http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 9

இதழ் 9
[ மார்ச் 15 - ஏப்ரல் 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

மீண்டுகொண்டிருக்கும் அரிய பெட்டகம்
முப்பெரும் விழா நிகழ்வுகள் - 2
அழகாகுமா?
பழுவூர் - 2
நெடுங்களத்தில் புதிய கல்வெட்டுகள்
கல்வெட்டாய்வு - 7
பாடியில் ஒரு பாடல் பெற்ற தலம்
In The Name Of a Ghost!
Gopalakrishna Bharati
சங்கச்சாரல் - 8
இதழ் எண். 9 > கலைக்கோவன் பக்கம்
அழகாகுமா?
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி, 'அறிக அறிவியல்' இதழ் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய். தவத்திரு குன்றக்குடி அடிகளாரால் தொடங்கப்பெற்றுத் தொடர்ந்து வெளிவரும் தமிழ் அறிவியல் இதழான இதன் ஆசிரியர் முனைவர் மி. நோயல். இவ்விதழ் தரமான அறிவியல் தமிழ்க் கட்டுரைகளை வெளியிட்டுவருகிறது. அண்மைக் காலமாக இவ்விதழில் அறிவியளாலர் திரு. நெல்லை சு. முத்து, 'அறிவியல் வரலாறு' என்ற தலைப்பில் எழுதிவரிகிறார். ஸ்ர்ஹரிக்கோட்டாவில் பணியாற்றும் திரு. முத்துவின் இக்கட்டுரையைத் தொடர்ந்து படித்து வருகிறேன். ஓர் அறிவியலாளர் வரலாற்றுக்குள் நுழைந்திருக்கிறார் என்ற மகிழ்வில் தொடக்கநிலைக் கட்டுரைப் பகுதிகளில் என் பார்வையில் பட்ட கருத்துப் பிழைகளையும் தரவுக்குறைவான நிலைகளையும் பொருட்படுத்தவில்லை. ஒரு தொடர்க் கட்டுரையில் அனைத்துத் தரவுகளையும் பதிவுசெய்ய வாய்ப்பமையாமல் இருக்கலாம் எனக் கருதியே வாளாவிருந்தேன். ஆனால், டிசம்பர் '04 இதழில், 'சோழர் கால அறிவியல்' என்ற தலைப்பில் அவர் எழுதியிருந்த பகுதி என்னைப் பெரிதும் கவலைக்குள்ளாக்கியது.

தகுதி சான்ற சோழர் கால அறிவியல் தரவுகள் அக்கட்டுரைப் பகுதியில் இல்லாமையுடன், பிழையான தகவல்களும் இருந்தன. திரு. முத்து எனக்கு அறிமுகமான அறிவியலாளர் என்பதாலும் அறிவியல் தமிழ் அரங்குகள் சிலவற்றில் நாங்கள் சந்தித்து அளவளாவியிருப்பதாலும் அறிக அறிவியல் இதழை நான் மிக மதிப்பதாலும் அவ்விதழின் ஆசிரியர் திரு. மி. நோயலுக்கு எழுதியிருந்தேன். (திரு. நெல்லை சு. முத்துவின் முகவரி என்னிடம் இல்லாமையாலேயே அவருக்கு நேரிடையாக எழுதக்கூடவில்லை.) திரு. மி. நோயலும் நானும் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ்த்துறைப் பாடத்திட்டக்குழுவில் உறுப்பினர்களாக இருந்திருக்கிறோம். அறிவியல் தமிழ் அரங்குகளில் சந்தித்திருக்கிறோம். அவர் என் இனிய நண்பர். டிசம்பர் '04 இதழில் அச்சுப் பிழைகளும் நிறைய இருந்தமையால், அதையும் சுட்டி, கட்டுரையின் குறைகளையும் சுட்டி மிகுந்த நட்புணர்வுடன் திரு. நோயலுக்கு எழுதியிருந்தேன்.

மார்ச்சு '05 அறிக அறிவியல் இதழில் என் கடிதத்திற்கு திரு. முத்து மறுமொழி தந்திருக்கிறார். முடியுமானால் படித்துப்பார். அவ்விதழில் சுருக்கப்பட்ட நிலையில் என் கடிதமும் வெளியாகியுள்ளது. நான் சுட்டியிருந்த குறைகளின் நோக்கமறியாது, அவர் தரவுகள் எத்தனைப் பிழையானவை என்பதை உணராமல், மடலை மிக மேலோட்டமாக அணுகிய நிலையில், ஒரு கட்டுரை ஆசிரியருக்குரிய பொறுப்புகளிலிருந்து வழுவி எழுதப்பட்ட மறுமொழி அது. 'நான் இன்னின்னார் கட்டுரைகளிலிருந்து எடுத்தாண்டுள்ளேன். அத்தரவுகள் பற்றி அய்யமெனில் அவர்களிடமே விவாதித்துக்கொள்க' என்று ஓர் அறிவியலாளர் மறுமொழி தந்தால், அவருடைய ஆய்வுப் புலமையைப் பற்றி எத்தகு கருத்துக் கொள்ளமுடியும்?

அறிக அறிவியல் போன்ற தரமான இதழ்களில் எழுதும்போது, ஒவ்வொரு கட்டுரையாளரும், தாம் எடுத்தாளும் தரவுகள் உண்மையானவைதானா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டியது தலையாய கடமையல்லவா? தரவுகளைப் பெறப் பயன்படுத்தும் கட்டுரைகள் தகுதியானவைதானா, அவற்றை எழுதியிருப்பவர்கள் துறை சார்ந்த வல்லுநர்கள்தானா என்று கண்டறிந்து பின்னரே தரவுத்தொகுப்பு செய்தல் அடிப்படை ஆய்வுநெறி. அப்படித் தொகுக்கப்படும் தரவுகளைக்கூட உரிய இடங்களில் அடிக்குறிப்புகள் தந்து, அத்தரவுகள் யாருடைய உழைப்பில் விளைந்தவை என்பதைச் சுட்ட வேண்டும். அவ்வாறு செய்யாமல் ஏதோ தாமே கண்டறிந்தவை போல் தரவுகளைக் கோத்துக் கட்டுரையாக்குவதும், அத்தரவுகள் தவறானவை என்று சுட்டப்படும்போது, அவை என்னுடையவை அல்ல, இன்னொருவருடையவை என்று ஒதுங்கிக்கொள்வதும் பொறுப்புடைய அறிவியலாளருக்கு அழகாகுமா?

அறிக அறிவியல் மார்ச்சு இதழிலும் திரு. முத்துவின் தொடர் வெளியாகியுள்ளது. தலைப்பே, 'தமிழக அறிவியல் இருண்டகாலம்' என்று ஒளியின்றி உள்ளது. இக்கட்டுரைப் பகுதியில், 'தமிழகத்தில் தொடங்கிய நாயக்கர் காலம் (கி.பி.1200 - 1600) வேற்று மொழி மன்னர்கள் ஆண்ட காலம். இந்தக் காலகட்டத்தில் அறிவியல் செய்திகள் இல்லை' என்று திரு. முத்து குறிப்பிட்டுள்ளார் (ப.15). தமிழ்நாட்டு வரலாறு பற்றிய அடிப்படை அறிவு உள்ளவர்களுக்குக்கூடத் தமிழ்நாட்டைப் பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் ஆண்டவர்கள் சோழர்களும் பாண்டியர்களும் என்பது தெரியும். கி.பி. 1279 வரை தமிழ்நாட்டில் சோழர்கள் ஆட்சி இருந்தது (தி.வை.சதாசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் சரித்திரம், ப. 454). பாண்டியர் ஆட்சியும் தலையெடுத்திருந்தது. இப்பாண்டியர் ஆட்சி, சுல்தானியர் நுழைவால் மதுரையில் ஆட்சிப் பொறுப்பிழந்தாலும், 1362 வரை தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன (என். சேதுராமன், பாண்டியர் வரலாறு, ப. 170). கி.பி. 1306-1375 வரை வடதமிழ்நாட்டின் சில பகுதிகளைச் சம்புவரையர்கள் ஆண்டனர் (இல. தியாகராஜன், சம்புவரையர்கள் வரலாறு). கி.பி. 1371ல் கம்பண உடையார் மதுரையிலிருந்த முகமதியர் ஆட்சியை விலக்கிய தகவலைத் திருக்கோளக்குடிக் கல்வெட்டுத் தருகிறது. பின் விஜயநகர அரசர்களின் ஆட்சியின் கீழ்த் தமிழ்நாடு இருந்தது.

நாயக்கர் ஆட்சி கி.பி. 1529ல் தான் தொடங்குகிறது. இது பதினெட்டாம் நூற்றாண்டின் முதற்பகுதிவரை தொடர்ந்தது (ஆர். சத்தியநாத ஐயர், மதுரை நாயக்கர் வரலாறு). உண்மைநிலை இப்படியிருக்க, திரு. முத்து, பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நாயக்கர்களைத் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து, முடிசூட்டி, பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் அவர்களை வெளியேற வைத்திருப்பது எத்தனை விநோதம் பார்! இத்தகு விநோதங்களை வரலாறு அறிந்தவர்கள் சுட்டிக்காட்டினால், பிழையுணர்ந்து ஏற்றுக்கொள்வதே பெருந்தன்மை. உரிய திருத்தங்களைக் கட்டுரையின் அடுத்த பகுதியில் வெளியிடுவது தகுதிசான்ற ஆய்வாளருக்கு அழகு. திரு. முத்துவின் மார்ச்சு மறுமொழி, இவற்றையெல்லாம் அவரிடம் எதிர்பார்ப்பது நியாயமன்று என்பதை உறுதிபடுத்துகிறது.

'நாயக்கர் காலத்தில் அறிவியல் செய்திகள் இல்லை' எனும் தரவு இவ்வறிவியலாளர் கருத்தாக அறிக அறிவியலில் வெளியாகியுள்ளது. நாயக்கர் காலத்தில் அறிவியல் செய்திகள் இல்லை என்று முடிவுகொள்ள திரு. முத்து செய்த ஆய்வுகள் எவை? நாயக்கர் காலக் கட்டுமானங்களை ஆராய்ந்தாரா? நாயக்கர் காலக் கல்வெட்டுகளைப் படித்தறிந்தாரா? அக்காலகட்டஞ் சேர்ந்த வெளிநாட்டுப் பயணிகள், எழுத்தாளர்கள், கிறித்துவத் துறவிகள் ஆகியோர்தம் குறிப்புரைகளையாவது தேடிப் படித்தாரா? நாம் அறியோம். ஆனால் வாருணி, இவற்றுள் ஒன்றையேனும் அவர் செய்திருந்தால் இத்தகு தவறான தகவலை அறிக அறிவியல் இதழில் தந்திருக்கமாட்டார்.

நாயக்கர் காலத்தில்தான் தமிழ்நாடெங்கும் பல கோட்டைகள் கட்டப்பட்டன. புகழ்வாய்ந்த மதுரை திருமலைநாயக்கர் அரண்மனை, சிராப்பள்ளி மங்கம்மாள் அரசவைக் கூடம் ஆகியன நாயக்கர் காலக் கட்டுமானப் பொறியியல் தரம் காட்ட இன்றும் நிலைத்திருப்பவை. முனைவர் வெ. வேதாசலம் திருமலைநாயக்கர் அரண்மனையின் கட்டுமான உத்திகள், கட்டப்பட்ட தொழில்நுட்பம் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். நாயக்கர் கால நில அளவைகள், சிற்பிகளின் அளவுகோல்கள் கிடைத்துள்ளன. ஹொய்சளர், நாயக்கர் கால மருத்துவம் பற்றி அறியத் திருவரங்கம் திருவானைக்காவல் கல்வெட்டுகள் உதவுகின்றன. அவர்தம் கால உலோகவியல் செய்திகள் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணக்கிடைக்கின்றன. நாயக்கர் கால ஓவியங்களும் சுதைப்பூச்சு முறைகளும் வேதியியலில் அவர்கள் பெற்றிருந்த திறம் காட்டுகின்றன. இவற்றையெல்லாம் ஆராய்ந்து கால நிரலான இந்த மண்ணின் அறிவியல் திறத்தை முறையாகப் பதிவு செய்வதை விடுத்து, இக்காலகட்டத்தில் அறிவியல் செய்திகளே இல்லை என்று ஓர் அறிவியலாளரான திரு. முத்துவே எழுதுவது, அதுவும், 'அறிக அறிவியல்' என்று முழங்கும் ஓர் அறிவியல் இதழில் எழுதுவது சரிதானா?

வாருணி, உண்மைகள் வெளிப்பட்டு உரிய முறையில் பதிவாகவேண்டும் என்ற ஒரே கருத்துடந்தான், நான் படிக்கநேரும் கட்டுரைகளில் பிழைகளென என் அநுபவம் உணர்த்துவனவற்றைச் சுட்டிக்காட்டுகிறேன். ஆனால் கட்டுரையாளர்களுள் பலர் இத்தகு சுட்டல்கள் கண்டதுமே வருந்துகிறார்கள். சிலர் சினவயப்படுகிறார்கள். ஒரு சிலர் பொல்லாங்கு பேசியும் பகைமை பாராட்டியும் மகிழ்கின்றனர். இதற்கெல்லாம் தயங்கி உள்ளதை உள்ளவாறு கூறுவதை நிறுத்திவிடுதல் சரியன்று என்பதை நான் உணர்ந்துள்ளேன். 'கற்க கசடறக் கற்க கற்றபின் நிற்க அதற்குத் தக' என்பதும், 'பொய்ம்மை இகழ்' என்பதும் நம் பாட்டன்களின் கூற்றுகள்.

அன்புடன்,
இரா.கலைக்கோவன்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.