எந்தத் திருக் கோயிலையேனும் தத்தெடுக்கலாம். - ரூ. 2500 ல் ஓரு பழைய திருக்கோயிலுக்குப் புதுவாழ்வு வந்துவிடும் - குறிப்பிட்ட பகுதியில் அமைந்திருக்கும் பல திருக்கோயில்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வரும்போது ஒரே அர்ச்சகர் பல திருக்கோயில்களை கவனிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். இதனால் அவருக்கும் உரிய ஊதியம் கிட்டக்கூடிய வாய்ப்பு அமையும் இத்திட்டத்தை நமக்குத் தெரிவித்த வரலாறு டாட் காம் குடும்பத்தின் கட்டுரையாளர் திரு நீலன் தாமே ஒரு திருக்கோயிலுக்கு ஆதரவுக்கரம் நீட்டியதோடு மட்டுமல்லாமல் தமது குடும்பத்தாரையும் நண்பர்களையும் கூட இத்திட்டத்தில் உற்சாகத்தோடு ஈடுபடுத்தி வருகிறார். இதில் ஈடுபட நினைக்கும் வாசகர்களுக்கு உரிய உதவிகள் புரியவும் அவர்தம் முயற்சிகளை உலகிற்குத் தெரியப்படுத்தவும் வரலாறு காத்திருக்கிறது. தமிழக அரசு, தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் முடிவுற்றதை வெகு விமரிசையாகக் கொண்டாடி வரும் இந்த வேளையில் அத்திருக்கோயில் கட்டப்பட்ட அதே காலகட்டத்தில் வளத்தோடு திகழ்ந்த பல்லாயிரம் திருக்கோயில்களையும் நினைக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். ஒவ்வோரு பிரச்சனையின் போதும் அரசைத் திட்டுவதுடன் நின்றுவிடாமல் அந்த நிலைமை மாறுவதற்கு நாம் நம் பங்கிற்கு என்ன செய்யலாம் என்றும் சிந்திப்பதுதானே அறிவுடைமை? அன்புடன் ஆசிரியர் குழுthis is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |