http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 9
இதழ் 9 [ மார்ச் 15 - ஏப்ரல் 14, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
உரை ஆற்றியவர்: திரு. ம. இராமச்சந்திரன், 'வரலாறு' இணையத்தள ஆசிரியர்க்குழு உறுப்பினர் இங்கு வருகை தந்து எங்கள் குழுவை கௌரவித்திருக்கும் அனைத்து அறிஞர் பெருமக்களுக்கும் எங்கள் வணக்கத்தைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். வரலாறு.காம் என்ற இணையத்தளம் உருவானது ஒரு சுவாரசியமான நிகழ்வு. முனைவர் கலைக்கோவன் கூறியதுபோல பொன்னியின்செல்வன் என்கிற நாவல் எங்களை எப்படி எல்லாம் இணைத்திருக்கிறது! இந்த குழு ஆரம்பித்த பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் இருந்தோம். அதுவரை சந்தித்ததில்லை. ஒரு இரண்டு வருடங்கள் முன்னால் எங்களை ஒருவருக்கொருவர் யாரென்றே தெரியாது என்பதை நினைத்துப் பார்க்கவே எங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. பொதுவாகவே வெளிநாட்டில் இருக்கும்போதுதான் நம் தாய்நாட்டைப் ப்ற்றிய ஒரு சிந்தனையும் தமிழின் மேல் ஒரு காதலும், தமிழ்ப் புத்தகங்கள் படிக்கக் கிடைக்காதா, தமிழ் படிக்க மாட்டோமா, ஏதாவது பழைய ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் - ஒரு இரண்டு வருடம் முன்பு வெளியனாதை எடுத்து வைத்துக்கொண்டு-ஆசையாகப் படித்துக் கொண்டிருப்போம். இப்பொழுது இந்த இணையம் என்கிற ஒரு விஷயம் நன்றாக இணைக்கிறது. உலகத்தின் தென்துருவிலிருந்து வடதுருவம் வரை எல்லோரையும் இணைக்கிறது. அப்பொழுதெல்லாம் வரலாறு என்றாலே எங்களுக்கு எல்லாம் பொன்னியின்செல்வன் என்கிற ஒன்றுதான் தெரியும். வரலாறு என்று எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் கதையில் வருபவைதான். உண்மையான கதை எது வரலாறு எது என்று பிரித்துப் பார்த்து உணர முடிகின்ற அளவு கூட எங்களுக்கு அப்பொழுது அறிவு விசாலம் இல்லை. அப்படி இருக்கையில், இதைப் பற்றி எல்லாம் கருத்து பரிமாறிக் கொள்ள எந்தக் குழுவும் இல்லாத பொழுது ஒரு குழுவை நாமே ஆரம்பித்தால் என்ன என்று ஒரு உணர்வு தோன்ற இரண்டு வருடங்கள் முன்பு யாஹூவில் (அதில் எந்த ஒரு தலைப்பில் வேண்டுமானாலும் தலைப்பை பரிமாறி கொள்ளலாம்) உருவான குழுதான் பொன்னியின்செல்வனைப் குழு). அதில் முதலில் பார்த்தோமானால் பெரும்பாலும், 'நந்தினி யார்?', 'நதினி யாருக்குப் பிறந்தவள்?', 'ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?' இப்படி எல்லாம்தான் பேசிக்கொண்டே இருப்போம். அப்பொழுது எங்களுக்குக் கிடைத்த ஒரு நல்முத்து போல் வந்தவர்தான் கோகுல் அவர்கள். வரலாறு பற்றி அவருக்குக் கிடைத்த புத்தகங்கள் எல்லாம் படித்து, அதை எல்லாம் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளூம் ஒரு நல்ல நோக்கும் இருந்து பல பணிக்கு இடையிலும் எல்லாவற்றையும் பொறுமையாக இரவு பகல் பாராமல் அவர் எழுதுவார். In fact, பலர் சொல்லி இருக்கிறார்கள், 'எப்படி இந்த மனிதர் இவ்வளவு எழுதுகிறார்?', 'இத்தனை ஆர்வமும் இத்தனை உறசாகத்தோடும் எப்படி இவரால் முடிகிறது?'. அவர் எழுதிய விஷயங்களைப் படிக்குமுன் நமக்கெல்லாம் இத்தனை பரிமாணங்கள் ஒரு சின்ன விஷயத்தில் இருக்க முடியும் என்று கூறத்தோன்றாது. அத்தனை விஷயங்களை எழுதினார். அப்பொழுதுதான் 'இந்த நாவல் நம்மை இவ்வளவு பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த நாவலில் இருக்கும் இடங்களை எல்லாம் நாம் சென்று பார்த்தால் என்ன!' என்று ஒரு எண்ணம் தோன்றியது. அப்பொழுது, எங்களுக்கு யாரைப் போய்ப் பார்ப்பது, இவ்விடங்கள் எங்கே இருக்கின்றன, பழையாறை எங்கே இருக்கிறது, நந்திபுரம் என்றால் எங்கே இருக்கிறது என்றெல்லாம் எங்களுக்கு அப்பொழுது ஒன்றும் தெரியாது. அப்பொழுது இவை எல்லாம் அட்லாண்டிஸ் ஏதோ போன்ற ஒரு இடம் எங்களுக்கு... எங்கே இருக்கிறது என்று யாருக்குத் தெரியும். அப்படி இருக்கையில், 'இப்படி எல்லாம் போகலாம்' என்று ஒரு திட்டத்தை இந்தியன் எக்ஸ்ப்ரச்சில் ஒருவர் எழுதினார். இதற்காக இந்த பயணத்திற்கு வர விருப்பம் இருப்பவர்கள் கடற்கரையில் சந்திப்பதாக் இருக்கிறோம், சந்தித்து எப்படிப் போகலாம் என்று முடிவு செய்யப்போகிறோம் என்பதைக்குறிப்பிட்டார். அப்பொழுது கல்கி ஆசிரியர் திரு. சீதா ரவி அங்கு வந்து, அவர் மூலமாகத்தான் எங்களுக்கு தேவமணி ரஃபேல் அவர்களின் அறிமுகம் கிடைத்து, அவர் திக்குத் தெரியாது இருந்த எங்களுக்கு ஒரு கலங்கரை விளக்கத்தைக் காட்டியது போல முனைவர் கலைக்கோவனிடம் அனுப்பி வைத்தார். அவர் மூலமாக எங்களுக்குத் தெரிந்தவர்தான் சுந்தர் பரத்வாஜ் சார். "எடுத்த ஒடன நாம நேர போய்ட முடியாதுல்ல. ஒருஒரு கடலாதானே போக முடியும். எடுத்த ஒடனே வெறும் பயணத்துக்குப் போறோம் அப்டீன்ன ஒடனே ஒரு interaction இருக்கணும் இல்லையா..." அப்படி ஒரு ஏணிப்படியாக எங்களை, ஒன்றுமே இல்லாத எங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே எடுத்துச் செல்ல உதவியாக இருந்தவர் சுந்தர் பரத்வாஜ். அவர் மூலமாக முதலில் இந்த யாத்திரைக்கு நாங்கள் ஆரம்பித்தோம். அப்பொழுதுதான் இந்த வரலாறு...நிஜ வரலாறு... என்பது கதையை விட பன்மடங்கு சுவாரசியமானது என்ற விஷயம் தெரிந்தது. (அரங்கத்தில் சிரிப்பு & கைதட்டல்) கதையில் இருப்பதை விட மிக நிஜ சுவாரசியங்கள் எத்தனையோ இருக்கின்றன. இந்த நிஜ வரலாறை எடுத்துச் சொல்வதில் எத்தனை கடிதமானது, எத்தனை உழைப்பு தேவைப் படுகிறது, எத்தனை அறிய வேண்டி இருக்கிறது....நேற்று கூட சொன்னார் (முனைவர். கலைக்கோவனை சுட்டிக்காட்டி). ஒரு விஷயம், ஒரு உண்மை தெரியவேண்டுமானால் கதை தெரியவேண்டி இருக்கிறது, கல்வெட்டுச் செய்திகள் தெரியவேண்டி இருக்கிறது, இலக்கியங்களில் பரிச்சயம் இருக்க வேண்டி இருக்கிறது..!! "ஒரு problem இருந்தால் அதை எப்படி solve பண்றது அப்டீங்கறதுக்கு இவ்ளோ skillset தேவைப்படுது." இப்படி இருக்கையில் நாங்கள் என்ன கேள்வி கேட்டாலும்.. அவருக்கு இருக்கும் நேரத்தில், அவரது பார்வைநேரம் வேறு, அவர் எழுத வேண்டும், அவர் வரலாறுக்காக செய்யவேண்டிய நேரம் ஒதுக்க வேண்டும்... நாங்கள் எந்த நேரம் தொலைப்பேசியில் பேசினாலும் சரி, நேரில் வந்தாலும் சரி, வீட்டிலோ அவரது அலுவலகத்திலோ எப்பொழுதுமே சரி. இவரை சந்தித்தால் போதும், ஒரு மூன்று மணி நேரமானாலும் ஐந்து மணி நேரமானாலும் பேசிக்கொண்டுதான் இருப்போம். நாங்கள் பேசிக்கொண்டு இருப்போம் என்று கூட சொல்ல முடியாது. கேள்வி கேட்டுக்கொண்டே இருப்போம், அவரிடம் இருந்து பதில் வந்து கொண்டே இருக்கும். இப்படியே, கற்க ஆரம்பித்தோம். எங்களுக்கு அதிகம் தெரிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை, ஏதோ எப்படி ஒரு ஆனா, ஆவன்னா போடுவது என்பது எங்களுக்குத் தெரிந்து இருக்கிறது. எந்த ஒரு பிரிவை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆய்வாளர்கள் அந்த புத்தகங்கள் எழுதி விடுவார்கள். அல்லது அந்த புத்தகங்களைப் பார்த்தால் அதைப் படிப்பதற்கும் ஒரு நிலையில் இருக்க வேண்டி இருக்கிறது. ஆனால் இப்பொழுது ஒன்றுமே அறியாத ஒருவர் எப்படி இதை எல்லாம் புரிந்து கொண்டு படிப்படியாக எப்படி இதை எல்லாம் தெரிந்து கொள்ள முடியும்! ஓர் ஆய்வாளர்க்கு இறங்கி ஒன்றுமே அறியாதவனைப்போல் தன்னை பாவித்துக் கொண்டு அதை எழுதுவது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால் இப்பொழுது நாங்கள் கற்றுக் கொள்ளும் போதே எப்படி கற்றுக்கொள்கிறோம், என்ன தெரிந்து கொள்கிறோம், ஒரு விஷயத்தை எப்படி அணுகவேண்டும் என்று கற்கிறோமோ அதையே பதிவு செய்து விட்டால் இந்த விஷயம் மிகவும் சுலபமாகிவுடும். அதனால் நாங்கள் கற்றுக் கொள்வதை-ஒரு கட்டிடக்கலையைப் பற்றியோ, ஒரு கல்வெட்டு பற்றியோ, ஒரு சிற்பத்தைப் பற்றியோ, ஒரு iconography பற்றியோ தெரிந்து கொள்வதை அவ்வாறு தெரிந்துகொள்ளும் ஒரு மாணவனாக அப்படியே பதிவு செய்தால், தினமும் டைரி எழுதுவதைப் போல பதிவு செய்தால் அது அனைவருக்கும், இந்த உலகத்திற்கே... இதன் மீது ஆர்வம் இருப்பவர்கள் எத்தனையோ பேரைக் காண்கிறோம். எங்கள் பொன்னியின்செல்வன் குழுமத்தில் உலகம் முழுவதும் ஒரு 700 மக்கள் இருக்கிறார்கள். இந்த 700 பேரில் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு எல்லாம் எப்படி அறிமுகப்படுத்துவது! எங்களுக்கு தெய்வாதீனமாக இவர்களின் (முனைவர் கலைக்கோவன், முனைவர் நளினி, முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் ஆகியவர்களைச் சுட்டிக்காட்டி) ஆதரவும் இருக்கிறது, நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் கேள்வி கேட்டுக்கொள்ளும் சௌகர்யம் இருக்கிறது. அப்படி இல்லாதவர்களை எப்படி நாங்கள் அடைவது என்று எண்ணிய போதுதான், நாங்கள் கற்றுக் கொள்ளும்போதே அப்படியே அதைப் பதிவு செய்யலாம் என்ற நோக்கோடு பிறந்ததுதான் இந்த வரலாறு.காம். இந்த வரலாறு.காம் ஆகஸ்ட் 15ஆம் தேதி 2004ஆம் வருடம் (ஆறுமாதங்கள் முன்பு) வெளியிட்டோம். வெளியிட்ட பொழுது எங்களுக்கு எல்லாம் பயம்தான். ஏனேன்றால் அதற்குமுன் எழுதியதில்லை. எங்களுக்குத் தெரிந்ததும் குறைவு. இருந்தாலும் எங்களுக்கு எல்லா விதங்களிலும் அவர் உற்சாகம் அளித்து எப்படி எல்லாம் எழுதலாம், எப்படி எல்லாம் எழுதலாம் என்று என்று ஊக்குவித்து, நாங்கள் எழுதுவதை சரிபார்த்து இவை அத்தனையும் செய்து அவருக்கு இருக்கும் குறைந்த நேரத்தில் எங்களை மேலும் மேலும் உற்சாகமூட்டி இன்று ஆறு மாதத்துக்குள் கிட்டத்திட்ட 105 கட்டுரைகள் எங்கள் இணைய தளத்தில் வெளியாகி இருக்கிறது. இப்பொழுது நாங்கள் ஆளுக்கொரு பிரிவைப் பிரித்துக் கொண்டு, கட்டடக்கலையைப் பற்றி ஒருவரும், கல்வெட்டு ஆய்வு பற்றி ஒருவரும், கதைகளின் மூலமாக கல்வெட்டுச் செய்திகளையும் சரித்திர உண்மைகளையும் அதற்குள் பிணைத்து எழுதிக்கொண்டு இருக்கிறோம். இதைத் தவிர அறிஞர்களின் கட்டுரைகளும் எங்கள் இணையதளத்தில் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இது எங்கள் இணைய தளத்தின் ஒரு பரிமாணம். அடுத்தது எப்பொழுதுமே Arts, and Science இரண்டு பிரிவாகத்தான் நாம் பாக்கறது. Artsசும் scienceஉம் ரெண்டும் ஒன்னாவே நாம எபபவுமே நாம பார்க்கறதில்ல. But, ஒரு artஐ scientificஆ, இப்போ technologyயும் நல்ல விஷயங்கள் எத்தனையோ வருது. அத நாம வந்து ஒரு artஐப் பராமரிக்கவோ இல்ல மீட்டுருவாகக்வோ எப்படி நாம உபயோகிக்கலாம் அப்படீன்னு ஒரு நோக்கமும் எங்களோட இணையதளத்துக்கு உண்டு. அதற்கான முதல் முயற்சியாக ஓவிய மீட்டுருவாகத்தைப் பற்றி எங்கள் குழுவின் கோகுல் பேசுவார் பின்பு. மொத்தமாக, சரியாகச் சொல்ல வேண்டுமானால் இப்பொழுது ஒரு மாணவர்களாக நாங்கள் படிப்பதை, தெரிந்து கொள்வதைப் பதிவுசெய்வதுதான் எங்களின் நோக்கம். இது மேலும் நிச்சயம் தொடரும், நிச்சயம் மேலும் பல ஆய்வுகள் செய்வோம் என்று... ஏன்னா ஆர்வம் உள்ளவர்களும் எவ்வளவோபேர் இருக்கிறார்கள். விஷயம் அறிந்தவர்களும் தங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குச் சொல்வதில் எந்த தயக்கமும் காட்டுவதில்லை. முனைவர். கலைக்கோவனாக இருந்தாலும் சரி, முனைவர். பாலுவாக இருந்தாலும் சரி, முனைவர். ராஜவேலு சாராக இருந்தாலும் சரி, யாரைக் கேட்டாலும், எங்களின் எந்த கேள்விக்கும் எந்த தயக்கமும் இன்றியும், எந்த உதவி கேட்டாலும் எப்படி எந்த நேரத்தில் கேட்டாலும் அவர்கள் சிணுங்கியதோ பதில் கூறாமல் விட்டதோ இல்லவே இல்லை. எப்பொழுது கேட்டாலும் உதவி செய்யவும் மக்கள் இருக்கிறார்கள். தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்களும் இருக்கிறார்கள். எங்கள் இணையத்தளம் ஒரு பாலமாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம். நன்றி.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |