![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 80
![]() இதழ் 80 [ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2011 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
சங்ககாலமான கி.மு. 3-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3-ம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்ட மன்னர்களைப் பற்றி, சங்க இலக்கியங்கள் மற்றும் சிறிய அளவில் கிடைத்திடும் புதைபொருட்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம். எனினும், இவ்விலக்கியங்களும், தொல்பொருட்களும் இம்மன்னர்களின் தொடர்ச்சியான வரலாற்றைத் தெரிவிக்கவில்லை. ஆனால் கி.பி. 7-ம் நூற்றாண்டில் இருந்து கிடைக்கும் கல்வெட்டுகள் தமிழகத்தை ஆண்ட பல்லவ, பாண்டிய, சோழ மன்னர்களின் தொடர்ச்சியான வரலாற்றைத் தெரிவிக்கின்றன. இக்கல்வெட்டுகள் மட்டுமின்றி இம்மன்னர்கள் வழங்கிய செப்பேடுகளும், இவர்கள் காலத்தே எழுந்த இலக்கியங்களும் இம்மன்னர்களின் வரலாற்றைத் தெளிவுபடுத்தும் அங்கங்களாக இருக்கின்றன. கல்வெட்டுகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் செப்பேடுகள் மிகக்குறைந்த அளவே கிடைத்துள்ளன. இதுவரை பல்லவ மன்னர்கள் வழங்கிய செப்பேடுகள் 32ம் பாண்டிய மன்னர்கள் வழங்கிய செப்பேடுகள் 20ம் சோழர்கள் வழங்கிய செப்பேடுகள் 18ம் கிடைத்துள்ளன. இச்செப்பேடுகள் அவை கிடைக்கப்பெற்ற இடங்களைக் கொண்டும் தற்போது இருக்கும் இடத்தைக் கொண்டும் பெயர் சூட்டப்பட்டுள்ளன. சோழமன்னர்கள் வழங்கிய செப்பேடுகள் வருமாறு:
19-ம் செப்பேட்டுத் தொகுதியாகக் கடந்த 20-மே-2010 அன்று நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்திலுள்ள கழுக்காணிமுட்டம் என்னும் சிறு கிராமத்தில் கிடைக்கப்பெற்றது. இது இரண்டாம் இராஜேந்திர சோழனால் வழங்கப்பட்ட செப்பேட்டுத் தொகுதி ஆகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை அடுத்து 1 கி.மீ தொலைவில் திருஇந்தளூர் என்ற ஊர் உள்ளது. இவ்வூர், "சிந்தை தன்னுள் நீங்கா திருவே!.... இந்தளூராய்!.........." என்று திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்று ஸ்ரீபரிமளா ரெங்கநாதர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கும் பெருமாள், கோயில் கொண்ட 108 திவ்ய தலங்களில் ஒன்றாக விளங்கும் தலமாகும். இவ்வூர் சோழர் காலத்தில் பல கிராமங்களைத் தன்னுள் கொண்ட ஒரு பகுதியின் தலைமையிடமாக இருந்து வந்தது. மயிலாடுதுறை - ஆனந்த தாண்டவபுரம் சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கழுக்காணிமுட்டம் என்ற சிறுகிராமம் திருஇந்தளூரின் உட்கிராமமாகத் திருஇந்தளூரை ஒட்டி அமைந்துள்ளது. கழுக்காணிமுட்டம் சிறிய கிராமமாக இருந்த போதிலும் இங்கு இரண்டு பிற்சோழர் காலக் கற்றளிகள் உள்ளன. கைலாசநாதர் கோயில், கருணைபுரீஸ்வரர் கோயில் என்ற இவ்விரு கோயில்களில் கைலாசநாதர் கோயில் பழுதடைந்திருக்க, கருணைபுரீஸ்வரர் கோயில் நல்ல நிலைமையில் உள்ளது. பழுதடைந்திருக்கும் கைலாசநாதர் கோயிலில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கருவறையின் முன்பாக உள்ள முகமண்டபத்தை ஒட்டி அஸ்திவாரம் போடுவதற்கு பொக்லைன் கொண்டு மண் தோண்டும்போது சுமார் 10 அடி ஆழத்தில் ஏதோ இடிபட, நிலத்தை அகழ்வு செய்து பார்த்தபோது உலோகச்சிலைகளும், பூஜை செய்யும் பொருட்களும், இசைக்கருவிகளும், வளையத்தில் கோக்கப்பட்டு முத்திரையிடப்பட்ட செப்பேடுகள் தொகுதி ஒன்றும் வரிசையாகக் கிடைக்கப்பெற்றன. பல வருடங்கள் மண்ணிற்குள் இருந்தமையால் எல்லாப் பொருட்களின் மீதும் மண் படிந்து சுலபமாக மண் அகற்ற முடியாத நிலையில் இருந்தன. இங்குக் கிடைத்த சிலைகள் மற்றும் பொருட்கள் வருமாறு: 1. நிற்கும் வினாயகர் 2. சோமாஸ்கந்தர் 3. சந்திரசேகரர் 4. சந்திரசேகரரின் தேவி 5. காரைக்கால் அம்மையார் 6. சண்டிகேஸ்வரர் 7. திருஞானசம்பந்தர் 8. அப்பர் 9. சுந்தரர் 10. பரவை நாச்சியார் 11. சங்கிலி நாச்சியார் 12. மாணிக்கவாசகர் மற்றும் மூக்கு உள்ள பூஜை செய்யும் கெண்டிகள் - 2 காளம் (இசைக்கருவி - ஊதுகுழல்) - 2 அஸ்திரத்தேவர் உடைந்த திருவாசியின் பகுதிகள் பெரிய குத்துவிளக்கு - 1 ஒவ்வொன்றும் 44 செ.மீ நீளமும் 21 செ.மீ அகலமும் கொண்ட இச்செப்பேடுகள் இடதுபுறம் வட்ட வடிவில் துளையிட்டு ஒரு பெரிய வளையத்தில் கோக்கப்பட்டு முகப்பில் வட்ட வடிவிலான முத்திரையிடப்பட்டுள்ளது. இவ்வளையத்தில் 86 செப்பேடுகள் கோக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பு காணப்பட்டாலும், 85 செப்பேடுகள் மட்டுமே இத்தொகுதியில் கோக்கப்பட்டுள்ளன. ஒரு செப்பேட்டுத் தொகுதியில் அதில் கோக்கப்பட்ட செப்பேடுகளின் எண்ணிக்கையைத் தெரிவிப்பது இதுவே முதல்முறையாகும். இந்தியாவில் கிடைக்கப்பெற்ற அனைத்துச் செப்பேட்டுத் தொகுதிகளிலும் அளவில் பெரியதும் எண்ணிக்கையில் அதிகமானதாகவும் கொண்டவையாக இச்செப்பேடு கிடைத்திருப்பது இதுதான் முதல்முறை ஆகும். இச்செப்பேடு தொகுதி பிரிக்கப்படாத நிலையில் உள்ளது என்பதை இதன் முகப்பில் உள்ள முத்திரை தெளிவுபடுத்துகிறது. 11 செ.மீ விட்டமும் 2 செ.மீ கனமும் கொண்ட இவ்வட்ட வடிவமான முத்திரையில் வலது புறமும், இடது புறமும் குத்து விளக்கு ஒன்றாக இரண்டு குத்து விளக்குகளும் இடதுபுறக் குத்துவிளக்கிற்கு அருகே வலதுபுறம் நோக்கிய நிலையில் புலி ஒன்று அமர்ந்திருக்க அதை அடுத்து இரண்டு மீன்களும் தொடர்ந்து வில் ஒன்றும் உள்ளன. இவைகளுக்கு மேலே நடுவில் வெண்கொற்றக்குடையும் அதன் இருபுறமும் சாமரங்களும் காட்டப்பட்டுள்ளன. பொதுவாக முத்திரையில் சின்னங்கள் புடைப்புச் சிற்பங்களாகப் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இச்செப்பேட்டுத் தொகுதி முத்திரையில், இச்சின்னங்கள் பள்ளமாக வடிக்கப்பட்டிருப்பது தனித்தன்மை வாய்ந்த ஒன்று ஆகும். முத்திரையின் வட்ட விளிம்புப் பகுதியில் கிரந்த எழுத்தில் "தர்ம ஏதத் இராஜேந்திர தேவஸ்ய பரகேசரி வர்மணக ஸ்ரீ மச்சாசனம் ஊர்வி ச சிரோபிஹ சேகரி" என்று எழுதப்பட்டுள்ளது. இராஜேந்திர தேவன் என்கிற பரகேசரியினால் இத்தர்மம் உலகத்தின் உச்சியில் வைக்கப்படுகின்றது என்பது இதன் பொருள். இந்த 85 செப்பேடுகளில் ஒவ்வொன்றும் முன்புறமும் பின்புறமும் எழுதப்பட்டு உள்ளது. முதல் 7 செப்பேடுகள் முழுவதும் வடமொழியில் எழுதப்பட்டுள்ளது. 8ம் செப்பேடு வடமொழியில் தொடங்கினாலும் இறுதிப் பகுதியில் தமிழில் தொடங்கி 85ம் செப்பேடு முடிவு வரை தமிழிலேயே எழுதப்பட்டுள்ளது. (தொடரும்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |