http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 9
இதழ் 9 [ மார்ச் 15 - ஏப்ரல் 14, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
பழுவூர்ப் புதையல்கள்
கேரள இளவரசி யார்?
உதயேந்திரம் செப்பேடுகள் குறிக்கும் கேரள இளவரசி இராசாதித்தன் தாயான கோக்கிழானடிகள் இல்லையென்றால் வெறு யார்? இந்தக் கேள்விகான விடையைப் பெற மீண்டும் அன்பில் செப்பேடுகளையே அணுகலாம். உதயேந்திரம் செப்பேடுகள் தராத சில புதிய தகவல்களை அன்பில் செப்பேடுகள் தருகின்றன. "This same king (Parantaka) married the daughter resembling regal glory incarnate of the Kerala king, who was also called paluvettarayar. Like unto victory born of prowess and policy and like the unequalled heaven the outcome of sacrifice and sacrificial gifts, a son named Arichika of unequalled fame was born to these two.""
உதயேந்திரம் செப்பேடுகள் கங்கமன்னன் இரண்டாம் பிருதிவிபதியால் வெளியிடப்பெற்றவை. அதனால் அதில் பராந்தகனின் திருமணம் மட்டும் இடம் பெற்றது. அன்பில் செப்பேடுகள் பராந்தகனின் பேரனும், அரிஞ்சயனின் மகனுமான சுந்தரசோழனால் வெளியிடப்பெற்றதால் மரபுவழி கூறுமிடத்து அரிஞ்சயன் பிறப்பு பற்றியும், அப்பேரரசனது பெற்றோர்கள் பற்றியும் விளக்கமான செய்திகளைத் தந்துள்ளன. திரு. பண்டாரத்தார் அன்பில் செப்பேடுகளின் செய்திகளைத் தவறாகத் தெளிந்துகொண்டு பின்வருமாறு எழுதுகிறார். "பராந்தகனுக்கு மற்றொரு சேரர்குலப் பெண்மணியும் மனைவியாய் இருந்தனள் என்பது அன்பில் செப்பேடுகளால் அறியப்படுகின்றது. அவள், மழநாட்டிலுள்ள பழுவூரில் வாழ்ந்துகொண்டிருந்த கேரள மன்னனாகிய பழுவேட்டரையன் மகள் ஆவாள். அவ்வரசிபாற் பிறந்தவனே அரிஞ்சயன் என்ற அரசகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கதாகும் 14. அன்பில் செப்பேடுகளில் எந்த இடத்திலும் பரந்தகன் இரண்டு சேரப்பெண்களை மணந்து கொண்டதாகக் குறிப்பில்லை. திரு. பண்டாரத்தார், உதயேந்திரம் செப்பேடுகள் குறிக்கும் கேரள இளவரசியை ஒரு மனைவியாகவும், அன்பில் செப்பேடுகள் குறிக்கும் அதே கேரள இளவரசியை இன்னொரு மனைவியாகவும் காட்டுகிறார். இந்தக்குழப்பம் பண்டாரத்தார்க்கு எப்படி நேர்ந்ததென்பது விளங்கவில்லை. உதயேந்திரம் செப்பேடுகளும் அன்பில் செப்பேடுகளும் குறிக்கும் கேரள இளவரசி ஒருவரே. அவர் பழுவேட்டரையர் என்றும் அறியப்பட்ட கேரல அரசரின் திருமகளாவார். இந்தக் கேரள இளவரசியை அடையாளம் காண, திருச்சென்னம் பூண்டிக் கல்வெட்டொன்று உதவுகிறது. 1) ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கொப்பரகேசரி பன்மற்கு யா 2) ண்டு பத்னேழாவது இடையாற்று நாட்டுத் திருசடைமுடி ம 3) காதேவர்க்கு சந்திராதித்தரளவும் ஒரு முழுத்திருவிளக்கினுக்கு பழுவேட்ட 4) ரையர் மகளார் நம்பிராட்டியார் அருமொழி நங்கையார் பரிவாரம் குணவன் 5) சூரதொங்கி வைத்த பொன் பதினாறு கழஞ்சு...15 அ. உதயேந்திரம் செப்பேடு: பராந்தகன் கேரள அரசனின் மகளை மணந்து கொண்டான். ஆ. அன்பில் செப்பேடு: அக்கேரள அரசன் பழுவேட்டரையன் என்றும் அறியப்பட்டான். இ. திருச்சென்னம் பூண்டிக் கல்வெட்டு: பழுவேட்டரையர் மகள் அருள்மொழி நங்கை பராந்தகன் மனைவி. இந்த மூன்று ஆவணங்களையும் இணைத்துப் பார்க்கும் பொது தெளிவான உண்மைகள் புலப்படுகின்றன. பழுவேட்டரையரென்று அழைக்கப்பட்ட கேரள அரசரின் மகளான அருள்மொழி நங்கையைப் பராந்தகன் தன் பதினைந்தாம் ஆட்சியாண்டிற்கு முன்பே மணந்துகொண்டான். இவ்விருவருக்கும் பிறந்தவனே அரிஞ்சய சோழன். உண்மைகள் இவ்வளவு தெளிவாக இருந்தும் இவற்றைத் தம் நூலில் திரு. பண்டாரத்தாரே குறிப்பிட்ட்டிருந்தும், இணைத்துப் பார்க்கத் தவறிய காரணத்தால் அவரால் அருள்மொழி நங்கையை அடையாளம் காணமுடியவில்லை. அப்பெருமாட்டியைப் பராந்தகனின் மற்ற மனைவிமார் பட்டியலில் தள்ளி இருக்கிறார்16. பண்டாரத்தார் கூற்றுப்படி பார்த்தால் பராந்தகன் பாவம், ஒரே பெண்ணை மூன்று முறை மணந்திருக்க வேண்டும். உதயேந்திரம் செபேடுகளும் அன்பில் செப்பேடுகளும் குறிக்கும் கேரள இளவரசி திருச்சென்னம்பூண்டிக் கல்வெட்டில் இடம் பெறும் பழுவேட்டரையர் மகளான அருள்மொழி நங்கையே என்பது தெளீவான நிலையில், பழுவேட்டரையர்களுக்கும் கேரளத்திற்குமுள்ள தொடர்பும் உறுதிப்படுகிறது. திரு. சுந்தரேச வாண்டையார் தம்முடைய பழுவேட்டரையர் என்னும் கட்டுரையில் பல குழப்பமான தகவல்களைத் தருகிறார். அவற்றுள் இரண்டு பழுவேடரையரின் கேரளத் தொடர்பு பற்றியது. i) "பழுவேட்டரையர் சேரர் குலத்தினர் ஆகார். இவர் சேரர்குலச்சோழர்களுக்குச் சம்பந்திமார். அதாவது மகட்கொடைக்கு உரியவர்". ii) "அன்பில் செப்பேட்டின் வடமொழிப் பகுதி கூறுவது கொண்டு பழுவேட்டரையர் சேரர் குலத்தினர் என்பது பொருந்துவதாகாது".17 அன்பில் செப்பேடுகளையே திரு. சுந்தரேசனார் நம்பத் தயாராக இல்லை. ஒன்றை இங்கு நாம் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அன்பிலைச் சேர்ந்த அநிருத்த பிரும்மராயர் என்னும் தன் அமைச்சனுக்குத் திருவழுந்தூரைச் சேஎர்ந்த கருணாகர மங்கலம் என்னும் ஊரைச் சுந்தரசோழன் இறையிலியாகக் கொடையளித்ததைச் சுட்டும் உரிமை ஆவணமே அன்பில் செப்பேடுகள்18. இதை வழங்கியவன் சுந்தரசோழன். தான் வழன்கிய ஒரு செப்பேட்டில் தன் தந்தையைப் பற்றியும், அவருடைய பெற்றோஒர்களைப் பற்றியும் தவறான செய்திகள் வர ஒரு மன்னன் இடம்கொடுப்பானா? அன்பில் செப்பேடுகள் பொய்யுரைக்கின்றனவென்றே வைத்துக்கொண்டாலும், உதயேந்திரம் செப்பேடுகளின் நிலை என்ன? இரண்டு செப்பேடுகளும் கூட்டுச்சேர்ந்து பொய் உரைக்க நேர்ந்த அவசியமென்ன? செப்பேடுகளில் காணப்படும் புகழுரைகளும், மரபு வழியின் தொடக்கம் பற்றீய செய்திகளும் வேண்டுமானால் புனைந்துரையெனக் கொள்ளலாம். ஆனால் தன் தந்தையைப் பற்றியும், அவர் பெற்றோர்கள் பற்றியும் கூட ஒரு மன்னன் தவறாகச் செய்தி தருவான் என்று நினைப்பது நியாயமன்று. திரு. சுந்தரேசனார் பழுவேட்டரையர்கள் சேரர் குலத்தினர் ஆகார் என்பதோடு நில்லாமல், இவர்கள் சேரர் குலச்சோழர்களுக்குச் சம்பந்திமார் என்று வேறு எழுதியுள்ளார். இதன் பொருள் விளங்கவேயில்லை. சேரர் குலச்சோழர்கள் என்பவர்கள் யார்? இதற்கான விளக்கங்கள் அவரது கட்டுரையில் காணப்படவில்லை. பழுவேட்டரையர்கள் சேரர்குலத்தினராகார் என்பதற்கு அவர் தரும் காரணங்களும் சற்றும் பொருந்தாதவை. டாக்டர் பாலாம்பாள், அன்பில் செப்பேடுகள் தவிர, 'சோழரின் வேறெந்தக் கல்வெட்டுகளோ அல்லது செப்புப் பட்டயங்களோ கேரள அரசனான் அபழுவேட்டரையன் மகளை முதலாம் பராந்தகன் மணந்தான் என்ற குறிப்பைத் தருவதில்லை. எனவே பழுவேட்டரையர் சேஎர மரபினருள் ஒரு கிளையினர் எனும் கருத்தை ஏற்பதற்கில்லை' என்கிறார் 19." உதயேந்திரம் செப்பேடுகளையும், திருச்சென்னம் பூண்டிக்கல்வெட்டையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை என்பது இந்த வரியினால் தெளிவாகிறது. இவ்விரு ஆவணங்களையும் அவர் அன்பில் செப்பேடுகளுடன் இணைத்துப் பார்த்திருந்தாரானால் பழுவேட்டரையர்கள் கேரளர்கள் அல்லர் என்ற தம் கருத்தை மாற்ற்க்கொண்டிருக்கக் கூடும். இவர் அன்பில் செப்பேடுகளையே முறையாகப் பார்க்கவில்லை என்படு, 'மழநாட்டிலுள்ள பழுவூரில் வாழ்ந்து கொண்டிருந்த கேரள மன்னனாகிய பழுவேட்டரையர் மகளை முதலாம் பராந்தகன் மணந்துகொண்டார் என்று அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன.'20 என்ற வரியிலிருந்து புலனாகின்றது. அன்பில் செப்பேடு மழநாடு, பழுவூர் இவற்றையெல்லாம் குறிப்பிடவே இல்லை. இவை திரு. பண்டாரத்தாரின் இணைப்பு21. பண்டாரட்தாரின் வரிகளை டாக்டர். பாலாம்பாள் அப்படியே தம் நூலில் சேர்த்துக்கொண்டார். கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றைப் பதிப்பித்த திரு. ஜி. வி. சீனிவாசராவ் பழுவேட்டரையர் மரபுத் தொடக்கம் பற்றீ ஒரு புது விளக்கம் தருகிறார். பராந்தகனின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில் இரவி நீலி என்றொரு சேர இளவரசி திருவொற்றியூரிலுள்ள ஆதிபுரீசுவரர் கோயிலுக்கு விளக்கொன்று எரிக்கப் பொற்கொடை தந்த்திருக்க்ன்றாள் 22, இவள் தந்தையாக விசயராகதேவன் என்ற சேர அரசன் இராசாத்தித சோழனுக்கு உதவிய வெள்ளான் குமரன் போல் பராந்தகனுக்கு மிகவும் உதவியதாகவும் அதனால் மகிழ்ந்த பராந்தகன் இம்மன்னனுக்குப் பழுவுரைத் டஹ்ந்து பழுவேட்டரையர் மரபைத் தொடக்கியதாகவும் எழுதுகிறார். "He (Vijayaraghava Deva) must have taken service under the Chola like the Kerala general Vellankumaran under prince Rajaditya and his help to Parantaka might have been suitably recognized by the king of grant of chiefship over a large tract of land."23 ஆதித்தனின் பத்தாம் ஆட்சியாண்டிலேயே பழுவேடட்ரையன் குமரன் கண்டன் அறிமுகமாகிறார். இருபத்திரண்டாம் ஆட்சியாண்டில் குமரன் மறவனும் பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் கண்டன் அமுதனும் வெளிச்சத்திற்கு வருகின்றனர். இந்நிலையில், ஆதித்தனின் பத்தாம் ஆட்சியாண்டிலேயே பழுவூர் மரபு வரலாற்று வரிகளில் இடம்பெற்றாகிவிட்ட பிறகும், தன்னுடைய இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில், பழுவூர் மரபுக்குப் பராந்தகன் விதை போட்டதாகத் திரு. ராவ் எழுதுவது பிழையாகும். இதே இரவி நீலியையும், வெள்ளான் குமரன் படைத்தலைமையையும், சேர மன்னன் ஸ்தானு ரவி, ஆதித்தன் நட்புறவையும் இணைத்துப் பார்த்த பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் முதலாம் ஆதித்தன் காலத்திலிருந்தே சோழ கேரளத் தொடர்புகள் வலிமை பெற்று விளங்கியதை அழகாய் உணர்ந்து அருமையாய் விளக்கியுள்ளார்.24 சோழ கேரளத் தொடர்புகள் (தொடரும்) அடிக்குறிப்புகள் 14. தி.வை. சடஹசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் வரலாறு, பக். 57 15. S.I.I. Vol. VIII, Ins. No. 520 16. தி.வை. சதாசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் வரலாறு, பக். 57 17. வை. சுந்தரேச வாண்டையார், பழுவேட்டரையர், கட்டுரை, கல்வெட்டுக் கருந்த்தரங்கு, பக். 124. 18. தி. வை. சடஹசிவ பண்டாரத்தார், பிற்காலச்சோழர் வரலாறு, பக். 75. 19. வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், சென்னை, 1981, பக். 10 20. மேற்படி, பக். 20 21. தி. வை. சடஹசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் வரலாறு, பக். 57 22. A.R.E. 169 of 1912 23. S.I.I. Vol. XIII, Introduction. P. Vi 24. K. A. Nilakanta Sastri, The Colas, P 134 and F.N. 63 in P. 139this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |