http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 113

இதழ் 113
[ நவம்பர் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

கண்களும் பார்வைகளும்
Arivar Koil - 3
வன்பார்த்தான் பனங்காட்டுர் திருக்கோயில் - 2
Mutts in Thiruchirappalli District (C.E. 600 - 1300)
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 6
தேடலில் தெறித்தவை - 17
தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர்
ஒரகடம் வாடா மல்லீஸ்வரம்
வீரப்பூந்தொடை விழா
இதழ் எண். 113 > பயணப்பட்டோம்
ஒரகடம் வாடா மல்லீஸ்வரம்
ஜெ. ராம்கி
திருப்போரூர் நெடுஞ்சாலையிலிருந்து இடது புறம் விலகி, குண்டும் குழியுமான பாதையில் இறங்கி, ஏறி நிமிர்ந்து பார்த்தபோது ஒரு வண்ணப்புள்ளி போல் தெரிந்தது அந்தக் கோபுரம். உடல் முழுவதும் பச்சை பசேலென்று புடவையை சுற்றிக்கொண்டு எழுந்து நின்றது போல்ஒரு சிறிய குன்று தென்பட்டது. அதன் மேல் பளிச்சென்ற வண்ணத்தில் சின்னக் கோயில்.ஆறு மாத காலத் தேடல்! வல்லம் தொடங்கி பனைமலை வரை ஒரு மகேந்திர உலா வந்த பின்னர் ஒரு விசித்திரமான எண்ணம் எழுந்தது. முதலில் பல்லவர்களைப் பற்றி உருப்படியாகப் படிப்பது; படித்தபின் மிச்ச சொச்சமிருக்கும் பல்லவர் காலக் கட்டுமானக் கோயில்கள் அனைத்தயும் பார்த்துவிடுவது. மாமல்லபுரம், காஞ்சிபுரம் தொடங்கி திருக்கழுக்குன்றம், திருத்தணி, தக்கோலம், ஒரகடம் என கிடுகிடுவென்று மனதுக்குள் ஒரு வரைபடம் தயாரானது.

ஒரகடம் வாடாமல்லீசுவரம் திருக்கோயிலைப் பற்றி லாங்க்ஹர்ஸ்ட் எழுதிய புத்தகத்தில்தான் முதன்முதலில் படித்தேன். (Pallava Architecture: Early period Albert Henry Longhurst, Government of India, Central Publication Branch, 1930 - Architecture, Pallava). அட? நமக்குத் தெரிந்த சென்னை ஒரகடத்தில் ஒரு பல்லவர்காலக் கட்டுமானக் கோயில் ஒளிந்துகொண்டிருக்கிறதா என்ன? என்று வியப்பேற்பட்டது. மத்தியத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள மற்றொரு புத்தகத்திலும் ஒரகடம் பற்றிய குறிப்பு காணப்படவே இந்தக் கோயில் ‘பார்த்தே ஆகவேண்டிய பல்லவர் திருக்கோயில்கள்’ வரிசையில் சேர்ந்துகொண்டு விட்டது.கான்கீரிட் காடாக மாறிப்போயிருக்கும் சென்னையின் வணிகக் கேந்திரமான ஒரகடத்தின் ஒவ்வொரு மூலையையும் தேடிப் பார்த்து அலுத்து சலித்துப்போன பின்னர்தான் ஒரு விஷயம் புரிந்தது. அதாவது இந்தக் கோயில் அமைந்திருக்கும் ஒரகடம் சென்னைக்குள் அமைந்துள்ள ஒரகடம் அல்ல. செங்கல்பட்டு ஒரகடம்..! அட ஆண்டவா.. என்று தலையிலடித்துக் கொண்டோம்.

சரி. செங்கல்பட்டில் ஒரகடம் எங்கிருக்கிறது என்று தேடினால் அதில் வேறொரு சிக்கல்! திருப்பதியில் மொட்டையும், சீர்காழியில் சுவாமிநாதனும் எப்படியோ அதுபோலத்தான் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரகடம் என்னும் பெயர். எப்படியோ தட்டுத்தடுமாறி கூகுள் வரைபடத்தின் உதவியுடன் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுகுன்றம் போகும் பாதையில் அமைந்துள்ள ஓரகடத்தை கண்டுபிடித்து, ஜிபிஎஸ் சங்கதிகளோடு களத்தில் குதித்தோம். நமது வாகனம் தாம்பரம் -செங்கல்பட்டு வழியாக சுற்றிக்கொண்டு திருக்கழுகுன்றம் போகும் நெடுஞ்சாலையில் 10 கி.மீ பயணித்து, திருப்போரூர் போகும் பாதையில் மாறி, ஒருவழியாக ஒரகடம் வந்து படிகளின்மேல் கால்வைத்து மலையேறியபோது புஸ் புஸ்ஸென்று எக்கச்சக்கமாக மூச்சிரைக்கத் துவங்கிவிட்டது. ஒரு வழியாக மேலேறி அப்பாடா! என்று கோயிலை அடைந்தவுடன் பத்து நிமிடம் சாவகாசமாக அமர்ந்துகொண்டு விட்டோம்.கஜபிருஷ்ட விமானத்துடன் கூடிய திருக்கோயில். பார்த்தவுடன் மாமல்லபுரம் சகாதேவ ரதத்தின் கஜபிருஷ்ட விமானம் ஞாபகம் வந்தது. ஒட்டுமொத்தக் கோயிலையும் பிரித்து மாட்டி ஆதி தளத்திற்கு மேல் பளிச்சென்று பெயிண்ட் அடித்து வைத்திருக்கிறார்கள். ஆதிதளத்தைப் பார்க்கையில் அது பிற்காலக் கட்டுமானமென்பது தெளிவாகவே தெரிந்தது. அதாவது வடிவம் மட்டும் கஜபிருஷ்டம். ஆனால் கட்டுமானம் பல்லவர் காலத்தியது அல்ல. ஒருவேளை பல்லவர் காலத்தில் இருந்த செங்கல் கட்டுமானத்தைப் பின்பற்றி பிற்காலத்தில் இந்தக் கற்றளி எழுப்பப் பட்டிருக்கலாம்.பிற்கால பல்லவர்களின் கட்டிடக் கலைக்கு உதாரணமாக இருக்கும் கோயில்களின் வரிசையில் முன்னிற்பது திருத்தணி வீரட்டனேஸ்வரர் கோயில் மற்றும் தக்கோலம் ஜலநாதீசுவரம் திருக்கோயில். இவற்றில் பல்லவர் காலக் கட்டுமானங்கள் மற்றும் சிற்பங்கள் நல்நிலையில் உள்ளன. ஆனால் இந்த வரிசையில் ஒரகடத்தைச் சேர்க்க முடியவில்லை. ஏனெனில் கட்டுமானம் முற்றிலுமாக மாறியுள்ளது.

திருக்கோயில் விமானத்தில் கல்வெட்டுக்கள் எதையும் காணமுடியவில்லை. ஆனால் கோயில் அமைந்துள்ள குன்றின் தென்மேற்குப் பகுதியில் இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுவதை லாங்ஹர்ஸ்ட் குறிப்பிட்டுள்ளார். ஒன்று இராஜகேசரிவர்மருடையது. இரண்டாவது முதலாம் இராஜேந்திர சோழருடையது. இரண்டாவது கல்வெட்டில் உரோகடம் என்கிற பல்லவமல்ல சதுர்வேதி மங்கலத்தில் அமைந்துள்ள திருவாடாமலையார் திருக்கோயிலுக்கு நொந்தா விளக்கெரிக்க ஆடுகள் சில நிவந்தமாகக் கொடுக்கப்பட்ட தகவல் உள்ளது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் பல்லவமல்ல சதுர்வேதி மங்கலம் எனும் பெயர் இப்பகுதியின் தொன்மையை உறுதி செய்கிறது. ஏனெனில் பல்லவ மல்லன் என்பது இரண்டாம் நந்திவர்ம பல்லவரின் பட்டப் பெயர். இறைவன் வாடாமலையார் நாளடைவில் வாடாமல்லீச்சுரராக மருவியுள்ளார்.சின்னக் கோயில்தான். அர்த்த மண்டபத்துடன் கூடிய விமானம். அதற்கு முன்னால் ஒரு அழகான முக மண்டபம். முக மண்படத்தின் உட்பக்க கூரையில் இரண்டு பல்லிகள் ஒன்றையொன்று முத்தமிட்டுக் கொள்வதைப் பார்க்க முடிந்தது. மண்டபத்தை இருபுறங்களிலும் தூண்கள் தாங்கி நிற்கின்றன. லாங்ஹர்ஸ்ட் இம்மண்டபத்தை நாயக்கர் கால மண்டபம் என்கிறார்.

கருவறையில் காட்சியளித்த வாடா மல்லீஸ்வரர், அழுக்கேறிய வெள்ளைத் துண்டும் கொஞ்சம்போல நந்தியாவட்டை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நெற்றி நிறைய விபூதி பூசியபடி எளிமையகக் காட்சி தந்தார். துணைக்கு ஒரு பெரிய ஐந்து தலை வெள்ளி நாக சர்ப்பம். கருவறையில் விளக்கு எதுவும் எரியவில்லை. இராஜேந்திர சோழர் திரும்பி வந்து கேட்டாலும் விளக்கம் சொல்வதற்கு அந்த வட்டாரத்தில் யாருமில்லை. கோயிலுக்கு வருமானம் எதுவுமில்லை. உழவு நொடித்திருக்கிறது. கோயிலைச் சுற்றியிருக்கும் வயல்கள், குடியிருப்புப் பகுதிகளாக மாற ஆரம்பித்திருக்கின்றன.கருவறையை விட்டு வெளியே வந்தால், பிரம்மாண்டமான ஒரு சிவ உருவம் யோக நிலையில் இருக்கிறது. 4 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாம். பெயிண்டெல்லாம் உரிய ஆரம்பித்திருக்கிறது. அதைவிட 1300 வருஷங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயிலின் விமானமே முக்கியமான விஷயம் என்பதால் ஆதிதளச் சுற்றுப்புற சுவர்களைப் பார்க்க ஆரம்பித்தோம்.
விமானம் பலமான தாங்குதளத்தின் மேல் அமைந்திருக்கிறது. 3 அடி அகலமுள்ள கல்லை அழகாக அடுக்கி வைத்து கட்டியிருக்கிறார்கள். சுண்ணாம்பு குழைவு வைத்து கட்டியதற்கான தடமெல்லாம் தெரியவில்லை. தாங்குதளத்தின் மேல் சிறு சிறு கற்களை வைத்துக் கட்டி கட்டுமானம் கூரை வரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. கூரைக்கு மேலுள்ள கட்டுமானம் சுதையால் ஆனது.

விமான ஆதிதளச் சுவற்றில் மூன்று பக்கங்களிலும் தேவகோட்டங்கள். அர்த்த மண்டபத்தில் இரு புறங்களிலும் இரண்டு கோட்டங்கள். ஆக மொத்தம் ஐந்து கோட்டங்கள். கோட்டச் சிற்பங்களும் அவற்றுக்கு மேலமைந்த தோரணங்களும் பிற்காலத்தியவை என்பது கண்கூடு. விமானத்தின் நாற்புறங்களிலும் இரண்டிரண்டாக எட்டு அரைத்தூண்கள். அவற்றுக்கு மேல் கூரைப்பகுதியில் கூடுகள்.

குறுகலான 40 சிமெண்ட் படிகளைத் தாண்டி, மலையிலிருந்து கீழே இறங்கி வந்தால் எதிரே அழகான ஏரி. கோலி குண்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், விளையாடுவதை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்க வந்திருந்தார்கள். பிரதோஷம் தவிர மற்ற நேரத்தில் யாரும் கோயிலுக்கு வரமாட்டார்களாம். திருவிழாவெல்லாம் எதுவும் இங்கே கிடையாது என்றார்கள்.
பக்தர்கள் கூட்டம் வரவில்லையென்றாலும் மலைமேல் தனித்திருக்கும் வாடவே வாடாத மல்லீஸ்வரரை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்று ஏனோ தோன்றியது. this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.