http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 84
இதழ் 84 [ டிசம்பர் 16, 2011 - ஜனவரி 15, 2012 ] இந்த இதழில்.. In this Issue.. |
(சென்ற இதழ்த் தொடர்ச்சி) மேலும், ஈழப்பூட்சி, தறியிறை, வட்டிநாழி, கண்ணாலக் காணம், ஊடுபோக்கு போன்ற வரியினங்கள் பல்லவர்கள் ஆட்சிக்காலம் முதற்கொண்டே தமிழ்நாட்டில் வழக்கில் இருந்துள்ளன. இராஜராஜசோழன் தான் இதுபோன்ற வரிகளை விதித்தார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? "பார்ப்பனர்களுக்குப் பொன்னையும் பொருளையும் அள்ளி வழங்கிவிட்டுக் குடிமக்களில் ஒருவன் திருமணம் செய்துகொண்டால் அதற்குரிய 'கண்ணாலக் காணம்' என்கிற வரியைப் பேரரசுக்குச் செலுத்த வேண்டுமென்று தீர்மானம் போட்டவன் இராஜராஜன்" என்று அபாண்டப் பழி இராஜராஜசோழன் மேல் சுமத்தப்பட்டுள்ளது. இது நியாயமா? பல்லவர் செப்பேடுகளிலேயே கண்ணாலக்காணம் என்னும் வரியினம் இடம்பெற்று விடுகிறது. மேலும், இராஜராஜன் காலத்துக் கல்லூரிகளில் தமிழ்க் கற்பிக்கப்பட்டுள்ளது என்பதற்கும் பல கல்வெட்டுகாள் சான்று பகர்கின்றன. வலங்கை, இடங்கை குலங்கள் எல்லாம் பண்டுத் தொடங்கித் தமிழகத்தில் வழக்கில் உள்ளவையே. இராஜராஜன் காலத்திற்கு முன்பே கல்வெட்டுகளில் சமஸ்கிருதம் இடம்பிடித்துவிட்டது. 12 சதவிகித வட்டி, அதை வசூலிக்கக் குண்டர்படை, லேவாதேவி வேலை பார்த்தவன் என்பதெல்லாம் முற்றிலும் தவறான கருத்துக்கள். கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டமுடியுமா? குடவோலை சார்ந்த விஷயங்கள் எல்லாம் அகநானூறு காலம் முதல் தமிழ் மண்ணில் கடைபிடிக்கப்படுகிறது. திரு. இராஜராஜசோழன் பண்டைய தமிழக நடைமுறை வழக்கங்களுக்கெல்லாம் பொறுப்பு ஏற்க இயலாது. மேலும், Chola regime was a centralised government and not a coalition government. சரியான வரலாற்றுப் புலனாய்வுகள் மூலம் நம்மால் உறுதியாகச் சொல்ல இயலும். இராஜராஜசோழனின் ஆட்சிக்காலம் ஒரு பொற்காலமே. கல்வெட்டு, செப்பேடு தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்தால், இராஜராஜசோழனுக்கும் சரி அவரது சந்ததியினருக்கும் சரி, யாருக்கும் இருண்ட, மங்கிய முகம் கிடையாது. நேர்மைத் திறத்தால், நிர்வாகத் திறமையால், கலைக்களம் மற்றும் போர்க்கள வெற்றிகளால் சோழ வம்சத்திற்கென்றே பொலிவுபெற்ற ஒரு வீரத்திருமுகமே அவருக்கும் அவரது சந்ததியினருக்கும் முகவரியாய் விளங்கிகிறது. இராஜராஜசோழன் காலத்தில் சாதாரண குடிமக்கள், பணிப்பெண்கள், சிறுதனத்து அதிகாரிகள் கோயில்களுக்கு வழங்கும் அறக்கொடைகளை நுணுகி ஆராய்ந்தால் புரியும் அவர்களின் வாழ்வு நிலைகளின் வளமும் மேன்மையும். இராஜராஜசோழன் தமிழனே அல்ல; கலப்பினம், பிராமணர்களின் பின்னால் சென்றான் என்றெல்லாம் எழுதுவது ஒரு மாபெரும் வரலாற்று நாயகனுக்குச் செய்யும் இழுக்காகும். கீற்று.காம் உண்மையான வரலாற்றுத் தரவுகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படும் கட்டுரைகளை வெளியிடவேண்டும் என்பது எமது விருப்பம். தொடரட்டும் நன்முறையில் 'நினைவுபடுத்தும் பணி'. அன்றைய பொற்கால ஆட்சியைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும். இந்நாளைய பொற்கால ஆட்சியைப் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. பிழைமிக்க வரலாற்றுக் கட்டுரைகளை வாசிக்கும்போது நமது வரலாற்றறிஞர்கள் சரியான விதத்தில் வரலாற்றுத் தரவுகளை மக்களிடம் கொண்டு செல்லவில்லையோ என்ற ஐயப்பாடு எழுகிறது. இராஜராஜசோழனைப் பற்றி எது எழுதினாலும், பேசினாலும் instant reach ஆகிவிடும் என்பதால் இப்பிழைகள் நேருகின்றதோ? ஏனெனில், இராஜராஜேசுவரம் பற்றியும் இராஜராஜசோழனைப் பற்றியும் பல வரலாற்று அறிஞர்களே பிழையாக எழுதுகிறார்கள். யாரையும் குற்றம் சொல்லிப் பயனில்லை என்பதே இன்றைய நிலை. பொறுப்பற்ற தன்மையை என்னவென்று சொல்வது? ஆகவே, கரிகாலக்கண்ணா, வள்ளுவர் உரைத்ததை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு". என்றும் உண்மைகளே நிலைத்து நிற்கும், "பொய்யாமை அன்ன புகழில்லை" - அதாவது, பொய் பேசாமை போன்று புகழைத் தருவது வேறொன்றுமில்லை. என் இனிய கரிகாலக்கண்ணா, உன்னைப் பற்றிய வரலாற்றுத் தரவுகளும் என்றாவது ஒருநாள் வெளிவரும் கல்வெட்டுகள் வழியாய். அந்தநாள் என்னாளோ? காத்திருக்கின்றேன் உன் வரலாற்று வரவுக்காக. பிரிய நிமிஷங்களுடன், விடைபெறுகிறேன் ரிஷி. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |