![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 96
![]() இதழ் 96 [ ஜூன் 2013 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
போதர்கள் எனும் பிரிவினரின் தலைவன் இந்த இறைவடிவத்தை கையிலாயத்திலிருந்து பெற்றதாகவும் பின்னர் பல கைகள் மாறி இந்த இறைவடிவம் சந்தெல்லா மரபைச் சார்ந்த மன்னர்களிடன் வந்ததாகவும் கூறும் கல்வெட்டு, விஷ்ணு இந்த அபூர்வ வடிவத்தை எடுத்ததற்கான காரணத்தையும் காட்டுகிறது.
![]() மிக அரிய சிற்பமான சக்தி சதுஷ்கா இன்று நாகரீக வண்ணப்பூச்சால் விகாரப்படுத்தப்பட்டுள்ளது பன்றி, நரசிங்கம், குதிரை என்ற மூன்று விலங்குகளின் தலைகளையும் அவற்றின் அம்சங்களையும் கொண்டு ஒரே உடலுடன் விளங்கிய மூன்று அரக்கர்கள் தங்களை யாராலும் அழிக்க முடியாதென்ற ஆணவத்துடன் அடாத செயல்கள் பலவாற்றிப் பெருந்துன்பம் இழைத்து வந்தனர். அவர்களை அழிக்க வேண்டுமானால் அப்படி அழிக்க வருபவரும் அவர்களைப் போலவே வடிவம் கொண்டிருக்க வேண்டும். இந்நிலையில்தான் அந்த அரக்கர்களின் அழிவுச் செயல்களைப் பொறுக்க மாட்டாத விஷ்ணு அவர்களைக் களையெடுக்க விரும்பி அவர்களைப் போலவே வடிவம் கொண்டு நான்கு முகங்களுடன் வைகுந்தராய் தோன்றினார். வைகுந்த வடிவத்தில் அமைதி நிறைந்த மனித முகம், பன்றி முகம், நரசிங்க முகம், குதிரை முகம் ஆகியன இடம்பெற்றன. இந்த வைகுந்த வடிவத்தினை முதன்முதலாய் பெற்றவர்களாகக் கல்வெட்டில் குறிக்கப்படும் போதர்கள், காஷ்மீர் - லடாக் - திபேத் பகுதிகளில் பெரும் செல்வாக்குடன் வாழ்ந்து அப்பகுதிகளில் தனித்ததோர் இடம் பெற்ற பௌத்தர்களேயாவர். இந்த வைகுந்தர் வழிபாடு காஷ்மீரத்து வைணவப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்றிருந்தது. ஜம்மு, காஷ்மீர், அவந்திபூர் பகுதிகளிலுள்ள கோயில்களில் வைகுந்தர் வடிவங்கள் பல அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆக்க சக்தியின் திருத்தோற்றமாகக் கருதப்படும் இந்த வைகுந்தரின் மனித முகம் வாசுதேவரையும் நரசிங்கமுகம் சம்கர்ஷணரையும் பன்றி முகம் பிரத்யும்னரையும் குதிரை முகம் அநிருத்தரையும் குறிப்பதாக பாஞ்சராத்திரம் கூறுகிறது. ஆனால் கிடைத்திருக்கும் திருமேனிகள் பலவற்றிலும் குதிரை முகத்திற்குப் பதிலாக அரக்க முகம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. நால்வியூகக் கொள்கையை மையமாகக் கொண்ட இந்த வைகுந்த சதுர்மூர்த்திகள் தத்தம் சக்தியருடன் ஆக்கத் தொழிலைச் செய்வதாகக் குறிப்பு. வைகுந்தச் சதுர்வேதிகளுக்குக் கிடைத்த வரவேற்பும் வழிபாடும் அவர்தம் சக்தியர்க்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை. அஹிர் புத்நயா சம்ஹிதை இந்நான்கு சக்திகளையும் அங்கீகரிக்கிறதே தவிர அவர்தம் தோற்ற விளக்கங்களைத் தரவில்லை. பாஞ்சராத்ர ஆகமங்களின் மிகப்பழமையான ஜயேக்கிய சம்ஹிதைதான் வைகுந்தரையும் அவரது தேவியான சக்தி சதுஷ்காவையும் விரிவாக அறிமுகப்படுத்துகிறது. லட்சுமி, கீர்த்தி, ஜெயா, மாயா எனும் நான்கு பெண் தெய்வங்களின் ஒருங்கிணைந்த வடிவமாக சக்தி சதுஷ்கா கருதப்படுகிறார். கிழக்கில் அமையும் மனித முகம் விஷ்ணுவிற்குரிய சக்தி லட்சுமி. தெற்கிலமையும் நரசிம்மருக்குரிய சக்தி கீர்த்தி. மேற்கில் அமையும் குதிரை முக ஹயக்கிரீவருக்கு ஜெயா. வடக்கில் மாயா பன்றிமுக சக்தியாய் இடம்பெறுகிறார். ஜயேக்கிய சம்ஹிதையால் வர்ணனை செய்யப்படும் இந்த அபூர்வமான சக்தி சதுஷ்கா இறைவடிவம் பானர்ஜியால் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பில்வாரா மாவட்டத்தில் பிஜோல்யாவைச் சேர்ந்த உண்டேஸ்வரா கோயிலிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது. மிக மிக அபூர்வமான வடிவமாக அறிஞர்களால் கருதப்படும் இந்த இறைவியின் திருத்தோற்றம் இந்தியாவிலேயே இதுநாள் வரை ஒன்றுதான் கிடைத்துள்ளது. நின்ற நிலையில் காணப்படும் இவ்விறைவியின் வடிவத்தின் கைகளை வளைத்துச் செல்லும் வனமாலை இதன் முழங்கால்வரை தொங்குகிறது. எட்டு கைகளில் ஐந்து சிதைந்துள்ளன. எஞ்சிய மூன்றனுள் இரண்டில் கண்ணாடியும் அக்கமாலையும் இடம்பெற்றுள்ளன. மூன்று தலைகளுடன் காட்சியளிக்கும் இவ்விறை வடிவத்தில் மனிதத் தலை இடம்பெறவில்லை. வைகுந்தரென்றும் வைகுந்த நாராயணரென்றும் காஷ்மீரில் கொண்டாடி வணக்கப்படும் இறைத்திருமேனிகளும் சில இடங்களில் மூன்று முகங்களுடன் அமைந்துள்ளன. ராஜஸ்தானில் கூட இப்படி மூன்று முகங்களுடன் கூடிய வைகுந்த விஷ்ணு வடிவம் கிடைத்துள்ளது. பிஜோல்யா இறைவியின் திருத்தோற்றத்தை மனதில் வாங்கிக்கொண்டு திருச்செந்துறை இறைவியைப் பார்த்தால் வியப்பு மேலிடுகிறது. ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டுகளில் காஷ்மீரில் மிகுதியாகவும் இராஜஸ்தானில் ஓரளவும் புகழ் பெற்று விளங்கிய வைணவ வழிபாட்டு முறையைச் சேர்ந்த அபூர்வமான இறைவடிவமொன்று தமிழகத்தின் தென்பகுதியில் காவிரிக் கரையில் ஒதுக்கமாய் அமைந்துள்ள கற்றளியொன்றின் கோபுர நிலையில் இடம்பெற்றுள்ளதன் அதிசயத்தை என்னவென்று சொல்வது? வைகுந்தரின் வடிவங்கள் பலவாய்க் கிடைத்த போதிலும் அவரது தேவியான சக்தி சதுஷ்காவின் திருமேனி இந்தியா முழுவதிற்குமாய் இராஜஸ்தானில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இப்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் தென்பகுதியில் இவ்வடிவம் அறிமுகமாகிறது. இராஜஸ்தான் இறைவியுடன் ஒப்பிடுகையில் மிகச்சில வேறுபாடுகளுடன் மட்டும் காணப்பெறும் இந்த அரிய இறைத்தோற்றம் திருச்செந்துறையில் இடம்பெற்ற வரலாற்றுப் பின்னணியையும் தமிழகத்துச் சமய வரலாற்றில் சக்தி சதுஷ்கா வழிபாடு இடம் பெற்றிருந்ததா என்பதையும் ஆராய முனைந்த நிலையில் இரண்டு இலக்கியச் சான்றுகள் எங்களுக்குக் கிடைத்தன. திருமாலின் நால்வகை வியூகம் பரிபாடலின் மூன்றாம் பாடலில் கடுவன் இள எயினரால் பாடப்பட்டுள்ளது {7} செங்கட் காரி கருங்கண் வெள்ளை பொன்கட் பச்சை பைங்கண்மால் இவ்வரிகளுக்கு உரையாக சிவந்த கண்களையுடைய வாசுதேவனே கரிய கண்களையுடைய சங்கருணனே சிவந்த உடம்பினையுடைய பிரத்யும்னனே பசிய உடலுடைய அநிருத்தனே - நால்வகை வியூகம் கூறியவாறு என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. பரிபாடலில் காணப்படும் இந்நால்வகை வியூகக் குறிப்பு வைகுந்த சதுர் மூர்த்தியை குறிப்பதாகும். சங்க இலக்கியங்களுள் ஒன்றாக க் கருதப்படும் பரிபாடல் காலத்திலேயே நால்வகை வியூகக் கருத்தும் வைகுந்த சதுர்மூர்த்தி வடிவமும் தமிழகத்தில் அறிமுகமாகியிருந்த நிலையை இதனால் உணர முடிகிறது. திருச்சந்த விருத்தத்தில் திருமழிசைபிரானும் இந்நால்வகை வியூகத்தை குறிப்பிடுகிறார். பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம் போலும் நீர்மை பொற்புடைத் தடத்துவண்டு விண்குலாம் நிலநீர்மை என்றிவை நிறைந்த காலம் நான்குமாய் இவ்வரிகள் வைகுந்த நாராயணரைக் குறிப்பிடுவதால் திருமழிசைபிரான் காலத்திலும் நால்வகை வியூகக் கருத்தும் வைகுந்த சதுர்மூர்த்தி வடிவமும் தமிழகத்தினர்க்குத் தெரிந்ததாய் இருந்த து என்பதில் ஐயமில்லை. இவ்வியூகக் கருத்து தமிழகத் திருக்கோயில்களில் இறைவடிவமாய் அமைக்கப்பட்டிருந்ததா என்பதற்கு இதுவரை தடயங்கள் கிடைக்கவில்ல. டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் இது குறித்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. (குறிப்பு - முனைவர் கலைக்கோவன் அவர்களால் இத்தனை விரிவான ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த அரிய சிற்பம் இன்று நவநாகரீக பெயிண்ட் பூச்சிற்கு ஆளாகி மிக கோரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரியது. இச்சிற்பத்தின் இன்றைய நிலையை இக்கட்டுரையில் காணலாம்).this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |