http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 84

இதழ் 84
[ டிசம்பர் 16, 2011 - ஜனவரி 15, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழில் தந்தால் என்ன குறைந்தா போய்விடும்?
திரும்பிப்பார்க்கிறோம் - 31
சேக்கிழாரும் அவர் காலமும் - 2
பொய்யாமை அன்ன புகழில்லை - 2
புத்தகத் தெருக்களில் - ஆனைக்கா கதாநாயகனும் நானும் - 2
நாலூர் மாடக்கோயில்
கண்டறியாதன கண்டேன்
இதழ் எண். 84 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப்பார்க்கிறோம் - 31
இரா. கலைக்கோவன்

அன்புள்ள வாருணி,

நலந்தானே. திரும்பிப்பார்க்கிறோம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடர்கிறது. அனுபவங்களைப் பதிவுசெய்வதற்காகவே தொடங்கப்பட்ட இந்தத் தொடர் வரலாறு இணைய இதழில் 30 மாதங்கள் தொடர்ந்து வெளிவந்தது. இனி, அதன் பிறகு நிகழ்ந்த நிகழ்வுகளை உன்னோடு பகிர்ந்துகொள்கிறேன்.

1989 டிசம்பர்த் திங்களில் பல்லவர் கலைப்பகுதிகளைப் பார்வையிட வேண்டுமென்று நினைத்திருந்தேன். வாய்ப்புகள் அமைந்தபோது மாமல்லபுரம், காஞ்சிபுரம் இவ்விரண்டு ஊர்களிலும் உள்ள பல்லவர் படைப்புகளை மேலோட்டமாகப் பார்த்திருக்கிறேனே தவிர, ஆய்வுநோக்கில் அணுகியதில்லை. தொல்லியல், கல்வெட்டியல் பட்டயக்கல்வி முடித்து வந்திருந்த நளினியும் பல்லவர் படைப்புகளைப் பார்த்ததில்லை என்பதால் என்னுடன் வர விழைந்தார். 1990 ஜனவரியில் பல்லவநாட்டுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்திருந்தோம். அப்போதுதான் பேராசிரியர் அரசு தொலைபேசினார்.

ஜனவரி முதல் வாரத்தில் நண்பர்களுடன் மேலைச் சாளுக்கியக் கலைப் படைப்புகளைக் காணச் செல்லவிருப்பதாகவும் விருப்பமானால் நானும் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். நான்கைந்து ஆண்டுகளாகவே பட்டடக்கல், பாதாமி, ஐஹொளெ இம்மூன்று ஊர்களிலும் உள்ள சாளுக்கியப் படைப்புகளைக் காணவேண்டும் எனத் தவித்திருந்த எனக்கு அரசுவின் அழைப்பு பெருமகிழ்வளித்தது. உடனே ஒப்புக்கொண்டேன். ஜனவரி முதல் வார இறுதியில் மாமல்லபுரம், காஞ்சிபுரம் பயணம் திட்டமிடப்பட்டிருந்ததால், அரசுவிடம் பயணத்தை அதற்கேற்ப சற்று முன்கூட்டி வைத்துக் கொள்ளுமாறு வேண்டினேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

30. 12. 1989 அன்று எங்கள் சாளுக்கியப் பயணம் தொடங்கியது. நான், பேராசிரியர் அரசு, அவருடைய நண்பர்கள் ஒளிப்பட வல்லுநர் திரு. செ. கோவிந்தராசு, பச்சையப்பன் கல்லூரி நூலகர் திரு. பழனி, திரு. சம்சுதீன் என ஐவர் மாருதி ஆம்னியில் சென்னையிலிருந்து புறப்பட்டோம். அனந்தப்பூர் வழியாக பெல்லாரி செல்வதாகத் திட்டம். சாளுக்கியக் கைவண்ணம் குறித்து நிறையப் படித்திருந்ததால் அனைவருடனும் அச்செய்திகளைப் பகிர்ந்தபடியே சென்றேன்.

மதனபள்ளி அன்னபூர்ணாவில் மதிய உணவருந்தினோம். கதிரியில் பெட்ரோல் போடுவதற்காக வண்டியை நிறுத்தியபோது அருகில் ஒரு கோயிலைப் பார்த்தேன். உடன் இறங்கிக் கோயிலை அடைந்தேன். இலட்சுமிநரசிம்மர் கோயில் என்று அழைக்கப்பட்ட அக்கோயிலின் அம்மன் திருமுன் பெரு மண்டபத் தூண்களின் கீழ்ச் சதுரம் ஆடற்சிற்பங்களைக் கொண்டிருந்தது. திருவலம் தொட்டியில் பார்த்த கோலாட்டச் சிற்பங்களையும் காணமுடிந்தது. பல இசைக்கருவிகளுடன் பெண்கலைஞர்கள் காட்சியளித்தனர்.

சிற்பங்களைப் படமெடுக்க விரும்பியதால் கோயில் நிருவாக அலுவலரைச் சந்தித்து அனுமதி கேட்டேன். என் ஆர்வத்தையும் ஆய்வுநோக்கையும் விளங்கிக் கொண்ட அவர் உடன் அனுமதியளித்ததுடன் கோயில் வரலாற்றையும் அஞ்சலில் அனுப்புவதாகச் சொன்னார். அரை மணிநேரத்திற்கும் மேலாக அங்கிருந்து அனைத்துச் சிற்பங்களையும் படமெடுத்தேன். சில கரணச் சிற்பங்களும் அவற்றுள் அடங்கும். ஒளிப்பட வல்லுநர் கோவிந்தராசு பெருமளவிற்கு உதவியாக இருந்தார்.

அனந்தப்பூருக்குப் பிறகு நல்ல உணவருந்துமிடம் இராது எனக் கேள்விப்பட்டிருந்ததால் அனந்தப்பூரிலேயே இரவு உணவை வாங்கிக் கொண்டோம். காய்கறிப் பொரியல் நிரம்பிய அந்தத் தோசைப் பொட்டலங்களின் மணம் வண்டியை நிரப்பிக் கொண்டிருந்தது. வழியில் இருந்த சிற்றூரான விடபனகலில் வண்டியை நிறுத்தி உணவருந்தினோம். மூன்று ரூபாய்க்கு வாங்கிய அந்தத் தோசை அருமையாக இருந்தது. ஆளுக்கு இரண்டு தோசை சாப்பிட்டதில் வயிறும் உள்ளமும் மகிழ்வுடன் நிரம்பின. அனந்தப்பூர் பெல்லாரி சாலை மிக மோசமாக இருந்ததால் அந்த 99 கி. மீ. தொலைவும் மெதுவாகத்தான் செல்லமுடிந்தது. இரவு 11. 15க்கு பெல்லாரி இராயல் டூரிஸ்டுஹோம் விடுதியை அடைந்து தங்கினோம். இலேசான குளிரில் இதமான உறக்கம்.

31. 12. 1989 காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு பெல்லாரியில் மகிடாசுரமர்த்தினி கோயில் பார்த்தோம். அச்சுறுத்தும் கோலத்திலிருந்த அம்மை புதியவர். 8. 15 மணியளவில் புறப்பட்டு ஹாஸ்பெட் அடைந்தோம். அங்கிருந்து ஹம்பி 11 கி. மீ. தொலைவிலும் துங்கபத்திரை அணைக்கட்டு 3 கி. மீ. தொலைவிலும் உள்ளன. ஹம்பிக்குச் செல்லும் வழியில் அனந்தசயனக்குடி கோயிலைக் கண்டோம். அக்கோயில் இந்தியத் தொல்லியல்துறையின் அணைப்பில் இருந்தது. அங்கு உதவியாளராகப் பணியாற்றிய சேலத்துப் பெண்மணி திருமதி குப்பம்மாளின் உதவியுடன் கோயிலைச் சுற்றிப் பார்த்தோம். சிற்பங்கள் அதிகமற்ற கோயில். தெலுங்குக் கல்வெட்டுகள் மிக்கிருந்தன.

கமலாபுரம், விஜயநகர், ஹம்பி என்ற மூன்று இடங்களிலும் விஜயநகரச் சிதைவுகள் சிதறியுள்ளன. கமலாபுரம் செல்லும் வழியில் ஒரு கோயிலைக் கண்டோம். வாயிலில் இருந்த பெரிய பாறையில் கல்வெட்டு வெட்டப்பட்டிருந்தது. கமலாபுரத்தில் தொல்லியல்துறை அலுவலக அன்பர் முகமது கவுசு வழிகாட்டியாக வந்து உதவினார்.

திரு. அனுமந்தப்பாவின் பொறுப்பில் இருந்த அருங்காட்சியகத்திற்கு முதலில் சென்றோம். சிறிய காட்சியகந்தான் என்றாலும் விஜயநகரச் சிதைவுகளில் கிடைத்த பல அரிய சிற்பங்கள், காசுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் எனப் பலவும் அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சாமுண்டியின் அழகு பொலிந்த சிற்பமொன்றையும் காணமுடிந்தது. ஹம்பியைப் பற்றிய கையேடு ஒன்றை இங்குப் பெற்றேன்.

மால்யவந்தா ரகுநாதசாமி கோயிலைப் பார்க்க அருகில் இருந்த மலை மேல் சென்றோம். கோயிலின் முன்மண்டபம் தூண் முகப்புடன் உள்ளது. மண்டபத்தில் கமலாபுரம், ஹாஸ்பெட் சேர்ந்த வடநாட்டு வணிகர்கள் சீட்டாடிக் கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் சமையல் பணியில் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த இரண்டுக்கும் இடையில்தான் எங்கள் பார்வைச் சுற்றுலா அமைந்தது. கோயிலிலுள்ள சிற்பங்களோ, கட்டடக்கலை நுணுக்கமோ குறிப்பிடும்படி இல்லை.

விட்டலா கோயில் விஜயநகரத்தின் சிறப்புக்குரிய கோயில். அங்குதான் புகழ்மிக்க கல் ரதம் உள்ளது. கோயிலருகே பெருங்கூட்டம். கோபுரம் இடிந்து சிதைந்திருந்தது. கோயில் மண்டபங்களில் இசைத்தூண்கள் பலவாக இருப்பதால் வருவார், போவார் தூண்களைத் தட்டி இசையெழுப்பத் தவறுவதில்லை. நாங்கள் போயிருந்தபோது சிறுவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால், அந்தக் கோயிலில் இருந்து புறப்படும்வரை ஒரே இசையொலிதான்.

கோயில் மண்டபத்தின் தளமுகப்பில் எங்கு நோக்கினும் கோலாட்டப் பெண்கள்தான். அவர்கள் கோல்களைத் தட்டும் நயமும் அந்த விரைவிற்கேற்ப அவர்தம் உடலில் காட்டப்பட்டிருக்கும் அசைவும் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை திருவலத்தில் கண்டறிந்த சிற்பங்கள் நிறைந்த தொட்டி சோழர் காலத்தது என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. அத்தொட்டியை நேரில் கண்டு சிற்பங்களை ஆராய்ந்த பிறகு அது விஜயநகர காலத் தொட்டியாகத்தான் இருக்கமுடியும் என்று எழுதியிருந்தேன். அந்த என் முடிவு சரியானதே என்பதை விட்டலா கோயில் வளாகம் உறுதிப்படுத்தியது. அதன் மையக் கோயில், சுற்றுக் கோயில்கள் என எங்கெங்கு நோக்கினும் கோலாட்டப் பெண்களைக் காணமுடிகிறது. பல்வேறுவிதமான தொப்பிகளுடன் குதிரைகளை இழுத்துச் செல்லும் காவலர்கள் தாங்குதளச் சிற்பங்களாகியுள்ளனர். அமர்நிலைச் சிங்கங்கள் பெரும்பாலான தூண்களின் சதுரத்தை அலங்கரிக்கின்றன.

விட்டலா கோயில் முழுமையும் பார்த்த பிறகு 'விஜயநகர் பஜார்' என்றழைக்கப்படும் இடத்திற்கு வந்தோம். இங்குதான் விஜயநகர அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பெருங் கடைப் பரப்பு இருந்ததாகக் கூறுகிறார்கள். போரில் கண்மூடித்தனமாக அழிக்கப்பட்ட அந்த இடத்தில் இப்போது சிதைவுகளையே காணமுடிகிறது. விஜயநகரப் பேரரசைப் பற்றிப் படித்திருந்ததால் அவ்விடத்தில் எப்படிப்பட்ட கடைவீதி இருந்திருக்க முடியும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கமுடிந்தது.

அடுத்து, எண்கோண ஊற்று, தாமரை மகால், அரச மாளிகை, இரகுநாதர் கோயில், பட்டாபிராமர் கோயில் எனப் பல இடங்களைப் பார்த்தோம். அரண்மனை வளாகச் சிதைவுகளின் புறச்சுவர்களில் ஏராளமான சிற்பத்தொடர்களைக் காணமுடிந்தது. யானைப்படை, குதிரைப்படை புலிவேட்டை, மான்வேட்டை, ஆடல் அழகியர், ஒட்டக வரிசை என எல்லாமே அற்புதம். இராமாயணச் சிற்பங்களைச் சுவர்களில் கொண்டுள்ள ராமச்சந்திரர் கோயிலைக் கண்டோம். மற்றொரு கோயிலின் புறச்சுவரில் பெரிய அளவிலான கோலாட்டப் பெண்கள். அவர்களுடைய ஆட்டத்தில் இருந்த விரைவைச் சிற்பிகள், ஆடைகள் பறக்கும் விதத்திலும் சடைகள் சுழலும் வீச்சிலும் காட்டி இருப்பதை நன்கு இரசிக்க முடிந்தது. பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றெண்ணுமாறு கண்களைக் கவர்ந்திழுத்த சிற்பங்கள் அவை.



பார்க்கவேண்டும் என்று நெடுநாட்களாக நினைத்திருந்த ஹம்பியில் நரசிம்மர், கணேசர், கிருஷ்ணர் கோயில்கள் பார்த்தோம். விருபாக்ஷி கோயில் கோபுரத்தில் பாலுணர்வுச் சிற்பங்கள் உள்ளன. நாகவணைசு என்னும் இசைக்கருவியை இங்குக் காணமுடிந்தது. கணேசர், உக்கிர நரசிம்மர் வடிவங்கள் அளவில் பெரியவை. அரசிகள் குளிக்குமிடம், அரசியர் மாளிகை, காவலர் விடுதிகள் இவற்றைப் பார்த்த பிறகு துங்கபத்திரை நதியைக் கண்டோம். மாலை 4 மணியளவில் நண்பர் முகமது கெளசிடம் விடைபெற்றுக்கொண்டு துங்கபத்திரை அணைக்கட்டிற்குச் சென்றோம்.

துங்கபத்திரை அணைக்கட்டு மிகப் பெரியது. மாலை மறையும் நேரத்தில் அங்கிருந்ததால், கதிரொளியில் அணைக்கட்டு நீர் பளபளத்ததைக் கண்டு மகிழ முடிந்தது. புத்தாண்டுக்கு முந்தைய நாள் என்பதால் அணைக்கட்டில் பெருங் கூட்டம். மக்களின் கேளிக்கைகளையும் துங்கபத்திரையையும் இரசித்தபடியே அணைக்கட்டு வளாகத்தைச் சுற்றிப் பார்த்தோம்.





துங்கபத்திரையைப் பற்றி முதலாம் இராஜேந்திரரின் கரந்தைச் செப்பேடு குறிக்கும் பாடலடிகள்தான் என் நினைவில் நிழலாடின. துங்கபத்திரையின் நதிக்கரையிலுள்ள மணல்மேடுகளில் இராஜராஜரின் யானைகள் தங்கள் தந்தங்களால் கீறிய கோடுகள் இன்றும் காணப்படுவதாக அப்பாடலடிகள் நயத்தோடு கூறும். இராஜராஜரின் சாளுக்கியப் போரைப் பற்றிய கரந்தைச் செப்பேட்டின் வண்ணனைகளும் நினை விற்கு வந்தன. உடன் வந்தவர்களுடன் அந்தச் செய்திகளைப் பகிர்ந்துகொண்டபோது, இவ்வளவு தொலைவு காரில் வருவதற்கே அரும்பாடுபட வேண்டியுள்ளது, எப்படித்தான் அந்தக் காலத்து அரசர்கள் பெரும்படையுடன் வந்து, போரிட்டு வெற்றியும் பெற்றார்களோ என்று அனைவரும் வியந்தோம். நெடுநேரம் முதலாம் இராஜராஜரைப் பற்றி உரையாடிவிட்டு ஹாஸ்பெட் திரும்பிப் பிரியதர்ஷினி விடுதியில் தங்கினோம்.

1990 ஜனவரி முதல் நாள் காலை 7. 30 மணியளவில் ஹாஸ்பெட்டை நீங்கி ஐஹொளே நோக்கிப் புறப்பட்டோம். வழியிலேயே சாளுக்கியர் கலைவண்ணம் தொடங்கிவிட்டது. சிறிய அளவிலான கோயில் ஒன்றைப் பார்த்தோம். ஆள் நடமாட்டமற்ற காட்டுப்பகுதியில் கவனிப்பாரற்ற நிலையில் அக்கோயில் இருந்தது. தற்செயலாகக் கிடைத்த அந்தக் கொடையை நன்கு பயன்படுத்திக் கொண்டோம்.




வலமிருந்து இடமாக : திருவாளர்கள் பழனி, அரசு, கலைக்கோவன், மணி


கோயிலின் விமான முகப்பில் ஆடவல்லானின் சிற்பம் சற்றே சிதைந்த நிலையில் காணப்பட்டது. ஊர்த்வஜாநு கோலத்தில் இருந்த அந்தச் சிற்பத்தை அருகிலிருந்து படம்பிடிக்க மேலே ஏறவேண்டியிருந்தது. நல்லவேளையாகக் கோயிலின் அருகில் இருந்த மரம் உதவியது. கிளையொன்றில் தாவி, அங்கும் இங்கும் கிடைத்த சிறு கிளைகளைப் பிடித்தபடி முகமண்டபக் கூரையை அடைய முடிந்தது. கை, கால் இவற்றில் கீறல்கள் ஏற்பட்டபோதும் முகமண்டபக் கூரையில் அமர்ந்து அந்தச் சாளுக்கிய ஆடவல்லானை அணுஅணுவாக இரசிக்க முற்பட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சியில் கீறல்களின் எரிச்சலோ, வலியோ அறவே தெரியவில்லை. நிறைய படங்கள் எடுத்தேன்.

ஐஹொளெ சுற்றுலா விடுதியை அடைந்தபோது அதன் மேலாளர் திரு. மணி அன்புடன் வரவேற்றார். அவரே உடன் வந்து சாளுக்கியக் கோயில்களைக் காட்டுவதாகச் சொன்ன போது எங்கள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. துர்கதா கோயில் சென்றோம். அதன் முகப்பிலும் கோட்டங்களிலும் உள்ள சிற்பங்கள் அற்புதமானவை. வளாகத்தில் அமர்ந்து கோயிலை இரசிக்குமாறு திண்ணைகள் உள்ளன. அவற்றில் அமர்ந்து கோயிலை மனம்போன போக்கில் இரசித்தோம்.

அடுத்தாற் போல் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார் மணி. அங்குக் காவலராய் இருந்த தமிழன்பர் திரு. வெங்கடேசனின் உதவியோடு அனைத்துச் சிற்பங்களையும் பார்த்தோம். தேவையானவற்றைப் படமெடுத்தோம். மேற்கில் இருந்த கோயில்களைப் பார்க்கச் சென்றபோது, ஒரு கோயில் கூரையில் மும்மூர்த்திகளையும் சிற்பவடிவில் காணமுடிந்தது. அற்புதமான அத்தொகுதியைப் படுத்தபடிதான் படமெடுக்க வேண்டியிருந்தது. அதே போல் மற்றொரு கோயிலில் விஷ்ணு, உமாமகேசுவரர், நான்முகன் சிற்பங்களைப் படமெடுத்தோம். பல கோயில்கள் சிற்பச் செழுமையின்றிக் கட்டடக்கலைச் சான்றுகளாய் மட்டுமே திகழ்கின்றன. ஒரு கோயில் வாயிலின் மேல்நிலையில் எழுவகையான தழுவல் சிற்பங்களைக் காணமுடிந்தது. சாளுக்கியர்கள் தழுவிக் களித்தவர்கள் போலிருக்கிறது.

கோயில்களுக்குச் சற்று தள்ளியே மாலபிரபா நதி ஓடுகிறது. தேக்கி வைத்துத் தண்ணீரை விடுவதால் சலசல வென்ற ஓசையுடன் தொடர்ந்த நீரோட்டமுள்ளது. சுற்றிலும் பாறைகள், மலைகள், குன்றுகள்தான். நதியோட்டத்தைப் பார்த்த பிறகு நீரில் கால்களை நனைத்துக்கொண்ட மகிழ்வோடு சமண, பெளத்தக் குடைவரைக் கோயில்களைக் காணச் சென்றோம். இங்குதான் சாளுக்கிய வேந்தர் இரண்டாம் புலிகேசியின் புகழ் பெற்ற ஐஹொளெ கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. சாலையோரமாக உள்ள சிவதாண்டவக் குடைவரை என்னைப் பெரிதும் கவர்ந்தது.

அக்குடைவரையிலுள்ள சிற்பங்கள் அனைத்துமே அற்புதமானவை. சிவபெருமான் தம் பின்னிரு கைகளிலும் பாம்பைப் பிடித்தவாறு ஆடல் நிகழ்த்த, அருகே உமை, பிள்ளையார், முருகன். சுற்றிலும் எழுவர்அன்னையர். ஒருபுறம் வராகமூர்த்தி, மகிடாசுரமர்த்தினி, அம்மையப்பர் சிற்பங்கள். கீழே உள்ள தொடரில் சிங்கம் ஒன்று பாய்ந்து அச்சுறுத்துகிறது. மறுபுறம் பூதங்களின் இசைக்குழு. எதிர்க் குடைவரையின் தளமுகப்பில் பூதங்கள் மகிழ்வோடு படுத்துள்ளன. ஏனோ தெரியவில்லை, ஐஹொளெயில் நான் பார்த்த குடைவரைகளில் இதுவே என்னை மிகவும் கவர்ந்த குடைவரையாக அமைந்தது.

அன்று இரவு ஏழு மணியளவில் கைவிளக்குடன் நான் மட்டும் அக்குடைவரைக்குச் சென்றேன். ஏறத்தாழ ஒருமணி நேரம் அங்கிருந்தேன். பிறைநிலவின் ஒளியில் பறவைகளின் கீச்சொலியில் அந்தக் குடைவரையின் அழகை அணுஅணுவாக அனுபவித்தேன். மழை தொடங்கியது. சில நிமிடங்களில் இடி, மின்னலுடன் பெருமழையானது. சாரல் பேரின்பம் தந்தது. தனிமை சிற்பங்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியது.

எந்தக் கூட்டத்திலும் தனித்தியங்கிச் சிற்பங்களை இரசிக்க முடியும் என்றாலும், தனித்திருந்து அவற்றை இரசிப்பது என்பதே ஒரு சுகம்தான். எந்த இடையூறும் இல்லாமல், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விரும்பிய கோணங்களில் எல்லாம் பார்த்தும் பரவசப்பட்டும் ஒரு சிற்பத்தை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எனக்கு அந்த இரவில் அத்தகு வாய்ப்பு அமைந்தது. மழைச்சாரலும் நிலவொளியும் உள்ளத்திற்குப் பெருங் கிளர்ச்சி தந்தன. சிவபெருமானோடு இணைந்து நானும் ஆடினேன். குடைவரை முழுவதும் இருந்த அத்தனை சிற்பங்களுக்கும் அன்றைய என் ஆடல் அதிர்ச்சி அளித்திருக்கும். பின்னாளில் பலமுறை இதை நினைத்து எனக்குள் நானே நகைத்திருக்கிறேன். என்றாலும், அந்த இரவில் அந்தச் சூழலில் என்னால் ஆடாமலும் பாடாமலும் இருக்கவே முடியவில்லை.

8. 30 மணிக்கு விடுதிக்குத் திரும்பினேன். எனக்காகவே காத்திருந்த அனைவருடனும் சேர்ந்து இரவு உணவு முடித்த பிறகு மீண்டும் துர்கதா கோயிலுக்குச் சென்றோம். நிலவொளியில் அக்கோயிலைச் சிறிது நேரம் பார்த்திருந்துவிட்டு, விடுதி திரும்பிப் படுத்தபோது மணி 10. 30. மறுநாள் காலை 5 மணிக்கே எழுந்து சிவபெருமான் குடைவரைக்குச் சென்றேன். விடுதி அருகில் இருந்ததால் நினைத்தபோதெல்லாம் போகமுடிந்தது. குடைவரை வாயிலில் அமர்ந்தபடியே விடியலின் அணைப்பில் ஐஹொளெ விழித்தெழுவதைக் கண்டு இரசித்தேன். 7 மணிக்குத்தான் வெளிச்சம் விரிந்தது. விரும்பியவாறெல்லாம் குடைவரைச் சிற்பங்களைப் படமெடுத்துக் கொண்டு விடுதிக்குத் திரும்பியபோது நண்பர்கள் எனக்காகக் காத்திருந்தனர். சிற்றுண்டி முடிந்ததும் பட்டடக்கல்லுக்குப் புறப்பட்டோம். ஐஹொளெயை விட்டு நீங்கும் முன் அங்கிருந்த சிறிய கோயில் ஒன்றின் விமான முகப்பில் ஆடவல்லான் சிற்பம் கண்டு அதைப் படம்பிடித்தேன். நேற்றுப் பார்க்காமல் விட்டிருந்த சமணக் குடைவரையை இன்று பார்க்கமுடிந்தது. உள்ளே அற்புதமான தீர்த்தங்கரர் சிற்பங்கள் இடம்பெற்றிருந்தன.



10 மணியளவில் சித்தர்கொல்லே என்ற இடத்தை அடைந்தோம். அங்கே மலைப்பள்ளத்தில் சுனையும் அதற்குச் சற்றுத் தள்ளி லஜ்ஜாகெளரி சிற்பமும் இருந்தன. அந்தச் சிற்பம் லஜ்ஜாகெளரி பற்றிய சிற்பக்களஞ்சியங்களில் இடம்பெறாத ஒன்றாகும். இயற்கையான குகைத்தளத்தில் பொளியப்பட்டிருந்த அந்தச் சிற்பத்திற்குப் பூப்போட்டுக் குங்குமம் இட்டு, வளையல்களை வைத்து வழிபட்ட பெண்களைக் காணமுடிந்தது. அதே இடத்தில் மரத்தடியில் சற்றுப் புதுமையான கோலத்தில் சிவபெருமானின் சிற்பம் இருந்தது. சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் பிள்ளையார் ஆடற்கோலத்தில் உள்ளார். மற்றொரு குகைத்தளத்தில் இலிங்கம் இருந்தது. அப்பகுதியில் பெருங்கற்படைச் சின்னங்களையும் காணமுடிந்தது.



பட்டடக்கல்லை அடைந்தபோது மணி 11. 30. எங்களுடன் மணியும் வந்திருந்தார். அங்கிருந்த உணவுக் கடை ஒன்றில் மதிய உணவுக்குச் சொல்லிவிட்டுக் கோயில்களை நோக்கி நடந்தோம். சிறியதும் பெரியதுமாய் எண்ணற்ற கோயில்கள். நாகரம், வேசரம், திராவிடம் எனப் பல சிகரங்கள். பழுவூர் அவனிகந்தர்வ ஈசுவர கிருகத்தையும் மாமல்லபுரத்து ஒருகல்தளிகளை யும் நினைவுக்குக் கொணரும் அழகுக் கோயில்கள். ஒவ்வொரு கோயிலாகப் பார்க்கத் தொடங்கினோம்.

முதற் கோயிலின் மேல் முகப்பில் ஆடவல்லான் சிற்பம் தென்படவே அதைப் படமெடுக்க முயன்றேன். ஏணி ஏதும் கிடைக்காத நிலையில் அருகில் மரங்களும் இல்லாமற் போனதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தோம். அப்போது உடனிருந்த தொல்லியல்துறைக் காவலர் தம் மீது ஏறி மேலே சென்று எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். எனக்குத் தயக்கமாக இருந்தது. அவர் வற்புறுத்தவே குனிந்து நின்ற அவர் தோளில் கால் வைத்து முகமண்டபக் கூரையைப் பற்றி எப்படியோ தாவி மேலே ஏறிவிட்டேன். ஆசை தீரப் படமெடுத்துக் கொண்டு இறங்கத் தவித்தபோது அவரே மீண்டும் ஏணியாகி உதவினார். அவருடைய தொண்டுக்கு அன்பளிப்புச் செய்ய முனைந்த போது வாங்க மறுத்துவிட்டார். அந்த எளிய மனிதரின் பெருந்தன்மையையும் தேவைக்கு உதவிய அருட்சிந்தையையும் என்னால் எந்தக் காலத்திலும் மறக்கவே முடியாது.

காடகசித்தேசுவரர், ஜம்புலிங்கேசுவரர், காலகநாதர், சந்திரசேகரர் உள்ளடக்கிய பட்டடக்கல் கோயில்களுள் சங்கமேசுவரர், விருபாக்ஷி கோயில்கள் சிறப்பு வாய்ந்தவை. சங்கமேசுவரர் கோயில் தூண்கள் சிற்பங்களால் இழைக்கப்பட்டுள்ளன. குரங்கொன்று மேசை, நாற்காலி போட்டு எழுதிக்கொண்டிருப்பதைச் சிற்பக்காட்சியாகப் பார்க்க முடிந்தது. இரண்டு கோயில்களிலும் தழுவல் சிற்பங்களே மிகுதி. கோட்டச் சிற்பங்களும் சிறப்பு வாய்ந்தன.

அனைத்துக் கோயில்களையும் முடித்துவிட்டு, உணவருந்த வந்ததும் மழை கொட்டத் தொடங்கியது. அதுவரை மேகமும் சூரியனும் மாறி மாறி வந்து, படமெடுக்கவும் இரசிக்கவும் உதவிய நிலை மாறி ஏறத்தாழ அரைமணி நேரத்திற்கு மழை பொழிந்ததால் கதவுகளை அடைத்துக்கொண்டு காரில் அமர்ந்தபடி புழுங்கினோம். மழை சற்றுக் குறைந்த பிறகு கடை உணவைப் பெற்று, கோயிலில் அமர்ந்து உண்டோம்.

உணவருந்திய பிறகு விருபாக்ஷி கோயிலின் பின்புறம் ஓடிய மாலப்பிரபா நதிக்கரையில் அரச மரத்தடியில் சற்று நேரம் அமர்ந்து நதியோட்டத்தை இரசித்தோம். சுற்றிலும் மலைகள். மழை அடங்கியதால் பரவிய மெல்லிய குளிர் நெஞ்சை வருடியது. இரவு பாதாமி செல்லவேண்டி இருந்ததால் வேறு வழியின்றி மாருதிக்குத் திரும்பினோம்.

பாதாமி செல்லும் வழியில் மகாகூடம் சிவாலயத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. நேரமின்மையால் விரிவாகப் பார்க்கமுடியவில்லை என்றாலும், சாளுக்கிய மண்ணில் இங்குதான் முதன்முறையாகத் தொடர் சிற்பங்களைக் காணமுடிந்தது. வாய்ப்பமையும்போது மீண்டும் வரவேண்டும் என்ற முடிவோடு மனமின்றி மகாகூடத்திலிருந்து புறப்பட்டேன். பாதாமியை அடைந்தபோது மாலை மணி 6.

ஓட்டல் சாளுக்கியாவில் அறை கிடைக்காமையால் அருகே இருந்த பொதுப்பணித்துறை விடுதியில் தங்கினோம். குளித்துவிட்டுச் சாளுக்கியாவில் தேநீர் அருந்திய பிறகு அரசுவும் நண்பர்களும் ஓய்வெடுத்தனர். நான் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு கைவிளக்குடன் பாதாமி குடைவரைகளை நோக்கிப் பயணித்தேன். கீழே இருந்த காவலர்கள் இரவு நேரம் என்பதால் அனுமதிக்க மறுத்தார்கள். கன்னடக்காரர்களான அவர்களிடம் என் ஆர்வம், ஆய்வுநோக்கு எனப் பலவும் ஆங்கிலத்தில் எடுத்துக்கூறி அனுமதிக்குமாறு வேண்டினேன். நான் மொழிந்ததில் அவர்களுக்கு என்ன விளங்கியதோ தெரியவில்லை, அனுமதித்தார்கள்.

இருவருள் ஒருவர் என்னுடன் வந்தார். நான்கு குடைவரைகளையும் கைவிளக்கின் ஒளியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பார்த்து மகிழ்ந்தேன். நான் ஒவ்வொரு சிற்பமாக இரசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த காவலர் என் போக்கில் என்னை விட்டுவிட்டுக் கீழே சென்றுவிட்டார். மூன்று குடைவரைகளைக் கண்ட மகிழ்வோடு மேலே சென்றேன். மேல் குடைவரையிலிருந்து பாதாமியை இரவில் பார்க்க வாய்த்தது. மனோகரமான காட்சி. ஊரெங்கும் விளக்குகள். குடைவரை மலையின் அருகே இருந்த பேரேரியின் தண்ணீர் விளக்கு ஒளியில் தகதகவென மின்னியது கண்கொள்ளாக் காட்சி. குடைவரைகள் உள்ள மலை செங்குத்தாகப் பார்க்கவே அச்சமூட்டுவ தாய் இருந்தது. எனக்குக் கொடைக்கானல் தூண் பாறைகளின் நினைவுதான் வந்தது. இரவும் குளிரும் தந்த சுகத்துடன் தனிமையான அந்தச் சூழலில் சிற்பங்களோடு சிற்பமாய் ஒன்றியிருந்த காலம் நினைக்கும்போதெல்லாம் சிலிர்ப்பூட்டும் அனுபவமாகும். கண் முன் சாளுக்கியர்கள், பல்லவர்கள் அவரவர் நாட்டுச் சிற்பிகள் என எத்தனை காட்சி மாற்றங்கள். உருகிப்போய் அமர்ந்திருந்த நிலையில் நேரத்தை நான் கருதவேயில்லை. நெடு நேரமாகியும் நான் வராமை கண்டு அச்சமுற்ற அரசு என்னைத் தேடிவந்தார். காலையில் வருவதாகக் கூறிக் காவலர்களிடம் விடைபெற்றுக் கொண்டு உணவருந்த சாளுக்கியா வந்தோம். படுக்கும்போது மணி 11. 30 ஆகிவிட்டது.

3. 1. 1990 விடியலில் எழுந்து ஐந்து மணிக்கெல்லாம் குடை வரை வளாகத்தை அடைந்து படியேறிச் சென்று முதல் குடைவரை வாயிலில் நுழைந்தேன். திடீரென்று உறுமல் ஒலி கேட்டது. மலைப்பகுதியானதால் அச்சத்துடன் கைவிளக்கடித்துப் பார்த்தேன். குடைவரையுள் காவலர்கள் குறட்டைஒலியுடன் உறங்கிக் கொண்டிருந்ததை அறியமுடிந்தது. அவர்களை எழுப்பாமல் விளக்கொளியில் மீண்டும் ஒவ்வொரு சிற்பமாகப் பார்த்துக் கொண்டிருந்தபோதே பொழுது விடிந்தது.

அந்த இளகிய காலை ஒளியில் மலையை நன்கு இரசித்தேன். நெடிய பாறைகளுடன் சரிந்தும் எழுந்தும் நிற்கும் மலையின் மேற்குச் சரிவில்தான் நான்கு குடைவரைகளைச் சாளுக்கியர்கள் உருவாக்கியுள்ளனர். முதல் குடைவரை சிவபெருமானுக்குரியது. இரண்டாம், மூன்றாம் குடைவரைகள் விஷ்ணுவிற்கு முதன்மை அளித்திருந்தன. நான்காம் குடைவரை சமணர்களுடையது. நான்கில் மூன்றாம் குடைவரையே அற்புதமானது. அக்குடைவரையின் கபோதத்தில் ஓவியச் சிதறல்களைக் காணமுடிந்தது.

காவலர்கள் எழுந்ததும் அவர்களுடன் தேநீர் அருந்திவிட்டு மூன்றாம் குடைவரையை அடைந்து கதிரொளியில் அங்கிருந்த சிற்பங்களைப் பார்வையிட்டேன். தாங்கு சிற்பங்களாகத் தழுவல் சிற்பங்கள் நிறைந்திருக்கும் அக்கலைக் கூடத்தில் பேரளவிலான திரிவிக்கிரமர், நரசிம்மர், சங்கரநாராயணர், வராகர், சேஷசாயி திருமேனிகள் உள்ளன. குடைவரை முகப்பிலுள்ள பூதகணங்களுள் ஒன்று குடக்கூத்து ஆடுகிறது. ஒன்று அழுகையுடன் நிற்க, மற்றொன்று அச்சுறுத்த, இன்னொன்று கர்வத்துடன் பார்க்கிறது.

9 மணியளவில் அரசுவும் நண்பர்களும் வந்தனர். அவர்களுடன் சேர்ந்து மீண்டுமொருமுறை நான்கு குடைவரைகளையும் பார்வையிட்டேன். ஏரிக்கரையருகே அமைந்திருந்த சிவபெருமான், சமணக் கோயில்களைப் பார்த்துவிட்டு மலைச்சரிவில் இருந்த பாறைச்சிற்பங்களைக் காணச் சென்றோம். அருங்காட்சியகம், நரசிம்மரின் பாதாமிக் கல்வெட்டு, திப்புவின் கோட்டை, அரண்மனை எச்சங்கள், குதிர்கள், கோட்டைச் சுவர்களின் எச்சங்கள், பீரங்கிமேடுகள் என அனைத்தும் பார்த்த பிறகு, இரண்டு மணிக்குப் பாதாமியை விட்டுப் புறப்பட்டோம்.

வழியில் வனதேவதைக்கான கோயில் ஒன்றைப் பார்க்க முடிந்தது. எளிமையான அக்கோயிலில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. ஹாஸ்பெட் வந்தபோது மணி 7. 20 அங்கு இரவு உணவை முடித்துச் சித்திரதுர்க்கத்தில் தங்கினோம். 4. 1. 1990 காலை சித்திரதுர்க்கத்திலிருந்து புறப்பட்டுப் பெங்களூர் வழியாகச் சிராப்பள்ளி வந்தடைந்தேன். அரசுவும் நண்பர்களும் சென்னை சென்றனர்.

(வளரும்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.