http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 74

இதழ் 74
[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

வழிபாடிழந்த திருக்கோயில்கள்
இராசராசசோழனும் சோழமகாதேவியும் - 2
அழிவின் விளிம்பில் சோழர்காலக் கற்கோயில்
மிருதங்கம் - ஒரு பறவைப் பார்வை எழுப்பும் பல கேள்விகள்
மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 3
தமிழுடன் 5 நாட்கள் - 2
அசையும் பாவை
இதழ் எண். 74 > கலையும் ஆய்வும்
அழிவின் விளிம்பில் சோழர்காலக் கற்கோயில்
ஸ்தபதி வே.இராமன்

ஒருநாட்டின் வரலாற்றை எழுதிட இன்றியமையாத சான்றுகளை வாரி வழங்குவன இலக்கியங்களும் கல்வெட்டுகளுமேயாகும். தமிழக வரலாற்றை முறைப்படுத்தித் தருவதே தமிழ்ப் பேரரசர்களால் கட்டமைக்கப்பட்ட கற்கோயில்களே.

இலக்கியம், அரசியல், சமயநிலைகள், சமுதாயம், பொருளாதாரம், வாழ்வியல் முறைகள், கலைகளின் வளர்ச்சி என்று அனைத்துச் செய்திகளையும் தருவனவாக இருப்பவை கற்கோயில்களே. தமிழகச் சிற்பிகளின் கலைநுணுக்கம், அறிவியல் திறன், பொறியியல் திறன், கற்பனைத்திறன், கட்டுமானத்திறன் ஆகியனவற்றை வெளிப்படுத்துவனவாக இருப்பவைகளும் கற்கோயில்களே.

தஞ்சை இராசராசேச்சுரத்தின் வானளாவிய விமானம் தமிழர்களது கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையை உலகுக்கு இன்றைய நாள்வரை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், திருபுவனம் ஆகிய ஊர்களில் அமைந்த கோயில்களும் உலகப் புகழ் பெற்றவை.

இத்தகைய வரலாற்றுச் சின்னங்கள் கொண்ட தமிழகத்தில் ஒரு சில கற்கோயில்கள் சுவடழியும் நிலையில் இருப்பது கண்கலங்கச் செய்கிறது. சுவடழிந்து போகும் சிங்காரக் கோயில்களின் வரிசையில் இடம்பெறப்போகும் கோயில்களில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் கிள்ளுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள சிற்றூரான காளியாப்பட்டியில் காண இயலுகிறது. தமிழகக் கோயிற்கலை வரலாற்றில் இடம்பெறத்தக்க கலைக்கோயில் இவ்வூரின் புறத்தே பரந்த வெளியில் தனித்த நிலையில் செம்மாந்து நிற்கிறது. இவ்வூர் மக்கள் இக்கற்கோயிலின் கலையம்சம் தெரியாமல் "ஓட்டைக்கோயில்" என்றழைக்கின்றனர்.

கிழக்குப் பார்த்த பார்வையில் ஏக தள தூய நாகர விமானமாய்க் கருவறை, முகமண்டபத்தோடு கட்டுமானக் கோயிலாகக் காட்சியளிக்கிறது. பொதுவாகக் கோயிலமைப்பை நாகரம், வேசரம், திராவிடம் என வகைப்படுத்துவர். கோயிலானது தொடக்கம் முதல் இறுதிவரை சதுரவடிவில் அமையுமானால் நாகரம் எனப்பெயர் பெறுவதாகும்.

பொதுவாக விமானமானது ஆறு அங்கங்களைக் கொண்டமைவதாகும். அதாவது பாதக்கட்டு, சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், தூபி என்பதாகும். இந்த அங்கங்களைக் கொண்டே இந்த விமானம் கட்டமைந்துள்ளது.பாதக்கட்டு எனப்படும் அதிட்டானம் உபானம், ஜகதி, எண்முகக் குமுதம், மேலும் கீழும் கம்புகளையும், தூணடியும் கொண்ட கண்டம், பட்டிகையோடு இணைந்த கம்பு என்ற வர்க்கங்களைக் கொண்டமைந்துள்ளது. இத்தகைய கட்டமைப்பைப் பாதபந்தம் எனக் காசிய சிற்பநூல் கூறும் இக்கட்டுமானம் பல்லவர்காலப் பழமையான, எளிமையான பாதபந்தச் சுவர்க் கட்டுமேல் எழும் சுவர்ப்பகுதி 119 செ.மீ. உயரளவினைக் கொண்டுள்ளது. இச்சுவர்ப் பகுதியை மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டுப் பக்கத்திற்கு நான்கென நாகர வடிவத் தூண்களைப் பெற்றுள்ளன. தூண் அமைப்பானது மேலிருந்து கீழாகப் போதிகை, வீரகண்டம், பலகை, குடம், கலசம், பத்மக்கட்டு, உடல் என்றவாறு அலங்கார அணிகளைப் பெற்றுள்ளது. தூணமைப்பில் மரபுப்படி அமையும் மாலைக்கட்டு, மாலைத்தொங்கல் காணுமாறு இல்லை. சுவர்ப் பகுதியில் மையமாக இடம்பெறும் கோட்டமும் இங்கு இடம்பெறவில்லை.

பிரஸ்தரம் எனும் கூரைப்பகுதி உத்தரவரி, கபோதவரி, யாளிவரி என்றவாறு காட்சியளிக்கிறது. உத்தரவரி எளிமையாக அமையக் கபோதம் சற்று முன்வந்ததாய் அமைகிறது. கபோதத் திருப்பம் கோடிப்பாளை என்ற கருக்கணியையும், இதனையடுத்துப் பக்கத்திற்கு இரண்டென அலங்காரத்தோடு கூடிய கூடுகளைப் பெற்றுள்ளது. கபோத நாவடையில் சந்திரமண்டலம் வரிசையாகச் செதுக்கப்பட்டுள்ளது.

கபோதத்தின்மீது அமையும் யாளிவரியில் யாளிகள் இணை இணையாகப் பக்கத்திற்கு எட்டெனச் செதுக்கப்பட்டுள்ளன.

யாளி வரியினின்றும் சற்று உள்ளடங்கிய நிலையில் சதுர வடிவிலான கண்டம் சுவர்ப்பகுதி எழுகிறது. வேதிகை, கண்டம், எழுதகம் என்பன சுவர் உறுப்புகளாகும். இச்சுவர் மையமாக விமான தேவதைக் கோட்டங்கள். இக்கோட்டங்களில் மரபுப்படி அமையும் சிற்பங்கள் பிரம்மா, பெருமாள் மற்றும் ஆலமர் அண்ணல் சிற்பங்கள் தம் பொலிவிழந்த நிலையில், சிதைந்து ஆங்காங்கே தலைகவிழ்ந்து காணப்படுகின்றன. பூமிதேசம் மேல்மட்டத்தில் திசைநோக்கிக் கம்பீரமாக அமர்த்தப்பட்டிருக்கும் நந்திகள்கூட ஆங்காங்கே கவிழ்ந்து கிடப்பது வேதனைக்குரியதாகும்.

கண்டவரியின் மேல் நாகர சிகரம் கவர்ச்சியாகக் காட்சியளிக்கிறது. கீழ்ப்பகுதி நாவடையில் சந்திரமண்டலம் நாற்புறமும் செதுக்கப்பட்டுள்ளது. சிகரத்தின் மேலிருந்து கீழே இறங்கி வந்ததாய்க் கோடிப்பாளை கருக்கணி இலை, தளிர்க் கொடிகளுடன் வளைந்தும், நெளிந்தும், எழுந்தும், தாழ்ந்தும் கலையெழிலுடன் சிற்பிகளின் கைத்திறன் சிறக்கப் பரவசமாய்க் காட்சியளிக்கிறது.சிகரத்தின் நாற்றிசைகளிலும் மையமாக மகாநாசிகள் கருக்கணிகளைக் கொண்டதாய்க் கலைநுணுக்கமாய்ச் செதுக்கப்பட்டுள்ளன. முடிவில் மகாபத்மம் முனைகள் வெட்டப்பட்டு எழிலாய்க் காட்சியளிக்க, இறுதியில் காணும் தூபி காணுமாறு இல்லை.

நாகர விமானக் கட்டுமானம் பாண்டியர் கலைமுறையென்றும், விசயாலயன் கலைமுறையென்றும் தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். எப்படியிருப்பினும் நாகரக் கலைமுறைக்குச் சிறந்த சான்று என்பதில் ஐயமில்லை.

முகமண்டபப் பகுதி தற்சமயம் பாதக்கட்டுவரை தெரியவருகிறது. வாகனமண்டபம் மற்றும் கோபுரம் இருந்தமைக்குப் பாதக்கட்டு எச்சங்கள் உள்ளன. பரிவார ஆலயங்கள் மற்றும் திருமதில் இருந்ததற்கான எச்சங்களும் காணப்படுகின்றன.சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஊர்மக்களால் வழிபட்டுப் பெருமைகொண்ட இக்கோயில் இன்று நாடுவாரின்றி, போற்றுவாரின்றி அழிவினை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை நினைக்கும்போது கண்கள் குளமாகின்றன.

தற்சமயம் இத்திருக்கோயில் ஆடு மாடுகளின் மேய்ச்சல் நிலமாய், நீர் நிலைகளால் சூழப்பட்டு ஒதுக்கப்பட்ட நிலையில் எவருக்கும் பொறுப்பு இல்லாத நிலையில் மதில்கள் சிதறி, கட்டடக்கற்கள் செடி மற்றும் மரங்களின் தயவால் விலகி அழிவின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு கம்பீரமாய் இன்றும் செம்மாந்து நிற்பது யாரேனும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன்தான்.

பேரரசர்கள் நம் பண்பாட்டையும், கலாச்சாரம், நாகரிகத்தையும் வெளிப்படுத்த இத்தகைய திருக்கோயில்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள். மக்களால் வழிபடப்பட்ட இக்கோயில் அழிவிற்கு யார் காரணம் எனக் கேள்வி கேட்பதைவிட இறையுணர்வும், கலையுணர்வும் கொண்ட நல்ல உள்ளங்கள் இதனைக் காப்பாற்ற வேண்டும். அல்லது இந்து சமய அறநிலையத்துறையோ, தொல்லியல் துறையோ, இக்கற்கோயிலை உடனடியாக எடுத்து வழிபாட்டிற்கோ, பாதுகாக்கப்பட்ட சின்னமாகவோ காத்திட வழி செய்யாவிட்டால் நாம் ஓர் அற்புதமான சிங்காரக் கற்கோயிலை இழக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை. காலம்தான் பதில் சொல்லவேண்டும்!
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.