http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 85

இதழ் 85
[ ஜனவரி 16 - ஃபிப்ரவரி 15, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

ஐந்தாண்டுக்கொருமுறை மாற்றம் ஏன்?
திரும்பிப்பார்க்கிறோம் - 32
ஆடிஅருளப் பிரசாதம் பெற்ற பொன்னில் . . .
வைகல்
மனத்துக்கண் மாசிலன்
ஊன்சோறு (அ) ஊன்துவையடிசில்
பருத்திப் பெண்டிர்
இதழ் எண். 85 > கலைக்கோவன் பக்கம்
ஆடிஅருளப் பிரசாதம் பெற்ற பொன்னில் . . .
இரா. கலைக்கோவன்

அன்புள்ள வாருணி,

ஜப்பானில் இருந்தபோதுகூட இந்தியாவிற்கு வந்தபோதெல்லாம் உறவுகளைக் காணத் தவறினாலும், இரண்டு நாட்களேனும் தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றைக் காணக் கமலக்கண்ணன் தவறியதே இல்லை. முன்கூட்டியே திட்டமிட்டுக் கோயில்களைத் தேர்ந்தெடுத்து, நேசிப்பார் சிலரையும் சூழச் சேர்த்து நிகழ்ந்த அந்தக் கலை பயில் களப்பயணங்கள் வரலாற்றுக்கு வளம் சேர்த்தவை. ஜப்பானில் இருந்து திரும்பிச் சென்னைக் குடிமகனாய் மாறிய பிறகு கமலக்கண்ணனுக்கும் கோயில்களுக்கும் இடையில் காலப் பிணக்கு. சிபியின் மழலையில், சென்னையின் ஆர்ப்பரிப்பில், பறந்து பறந்து பணி பார்க்கும் சூழலில் உள்ளத்தின் ஓரத்தில் வரலாற்று நதி ஓடிக்கொண்டிருந்தாலும், ஊரைவிட்டு அகல நேரமில்லை அவருக்கு. எப்படியோ, எதன் தூண்டலிலோ 2012 அவரை நகர்த்திவிட்டது. ஜனவரி 8 ஞாயிறன்று தஞ்சாவூர் செல்லலாம் என்று அழைத்தவரை நான்தான் ஐயாற்றின் பக்கம் ஈர்த்தேன்.

உறையூர் அன்பர் திரு. முருகானந்தம் ஐயாறு கோயில் கண்காணிப்பாளர் திரு.அகோரமூர்த்திக்குத் தொலைபேசி உரிய ஏற்பாடுகள் செய்து தந்தார். பேராசிரியர்கள் மு.நளினி, சுமிதா செல்வமூர்த்தி, ரிஷியா ஆகியோரும் சென்னையிலிருந்து கமலக்கண்ணனுடன் வந்திருந்த கிருபா சங்கரும் கமலக்கண்ணன் வழி வரலாற்று ஆர்வலராக மாறியுள்ள ஓட்டுநர் திரு. சீனிவாசனும் மகிழ்வுடன் இணைய ஐயாற்றுக்குப் பயணமானோம். வழியெல்லாம் வரலாற்றுக் கேள்விகளும் அவரவர்க்குத் தெரிந்த விடைகளுமாய்த் தொலைவே தெரியாமல் ஐயாறு அடைந்தோம். திருவாளர்கள் அகோரமூர்த்தி, செந்தில், திருநாவுக்கரசு ஆகியோர் உதவியுடன் ஐயாறப்பரை வணங்கி, உள்சுற்றை வலம் வந்தோம். சோழர் கால எழுவர் அன்னையர் சிற்பங்கள், வலப்பாதி உமையான அம்மையப்பர் சிற்பம் கண்டோம். அர்த்தமண்டப வாயிலின் முப்புறத்தும் அருமையான ஆனால், சிதைந்த நிலையில் காட்சியளித்த ஆடற்சிற்பங்களை அடையாளப்படுத்தினோம்.

வெளிச்சுற்றின் இரண்டடுக்கு மாளிகை வியப்பளித்தது. அதன் கீழடுக்கிலிருந்த எண்முகத் தூண்கள் சிற்பக் களஞ்சியங்களாக விளங்குவதைக் கண்டு மகிழ்ந்தோம். ஒவ்வொரு தூணும் தன்னுடைய கட்டுப்பகுதியின் எட்டு முகங்களிலும் ஒரு கதையின் எட்டு முக்கிய நிகழ்வுகளைப் படம்பிடித்திருந்தது. ஒரு தூண், சண்டேசுவரர் வரலாறு சொல்ல, ஒரு தூண், கோயில் வழிபாட்டு நிகழ்வுகளைக் கொண்டிருந்தது. சுற்றுமாளிகையில் வரலாற்றோடு கையிணைத்து உலவிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் சீதாராமன் தன் துணைவருடன் வந்து சேர்ந்தார். முனைவர் ஆய்வர் அல்லவா! சீதாராமனின் வருகை அனைவரின் ஆய்வு ஆர்வத்தையும் பல மடங்கு மிகுதியாக்கியது. ஆளாளுக்கு ஒரு தூணைப் பிடித்துக்கொண்டு ஆராயத் தொடங்கியதில் வரலாறு வளம் பெற்றது. இந்தத் தூண்களில் இவ்வளவு செய்திகளா என்று உடனிருந்த செந்தில் வியப்பில் மூழ்கினார்.

ஐயாறு கோயில் வளாகத்தின் வடபகுதியில் முதலாம் இராஜராஜரின் பட்டத்தரசியார் உலகமாதேவியார் எடுப்பித்த கற்றளியான உலகமாதேவீசுவரம் இடம்பெற்றுள்ளது. தென்பகுதியில் முதலாம் இராஜேந்திரரின் தேவியருள் ஒருவரான பஞ்சவன்மாதேவி எடுப்பித்த தென்கயிலாயம் அமைந்துள்ளது. நாங்கள் திருச்சுற்று ஆய்வில் இருந்தபோதே பேராசிரியர் நளினி 1991இல் அகிலா என் ஆய்வேட்டிற்காகப் படியெடுத்த வடகயிலாயம் கல்வெட்டுகளைச் சரிபார்ப்பதற்காகச் சென்றுவிட்டார். சுற்று மாளிகை ஆய்வு முடிவுற்ற நிலையில் நாங்களும் வடகயிலாயம் சென்றோம். என்னைப் பார்த்ததுமே நளினி மகிழ்வுடன் தாம் படித்துக் கொண்டிருந்த கல்வெட்டைப் பார்க்குமாறு கூறினார். முதலாம் இராஜராஜரின் மெய்க்கீர்த்யோடு தொடங்கிய அந்தக் கல்வெட்டு அவருடைய மகள் மாதேவடிகளின் கொடை பற்றியதாக அமைந்திருந்தது.

சோழப் பேரரசின் இணையற்ற மாமன்னராக விளங்கித் தஞ்சாவூரில் தாம் எடுப்பித்த மாபெரும் கற்றளியாம் இராஜராஜீசுவரத்தால் தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் சிறப்புக்குரியதோர் இடத்தைப் பெற்றுள்ள பெருவேந்தர் முதலாம் இராஜராஜருக்கு மூன்று பெண்கள் இருந்தனர். அம்மூவருள் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் குந்தவை. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவலஞ்சுழிக் கோயிலில் இராஜராஜரின் பட்டத்தரசியான உலகமாதேவி எழுப்பிய சேத்ரபாலர் கோயில் உள்ளது. அக்கோயில் இறைவனுக்குப் பொன்னும் பொன்னாலான நகைகளும் குந்தவை வழங்கியதாக அக்கோயிலில் உள்ள இராஜராஜரின் 25ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுச் சொல்கிறது. குந்தவையைக் குறிப்பிடும்போது, 'ஸ்ரீராஜராஜதேவர் திருமகளார் விமலாதித்ததேவர் மகாதேவியார் ஸ்ரீகுந்தவை நங்கையார்' என்று அவருடைய தந்தையார் பெயரையும் மணவாளர் பெயரையும் கூறிச் சிறப்பிக்கும் கல்வெட்டு இராஜராஜரின் மற்றொரு மகளையும் வெளிச்சத்திற்குக் கொணர்கிறது.

மாதேவடிகளார் என்றும் நங்கை மாதேவடிகளார் என்றும் அறியப்படும் இராஜராஜரின் இந்தப் பெண்ணை, 'நடுவில் பெண் பிள்ளை', 'நடுவில் பிள்ளையார்' என்று அறிமுகப்படுத்துவதன் வழி, இராஜராஜரின் மூன்று பெண்களுள் இவர் இடைப்பட்டவர் என்று தெளிவுபடுத்தும் இக்கல்வெட்டு, சேத்ரபாலருக்கு மாதேவடிகள் தந்த நகைகளைச் சுட்டுமிடத்து, 'ஸ்ரீராஜராஜ தேவர்க்கு ஆடியருள பிரசாதம் பெற்ற பொன்னில்' அவர் அவ்வணிகலன்களைச் செய்தளித்ததாகக் கூறுகிறது.

இராஜராஜரின் இந்த இரண்டுப் பெண்களில் இடைப்பெண்ணான மாதேவடிகளே, நளினி படித்துக்கொண்டிருந்த உலகமாதேவீசுவரம் கல்வெட்டில் இடம்பெற்றிருந்தார். கோயில் அர்த்தமண்டபத்தின் வடக்குத் தாங்குதளத்தில் உள்ள இக்கல்வெட்டு முழுமையான அளவில் படியெடுக்கப்படாதிருந்த நிலையில், அன்றைய படிப்பு ஒரு புதிய கண்டுபிடிப்புப் போலவே அமைந்தது. 'ஸ்ரீராஜராஜ தேவர் திருமகளார் மாதேவடிகளார் திருவையாற்று ஒலோகமாதேவி ஈச்வரமுடையார்க்குத் தாம் உடையார் ஸ்ரீராஜராஜதேவர்க்கு ஆடிஅருளிப் பிரசாதம் பெற்ற பொன்னில்' கொடுத்த நகைகளை மன்னரின் 25ஆம் ஆட்சியாண்டின் 144ஆம் நாளில் பதிவுசெய்துள்ள பதினைந்து வரிகளாலான இக்கல்வெட்டு மிக முக்கியமானதாகும்.

இராஜராஜரின் மூன்றாவது மகளைக் குறிக்கும் கல்வெட்டு இதே உலகமாதேவீசுவரத்தின் தெற்குத் தாங்குதளத்தில் உள்ளமையால் அதையும் பார்த்தோம். 'உடையார் ஸ்ரீராஜராஜதேவர் திருமகளார் அருமொழி சந்திரமல்லியான கங்கமாதேவியார்' என்று இவரை வெளிப்படுத்தும் அக்கல்வெட்டு, கோயிலுக்கு இவ்வம்மை பொன்னலான ஈச்சொப்பிக்கை வழங்கியதைப் பதிவுசெய்துள்ளது.

வலஞ்சுழிக் கல்வெட்டின் அடிப்படையில் வரலாற்றறிஞர் நீலகண்ட சாஸ்திரியார் இராஜராஜருக்கு மூன்று பெண்கள் இருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளபோதும் அம்மூன்று பெண்களின் பெயர்களும் அவருடைய நூலில் இடம்பெறவில்லை. சோழர் வரலாற்றைத் தமிழில் உருவாக்கித் தந்த வரலாற்றறிஞர் வை. சதாசிவபண்டாரத்தார் தம்முடைய நூலில் சந்திரமல்லியையும் மாதேவடிகளையும் ஒரே பெண்ணாகக் கொண்டு இராஜராஜருக்கு இரண்டு பெண்கள்தான் என்று முடிவுசெய்துள்ளார். உலகமாதேவீசுவரத்திலுள்ள மாதேவடிகளின் கல்வெட்டு தற்போது முழுமையான அளவில் நளினியால் படிக்கப்பட்ட நிலையில் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியாரின் கூற்றே சரி என்பது உறுதிப்படுகிறது.

இராஜராஜரின் மூன்று மகள்களுள் குந்தவையும் மாதேவடிகளும் சேத்ரபாலருக்குக் கொடையளிக்க, மாதேடிவகளும் சந்திரமல்லியும் உலகமாதேவி ஈசுவரத்திற்குக் கொடையளித்துள்ளனர். இம்மூவருள் இராஜராஜரின் 25ஆம் ஆட்சியாண்டில் கணவர் பெயருடன் அறியப்படுபவர் குந்தவை மட்டுமே. அருமொழி சந்திரமல்லியான கங்கமாதேவி எனும் பெயரிலுள்ள, 'கங்கமாதேவி' எனும் பிற்பகுதி கொண்டு இப்பெண் கங்க அரசனை மணந்தவராகலாம் என்று கூறியுள்ளார் திரு. சு. இராஜகோபால் (திருவையாறு ப. 91).

கங்கமாதேவி என்பது சந்திரமல்லியின் மற்றொரு பெயராகவே கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. 'அருமொழி சந்திரமல்லியான கங்கமாதேவி' என்றே கல்வெட்டு அவரை அறிமுகப்படுத்துகிறது. கங்க அரசனின் மனைவியாக அவர் இருந்திருப்பின், வலஞ்சுழிக் கல்வெட்டுக் குந்தவையைச் சுட்டுமாறு 'ஸ்ரீராஜராஜ தேவரின் திருமகளார் கங்கமன்னரின் தேவியார்' என்றே கல்வெட்டு அவரையும் சுட்டியிருக்கும். ஆனால், இங்குள்ள கல்வெட்டு மிகத் தெளிவாக அருமொழி சந்திரமல்லியான கங்கமாதேவி என்றே அப்பெண்ணைச் சுட்டுவதால் அவரை கங்க மன்னனுக்கு மணம் முடிக்கப்பட்டவராகக் கொள்ளமுடியவில்லை.

இராஜராஜரின் 25ஆம் ஆட்சியாண்டில் அவரது மூன்று பெண்களுள் குந்தவை மட்டுமே கணவர் பெயருடன் காட்சிதருகிறார். மற்ற இரண்டு பெண்களின் நிலை என்ன என்பதில் தெளிவில்லை. இந்த மூன்று பெண்களுமே பட்டத்தரசி உலகமாதேவி எடுப்பித்த கற்றளிகளுக்கு மட்டுமே கொடையளித்துள்ளனர். இவர்தம் தந்தையான இராஜராஜர் தஞ்சாவூரில் எடுப்பித்த இராஜராஜீசுவரத்திற்கு யாதொரு கொடையும் இவர்களால் வழங்கப்படவில்லை. 'நாம் குடுத்தனவும் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும்' எனத் தந்தார் தந்ததையெல்லாம் பதிவு செய்துள்ள இராஜராஜர், 'நம் பெண்கள் குடுத்தனவும்' என்று சுட்டவில்லை.

இம்மூன்று பெண்களில் குந்தவையும் சந்திரமல்லியும் சொல்லாத ஓர் அரிய தகவலை மாதேவடிகள் தாம் இடம்பெறும் இரண்டு கல்வெட்டுகளிலும் தவறாமல் வெளிப்படுத்தியுள்ளார். 'உடையார் ஸ்ரீராஜராஜதேவர்க்கு ஆடிஅருளிப் பிரசாதம் பெற்ற பொன்'னிலேயே மாதேவடிகளின் இரண்டு கோயில் கொடைகளும் அமைந்துள்ளன. இராஜராஜருக்கு நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்தத் திருமுழுக்கு அவரது 25ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளிலேயே இடம்பெற்றுள்ளது. இந்த முழுக்குப் பொன் முழுக்கு என்றே கருத வேண்டியுள்ளது. அப்படி அவர் ஆடிஅருளிய பொன்னையே மாதேவடிகள் பிரசாதமாகப் பெற்று, அதிலிருந்தே கோயில்களுக்குக் கொடையளித்துள்ளார் எனும்போது, அது போன்ற பிரசாதம் குந்தவைக்கோ, சந்திரமல்லிக்கோ கிடைக்கவில்லையா,அல்லது, கிடைத்தும் அதை அவர்கள் கொடையளிக்கவில்லையா எனப் பல கேள்விகள் விடை தேடி எழுகின்றன.

இராஜராஜருக்குத் திருமுழுக்கு நிகழ்ந்ததும் அந்நிகழ்வில் இடைமகள் மாதேவடிகள் பிரசாதம் பெற்றதும் அரிய வரலாற்றுத் தரவுகளாக இரண்டு கல்வெட்டுகள் வழிப் பதிவாகியுள்ளபோதும், இராஜராஜரின் 25ஆம் ஆட்சியாண்டில் கங்கமாதேவியும் மாதேவடிகளும் ஏன் கணவர் பெயரின்றிக் குறிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியக்கூடவில்லை. கல்வெட்டைப் படித்த எங்கள் அனைவருக்குமே இது போல் பல ஐயங்கள் கிளைவிட்டுப் படர்ந்தன.

வாருணி, வரலாறு எப்போதுமே இப்படித்தான்; ஒரு கதவைத் திறந்து பல வழிகளைக் காட்டும். சில வழிகள் உடன் வெளிச்சம் பெற்றுப் பயணங்களைத் தொடரவைக்கும். சில வழிகளோ, தேட வைக்கும்; தயங்க வைக்கும்; தளராமல் நடந்தால் மெல்ல, மெல்ல இலக்கைக் காட்டும்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.