http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 9

இதழ் 9
[ மார்ச் 15 - ஏப்ரல் 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

மீண்டுகொண்டிருக்கும் அரிய பெட்டகம்
முப்பெரும் விழா நிகழ்வுகள் - 2
அழகாகுமா?
பழுவூர் - 2
நெடுங்களத்தில் புதிய கல்வெட்டுகள்
கல்வெட்டாய்வு - 7
பாடியில் ஒரு பாடல் பெற்ற தலம்
In The Name Of a Ghost!
Gopalakrishna Bharati
சங்கச்சாரல் - 8
இதழ் எண். 9 > கலையும் ஆய்வும்
கல்வெட்டாய்வு - 7
மா. இலாவண்யா
சென்ற இதழ்களில் கல்வெட்டில் வரும் செய்தியினை எப்படிப் படித்துத் தெரிந்துகொள்வதெனப் பார்த்தோம். இக்கட்டுரையில் கல்வெட்டில் வரும் மன்னனின் புகழைக் கூறும் மெய்க்கீர்த்தியிலிருந்து அம்மன்னனைப் பற்றியும், மன்னனின் போர் வெற்றிகள் பற்றியும், அப்போர்கள் எந்தெந்த ஆண்டுகள் நிகழ்ந்தன என்பது பற்றியும் எவ்வாறு தெரிந்து கொள்வதெனப் பார்ப்போம்.

மெய்க்கீர்த்தி மன்னனின் புகழைக் கூறுவது. ஆனால் அம்மன்னனின் கல்வெட்டுகளில் வரும் மெய்க்கீர்த்தியெல்லாம் ஒன்று போலவே இருக்குமா அல்லது வித்தியாசங்கள் காணப்படுமா என்று கேட்டால் வித்தியாசங்கள் இருக்கும் என்பதுதான் விடையாக இருக்கும். எவ்வகையில் வித்தியாசப்படும்? மன்னனின் எந்த ஆட்சியாண்டில் கல்வெட்டு பொறிக்கப்படுகிறதோ, அந்த ஆட்சியாண்டு வரை அம்மன்னன் பெற்ற போர் வெற்றிகள் அக்கல்வெட்டில் காணப்படும். உதாரணமாக ஒரு மன்னன் தனது எட்டாம் ஆட்சியாண்டில் ஒரு போர் செய்து வெற்றிபெற்றால் அந்த வெற்றி அவனது மூன்றாம் ஆட்சியாண்டில் வெட்டப் பெற்ற கல்வெட்டில் இடம் பெறுவது சாத்தியமில்லையல்லவா!

இராஜேந்திரனின் மூன்றாம் ஆட்சியாண்டு முதல் பல கல்வெட்டுகள் இராஜராஜீஸ்வரம் கோயிலில் உள்ளன. அவற்றிலிருந்து இராஜேந்திரனின் மெய்கீர்த்தியை இப்பொழுது ஆராயலாம்.

கோயில் விமானத்தின் தெற்குச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டுத் தொடக்கம்.

"ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேஸரிவம்மரான உடையார் ஸ்ரீராஜெந்திரசோழதேவர்க்கு யாண்டு மூன்றாவது வரை உடையார் ஸ்ரீராஜராஜதேவர் திருத்தமக்கையார் வல்லவரையர் வந்தியத்தேவர் மஹாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார்"


இக்கல்வெட்டில் இராஜேந்திரர் மெய்க்கீர்த்தி எதுவுமில்லாமல் கோப்பரகேஸரிவம்மரான உடையார் ஸ்ரீராஜேந்திரசோழதேவர் என்றுதான் குறிக்கப்படுகிறார்.

அதே கோயில் விமானத்தில் உள்ள இராஜேந்திரனின் ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு மெய்க்கீர்த்தி கொண்டு விளங்குகிறது.

1) "ஸ்வஸ்தி ஸ்ரீ திரு மந்நி வளர விருநிலமடந்தையும் போர்ச்சயப் பாவையுஞ்சீர்த்தநிச் செல்வியுந்தந் பெருந்தேவியராகி யின்புற நெடுதியலூழியுளிடைதுறைநாடுந்தொடர்வனவெலிப்படர் வனவாசியுஞ்சுள்ளிச்சூழ்மதிட் கொள்ளிப்பாக்கையும் நண்ணற்கருமுரண் மண்ணைக்கடகமும் பொருதடரீழத்தரைசர் தமுடியு மாங்கவர் தேவியரோங்கெழில் முடியுமுந்நவர் பக்கல் தெந்நவர் வைத்த சுந்தரமுடியும் இந்திரனாரமும் தெண்டிரை ஈழமண்டலமுழுவதும் எறிபடைக்கேரளர் முறைமையிற்சூடுங்குலதநமாகிய பலர் புகழ் முடியுஞ்செங்கதிர் மாலையுஞ்சஞ்கதிர் வேலைத்தொல்பெருங்காவல் பலபழந்தீவுமாப்பொருதண்டாற்கொண்ட கோப்பரகேஸரிவம்மரான உடையார் ஸ்ரீராஜேந்திரசோழதேவர்க்கு யாண்டு ஆறாவது"

மெய்க்கீர்த்தி விளக்கம்: வளங்கள் பெருக நிலமடந்தையும், ஜயதேவியும், சீர் அதாவது புகழ் நல்கும் செல்வியும் அவரின் பெருந்தேவியர் அதாவது இராணிகளாக, இடைதுறைநாடு, வனங்களை அரணாய் கொண்ட வனவாசி, சுள்ளிமரங்கள் மதில் போல் அமையப்பெற்ற கொள்ளிப்பாக்கை, நண்ணுவதற்கு அதாவது நெருங்குவதற்கு அரியதாகிய மண்ணைக்கடகம், ஈழத்தரசனின் மணிமுடி, அந்த ஈழ மன்னனின் தேவியின் அழகுபொருந்திய முடி, தென்னவர் - தெந்திசைமன்னர் அந்த ஈழ அரசனிடம் கொடுத்த சுந்தர முடி மற்றும் இந்திர ஹாரம், தெள்ளிய நீர் கொண்ட கடல் நடுவில் அமைந்த ஈழமண்டலம் முழுவதும், அம்பெய்தும் கேரளர் தரித்த பலர் புகழும் முடி, ஆதவனின் மாலை, பல பழந் தீவுகள், இவற்றையெல்லாம் தன் ஆட்சியின் கீழ் கொணர்ந்த கோப்பரகேசரிவம்மரான ஸ்ரீ ராஜேந்திரசோழதேவர்.

பாருங்கள் மூன்றாம் ஆட்சிக் கல்வெட்டிற்கும் ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை. இதிலிருந்து மேலேயுள்ள கல்வெட்டில் பட்டியலிடப்பெற்றிருக்கும் போர்கள் இராஜேந்திரனின் மூன்றாம் ஆட்சியாண்டிலிருந்து ஆறாம் ஆட்சியாண்டிற்குள் நிகழ்ந்திருப்பது தெளிவாகிறதல்லவா!

இராஜேந்திரனின் பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இன்னும் சற்று வித்தியாசமாகக் காணப்படுகிறது. முந்தைய கல்வெட்டில் "பலபழந்தீவு மாப்பொரு தண்டாற்கொண்ட" என்று பழந்தீவுகளுடன் முடிவடையும் போர் வெற்றிப் பட்டியல் பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மேலும் தொடர்கிறது.

"பலபழந்தீவுஞ்செருவிற்சினவியிபத்தொருகாலரைசிகளை கட்ட பரசுராமன் மேவருஞ்சாந்திமத்தீவரண் கருதியிருத்திய செம்பொற்றிருத்தகு முடியும் பயங்கொடு பழி மிக முயங்கியில் முதுகிட்டொளித்த சயசிங்கன் அளப்பெரும் புகழொடு பீடியலிரட்டபாடி ஏழரை இலக்கமும் நவநெதிக்குலப்பெருமலைகளும் மாப்பொருதண்டாற்கொண்ட கோப்பரகேஸரிவம்மரான உடையார் ஸ்ரீராஜேந்திரசோழதேவர்க்கு யாண்டு பத்தாவது"

கோபம் கொண்டு சினந்து இருபத்தொரு அரசர்களைக் கட்டிய பரசுராமன் சாந்திமத்தீவின் அரண் அதாவது புகமுடியாத கோட்டையைக் கருதி அங்கே வைத்த செம்பொன்முடியும்; பயம் கொண்ட, பழிதீர்க்கவேண்டும் என்று வஞ்சம் கொண்டு முதுகுகாட்டி ஓடி முயங்கியில் ஒளிந்து கொண்ட ஜயசிங்கனிடமிருந்து, அளக்கவியலாத புகழ் பெருக இரட்டபாடியின் ஏழரை லட்சம் தீவுகளையும்; நவநிதிகளையும் கொண்ட பெருமலைகளையும் தனது ஆட்சியின் கீழ் கொணர்ந்த ராஜெந்திரசோழத்தேவர் என்று மேலும் மூன்று போர் வெற்றிகள் இந்தப் பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன.

அக்கோயிலின் தெற்குச்சுவரில் உள்ள இராஜேந்திரரின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டோ மேலும் பல போர் வெற்றிகளைப் பட்டியலிடுகிறது. அக்கல்வெட்டில் மெய்க்கீர்த்திமட்டுமே பன்னிரண்டு வரிகளில் இடம்பெற்றுள்ளது.

"நவநெதிக்குலப்பெருமலைகளும் மாப்பொரு தண்டாற்கொண்ட" என்று முடிவடையும் பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் உள்ள மெய்க்கீர்த்தி, பத்தொன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் கீழ்கண்டவாறு தொடர்கிறது.

"4) நவநெதிக்குலப்பெருமலைக

5) ளும் விக்கிரமவீரர் சக்கரகோட்டமும் ............ல்லை மதுரமண்டலமும் காமிடை வளநாமணைக்கொணையும் வெஞ்சினவீரர் பஞ்சப்பள்ளியும் பாசடைப்பழனமாசுணிதேசமும் அயர்வில்வண்கீர்த்தி ஆதிநகரவையில்

6) சந்திரன்றொல் குலத்திந்திரதனை . . . . . துக்கிளையொடும் பிடித்துப்பல தனத்தொடு நிறை குலதனக்குவையும் கிட்டருஞ்செறிமிணை ஒட்டவிஷையமும் பூசுரர் செர் நற்கொசலைநாடும் தன்மபாலனைவெம்முனையழித்து வண்டுறைசொலைத்தண்ட

7) புத்தியும் இரணசூரனை முரணுகத்தாக்கித் . . . . . . . த்தித்தக்கணலாடமும் கொவிந்தசந்தன் மாவிழிந்திடத் தங்காதசாரல் வங்காளதேசமும் தொடுகழற்சங்குவொட்டல் மயிபாலனை வெஞ்சமர்விளாகத்தஞ்சுவித்தருளியொண்டிறல் யானையும் பென்தி

8) . . . . .. . . [நி]த்திலநெடுங்கடலுத்திரலாடமும் வெறிமலர்த்தீர்த்தத்தெறிபுனல்க்கங்கையும் அலைகடல் நடுவுட்பல கலஞ்செலுத்திச்சங்கிரராமவிசையொத்துங்கபன்மனாகிய கடாரத்தரைசனை வாகயம் பொரு

9) . . . . .. . . . . . க்கரியொடுமகப்படுத்துரிமையில் பிறக்கிய பெருனெதிப்பிறக்கமும் ஆர்த்தவனகனகர் பொர்த்தொழில்வாசலில் விச்சாதிரத்தொரணமும் மொய்த்தொளிர்புனை மணிப்பதவமும் கனமணிக்கதவமும் நிறைசீர் விசையமும் துறை

10) . . . . . . .. . ந்னையும் வன்மலையூரெயிற்றொன்மலையூரும் ஆழ்கடலகழ்சூழ் மாயிருடிங்கமும் கலங்கா வல்வினை இலங்காசொகமும் காப்புறுநிறைபுனல் மாப்பப்பாளமும் காவலம்புரிசை மெவிலிம்பங்கமும் விளைப்பந்தூறுடை வளைப்ப

11) . . . . [று]ம் கலைத்தக்கொர் புகழ் தலைத்தக்கொலமும் திதமாவல்வினை மாதமாலிங்கமும் கலாமுதிர்க்கடுந்திறல் இலாமுரிதெசமும் தெனக்கவார்பொழில் மானக்கவாரமும் தொடுகடல்க்காவல்க்கடுமுரட்கடாரமும் [மா]

12) ப்பொருதண்டாற்கொண்ட கோப்பரகேஸரிபன்மரான உடையார் ஸ்ரீராஜேந்திரசோழதேவர்க்கி யாண்டு யகூ ஆவது (பத்தொன்பதாவது) நாள் இருநூற்று நாற்பத்திரண்டினால்


இக்கல்வெட்டிலிருந்து சக்கரக்கோட்டம், மதுரமண்டலம், நாமணைக்கோணை, பஞ்சப்பள்ளி, மாசுணிதேசம், ஒட்டவிஷையம், கோசலைநாடு, தண்டபுத்தி, தக்கணலாடம், வங்காளதேசம், உத்திரலாடம், கங்கை, கடாரம், விஜயம், மலையூர், மாயிருடிங்கம், இலங்காசோகம், மாப்பப்பாளம், மேவிலிம்பங்கம், வளைப்பந்தூறு, தலைத்தக்கோலம், மாதமாலிங்கம், இலாமுரிதேசம், மானக்கவாரம் என்று பல தேசங்களையும் வெற்றிகொண்ட செய்தி தெரியவருகிறது. எத்தனை வீரமும் போர்த்திறனும் பெற்ற மன்னனாய் அவன் விளங்கினான் என்பதும் புலனாகிறது.

மெய்க்கீர்த்தியின் மூலமாக நாம் மன்னனின் போர்வெற்றிகள் மட்டுமல்லாது, அக்காலத்தில் விளங்கிய நாடுகளின் பெயர்களையும் தெரிந்துகொள்கிறோம். இப்படி நமக்குப் பல அரிய செய்திகளை வழங்கும் மெய்க்கீர்த்தி என்ற ஒன்றை கல்வெட்டில் பொறிக்கவேண்டுமென்று சிந்தித்து அதனை முதல்முறையாக செயலாக்கிய மாமன்னர் முதலாம் இராஜராஜதேவர்க்கு நாம் நன்றி செலுத்துவோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள கல்வெட்டினைப் படித்து உள்ளீட்டுப்பகுதியில் இடவும்.

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.