![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 74
![]() இதழ் 74 [ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2010 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பழநி சுப்ரமணிய பிள்ளையைப் பற்றி நூலெழுதும் எண்ணத்தில் 4 வருடங்களாய் விவரங்கள் சேகரித்து வருகிறேன். அவரைப் பற்றிய விவரங்களோடு அவர் வாசித்துப் புகழ் பெற்ற மிருதங்கத்தைப் பற்றியும் விவரங்கள் தொகுப்பது அவசியம் என்று நினைத்ததால் வந்தது வினை. மிருதங்க வரலாறு என்பதே பல வருட உழைப்புக்குப் பின் எழுதப்பட வேண்டிய நூலுக்கான தலைப்பென்பதைத்தான் இத்தனை நாளில் உணர முடிகிறது. இவ்விஷயத்தின் ஆழங்களுக்குள் செல்லுதல் சாத்தியமன்று. முழவிசை பற்றியும் மிருதங்கத்தைப் ஒரு பறவைப் பார்வையை வீசி, சில கேள்விகளை எழுப்புவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
இலக்கியங்களும், கல்வெட்டுகளும் முழவு, தண்ணுமை, மத்தளம், இடக்கை, முரசு, பறை, குடமுழா முதலிய பல்வேறு தோலிசைக் கருவிகளைச் சுட்டுகின்றன. இவற்றுள், இசைக்கும் ஆடலுக்கும் பயன்படுத்தப்பட்ட கருவிகளுள், முழவு, தண்ணுமை, மத்தளம் ஆகிய கருவிகளைப் பற்றிய குறிப்புகள் ஏராளமாய் கிடைக்கின்றன.இம் மூன்றில், முழவும் தண்ணுமையும் சங்க இலக்கியங்களிலேயே இடம் பெருகின்றன. 'முழவு' என்ற சொல் தாளக் கருவிகளைச் சுட்டும் பொதுச் சொல்லாகவும், ஒரு குறிப்பிட்ட கருவியைச் சுட்டும் சொல்லாகவும் இடம் பெருகிறது. சிலப்பதிகார காலத்தில், தாளக் கருவிகளுள் 'தண்ணுமை' தலைமைக் கருவியாய் விளங்கியது. "ஈர்ந்தண் முழவு", "மண்ணார் முழவு", "முழவு மண் புலர" போன்ற குறிப்புகள் முலம் தண்ணீரால் தோலைப் பதப்படுத்தி இனிய ஓசையை எழுப்பியதையும், தோலில் ஒருவகை பசை மண்ணை இட்டு முழக்கியதையும், இம் மண் காலப்போக்கில் வரண்டு உதிர்ந்ததையும், உணரமுடிகிறது என்று 'மத்தளவியல்' என்ற நூலில் முனைவர் வி.ப.க.சுந்தரம் கூறுகிறார். பதிற்றுப்பத்து கூறும் "பண்ணமை முழவு", சீவக சிந்தாமணி நச்சினார்க்கினியர் உரை கூறும் "இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய்", ஆகிய தொடர்கள் மூலம் பண்டைய காலத்திலேயே முழவிசைக் கருவிகளில் ஸ்ருதி சேர்க்கப்பட்டன என்றும் முனைவர் சுந்தரம் கூறுகிறார். இலக்கியங்களில் மத்தளம் என்ற சொல்லை முதன் முதலில் காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகத்தில்தான் காண முடிகிறது. சிலபெருமானின் ஆடலுக்கு ஏற்ற தாளக் கருவிகளுள் ஒன்றாக மத்தளம் இடம் பெருகிறது. சீனிவாசநல்லூர், திருவையாறு, கோனேரிராஜபுரம் முதலிய பல ஊர்களில் கிடைக்கும் சோழர் காலக் கல்வெட்டுகள் மத்தளம் முதன்மை இசைக் கருவியாய் விளங்கியதைக் குறிக்கின்றன. சோழர் காலச் சிற்பங்களிலும் ஏராளமான அளவில் மத்தளங்கள் என்று அறிஞர்களால் சுட்டப்படும் கருவிகள் காணக் கிடைக்கின்றன. கோயில் சிற்பங்களை ஆழ்ந்து நோக்கின் ஆடலுக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகளிள் குடமுழவும், இடக்கையுமே அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக் நடராஜர் சிற்பங்கள் உள்ள தொகுதிகளில், சிவபெருமானின் ஆட்டத்துக்கு ஏற்ப இசைக்கப்படும் கருவியாக குடமுழா இடம் பெருகிறது. மற்ற ஆடல் சிற்பங்களில் பக்கவாத்தியமாய் அதிகளவில் காணப்படும் இடக்கையே. "நடுவில் குறுகியும், பக்கங்களில் பெருத்தும் காணப்படும் இக் கருவியின் வார்களை இழுத்தும் தளர்த்தியும், அதிலிருந்து எழுந்த ஒலியை கட்டுப்படுத்தியுள்ளனர்", என்று இடக்கையைப் பற்றி குறிப்புகள் கிடைக்கின்றன. குடந்தை நாகேஸ்வரன் கொயில் முதலான இடங்களில் உள்ள சிற்பங்களும் இந்த வடிவில் கிடைக்கின்றன. இவை தவிர, நடுவில் அதிக குறுக்கம் இல்லாத கருவிகளும் நிறையவே காணக் கிடைக்கின்றன. உதாரணமாக, தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள இந்தச் சிற்பத்தைச் சொல்லலாம். இந்த வாத்த்யத்தையும் இடக்கை என்றே அறிஞர்கள் சுட்டுகின்றனர். ![]() கையால் முழக்கியதோடன்றி, குணில் என்ற வளைந்த குச்சியாலும் இவ்வாத்தியத்தை முழக்கியிருப்பதை சிற்பங்கள் உணர்த்துகின்றன. ஒரு முகப் பறைகளுள் ஒன்றாக அறியப்படும் இக் கருவி பல்லவர் காலம் தொட்டு, பல்வேறு சிற்பத் தொகுதிகளில் காணக் கிடைக்கின்றது. வாத்தியங்கள் குறித்து விரிவாகப் பேசும் கல்வெட்டுகளில் இடக்கை என்ற கருவியின் (நான் கண்ட வரை) இடம் பெறவில்லை. இடக்கையின் மற்றொரு பெயர் என்று ஆளவந்தார் சுட்டும் ஆவஞ்சியும் கல்வெட்டுகளில் இடம் பெறவில்லை. இவற்றை வைத்துப் பார்க்கும் போது பல கேள்விகள் எழுகின்றன. அக் கேள்விகளுள் டாப் 10 கேள்விகள் பின் வருமாறு: 1. தண்ணுமைக்கும், மத்தளத்துக்கும் உள்ள வேறுபாடுகள் எவை. 2. சங்க இலக்கியங்கள் சுட்டும் தண்னுமைதான் காலப் போக்கில் மத்தளமானதா? 3. தண்ணுமை முழவில் ஒரு வகை என்று கொண்டால், சிலப்பதிகாரத்தில், "தண்ணுமைப் பின் வழி நின்றது முழவே" என்ற வரி இரண்டையும் வெவ்வேறாகக் காட்டுவது எங்கணம்? 4. முழவு பொதுச் சொல்லா? அல்லது குறிப்பிட்ட வாத்தியத்தைக் குறிக்கும் சொல்லா? 5. தோலால் போர்த்தி, வாரால் இணைக்கப் பட்டி, ஸ்ருதியுடன் செர்த்து இசைக்கக் கூடிய கருவி தண்ணுமை எனில்,அதற்கும் இன்றைய மிருதங்கத்துக்கும் என்ன வித்தியாசம்? 6. தண்ணுமைதான் மிருதங்கம் எனில், மிருதங்கம் மகாராஷ்டிரத்திலிருந்து வந்தது என்று எப்படிக் கொள்ள முடியும்? 7. சங்க காலத்தில் சிறப்புற்றிருந்த தண்ணுமை காலப்போக்கில் மறைந்ததா? 8. நாகஸ்வரமும் தவிலும், மராட்டியர் தஞ்சை வந்த காலத்தில் முக்கிய கருவிகளாக இருந்தன என்கின்றனர். அப்படியெனில் சதிர் முதலான ஆடலுக்கு அந்தச் சமயத்தில் எந்த முழவிசை கருவி வாசிக்கப் பட்டது? 9. ஹரிகதை மராட்டியர்களிடமிருந்து தஞ்சைக்கு வந்த கலை வடிவமெனில், ஹரிகதைக்கு பக்கவாத்தியமாய் விளங்கிய மிருதங்கமும் அங்கிருந்த வந்ததென்ற கருத்தையும் ஏற்றுக் கொள்ளலாமா? 10. சிற்பங்களில் நாம் இடக்கை என்று குறிக்கும் கருவியை, இலக்கியங்கள் எவ்வாறு சுட்டின? வரலாறு.காம் படிக்கும் அறிஞர்கள் இந்தக் கேள்விகளுக்கு விடை அளிப்பின் பேருதவியாய் இருக்கும். ஆலயச் சிற்பங்களைப் பார்க்கும் போது இந் நாளில் மிருதங்கம் என்று நாம் குறிக்கும் கருவியின் வடிவிலேயே பல நூற்றாண்டுகளுக்கு முன் கருவிகள் இருந்திருப்பதும் தெரிய வருகிறது. குடந்தை சாரங்கபாணி கோயிலின் கோபுர வாயிலில் காணப்படும் இந்தச் சிற்பத்தில் உள்ள வாத்தியத்தின் அமைப்பின் மூலம் இதை உணரலாம். ![]() வரலாற்றாய்வாளர்கள் இரு பக்கம் முழக்கும் கருவிகள் அனைத்தையுமே மத்தளம் என்ற பொதுச் சொல்லில் அடக்கிவிடுகின்றனர். அளவிலும், அமைப்பிலும் வேறு படும் கருவிகளைப் பலவற்றை நம் கோயில் சிற்பங்கள் சித்தரிக்கின்றன. உதாரணமாக லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயிலில் உள்ள அம்மன் கோயில் வெளிப் புறச் சுவரில் உள்ள பூத வரியில் உள்ள இந்தச் சிற்பத்தில் உள்ள இந்தக் கருவி, நடுவில் பெருத்தும், முனைகளில் சிறுத்தும், இரு புறங்களை வார் கொண்டு இணைத்தும் காணப் படுகிறது. இன்று கச்சேரிகளில் வாசிக்கப்படும் மிருதங்கத்தும் இந்தச் சிற்பத்தில் உள்ள கருவிக்கும் வித்தியாசம் காண்பது கடினம். ![]() திருச்சி அருகில் உள்ள அல்லூரில் காணப்படும் இந்தத் தொகுதியில் வெவ்வேறு அமைப்புகள் கொண்ட தாள வாத்தியக் கருவிகள் உள்ளன. ஆடலுக்குத் துணையாக இசைக்கப் படும் இம் மூன்று கருவிகளையுமே அறிஞர்கள் மத்தளம் என்றே குறிக்கின்றன. இந்தச் சிற்பத் தொகுதி போன்று எண்ணற்ற தொகுதிகள் தமிழகெமெங்கும் காணக் கிடைக்கின்றன. ![]() இன்று தவில், பக்வாஜ், டோலக், மிருதங்கம் என்றெல்லாம் நாம் வகைப் படுத்திக் கூறுவது போல, அந் நாளில் வாத்தியங்களை எப்படி வகைப்படுத்தினர் என்பதை குழப்பமின்றி உணர ஆய்வுகள் மேற்கொள்ளுதல் அவசியம். இன்றிருக்கும் தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, சங்க காலம் முதலே தமிழகத்தில் தாள இசைக் கருவிகள் பல இருந்தன என்பதும், அவை ஆடலுக்கும், திருமணம் போன்ற விழாக்களிலும் உபயோகப்படுத்தப்பட்டன என்பதும் தெளிவாகின்றன. மராட்டியர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் தோலிசைக் கருவிகளும், அவற்றை முழக்கும் முறைகளும் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தன. கருவிகள் பற்றிய இந்த அறிமுகத்தோடு இன்றைய மிருதங்கத்துக்கு வருவோம். 'மிருத்+அங்கம்' என்று பகுபடும் வடமொழிச் சொல்லுக்கு 'மண்ணை அங்கமாகக் கொண்டது' என்பது பொருள் என்ற போதிலும், இன்றைய மிருதங்கங்கள் மரத்தால் ஆனவை. முதிர்ந்த பலா மரத்தைக் கடைந்து செய்யப்படும் இந்த வாத்தியத்தின், நடுப்பகுதி பெருத்தும், வாசிக்கும் இரு பக்கங்களில் நடுப் படுதியை விட சிறியதாகவும் அமைந்திருக்கும். தோலால் மூடப்பட்ட இரு பக்கங்களையும், தோல்வார் இணைத்திருக்கும். வலப்பக்கத்தை வலந்தலை என்றும், இடப்பக்கத்தை இடந்தலை அல்லது தொப்பி என்றும் கூறுவர். வலந்தலையின் நடுவே கரணை இடப்பட்டிருக்கும். கிட்டான் என்ற ஒரு வகைக் கல்லைப் பொடியாக்கி, அதை அரிசிச் சோற்றுடன் கலப்பதன் மூலம் கிடைக்கும் கலவைக்கு சிட்டம் என்று பெயர். இந்தச் சிட்டம் அடுக்கடுக்காய் வட்டமாக வலந்தலையின் மத்தியில் இடப்படும். இதற்குக் கரணை அல்லது சோறு என்று பெயர். இந்தக் கரணையினாலேயே மிருதங்கம் ஸ்ருதி வாத்யம் ஆகிறது. அதாவது பாடகரின் ஸ்ருதியிலேயே மிருதங்கத்தின் ஸ்ருதியையும் கூட்டிக் கொள்ளும் வசதி உண்டு. தவில், கஞ்சிரா போன்ற வாத்தியங்களும் கேட்பதற்கு இனிமையாக இருப்பினும், அவற்றை பாடகர் அல்லது வீணை, குழல் முதலான வாத்தியத்தின் ஸ்ருதியோடு சேர்த்துக் கொள்ள முடியாது. கடம் போன்ற வாத்யங்களுக்கும் ஸ்ருதி உண்டென்ற போதும், மிருதங்கத்தில் மட்டுமே பல்வேறு சொற்களை வாசிக்க முடியும். இந்தக் காரணங்களாலேயே மிருதங்கத்தை ராஜ வாத்தியம் என்றும் அழைப்பதுண்டு. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் , மராட்டியர் ஆட்சியில் 'மிருதங்கம்' தமிழகத்துக்குள் நுழைந்தது என்பது இசை ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.அது வரை பஜனை, ஹரிகதை, மராட்டிய நடனங்கள் ஆகியவற்றில் வாசிக்கப்பட்டு வந்து மிருதங்கம், தஞ்சை வந்தபின் தமிழ்நாட்டின் சங்கீதம், சதிர் முதலியவற்றிலும் இடம் பெற்றது. காலப்போக்கில், தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்த லய வடிவங்களும் மிருதங்க வாசிப்பின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின. கடந்த 250 ஆண்டுகளுக்குள் மிருதங்க வாசிப்பில் இரு வழிகள் துவங்கி, பெரிதும் வளர்ந்துள்ளன. இவற்றை 'தஞ்சாவூர் வழி' என்றும் 'புதுக்கோட்டை வழி' என்றும் குறிப்பர். இந்த வழிகள் தோன்றிய விதம், இரண்டுக்கும் உள்ள வேற்பாடு, இவ்விரு வழியிலும் தலை சிறந்து விளங்கியவர்கள் பற்றி கிடைக்கும் தகவல்களை அடுத்த கட்டுரையில் காண்போம். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |