http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 85

இதழ் 85
[ ஜனவரி 16 - ஃபிப்ரவரி 15, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

ஐந்தாண்டுக்கொருமுறை மாற்றம் ஏன்?
திரும்பிப்பார்க்கிறோம் - 32
ஆடிஅருளப் பிரசாதம் பெற்ற பொன்னில் . . .
வைகல்
மனத்துக்கண் மாசிலன்
ஊன்சோறு (அ) ஊன்துவையடிசில்
பருத்திப் பெண்டிர்
இதழ் எண். 85 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப்பார்க்கிறோம் - 32
இரா. கலைக்கோவன்


அன்புள்ள வாருணி,

சாளுக்கியக் கலையைப் பார்த்து மகிழ்ந்து சிராப்பள்ளித் திரும்பிய நிலையில் 5. 1. 1990 காலை என்னைப் பார்க்க வந்த நளினியிடம் அடுத்த நாள் மதிய உணவிற்குப் பிறகு காஞ்சிபுரம் செல்லலாம் எனச் சொல்லிப் பயண ஏற்பாடுகளைக் கவனிக்கச் செய்தேன். வெளியூர் செல்லும்போது எங்களுக்குக் காரோட்டியாய் அமைபவர் திரு. இரா. ஜெயசங்கர். ஏறத்தாழப் பதினைந்தாண்டுகளாக எங்கள் குடும்பத்தோடு நெருக்கமானவர். காதல் திருமணம் செய்த அவருக்கு இரண்டு பெண்களும் ஒரு மகனும் உள்ளனர். நளினி விடைபெற்றுச் சென்றதும் நண்பர் ஜெயசங்கருக்குத் தொலைபேசி, பயணத்திற்குத் தயாராகுமாறு கேட்டுக்கொண்டேன்.

6. 1. 1990 மதிய உணவிற்குப் பிறகு எங்கள் பல்லவப் பயணம் தொடங்கியது. காஞ்சிபுரம் அடைந்தபோது மணி 8. 30. ஓட்டல் தமிழ்நாட்டில் தங்கினோம். அடுத்த நாள் காலை புகழ்பெற்ற கயிலாசநாதர் கோயிலுக்குச் சென்றோம். ஏற்கனவே இரண்டு முறை நான் பார்த்த கோயில்தான் என்றாலும், அன்றைக்குத்தான் புதிதாகப் பார்ப்பது போல் இருந்தது. எளிய கோபுரம். உள்ளே இரண்டு விமானங்கள், மண்டபங்கள், சுற்றுக்கோயில்கள். நளினி அந்தக் கோயிலைப் பார்ப்பது அதுதான் முதன்முறை என்பதனால் கோயிலைச் சுற்றி ஓர் உலா மேற்கொண்டோம். சிற்பங்களின் அழகில் உளம் பறிகொடுத்த நளினி அவற்றைச் சோழச் சிற்பங்களோடு ஒப்பிட்டு நிறைய கேள்விகள் கேட்டார். அன்று முழுவதும் கயிலாசநாதர் கோயில் ஆய்விலேயே சென்றது. நிறைய குறிப்புகள் எடுத்துக்கொண் டோம். சில சிற்பங்கள் அதுவரை வேறெங்கும் கண்டிராத அமைப்பில் இருந்தன. அவற்றைப் பற்றி நிறைய விவாதித்தோம். விவாதித்தோம் என்பதைவிடச் சண்டையிட்டோம் என்பது சரியாக இருக்கும்.

சோமாஸ்கந்தருக்கு இராஜசிம்மப் பல்லவர் தந்திருந்த முதன்மை வியப்பூட்டியது. பல்லவர் கல்வெட்டுகளைப் பற்றிய தெளிவு இல்லாதபோதும் அவற்றின் அமைப்பை, வகைமையைப் பெரிதும் இரசித்தோம். பல்லவர் பகுதியில் எழுவர் அன்னையர் சிற்பங்களை இங்குதான் முதன்முறையாகச் சந்திக்க முடிகிறது. எத்தனையோ குடைவரைகளைப் பல்லவர்கள் எடுத்திருந்தபோதும் அவர்தம் கற்றளியில் இடம்பெறும் பேற்றையே எழுவர்அன்னையர் அடைய முடிந்தமை குறித்துச் சில அறிஞர்கள் எழுதியுள்ளனர். பாண்டியர் பகுதியில் எழுவர் அன்னையர் மேலாண்மையுடன் திகழ்ந்ததாகவும் அவர்கள் கூறுவர். இந்தக் கூற்றுகள் எந்த அளவிற்கு உண்மைத்தன்மை உடையன என்பதைத் தற்போது முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் எங்கள் தமிழ்நாட்டுக் குடைவரைகள் ஆய்வு விளக்கியுள்ளது.

கயிலாசநாதர் கோயிலில் சிவபெருமானின் ஆடற்சிற்பங்கள் பலவாக உள்ளன. குஞ்சிதம், ஊர்த்வஜாநு சிற்பங்களையும் ஊர்த்வதாண்டவச் சிற்பத்தையும் காணமுடிந்தது. தென்மேற்குக் கோடியில் உள்ள சிவபெருமானின் ஆடற்சிற்பம் அற்புதமானது. அந்தச் சிற்பத்தின் அமைப்பழகை உள்வாங்கிக் கொண்ட தில் நேரம் போனதே தெரியவில்லை. ஊர்த்வதாண்டவத்திற்கும் விருச்சிகக் கரணத்திற்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கி அவ்விருவகை ஆடற்கோலங்களும் இடம்பெற்றுள்ள கோயில்களை நளினிக்கு அடையாளப்படுத்தினேன்.

வீணை, தோல் கருவிகளை வாசிக்கும் கலைஞர்கள் எங்களைப் பெரிதும் கவர்ந்தனர். ஜகதியை அலங்கரித்த பூத வரிசையைப் பின்னாளில் முழுமையான ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வேர்விட்டது. பல்லவர் கட்டடக் கலை பற்றிய தெளிவான கண்ணோட்டம் இன்மையால் அக்கோயில் விமானத்தின் அமைப்பையும் கட்டுமானச் சிறப்பையும் அப்போது விளங்கிக்கொள்ள முடியவில்லை. என்றாலும், பல தனித்தன்மைகள் அந்த விமானத்தின் எழுச்சியில் உள்ளடங்கியிருப்பதை உணரமுடிந்தது. சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் சீ. கீதாவின் முனைவர் ஆய்வேட்டிற்காக இராஜசிம்மர் கட்டுமானங்கள் குறித்த ஆய்வைத் தொடங்கியபோதுதான் கயிலாசநாதர் கோயில் விமானம் எங்கள் கைக்குள் வந்தது. இராஜசிம்மரின் சிந்தனை வளமையும் கலைநோக்கும் புத்தமைப்புக் காணும் அவாவும் அப்போதுதான் மெல்ல மெல்ல விடியலைப் போல வெளிச்சமாயின.

காஞ்சிபுரம் பொறியியல் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த என் மூன்றாம் தமக்கை முனைவர் சிவஅரசியின் மகன் திரு. மு. இராஜமுருகன் அடுத்த நாள் எங்களுடன் வைகுந்தப் பெருமாள், கச்சபேசுவரர் கோயில்களின் களப் பணியில் கலந்து கொண்டார். அவருடைய கேள்விகளும் உடனிருப்பும் ஆய்விற்குப் பேருதவியாயின.

வைகுந்தப் பெருமாள் கோயில் நான் பார்த்த இரண்டாவது மாடிக்கோயிலாகும். மதுரையில் வாழ்ந்தபோது அங்குள்ள கூடலழகர் கோயிலைப் பார்த்திருக்கிறேன் என்றாலும், அது சிறுவயதில் என்பதால் கோயிலின் அமைப்பு உள்ளத்தில் பதிவாகவில்லை. வைகுந்தப் பெருமாள் கோயிலை முன்பே பார்த்திருந்தபோதும் இம்முறைதான் கோயில் வளாகம் முழுமையும் சுற்றிப் பார்க்கமுடிந்தது. கட்டமைப்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், தமிழ்நாட்டுக் கட்டடக்கலை வரலாற்றில் அக்கோயிலுக்குச் சிறப்பான இடமிருப்பதை அறிய முடிந்தது. சுற்றுமாளிகைச் சிற்பத்தொகுதி நளினியை வியப்புக்கு உள்ளாக்கியது. பேராசிரியை சி. மீனாட்சி இச்சிற்பங்களைப் பற்றிக் கட்டுரைத்திருப்பதை அவருக்குக் கூறியதுடன் அங்குள்ள கல்வெட்டுத் துணுக்குகளைப் படிக்குமாறு உற்சாகப்படுத்தி னேன். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்த கல்வெட்டு வரிகளை நளினி ஆர்வத்தோடு படித்துப் படியெடுத்தார்.

சிற்பத்தொகுதியில் ஆடற்கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் குழுக்களை அடையாளப்படுத்துவதில் நான் முனைந்திருந்தேன். கழுவேற்றல் காட்சிகளில் முருகன் ஆழ்ந்திருந்தார். பல்லவர் வரலாறு பேசும் அந்தச் சிற்பத்தொகுதியைப் பின்னாளில் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் கோ. வேணிதேவியின் பொருள் உதவியோடு நன்கு ஆராய்ந்து பல அரிய சமுதாயப் பண்பாட்டுப் பதிவுகளைக் கண்டறிந்தோம். பதிப்பிற்கு வராத இத்தகு புதையல்கள் எங்கள் கோப்புகளில் பலவாய் உள்ளன.

கச்சபேசுவரர் கோயிலில் ஆடவர்களின் குழுஆடல் சிற்பத் தொகுதியைப் பார்க்கமுடிந்தது. பல்லவர் பகுதியில் நாங்கள் கண்டறிந்த முற்றிலும் ஆடவர்களாய் அமைந்த ஆடல்குழுச் சிற்பம் அது ஒன்றுதான். அந்த ஆடலர்களின் மெய்ப்பாடும் அவிநயமும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. கோயில் சுற்று மாளிகைத் தளமுகப்பில் கோலாட்டப் பெண்களின் சிற்பங்களைக் கண்டோம். எனக்கு ஹம்பியில் பார்த்த சிற்பங்கள்தான் நினைவுக்கு வந்தன. அச்சுற்றுமாளிகை விஜயநகர அரசர்களின் திருப்பணியாகவே இருக்கமுடியும் என்பதைக் கோலாட்டச் சிற்பங்களின் வகைமையும் வளமையும் உணர்த்தின. அது போன்ற சிற்பங்களை ஏகாம்பரநாதர் கோயிலிலும் பார்க்க முடிந்தது. தஞ்சாவூர் மாவட்டக் கோயில்கள் ஒன்றிரண்டில் பின்னாளில் கோலாட்டச் சிற்பங்களைக் கண்டறிந்தபோது அங்கு விஜயநகர அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளனவா என்று தேடியது நினைவுக்கு வருகிறது. அன்று பிற்பகல் என் நண்பர் மெ. சீனிவாசன் வந்து சேர்ந்தார். மதங்கேசுவரர் கோயிலை அவருடன் பார்த்தோம். அங்கும் சிவபெருமானின் ஆடற்சிற்பம் இடம்பெற்றுள்ளது.

9. 1. 1990 காலை முக்தேசுவரர், இறவாதான், பிறவாதான் ஈசுவரங்களைப் பார்வையிட்டோம். ஜுரஹரேசுவரர் கோயிலுக்குச் சென்றிருந்தபோது மருத்துவக் கல்லூரி நண்பர் ஹரி பாபுவைத் தற்செயலாகச் சந்தித்தேன். காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த அவருடைய வீடு அதே வீதியில் இருந்தமையால் ஆய்வு முடிந்ததும் வீட்டிற்குச் சென்றோம். குழந்தை நல மருத்துவராகப் பணியாற்றிய அவரது துணைவியாரையும் மகளையும் அறிமுகம் செய்து வைத்தார். நெடுநாளைக்குப் பிறகு வகுப்புத் தோழரைச் சந்தித்த மகிழ்வினை நளினியிடம் பகிர்ந்துகொண்டேன்.

அன்று மதிய உணவிற்குப் பிறகு காஞ்சிபுரம் வந்தவாசிச் சாலையிலுள்ள மாமண்டூர், கூழம்பந்தல், உக்கல் கோயில்களுக்குச் சென்றிருந்தோம். மாமண்டூர்க் குடைவரைகள் நான்கையும் பார்த்தபோது அவற்றை விரிவாக ஆராயவேண்டும் என்ற அவா ஏற்பட்டது. பக்கத்திலுள்ள தூசி என்னும் ஊருக்கருகில் குரங்கணில்முட்டம் குடைவரை இருப்பதை அறிந்தும் நேரமின்மையால் அங்குச் செல்லக்கூடவில்லை. கூழம்பந்தல் முதலாம் இராஜேந்திரரின் கட்டுமானம். நிறைய எதிர்பார்த்துச் சென்றதால் சற்று ஏமாற்றமே எஞ்சியது. உக்கல் கட்டமைப்புச் சிறப்போ, சிற்பச் செழிப்போ அற்ற கோயில். ஒன்றிரண்டு கல்வெட்டுகளை மட்டும் படித்துவிட்டு அந்தி சாயும் வேளையில் வரதராஜப் பெருமாள் கோயிலை அடைந்தோம். விஜயநகர அரசர்களின் கைவண்ணமான முன் மண்டபத்தையும் கோயிலின் பிற பகுதிகளையும் நன்கு பார்க்க முடிந்தது. சில மணித்துளிகள் திருச்சுற்றில் அமர்ந்து அன்று பார்த்த கோயில்களின் கலைப்பதிவுகளைப் பற்றிய எங்கள் மதிப்பீடுகளைப் பகிர்ந்துகொண்டோம்.

10. 1. 1990 காலை இராஜமுருகனுடன் திருப்பருத்திக் குன்றத்தைப் பார்வையிட்டோம். பிறகு திருத்தணி சென்று பெருமுயற்சி செய்து வீரட்டானேசுவரத்தைக் கண்டறிந்தோம். ஆளரவமற்ற அந்தக் கோயிலின் கிரீவகோட்டச் சிற்பத்தைப் படமெடுக்க மேலே செல்ல வேண்டியிருந்தது. ஏணி கிடைக்காத நிலையில் இராஜமுருகன் தம்மையே ஏணியாக்கி உதவினார். குனிந்துகொண்ட அவருடைய தோள் மேல் கால் வைத்து முகமண்டபக் கூரையில் ஏறி கிரீவகோட்டச் சிற்பத்தைப் படம் எடுத்த நிகழ்ச்சி மறக்கமுடியாதது. நான் பெரிதும் தயங்கிய நிலையில் அவர் தந்த உற்சாகமும் துணிவும் அந்த அரிய சிற்பத்தை அருகிருந்து படமெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

திருத்தணியில் இருந்து தக்கோலம் சென்றோம். ஜலநாதீசுவரர் கோயிலைப் பார்ப்பது எனக்கும் அதுதான் முதல்முறை. சிவாச்சாரியார் மிகுந்த ஒத்துழைப்புத் தந்ததால் விரிவான அளவில் கோயிலைப் பார்க்கமுடிந்தது. நளினி கருவறைச் சுவரில் இருந்த முதலாம் ஆதித்தரின் கல்வெட்டைப் படித்துப் படியெடுத்தார். நான் ஆலமர்அண்ணல், கொற்றவை, நான்முகன் முதலிய கோட்டச் சிற்பங்களைப் படமெடுத்தேன். எங்கள் வாயிலாகக் கோயில் வரலாற்றை அறிந்த சிவாச்சாரியார் தக்கோலத்தில் ஆற்றோரம் இருந்த மற்றொரு கோயிலுக்கு அழைத்துச் சென்றார். பெரிதும் சிதைந்த நிலையில் இருந்த அந்தக் கோயிலையும் களஆய்வுக்கு உட்படுத்தினோம். அன்று மாலை மீண்டும் ஒருமுறை கயிலாசநாதர் கோயிலைப் பார்த்துவிட்டு அந்தி சாயும் வேளையில் மாமல்லபுரத்திற்குப் பயணப்பட்டோம்.

11, 12 இரண்டு நாட்களும் மாமல்லபுரத்தில் தங்கிப் பல்லவப் படைப்புகளை ஒன்றுவிடாமல் பார்த்தோம். சீனிவாசன் உடனிருந்து உதவினார். ஒற்றைக்கல் தளிகளைப் பார்த்தபோது அவற்றின் அமைப்பிலும் அழகிலும் மனம் பறிகொடுத்தோம். 'ஒருகல் தளிகள் ஒன்பது' என்ற தலைப்பில் இத்தளிகளைப் பற்றி பின்னாளில் நூல் எழுதும் வாய்ப்பு நேரும் என்று அப்போது கருதவில்லை. ஒரு பிரமிப்புணர்வே அந்த நாட்களில் மேலோங்கியிருந்தது. மகிடாசுரமர்த்தனியின் போர்க்கோலம் விழிகளை வியப்பால் விரிய வைத்தது. அதைப் பற்றி நன்கு விவாதித்தோம். அந்தக் குடைவரையில் அமர்ந்துகொண்டுதான் சாளுக்கிய, பல்லவப் படைப்புகளுக்கு இடையே நான் உணர்ந்த வேறுபாடுகளை அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன்.



திருக்கழுக்குன்றம் குடைவரை


மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்


மகிஷாசுரமர்த்தினி குடைவரை


வராகர் குடைவரை


திருமூர்த்தி குடைவரை


கட்டடக்கலை, சிற்பக்கலை பற்றிச் சில அடிப்படை முடிவுகளை எடுக்க அந்த உரை எனக்கு மிக உதவியது. நான் படித்திருந்த நூல்களின் தரவுகளுக்கும் பார்த்துப் பதிவுசெய்து கொண்ட தரவுகளுக்கும் பெருமளவில் வேறுபாடுகள் இருந்தன. எந்த ஓர் அறிஞருடைய பார்வையும் உள்நோக்கம் இல்லாமல் பதிவாகாமையை உணர்ந்தேன். அது எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது. அதுவே மிகுந்த எச்சரிக்கை உணர்வை என்னுள் விதைத்தது.

சாளுக்கியத் தலைநகர் பாதாமியை வென்ற முதலாம் நரசிம்மவர்மர் அங்கிருந்த கலைப்படைப்புகளில் உளமிழந்து அதே போல் தம் தலைநகரிலும் கோயில்களை உருவாக்கக் கருதியதன் விளைவுதான் மாமல்லபுரக் குடைவரைகளும் ஒருகல்தளிகளும் என்று ஓர் அறிஞர் எழுதியிருப்பதை நளினி நினைவூட்டினார். ஒப்பீட்டாய்வே இல்லாமல் மனம் போன போக்கில் அல்லது முந்து ஆய்வாளர்களின் முடிவுகளை ஆய்வுக்குட்படுத்தாமல் அப்படியே ஏற்று எழுதுவது ஒரு கலையாகவே இங்குப் பயிலப்பட்டுள்ளது. தமிழர்களுக்குச் சொந்தச் சிந்தனைகளே கிடையாது என்று எடுத்துரைப்பதில்தான் இத்தகு ஆய்வாளர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி!

சாளுக்கியப் பண்பையும் பல்லவப் பண்பையும் கலை வெளிப்பாடுகளின் அடிப்படையில் இணைத்தும் ஒப்பிட்டும் பார்ப்பதிலோ, இரண்டும் சார்ந்து காலத்தோடு ஒன்றிய சில கலைக் கொள்கைகளை உருவாக்குவதிலோ ஆர்வம் காட்டாமல், தமிழர் படைப்புகள் அனைத்தும் வெளியர் படைப்புகளின் பின்பற்றலே, அவற்றில் மண்ணின் மணம் மருந்துக்கும் இல்லை என்று பறை சாற்றுவதில் நம்மகத்து ஆய்வாளர்கள் சிலர் காட்டும் அக்கறை பல நேரங்களில் ஆழ்ந்த வருத்தத்தையே தந்துள்ளது. எப்பாடுபட்டாகிலும் எல்லாவற்றிற்கும் வெளியகத்து வேர்களையே அடிப்படைகளாகக் காட்டுவதில் இவர்களுக்குள்ள முனைப்பு சரியான தளங்களில் எதிர்க்கப்படாமல் போனதால்தான் தமிழ்நாட்டு வரலாறு திசைமாறிப்போனது. இனி வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் உண்மையான கலைவரலாற்றை ஒப்பீட்டாய்வின் வழிப் பதிவுசெய்ய நாம்தான் முயலவேண்டும் என்றேன். உடனிருந்தவர்கள் வரவேற்றனர்.

அந்தப் பயண நாளிலிருந்து இன்றுவரை எங்களுடைய ஆய்வுகள் அனைத்தும் களங்கள் சார்ந்தே அமைந்துள்ளன. வழிநிலைச் சான்றுகளைச் சரிபார்க்காமல் நாங்கள் கொள்வது இல்லை. ஒருவேளை சரிபார்க்க வாய்ப்பின்றிப் போகுமானால், 'இது இன்னாருடைய கருத்து' என்ற சுட்டலுடன் மட்டுமே அத்தகு சான்றுகளைத் தேவை கருதி இடம்பெறச் செய்கிறோம். எந்த ஓர் அறிஞருடைய கருத்தும் ஆய்வுக்குட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளத்தக்கது அன்று என்பதைக் களஆய்வுகள் மெய்ப்பித்துள்ளன. எல்லாருக்குமே சார்பு இருக்கிறது. அவரவர்களுக்கென்று குழுக்களும் உள்ளன. அதனால், வரலாறு எழுத விழைவோர் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியுள்ளது.

யாருடைய கட்டுரையிலேனும் கருத்துப் பிழைகள் இருந்து அவற்றை நம்முடைய ஆய்வின்போது கண்டறிந்து வெளிப்படுத்தும் வாய்ப்பமைந்தால் கட்டுரையாளர் நம் மீது கொள்ளும் சினம் அளப்பரியதாக அமைந்துவிடுகிறது. தூற்றுவது, பகை கொள்வது, புறம்பேசுவது எனப் பல நிலைகளில் அவர்தம் செயற்பாடுகள் கால்கொள்கின்றன. பல்கலைத் துறைத் தலைவர் ஒருவர் அவரது கட்டுரையில் இருந்த பிழைகளை என் கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்த ஒரே காரணத்திற்காக என்னைப் பற்றியும் எங்கள் ஆய்வுகள் பற்றியும் எவ்வளவு இழிவாகப் படம்பிடிக்கமுடியுமோ அவ்வளவு கீழிறங்கிச் சென்று ஒரு சிறு கையேடே வெளியிட்டார். கையேட்டின் ஆசிரியராகத் தம் பெயரைப் பதிவுசெய்யத் துணிவின்றி அவரது ஆய்வு மாணவர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கையேட்டைப் பார்க்க நேர்ந்தபோது அந்தப் பேராசிரியரின் பக்குவமடையாத உள்ளம் குறித்து வருந்தினேன்.

அதே பேராசிரியரைச் சில ஆண்டுகள் இடைவெளியில் சிராப்பள்ளி விமான நிலையத்தில் சந்திக்கநேர்ந்தது. இலங்கை அரசின் பண்பாட்டுத்துறை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக நானும் அவரும் அங்கிருந்தோம். என்னைப் பார்த்ததும் எப்படி எதிர் கொள்வதென்று தெரியாமல் அவர் திகைத்தார். நான் எப்போதும் போல் அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு நகர்ந்துவிட்டேன்.

இலங்கையில் நாங்கள் ஒரே விடுதியில் அடுத்தடுத்த அறைகளில் தங்கியிருந்தோம். முதல் நாள் இரவு எதிர்பாராதவிதமாக இருவரும் சந்தித்துக் கொண்டோம். அவர் மது அருந்தியிருந்தார். என்னைத் தம் அறைக்கு அழைத்தார். அவருடன் அதே பல்கலையைச் சேர்ந்த மற்றொரு பேராசிரியரும் தங்கியிருந்தார். அழைத்தவர் என் கையைப் பிடித்துக் கொண்டு தாம் வெளியிட்ட கையேட்டிற்காக வருத்தம் தெரிவித்தார். பொறுத்தாற்றிக் கொள்ளுமாறு வேண்டினார். தம்மைப் பற்றியும் தம் ஆய்வுகள் பற்றியும் விதந்து பேசினார். எங்கள் ஆய்வுகளின் சிறப்புத் தாம் அறிந்ததே என்று கூறியவர் தம்முடைய கட்டுரையின் பிழைகள் சுட்டப்பட்டதால் ஏற்பட்ட சினத்தின் வெளிப்பாடாகவே கையேட்டைக் கொணர நேர்ந்ததாகக் கூறி மீண்டுமொருமுறை வருத்தம் தெரிவித்தார். அவரிடமிருந்து விடுபட நெடுநேரமாகியது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரும் நானும் சந்தித்துக் கொள்ளவில்லை.

அவருடைய கையேடோ அல்லது அவருடைய வருத்தம் தெரிவிப்போ என்னுள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. பொதுவாழ்க்கையில் எதிர்ப்புகள், அவமதிப்புகள் இயல்பானவை. நான் உளநோய் மருத்துவத்துறையில் ஓராண்டுக் காலம் பணிசெய்தவன். அதனால் இது போன்ற எதிர்விளைவுகள் என்னை எவ்விதத்திலும் துன்புறுத்துவதில்லை. உண்மைகளை எடுத்துரைப்பதிலோ, பிழைகளைச் சுட்டிக்காட்டுவதிலோ தயக்கம் கொள்வது நேர்மையாகாது.

12. 1. 1990 கழுக்குன்றம் குடைவரையைக் காணச் சென்றிருந்தோம். அர்த்தமண்டபப் பின் சுவரில் கருவறையின் இருபுறத்தும் உள்ள நான்முகன், விஷ்ணு சிற்பங்கள் கருவறைத் தெய்வமாகச் சோமாஸ்கந்தரைச் சுட்டின. நரசிம்மவர்மரின் கல்வெட்டைப் படிக்க முயன்றோம். மலைக்கோயிலைப் பார்வையிட்ட பிறகு கீழிருந்த கோயிலையும் கண்டோம். அவ்வளாகத்துள்ள உட்கோயில் ஒன்றில் அழகிய மகிடாசுரமர்த்தனியின் சிற்பம் பார்த்தோம். அதே கோயிலின் வலபி வரியில் வேடர் கண்ணப்பரின் கைப்பற்றும் சிவலிங்கக் கையைப் பார்த்தோம். காலத்தால் முற்பட்ட அந்தச் சிற்பத்தில் கண்ணப்பர் அமர்ந்தபடி கண்ணை அகழ முற்படுவது படமாகியுள்ளது.

அன்று மாலை பரமேசுவர மகா வராகர் குடைவரையையும் கடற்கரைக் கோயிலையும் பார்த்தோம். கடற்கரைக் கோயில் வழக்கம் போல் பார்வைகளை மலர்த்தி உள்ளத்தைக் குளிரச் செய்தது. நெடுநேரம் அந்த வளாகத்தில் அமர்ந்தபடி பல்லவர்களின் கலைப் பங்களிப்புப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அன்றிரவுடன் பல்லவர் பயணம் முடிவுக்கு வந்தது. என்றாலும் சாளுக்கியர், பல்லவர் படைப்புகளை அடுத்தடுத்துப் பார்த்து வந்தமை பல கேள்விகளை என்னுள் விதைத்திருந்தது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அந்தக் கேள்விகளுக்கு விடைகாண முயன்றேன்.

10. 1. 1990 மாலைமலர் நாளிதழ் எங்களுடைய சமயபுரம் கோயில் ஆய்வு பற்றிய செய்தியை விரிவான கட்டுரையாக வெளியிட்டிருந்தது. சமயபுரத்தைச் சுற்றி அமைந்துள்ள பல கோயில்கள் இந்த ஆய்வில் வயப்பட்டன. சில புதிய கல்வெட்டுகளையும் ஆடற்சிற்பங்களையும் இந்த ஆய்வின்போது கண்டறிந்து வெளிப்படுத்த முடிந்தது. திருவாவடுதுறை ஆதீன வெளியீடான மெய்கண்டார் நவம்பர், டிசம்பர் (1989) இதழ்களில் 'கோமகள் கண்ட கோயில்' என்ற தலைப்பிலான கட்டுரை வெளியானது. 27. 10. 1989 மாலைமுரசு இதழில் 'இராசேந்திரனின் காதலி' என்ற தலைப்பில் பரவையைப் பற்றிய கட்டுரை இடம்பெற்றது. அதே கட்டுரையைக் 'கல்வெட்டில் ஒரு காவியம்' என்ற தலைப்பில் மாலைமுரசு சென்னைப் பதிப்பு வெளியிட்டது. சிந்தாமணிஆரம் என்ற பெயரில் வெளிவந்த இதழில் 'சாயும் கோயில்' என்ற தலைப்பில் பஞ்சவன் மாதேவீசுவரத்தில் இருந்த சண்டேசுவரர் கோயிலைப் பற்றிய அறிக்கை வெளியானது.

20. 1. 1990 அன்று சிராப்பள்ளிக் காவேரி மகளிர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் நா. சகுந்தலா தலைமையில் பேராசிரியர் முனைவர் சி. மூக்கரெட்டி, 'சோழ பாண்டிய மாமடிகள்' எனும் தலைப்பில் மையத்தில் உரையாற்றினார். சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் உறவாய் இருந்த போசள மன்னர்களைப் பற்றிய வரலாற்றுரையாக அது அமைந்தது. கல்வெட்டுகளின் அடிப்படையில் மூக்கரெட்டி தந்த நிகழ்வுப் பின்னல்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டு அரசியல் பின்னணியைப் படம் பிடித்துக் காட்டின.

மையக் கூட்டங்களுக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த சிலர் கல்வெட்டுப் பயிற்சி பெறவும் கோயில்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் விரும்பினர். மையத்தில் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு பலமுறை கேட்டனர். அவர்கள் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளத்தைத் தொட்டன. பட்டயக்கல்வி முடித்து நளினி சிராப்பள்ளி திரும்பியதும் இது குறித்து முடிவு செய்யக் கருதியிருந்தேன். நளினியின் வருகையைத் தொடர்ந்து ஆர்வம் உள்ளவர்களுக்குக் கல்வெட்டுப் பயிற்சி தரலாம் என்ற எண்ணத்திற்கு வடிவம் கிடைத்தது.

என் வாழ்வரசியிடமும் ஆறுமுகத்திடமும் பயிற்சி நடைமுறைகள், இடம், செலவினங்கள் இவை குறித்து உரையாடினேன். அவர்கள் இருவரும் என் கருத்துக்கு ஆதரவளித்ததோடு உரிய வழிகாட்டல்களையும் தந்தனர். ஆறுமுகம் உடனிருந்து உதவுவதாக உறுதி கூறினார். அவர் தந்த ஊக்கமே திரு. மஜீதிடம் இது குறித்துப் பேசவைத்தது. மஜீது என் எண்ணத்தைப் போற்றியதுடன் தம்மால் இயன்றது அனைத்தும் செய்வதாகக் கூறினார்.

வெறும் கல்வெட்டுப் பயிற்சியாக அமைக்காமல் சான்றிதழ் அல்லது பட்டயப் படிப்பாக வடிவமைக்கலாம் என்று கருதியதால் எப்படி அதைச் செயற்படுத்தலாம் என்பது குறித்து கலந்துரையாடிச் சில முடிவுகள் எடுத்தோம். அதன்படி கல்வெட்டு, கோயிற்கலைகளில் ஈராண்டுப் பட்டயக் கல்வி வழங்கவும் அதற்கான தொடக்க விழா நிகழ்ச்சியை 28. 1. 1990 ஞாயிறன்று காலை அமைக்கவும் கருத்துக் கொண்டோம். கல்விக் கட்டணமாக ஏதும் பெறாமல், வகுப்பு நடக்கும் நாட்களில் தேநீர்ச் செலவுக்கு மட்டும் தலைக்குப் பத்து ரூபாய் பெறுவதெனவும் சிறப்பு வகுப்புகளுக்கு அழைக்கப்படும் அறிஞர்களின் போக்குவரத்துச் செலவை மாணவர்கள் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தீர்மானமானது. பட்டயக்கல்வியைத் தொடங்கி வைக்கத் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை துணை இயக்குநர் திரு. கு. தாமோதரனை அழைக்க, அவரும் மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார்.

திரு. தாமோதரன் தஞ்சாவூர் மாவட்டப் பதிவு அலுவலராக இருந்த காலத்திலிருந்தே நன்கு பழக்கமானவர். மஜீதின் நெருக்கமான நண்பர். நானும் தாமோதரனும் இணைந்து திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் சில நிகழ்ச்சிகளைச் செய்திருக்கிறோம். அவர் துணையுடன்தான் நல்லூர் ஆடவல்லான், களக்காடு ஆடவல்லான் திருமேனிகளை ஆய்வுசெய்து கட்டுரைகள் வெளியிட்டேன். நான்கைந்து முறை எங்களுடன் களஆய்வுகளுக்கு வந்திருக்கிறார். இணக்கமாகப் பழகக்கூடியவர் என்பதால் அவருடன் தொடர்ந்த நட்பு இருந்தது.

சிராப்பள்ளியிலிருந்து அப்போது வெளிவந்த அனைத்து நாளிதழ்களிலும் முன்னோட்டமாகப் பட்டயக்கல்வி தொடக்க விழா குறித்த செய்தி வெளியாகியிருந்தமையால் கூட்ட நாளன்று அரங்கில் பெருந்திரளாய்ச் சுவைஞர்கள் கூடியிருந்த னர். வாணி செங்குட்டுவன் அனைவரையும் வரவேற்றார். நான், பட்டயக்கல்வி தொடங்கப்பட்டதற்கான காரணங்களை விளக்கி, கல்வெட்டுப் படிக்க வல்லவர்களின் தேவை நாளும் அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டி எங்கள் நோக்கங்களை முன்னிருத்திப் பேசினேன். தலைமை தாங்கிக் 'கல்வெட்டின் கதை' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய தாமோதரன் எங்கள் பணிகளைப் பாராட்டியதுடன் இந்த அரிய வாய்ப்பை வரலாறு, தமிழ் சார்ந்த பேராசிரியர்களும் பிற ஆர்வலர்களும் இளைஞர்களும் சரியான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். என் வாழ்வரசி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்க, மு. நளினி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியின் முடிவிலேயே பல பெயர்கள் பதிவாயின. பேராசிரியர்களும் பல்துறை அலுவலர்களும் இளைஞர்களும் ஆர்வத்துடன் பயில முன்வந்தமை மகிழ்வளித்தது. எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த தமிழ்ப் பேராசிரிய முனைவர்கள் திரு. கு. திருமாறன், திரு. தெ. சீ. இராதாகிருட்டிணன் இருவரும் பெயர்ப் பதிவு செய்திருந்தனர். திரு. பி. தமிழகனும் தம் பெயரைத் தந்திருந்தார். ஆறுமுகத்தின் மகன் அனபாயன் தந்தையின் அனுமதியுடன் இவ்வகுப்பில் சேர்ந்தார்.

முதல் வகுப்பு 4. 2. 1990 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் அமைந்தது. பேராசிரியர்கள் இராதாகிருட்டிணன், திருமாறன், சு. ஆனந்தன்பிள்ளை, தி. சுந்தரேசன், தமிழகன், கவிஞர் புவியரசன், ப. இராமகிருஷ்ணன், இரா. இராஜேந்திர தேவன், மு. வீராசாமி, மு. ம. கோபாலன், இரா. விஜய்பாரத், இரா. தியாகராஜன், அர. அகிலா, ஸ்ரீராம், வாணியின் கணவர் திரு. ச. செங்குட்டுவன், இரா. இலலிதாம்பாள், அனபாயன் ஆகிய 17 பேர் பங்கேற்றனர். படிப்பை அறிமுகப்படுத்தி நான் உரையாற்ற, நளினி பழந்தமிழ்க் கல்வெட்டுகள் பற்றி வகுப்பெடுத்தார்.

18. 2. 1990 ஞாயிறு காலை 9 மணி அளவில் கலைக்காவிரி நாட்டியப் பள்ளி இயக்குநர் அருட்தந்தை ஜார்ஜ் அடிகளார் தலைமையில் திரைக்கலைஞர் கலைமாமணி திரு. சிவக்குமார் 'ஓவியப்பார்வைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சிக்காகவே கோயமுத்தூரிலிருந்து என் வகுப்புத் தோழர் மருத்துவர் பொ. பெருமாள் வந்திருந்தார். அவரும் சிவக்குமாரும் சென்னை ஓவியக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அவர் மூலமாகவே சிவக்குமார் எனக்கு அறிமுகமானார். கல்லூரி நாட்களில் அவ்வப்போது அவர் இல்லம் சென்று உரையாடுவது வழக்கம். மிகச் சிறந்த ஓவியரான சிவக்குமாரின் தூரிகை அனுபவங்கள் சிராப்பள்ளி வாழ் ஆர்வலர்களுக்குப் பயன் தரும் என்ற நம்பிக்கையுடன்தான் உரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரளான சுவைஞர்கள் பங்கேற்று உரைக்குப் பிறகு அவரிடம் கலந்துரையாடினர்.

பட்டயக்கல்வியின் இரண்டாம் வகுப்பு 25. 2. 1990 ஞாயிறு பிற்பகல் 4 மணி அளவில் அமைந்தது. பழந்தமிழ்க் கல்வெட்டுகள் பற்றிய நளினியின் வகுப்புத் தொடர்ந்தது. நான் முற்காலச் சோழர் வரலாறு குறித்துப் பேசினேன். அவ்வகுப்பிற்குத் திரு. தே. சந்திரன், வட்டாட்சியர் திரு. ந. சுந்தரமூர்த்தி, ஆறுமுகத்தின் மகள் பொன்மணி ஆகியோர் வந்திருந்தனர். தங்களையும் மாணவர்களாகப் பதிவு செய்துகொள்ளுமாறு வேண்டினர். ஆனந்தன்பிள்ளை, இரா. தியாகராசன் ஆகிய இருவரும் அவ்வகுப்பிற்கு வரவில்லை. பின்னர் நடந்த வகுப்புகளுக்கும் அவர்கள் வராமையால் பெயர்ப் பட்டியலில் இருந்து அவர்தம் பெயர்களை நீக்கும்படியாயிற்று.

மார்ச்சு மாதம் 11ம் நாள் விக்கிரமங்கலம் கோயிலார் அழைப்பை ஏற்று அங்குச் சென்றிருந்தோம். பட்டயக்கல்வி மாணவர்கள் மு. வீராசாமி, ப. இராமகிருஷ்ணன் இருவரும் உடன் வந்திருந்தனர். கோயில் முன்மண்டபக் கூரையில் நாயக்கர் கால ஓவியங்கள் விளக்கங்களுடன் அமைந்திருந்தன. 'இந்தப் பத்தி சாந்து போட்டு சித்திரம் எழுதுகுறதுக்கு சம்மதிச்சது' எனத் தொடங்கிய சொற்றொடர் ஓவியக்காரர்களின் கூலி பற்றியும் குறித்தது. சில இடங்களில் தெலுங்கு எழுத்துக்களில் விளக்கங்கள் இருந்தன. அவற்றைப் படிக்க மண்டபத் தூண்களின் மீது ஏணியைச் சாத்தி, உயரச் செல்லவேண்டியிருந்தது. கோயிலார் ஏணியைப் பிடித்துக்கொள்ள மாணவர்களின் உதவியுடன் அவற்றைப் படித்து முடிப்பதற்குள் நளினி பட்டபாடு சொல்லி முடியாது. நாயக்கர் காலக் கைவண்ணமாக அம்மண்டபத்தில் பல சிற்பங்களும் இருந்தன. சில துண்டுக் கல்வெட்டுகளையும் படியெடுத்தோம். முதற் பயணத்திலேயே புதியனவற்றைக் கண்டறிய முடிந்ததில் மாணவர் இருவரும் மகிழ்ந்தனர். செய்தித்தாள்கள் எங்கள் கண்டுபிடிப்பை விரிவான அளவில் படங்களுடன் வெளியிட்டிருந்தன.

4. 3. 1990 ஞாயிறு பிற்பகல் கோயிற் கட்டடக்கலை பற்றி அறிஞர் கூ. ரா. சீனிவாசன் வகுப்பெடுத்தார். அந்த வகுப்பிற்கு வெ. சு. லட்சுமி, திரு. ஜெகதீசன் இருவரும் புதிய மணவர்களாய் வந்து இணைந்தனர். சென்ற வகுப்பிற்கு வந்திருந்த சந்திரன், சுந்தரமூர்த்தி இருவரும் இந்த வகுப்பிற்கு வரவில்லை. சந்திரன் தமக்கு நேரம் அமையவில்லை என்று விலகிக்கொண்டார். அடுத்த சில வகுப்புகளுக்கு வந்த சுந்தரமூர்த்தி தொடர்ந்து வர இயலாதவாறு பணிமாற்றம் பெற்றுப் போனார். புதியவர்களுள் ஜெகதீசன் ஒன்றிரண்டு வகுப்புகளுடன் நின்றுகொண்டார்.

அறிஞர் கூ. ரா. சீனிவாசனின் வகுப்பு அனைவருக்கும் பயனுடையதாக அமைந்தது. கட்டடக்கலை தொடர்பான பல அரிய செய்திகளை அவர் பகிர்ந்துகொண்டார். தாங்குதளம், தூண்கள் இவை இரண்டும் பற்றியே ஏறத்தாழ இரண்டு மணி நேரம் உரையாற்றினார். அவரது நினைவாற்றலும் ஆழ்ந்த அறிவும் இலக்கியங்களில் அவருக்கிருந்த தேர்ச்சியும் எங்கள் அனைவரையும் பெரிதும் வயப்படுத்தின. மாணவர்களின் அனைத்து ஐயங்களையும் பல்வேறு சான்றுகள் காட்டித் தெளிவுபடுத்தினார். கோயில்களுக்கே நேரடியாகச் சென்று பயில்வது கூடுதல் பயன்தரும் என்று வழிகாட்டினார். எப்போது அழைத்தாலும் தாம் வந்து உதவுவதாக உறுதி கூறினார்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.