http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 84
இதழ் 84 [ டிசம்பர் 16, 2011 - ஜனவரி 15, 2012 ] இந்த இதழில்.. In this Issue.. |
வாசகர்களுக்கு வணக்கம். "காப்பீடு தனிநபர் விருப்பத்திற்குட்பட்டது. விற்பனையை முடிக்கும்முன் விற்பனைக் கையேட்டைக் கவனமாகப் படிக்கவும்". இது பண்பலை வானொலியைக் கேட்பவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் வாசகம். அதே பண்பலைகளில் தங்கநகை விற்பனை நிலையங்களின் விளம்பரங்களின் முடிவில் யாருக்கும் புரியாத ஒரு Disclaimer வரும். குறுந்தகட்டில் பதிவு செய்யப்பட்ட 4 நிமிட ஒலிப்பதிவை வேகமாக 1 நிமிடத்தில் முடியுமாறு ஓடவிட்டால் எப்படிக் கீச்சுமூச்சு என்றிருக்குமோ அதுபோன்ற வகையைச் சேர்ந்ததுதான் மேலே சொன்ன காப்பீடுகளின் விற்பனைக் கையேடும். ஒரு நுகர்வோர் அவர் வாங்கும் பொருள் குறித்த விவரங்களைப் புரிந்துகொள்ளக்கூடாது என்ற நோக்கத்திலேயே சில நிறுவனங்கள் ஆங்கிலத்தில் சின்னஞ்சிறு எழுத்துக்களில் சேவை விதிவிலக்குகளையும் நிபந்தனைகளையும் அச்சிடுவதும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவையைத் தருவதும் இந்தியாவில் நடைபெறுகின்றன. இவை அனைத்தும் நுகர்வோர் நலனுக்கு எதிரானவைகள். மற்ற எல்லாப் பொருட்களையும்விடப் பொதுமக்களைப் பொருளாதார ரீதியாகவும் சேவை ரீதியாகவும் பெரிதும் பாதிப்பது காப்பீடுகளே. ஒரு நுகர்வோர் தான் எடுக்கும் காப்பீடு பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள இரண்டு வழிகளே உள்ளன. தனக்குக் காப்பீடு எடுத்துத்தந்த முகவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது மற்றும் காப்பீட்டுக் கையேட்டைப் படித்துத் தெரிந்து கொள்வது ஆகியவைதான். ஏற்கனவே வாடிக்கையாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டால் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய தொகை அதிகமாகி எங்கே காப்பீட்டை எடுக்காமல் போய்விடுவாரோ என்று காப்பீடு ஆவணத்தில் குறிப்பிடாமல் மறைக்கும் முகவர்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில் வாடிக்கையாளருக்கு இருக்கும் ஒரேவழி காப்பீட்டுக் கையேடுதான். அத்தகைய கையேட்டையும் புரியாதபடி தருவதால் நுகர்வோர் பாதிப்புக்குள்ளாகிறார். இதுகுறித்த பொதுநலவழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கேளம்பாக்கத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவர் விபத்துக்குள்ளாகித் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். காப்பீட்டுத் தொகையைத் தருமாறு நிறுவனத்திடம் வேண்ட, உறுப்பு இழப்பு மற்றும் மரணத்துக்கு மட்டுமே காப்புறுதியை எடுத்துள்ளதாகவும் விபத்துக்கு இழப்பீடு தரமுடியாது என்றும் நிறுவனம் மறுத்துவிட்டது. இதற்குக் காரணம் முகவர் காப்பீட்டு விவரங்களை வாடிக்கையாளரிடம் தெளிவாகக் கூறாமல் விட்டதும் விண்ணப்பத்தில் உள்ள நிபந்தனைகள் ஆங்கிலத்தில் மிகவும் சிறிய எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டிருந்ததுதான். எனவே, இந்த நிபந்தனைகளைத் தமிழில், படிக்கும் அளவில் பெரிய எழுத்துக்களில் தரவேண்டும் என்று காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிடக் கோரிச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். நீதிபதிகள் இதைப் பொதுநலவழக்காக மாற்றி உத்தரவிட்டுள்ளனர். காப்பீடு எடுப்பவர்கள் அனைவருக்கும் ஆங்கிலமும் இந்தியும் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல. ஒருவேளை காப்பீட்டு நிறுவனங்கள் அப்படி எதிர்பார்த்தால் தமிழ்நாட்டில் ஊருக்கு ஊர் கிளைகளைத் தொடங்காமல் வட இந்தியாவிலும் பெரு நகரங்களில் ஆங்கிலம் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளும் நபர்களிடம் மட்டும் விற்றால் போதுமானது. அப்பாவித் தமிழர்களும் வாங்கவேண்டும் ஆனால் அதன் நிபந்தனைகள் அவர்களுக்குப் புரியக்கூடாது என்பது என்ன நியாயம்? நுகர்வோரும் ஆவணங்களையும் கையேட்டையும் படித்துப் பார்க்க வேண்டியது அவசியம். இத்தகைய நிபந்தனைகள் மட்டுமல்ல; விண்ணப்பப் படிவங்களும் தமிழில் இருக்கவேண்டும். அப்போதுதான் இன்னொருவரைச் சார்ந்திராமல் உரிய சேவைகளைத் தமிழர்களும் பெறமுடியும். "இதற்குத்தான் இந்தி படிக்கவேண்டும்; தமிழ்நாட்டிலும் இந்தியைத் திணித்திருந்தால் நடுவணரசு நிறுவனங்களுக்குக் கூடுதலாக இன்னொரு மொழியில் அச்சிடும் செலவு இருக்காது" என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல. பள்ளிகளில் இந்திவழியில் அல்லாமல் ஆங்கிலத்தைப் போல இந்தியையும் ஒரு மொழியாகக் கற்பித்திருந்தால் ஆங்கிலத்திலிருக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யத் தமிழ்வழியில் படித்த தமிழர்கள் எப்படித் திணறுவார்களோ அப்படித்தான் இந்திமொழிப் படிவத்தைப் பூர்த்தி செய்யத் தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழியில் படித்த தமிழர்களும் தவிப்பார்கள். தொடர்வண்டித்துறை முன்பதிவு விண்ணப்பங்களை மும்மொழிகளில் தரும்போது மற்ற அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் தரமுடியும். தனியார்க் கைப்பேசி நிறுவனங்கள் "இன்கமிங்", "டாப் அப்", "ரோமிங்" என்று தங்கிலீஷில் சேவையைத் தருவது போலன்றி இயல்பான பேச்சுத்தமிழில் வாடிக்கையாளர் சேவையைத் தருவதும் முடியக்கூடியதே. தேவை தமிழில் சேவை தரவிரும்பும் மனம் மட்டுமே. அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |