http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 108

இதழ் 108
[ ஜூன் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

வணிகர்கள்
Kudumiyanmalai - 2
பண்டைய கட்டுமானங்களைப் பாதுகாத்த மேலப்பாதி திருக்கோயில்
வரலாற்றின் பார்வையில்.. நியமம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
தேடலில் தெறித்தவை - 14
குடவாயில் மாடக்கோயில்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 5
ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே - 4
செழியனின் நற்கொற்கை
இதழ் எண். 108 > கலையும் ஆய்வும்
வரலாற்றின் பார்வையில்.. நியமம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
கோகுல் சேஷாத்ரி
திருச்சியிலிருந்து கல்லணை மார்க்கமாக தஞ்சைக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே சுமார் 1 மைல் தொலைவில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள சிற்றூர் நியமம் ஆகும். அப்பர் பெருமானால் திருப்புறம்பியம் திருத்தாண்டகத்தில் வைப்புத் தலமாகக் நியமம் குறிக்கப்பிடப்படுகிறது (திருமுறை 6.13.4)

இவ்வூர் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுக்களுள் காலத்தால் முற்பட்டது முத்தரைய மன்னரான சுவரன் மாறனின் கல்வெட்டாகும். இம்மன்னரின் சாதனைகளை விளக்கும் கல்வெட்டு நியமத்தில் பிடாரிக்கு இவர் அமைத்த மஹாகாளத்துப் பிடாரியார் எனும் கோயில் பற்றியும் பேசுகிறது. காலமாற்றத்தில் இத்திருக்கோயில் அழிந்துவிட இக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட அக்கோயிலின் தூண்கள் மட்டும் செந்தலை சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு எவ்வாறோ இடம் பெயர்ந்துள்ளன.

தற்போது நியமத்தில் காணப்படும் ஒரே பழமையான திருக்கோயில் ஐராவதேஸ்வரர் திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் தற்போது முத்தரையர் கல்வெட்டுக்கள் ஒன்றுகூடக் காணக் கிடைக்கவில்லை. கிடைக்கும் கல்வெட்டுக்களுள் பழமையானது முற்சோழ மன்னரான முதலாம் ஆதித்தரின் கல்வெட்டாகும் (பொது நூற்றாண்டு 9).
இத்திருக்கோயிலின் கட்டுமானம் மற்றும் கல்வெட்டுக்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

கட்டுமானக் கூறுகள்

வெளி மண்டபம், கோபுரம், உள்மண்டபம், முகமண்டபம், உபதிருமுன்கள் என்று பல பிற்காலக் கட்டுமானங்களைக் கொண்டமைந்துள்ள கோயில் வளாகத்தில் இறைவன் கருவறையை உள்ளடக்கிய விமானம் மட்டுமே தொன்மையான கட்டுமானமாக உள்ளது. கிழக்குப் பார்வையாக அமைந்துள்ள இவ்விமானம் இரு தள தூய நாகர வகையினதாகும்.


விமானம் - மேற்குப்புறம்


விமானத் தாங்குதளம் உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகள் தழுவிய கண்டத் தொகுதி, பட்டிகை உள்ளிட்ட உறுப்புக்களுடன் பாதபந்த வகையினதாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வுறுப்புக்களுள் உபானம் பல இடங்களில் மண்ணில் புதைந்துள்ளது.


தாங்குதளம் மற்றும் வேதிகைத் தொகுதியும் குறுஞ்சிற்பங்களும்


தாங்குதளத்திற்கு மேல் வேதிகைத்தொகுதி அமைந்துள்ளது. இத்தொகுதியில் பாதங்களுடன் கூடிய வேதிக்கண்டம், எழுச்சி பெற்ற தாமரை இதழ்களுடன் அமைந்த ஊர்த்துவ பத்மவரி மற்றும் கம்பு காணக்கிடைக்கின்றன. தாங்குதளக் கண்டத்தையும் வேதிக்கண்டத்தையும் ஊடறுத்துச் செல்லும் அரைத்தூண் பாதங்களில் சிற்றுருவச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

வேதிகைக்கு மேல் எழும் ஆதிதளச் சுவர் முன்று பகுதிகளாக பத்திப்பிரிப்புக்கு ஆட்பட்டுள்ளது. இவற்றுள் சாலைப்பத்தி மட்டும் தாய்ச்சுவரிலிருந்து சிறிதளவு பிதுக்கம் பெற்றுள்ளது. இச்சாலைப்பத்தியில் ஆழமான அகழ்வு பெறாமல் தேவக்கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கர்ண-சாலைப் பத்திகளுக்கிடையே அமைந்துள்ள தாய்ச்சுவர் பஞ்சரம் முதலான அலங்கார உறுப்புக்கள் பெறாமல் வெறுமையாக அமைந்துள்ளது.

மூன்று பத்திகளும் சம உயரத்தில் அமைந்த பிரம்மகாந்த அரைத்தூண்களின் அணைப்பைப் பெற்றுள்ளன. எளிமையான அலங்காரங்களுடன் அமைந்துள்ள இத்தூண்கள் தூணுடல், மாலைத்தொங்கல், கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை மற்றும் வீரகண்டம் முதலான உறுப்புக்களுடன் விளங்குகின்றன. சில அரைத்தூண்களில் மட்டும் மாலைத்தொங்கல் பகுதியில் அலங்கரிப்புக்கள் செதுக்கப் பெற்றுள்ளன.

தூண்களுக்கு மேல் குளவுடன் கூடிய தரங்கப் போதிகைக் கரங்கள் உத்திரம் தாங்குகின்றன.

சாலைப்பத்தியில் அமைந்துள்ள கோட்டம் பிரம்மகாந்த அரைத் தூண்களினால் அணைக்கப்பட்டுள்ளது. இத்தூண்களின் உறுப்புக்களும் அலங்காரங்களும் பத்தி அரைத்தூண்களை ஒட்டியே அமைந்துள்ளன. எனினும் இவற்றின் உயரமும் அகலமும் கோட்டத்தின் அளவை ஒட்டிக் குறைக்கப்பட்டுள்ளன. கோட்டத்தின் மேமைந்துள்ள மகரதோரணம் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் மட்டும் செதுக்கப்பட்டுள்ளது.


மேற்குக் கோட்டம் மற்றும் அணைவுத் தூண்கள்


போதிகைக் கரங்கள் தாங்கும் கூரை, உத்திரம், வாஜனம் வலபி முதலான உறுப்புக்களுடன் காணப்படுகிறது. வலபியில் பூத வரிசை அமைந்துள்ளது. கூரையின் நீட்சியாக அமைந்துள்ள கபோதம் பத்திகளின் ஓரங்களிலும் சாலைப்பத்தியின் நடுவிலும் கொடிக்கருக்கு அலங்கரிப்புக்கள் பெற்றுள்ளது. கபோத விளிம்பில் தொடர்ந்து சந்திரமண்டலம் காட்டப்பட்டுள்ளது.

கர்ணப்பத்தியில் அருகருகே அமைந்துள்ள இரண்டு நேத்ர நாசிகைகளும் சாலைப்பத்தியில் சற்றே விலகி அமைந்துள்ள இரு நாசிகைகளும் அணி செய்கின்றன. நாசிகைகளுக்குள் காட்டப்பட்டுள்ள தலைகள் அல்லது உருவங்களை சரிவர அடையாளம் காண இயலவில்லை.

கபோதத்திற்குமேல் ஆதிதள முடிவைக் குறிப்பிடும் பூமிதேசம் அமைந்துள்ளது. இவற்றில் உள்ள யாளிகள் இரண்டிரண்டாக ஒன்றையொன்று பார்க்குமாறு அமைந்துள்ளன.

முதற்தள ஆர உறுப்புக்களாக கர்ணப் பத்திக்கு மேல் கர்ணக் கூடுகளும் சாலைப் பத்திக்கு மேல் சாலையும் இடம் பெற்றுள்ளன. இடைப்படும் ஆரச்சுவரில் ஒரே ஒரு நாசிகை. ஆர உறுப்புக்கள் அனைத்தும் ஒரு வேதிகைத் தொகுதிக்கு மேல் அமைந்துள்ளன. இத்தொகுதி பாதங்களுடன் கூடிய வேதிக்கண்டம், தாமரை வரி மற்றும் துணைக்கம்புடன் காட்சி தருகின்றது. சுவற்றில் முதற்தளத்திற்கு மேல் அமைந்துள்ள இரண்டாவது தளம் மற்றும் கிரீவம் சிகரம் ஸ்தூபி ஆகியவை கடுமையான சுதை மற்றும் வண்ணப்பூச்சிற்கு ஆளாகித் தமது ஆயிரமாண்டுகால அழகை இழந்து பரிதாபமாகக் காட்சியளிக்கிறன. இரண்டாவது தளம் முன்னிழுக்கப்பட்ட சாலைப்பத்தியைப் பெற்றுள்ளது. கர்ணப்பத்தியின் கபோதப் பகுதியில் ஒரு நாசிகையும் சாலைப்பத்தியின் கபோதத்தில் இரண்டு நாசிகைகளும் அமைந்துள்ளன. இரண்டாவது தளத்தின் கூரையுறுப்புக்களுக்கு மேல் ஆர உறுப்புக்களைக் காணமுடியவில்லை.


விமானம் - வடமேற்கு


நாகரமாக அமைந்த கிரீவப்பகுதியின் அருகில் நாற்புறங்களிலும் நந்திகள். கிரீவத்தில் கோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோட்டத்தின் முன் பிற்காலச் சுதைச் சிற்பங்கள் அமர்ந்துள்ளன. சிகரமும் நாகர வடிவில் அமைந்துள்ளது. இவற்றில் அமைந்துள்ள மகாநாசிகள் பிற்காலச் சுதைவடிவங்களாகும்.

சிற்பங்கள்

நியமம் திருக்கோயிலில் தாங்குதளக் கண்டபாதங்கள் மற்றும் வேதிக்கண்ட பாதங்களில் சிற்றுருவச் சிற்பங்களும் தேவக் கோட்டங்களில் நின்ற நிலையில் தெய்வங்களும் மகர தோரணங்களில் குறுஞ்சிற்பங்களும் சாலைக் கோட்டங்களில் அமர்ந்த நிலையில் தெய்வங்களும் கபோதக் கூடுகளில் கந்தர்வர் தலைகளும் கர்ணக் கூடுகளிலும் நாசிக் கோட்டங்களிலும் நின்ற நிலையில் மலரேந்திய ஆடவர்களும் காணப்படுகிறார்கள். வலபியில் பூதங்கள் வரிசையாக இடம்பெற பூமிதேசத்தில் யாளிகளும் மகரங்களும் காணக்கிடைக்கின்றன.

விமானத்தில் அமைந்துள்ள கண்ட வேதி பாதங்களுள் ஒருசிலவற்றில் சிற்பங்கள் செதுக்கப்படவில்லை. செதுக்கப்பட்ட பாதங்களுள் ஒரு சில வண்ணப்பூச்சினால் அடையாளம் காண இயலாத அளவிற்குச் சிதைந்துள்ளன. காணக்கிடைக்கும் சிற்பங்களுள் ஆடல் மகளிரையும் அவரது ஆடலுக்கு இசைகூட்டும் இசைவாணர்களையும் காணமுடிகிறது. தெய்வத் திருவுருவங்களுள் தேவியின் திருவிளையாடல்கள், கண்ணனின் சாகசங்கள், ஓரிரு இராமாயணக் காட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தேவக்கோட்டத் தெய்வங்களுள் மேற்கெழுந்தருளியிருக்கும் திருமாலும் வடகோட்டத்துப் பிரமனும் பொது நூற்றாண்டு ஒன்பதைச் சேர்ந்த சிற்பங்கள் எனலாம். தெற்கே காணப்படும் ஆலமர் அண்ணல் பிற்காலத்தவர்.

வடகோட்டத்திற்கு மேல் செதுக்கப்பெற்றுள்ள மகர தோரண மகரங்கள் இரண்டு பக்கங்களிலும் வாய்பிளந்திருக்க அவற்றின்மேல் ஆடவர்கள் அமர்ந்துள்ளனர். மகரங்களின் வாயிலிருந்து வெளிப்படும் உருவங்களை அடையாளம் காண இயலவில்லை.

சாலைக்கோட்டத் தெய்வங்களுள் தெற்கே சிவபெருமானும் வடக்கே பிரமனும் மேற்கே திருமாலும் அமர்ந்துள்ளனர். தெற்குச் சாலைத் தெய்வமான சிவபெருமானின் மீதே பிற்காலக் கட்டுமானங்களை கட்டியுள்ளனர் கோயிலார்.


சிதைக்கப்பட்ட சிவபெருமான் சிற்பம்


முற்சோழர் காலத்தில் விமானத்தைச் சுற்றிலும் பரிவார தெய்வங்கள் இருந்தமை கல்வெட்டுக்களின் வழிப் புலனாகின்றது. இப்பரிவார தெய்வங்களை இன்றைய தேதியில் கோயில் வளாகத்தில் காணமுடியவில்லை.

கல்வெட்டுச் செய்திகள்

இத்திருக்கோயிலிலிருந்து பல கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டுள்ளன என்றாலும் அவற்றுள் ஒன்றுகூட முத்தரையர் கல்வெட்டாக இல்லை.


பல கல்வெட்டுக்கள் அமைந்துள்ள வடபுறத் தாங்குதளத்திற்கருகில் நிற்கவே முடியாத நிலையில் சேறும் சகதியும்


இவற்றுள் காலத்தால் முற்பட்டது விமான வடக்குச் சுவரில் அமைந்த இராஜகேசரிவர்மரின் 24ம் ஆட்சியாண்டு கல்வெட்டாகும் (கல்வெட்டு ஆண்டறிக்கை 1899 - எண்.16). கல்வெட்டமைதி மற்றும் கல்வெட்டுச் செய்தி கொண்டு இம்மன்னரை முதலாம் ஆதித்தராக அடையாளம் காண முடிகிறது. கல்வெட்டின் காலம் பொது ஆண்டு 895.

இக்கல்வெட்டில் மூன்றாம் நந்திவர்மரின் மனைவி அடிகள் கண்டன் மாறன்பாவை ஒரு வருடத்தின் இரண்டு விஷூ நாட்களிலும் இறைவனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் நெய், தயிர், பால் முதலானவற்றை வழங்கவும் 20 அந்தணர்களுக்கு உணவிடவும் வாய்ப்பாக நல்கிய 5 கழஞ்சு பொன் தானம் பதிவாகியுள்ளது. இத்தானத்தை கோயிலார் சார்பில் ஏற்றுக் கொண்டவர் கோயில் பட்டுடையானான ஈஸ்வரகாணி வாமதேவனான திருவேங்கடன் ஆவார். முன்றாம் நந்திவர்மரைப் ‘பல்லவ திலக குடும்பத்தைச் சேர்ந்த’ என்கிற முன்னொட்டுடன் இக்கல்வெட்டு அழைப்பது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டில் இடம்பெறும் பல்லவப் பேரரசியார் கண்டன் மாறம்பாவை திருச்சென்னம்பூண்டி சடைமுடிநாதர் திருக்கோயில் கல்வெட்டு ஒன்றிலும் இடம் பெறுகிறார்.

இரண்டாவது தொன்மையான கல்வெட்டு மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மரின் (அதாவது முதலாம் பராந்தகரின்) 18ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும் (தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 6, எண். 456). காலம் பொது ஆண்டு 925. செம்பியம் மூவேந்த வேளாரின் மனைவியான ஆதிச்ச பிடாரி இத்திருக்கோயில் மகாதேவருக்கு அளித்த நிலத்தானம் பற்றிய தகவலை இக்கல்வெட்டு பகிர்ந்து கொள்கிறது. கல்வெட்டின் சில பகுதிகள் சிதைந்துள்ளன.

இதற்கடுத்தாக பதிவாகியுள்ள கல்வெட்டுக்கள் இரண்டும் முதலாம் இராஜேந்திர சோழரின் 7ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்களாகும். அதாவது பொது ஆண்டு 925க்குப் பிறகு ஏறக்குறைய 94 ஆண்டுகள் கழித்து பொது ஆண்டு 1019ல்தான் அடுத்த கல்வெட்டுக்கள் இடம்பெறுகின்றன. இந்த நீண்ட கால இடைவெளியில் நியமம் கோயிலின் நிகழ்வுகளைப் பதிவாக்கும் கல்வெட்டுக்கள் ஒன்றுகூடக் கிடைக்காதமை வியப்பளிக்கிறது.

இவற்றுள் முதலாவது கல்வெட்டு (கல்வெட்டு ஆண்டறிக்கை 1961-62 - எண்.405) நியமத்தில் இக்காலத்தில் அமைந்திருந்த இராஜேந்திர சோழன் சாலைக்கு அரசரின் பெருந்தரத்து அதிகாரி ஒருவர் கொடுத்த நிலத்தானத்தினை விவரிக்கிறது.

இம்மன்னரின் இரண்டாவது 7ம் ஆட்சியாண்டு கல்வெட்டு (கல்வெட்டு ஆண்டறிக்கை 1961-62 - எண்.404) இத்திருக்கோயிலை ஏய் நாட்டில் ஆற்றுப்பள்ளி நியமத்தில் அமைந்திருந்த திருவீரனீசுவரமாக அடையாளம் காண்கிறது. பாண்டிய குலாசனி வளநாட்டில் ஏய் நாட்டில் அமைந்திருந்த அணைக்கரைப் பெருமானார் திருக்கோயிலின் தேவதானமான வடராயமங்கலத்துச் சபையினர் திருவீரனீசுவரம் திருக்கோயிலில் குடிகொண்டிருக்கும் சண்டீசுவரருக்கு 2 மா நிலம் விற்ற தகவலை இக்கல்வெட்டு பகிர்ந்து கொள்கிறது. நிலத்தைத் தவிர இறைக்காவலாக பத்து காசுகளையும் சபையினரிடமிருந்து வாங்கிக்கொண்ட தேவகன்மிகள், திருக்கோயிலின் சார்பில் இறையையும் குடிமை எனும் வரியையும் அரசாங்கத்துக்கு அளித்து விடுவதாக உறுதியளித்தனர்.

இதற்கடுத்த கல்வெட்டு இராஜகேசரிவர்மரின் 23ம் ஆட்சியாண்டு கல்வெட்டாகும்(கல்வெட்டு ஆண்டறிக்கை 1961-62 - எண்.402) . கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு கல்வெட்டுத் துறையினர் இதன் காலத்தினை பொது நூற்றாண்டு 11 எனக் கணிக்கின்றனர். ஈசுவரன் மாணிக்கன் என்பவர் திருவீரனீசுவரத்து மகாதேவர் கோயிலில் நொந்தா விளக்கேற்ற 90 ஆடுகள் கொடையளித்த செய்தி இதில் காணக்கிடைக்கிறது.

கல்வெட்டுத்துறையால் படியெடுக்கப்பட்டுள்ள இறுதிக் கல்வெட்டு (கல்வெட்டு ஆண்டறிக்கை 1961-62 - எண்.403) ஒரு துண்டுக்கல்வெட்டாகும். இதில் மன்னரின் ஆட்சியாண்டு கிடைக்கவில்லை. எனினும் கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இதன் காலத்தை பொது நூற்றாண்டு 11 எனக் கணிக்கின்றனர்.

ஏய்நாட்டில் ஆற்றுப்பள்ளி நியமத்தில் அமைந்த திருவீரனீசுவரத்து மகாதேவர் திருக்கோயிலுக்காக வடகரைப் பொய்கைநாட்டு தேவதானமான பரமேஸ்வரமங்கலத்துச் சபையினர் 20 காசுகளுக்கு நிலமொன்றினை விற்ற செய்தி இதில் பதிவாகியுள்ளது. இந்த 20 காசுகளை தானமாக அளித்தவர் கிள்ளியூர் நாட்டு அரசங்குடியைச் சேர்ந்த மழபாடிப் பொற்பாவை ஆவார். இவர் யாருடைய மனைவி என்பதை கல்வெட்டு குறிப்பிட்டாலும் அப்பகுதி சிதைந்து விட்டதால் இவரது கணவர் பெயரை அறிமுடியவில்லை. திருவீரனீசுவரத்தில் தைப்பூச நன்னாளில் இறைவன் உலாவருவதற்கு வாய்ப்பாகவே பொற்பாவை இந்த 20 காசுகளை தானமளித்துள்ளார். விற்கப்பட்ட நிலத்தின் வருடாந்திர வரிகளைச் செலுத்தும் பொறுப்பை பரமேஸ்வரமங்கலத்துச் சபையினர் ஏற்றுக்கொண்டனர்.

முடிவுரை

ஆயிரமாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கட்டுமானம் சிற்பம் கல்வெட்டு என்று பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் இப்பழங்கோயில் சமீப வருடங்களில் சகிக்க முடியாத வண்ணப்பூச்சுக்களாலும் கான்கிரீட் கட்டுமானங்களாலும் சிதைக்கப்பட்டிருக்கிறது. அறநிலையத்துறையினரும் கோயிலாரும் பொதுமக்களும் பழங் கட்டுமானங்களின் தன்மையை உணர்ந்து அவற்றின் தன்மையைக் கெடுக்காமல் குடமுழுக்கு போன்ற விழாக்களை மேற்கொள்ள வேண்டும்.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.