http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 113

இதழ் 113
[ நவம்பர் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

கண்களும் பார்வைகளும்
Arivar Koil - 3
வன்பார்த்தான் பனங்காட்டுர் திருக்கோயில் - 2
Mutts in Thiruchirappalli District (C.E. 600 - 1300)
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 6
தேடலில் தெறித்தவை - 17
தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர்
ஒரகடம் வாடா மல்லீஸ்வரம்
வீரப்பூந்தொடை விழா
இதழ் எண். 113 > கலைக்கோவன் பக்கம்
கண்களும் பார்வைகளும்
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி,

‘பார்க்கும்’, ‘பார்த்திருக்கும்’, ‘பார்த்து’ என்றெல்லாம் பார்வை தொடர்புடைய சொற்களைச் சங்க இலக்கியங்களில் பார்க்க முடிந்தபோதும், ‘பார்வை’யைக் காணமுடியவில்லை. இன்று மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் பார்வை என்ற இந்தச் சொல்லுக்கு, இணையான சொல்லாக, ‘நோக்கு’தான் சங்கக் காட்சிகளில் ஆட்சி செலுத்துகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ‘நோக்கி’ மிளிர, ஏறத்தாழ ஐம்பது இடங்களில் ‘நோக்கு’ நிலைபெற்றுள்ளது. ‘நோக்கு’ தொடர்புடைய சொற்களும் பல்வித ஆளுகை பெற்று இலக்கிய மாட்சியில் மகிழ்ந்துள்ளன.

‘பார்த்து’ என்ற பொருளில் வழங்கும் ‘நோக்கி’ என்ற சொல் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் மட்டும் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளது. பத்துப்பாட்டில் எட்டுப் பாடல்களில் இடம்பெற்றிருந்தபோதும் குறைவான அளவிலேயே பயன்படுத்தப் பட்டிருக்கும் இச்சொல், எட்டுத்தொகை இலக்கியத்தில் கரை காணாக் கடலாய் விரிந்து பரந்துள்ளது. ஓரம்போகியாரின் மருதத்திணையில் பிறந்த அகப்பாடலொன்று, இந்த உலகத்தில் ‘மெய்’ எங்குள்ளது என்று தேடுமாறு போல், தகவுடைமை நோக்குகிறது. காட்சிக்குள் செல்வோமா?



‘காஞ்சி மரத்தின் நிழலில் மருத இளம் பெண்கள் மணலைக் குவித்து உலக்கையால் குற்றியவாறே தம் குடியினர் பெருமை பாடுவர். சிரல் பறவைகளோ, இறால் தின்ற மகிழ்வில் மரக்கிளைகளில் வந்தமரும். மரம் பொருந்திய துறையில் குளிர்ந்த நீர். இத்தகு வளம் நிறைந்த மருத ஊரனே, அறம் அல்லாதவற்றைச் செய்ய விரும்பாத உள்ளம், எப்போதேனும் வழுவி, அது போல் செய்ய விழையுமாயினும் கேள்வியறிவால் அதைத் தடுத்துத் தம் தகுதி நோக்கி தவறற்ற வழிகளிலேயே நினைத்தது முடித்தல் பெரியோர் பண்பாம். நீயும் அவர்களில் ஒருவனே. எனில், பொய் மிடைந்த பேச்சு உன்னிடமிருந்தும் தோன்றுமாயின், தலைவா, உலகத்தில் உண்மைதான் எங்குள்ளது?’ ‘காதலியை கவனமாகப் பார்த்துக் கொள். விரைந்து வந்து மணந்து கொள்வேன்’ எனத் தோழியிடம் கூறி, காதல் களம் நீங்கும் தலைவனை நோக்கித் தோழி பேசுவது போல் அமைந்த பாடல் இது. ‘உன் தகுதி நோக்கியேனும் நினைத்தது முடி’ எனும் தோழியின் வழிகாட்டல், ‘நீயே பொய் கூறினால், இந்த உலகத்தில் உண்மையை நான் எங்கே தேடுவது’ என்ற அலமரல் இரண்டுமே, இந்தப் பாடலின் இலக்கிய ஆளுமையை இமயத்தில் நிறுத்துகின்றன.

கண்களைப் போலவே, நோக்கும், வள்ளுவர் நோக்கில் புதிய பரிமாணங்களைக் கண்டுள்ளது. அவர் எப்போதுமே பொதுமைப் பார்வையுடையவர். அதனால்தான் மக்களின் நோக்கு இரண்டே என்று எளிமைப்படுத்த முடிந்தது. மக்கள் வயிற்றுக்கு வானோக்கியும் வழிநடைக்குக் கோல்நோக்கியும் இருப்பராம். வழிநடை, இங்கு வாழ்க்கைப் பயணமாம் ஒழுகலாறு குறித்தது. மன்னவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது இந்த மண்ணின் முதுமொழிதானே.

நோக்கின் வகை தெரிந்தார்க்கு, நோக்கில் வெளிப்படும் பகைமையும் கேண்மையும் எளிதாய்ப் புலப்படுமாம். காதல் நோக்குகளும் வள்ளுவர் கையாள்கையில் வேறு வடிவம் காட்டுகின்றன. காதலியின் கண்களில் இரண்டு வகையான பார்வைகளைக் காணமுடிகிறதாம், காதலர் சொல்கிறார். ஒரு பார்வை நோய் நோக்காம், பார்த்துவிட்டான் என்றால் பரிதவித்துப் போகும் நெஞ்சு. மற்றொரு பார்வை அந்தப் பரிதவிப்பு போக்கும் மருந்தாம். தழுவிக் குளிரவைக்கும் போலும். அதிர்ஷ்டக்காரர்கள். பார்வையிலேயே நோய் பெற்று, மருத்துவமும் முடிந்துவிடுகிறது.

‘நான் பார்க்கும்போது அவள் நிலம் பார்க்கிறாள். ஆனால், நான் பார்க்காத நேரத்து அவள் பார்த்து என்னைக் களவு கொள்கிறாள்’ இது இன்னொரு தலைவரின் நோக்காய்வு. ‘நோக்கு’ தொல்லைக்கும் ஆளாக்கும் என்கிறார் வள்ளுவர். காதலியை உள்ளத்தே இருத்தியிருந்த காதலன், உள்ளக் காதல் தன் நோக்கில் ஒளிர்ந்திட, அவளை நோக்கினான். அவளோ, ‘ஏன் இப்படி உற்று நோக்குகிறான், வேறொரு பெண்ணின் அழகோடு தன்னை ஒப்பிட்டுப் பாக்கிறானோ’ என்று சினம் கொண்டாள். காய்ந்தாள். நோக்கியவன் நொறுங்கிப்போனான். இதுவும் வள்ளுவர், உளவியல் தொட்டுப் பண்பு மாறுபாடுகளைப் பகிர்ந்து கொள்ளும் இடம்.

‘நோக்கு’ கல்வெட்டுகளிலும் பயின்று வரும் சொல்லாகும். ‘குறித்து’, ‘பார்த்து’, ‘விதிக்கப்படும்’ ‘பாதுகாப்பு’ எனப் பல பொருள்களில் நோக்கு எனும் சொல் கல்வெட்டுகளில் கையாளப்பட்டிருந்தாலும் ‘பார்த்து’ என்ற பொருள் ஆளுகையே பரவலாக உள்ளது. ‘வடக்கு நோக்கி ஓடிய வாய்க்கால்’, ‘கிழக்கு நோக்கிப் பாய்ந்த பெருவாய்க்கால்’ என்று பெரும்பாலும் நீரோடு கால்களின் திசை ஓட்டச் சொல்லாகவே கல்வெட்டுகளில் ‘நோக்கு’ இடம்பெற்றுள்ளது. ‘மேற்கு நோக்கிப் போன பெருவழி’ ‘கிழக்கு நோக்கிய திருவீதி’ எனச் சாலைகள் தொடர்பாகவும் ‘நோக்கு’ ஆளப்பெற்றுள்ளது.



நோக்கு, நோக்காகவே கண்களில் வெளிப்படும் காட்சிகளைத் தமிழ்நாட்டு ஓவியங்களும் சிற்பங்களும் பரவலாகக் கொண்டுள்ளன. பனைமலையீசுவரம் செஞ்சி விழுப்புரம் சாலையில் உள்ள பல்லவர் காலக் கற்றளி. மலைமீது கட்டப்பட்டுள்ள இவ்வழகிய தளியின் வடபுறச் சாலைக் கருவறையில் உமையின் ஓவியம் தெற்குப் பார்வையாய் வரையப்பட்டுள்ளது. பல்லவர் கால ஓவியங்களில் இன்று நம் பார்வைக்கு எஞ்சி நிற்கும் வனப்பான படப்பிடிப்பு இது. எவ்வளவுதான் சொல்தொடுத்துத் தொடர்களாக்கி முயன்றாலும், அந்த ஓவியப்பாவையின் ஒல்காப் பேரெழிலை, முழுமையாகக் காட்டிவிடல் இயலாது. பார்க்க வேண்டும். பல பக்கமிருந்தும் பார்க்கவேண்டும். கண்களைக் குளிர்விக்கும் வண்ணங்களில் காட்சியாகியிருக்கும் உமையின் கண்களே அந்த ஓவியத்தை உயிர்ப்பித்துக் காட்டுகின்றன. இறைவன் ஆடலை இரசித்து நிற்கும் உமையின் கண்கள் இரசனையின் அத்தனை நிலைகளையும் தேக்கி வைத்துள்ளன. கண்கள், தனித்து அழகுடன் அமைந்து முகத்தை எழிற்படுத்துவதுண்டு. முகத்தின் அனைத்து உறுப்புகளும் கண்களோடு இயைந்து அழகின் உச்சம் காட்டுவதும் உண்டு. பனைமலை உமையை இந்த இரண்டு நோக்குகளிலும் இரசித்தல் கூடும், பார்த்தால்.

காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரம் பல்லவ மன்னர் இராஜசிம்மரின் கைவண்ணத்தில் உருவான சாந்தார அங்காலயம். அழிக்க வந்த சளுக்கிய விக்கிரமாதித்தரையே கரைத்து உலுக்கிக் கொடைகள் பெற்றுய்ந்த கச்சிப்பேட்டுப் பெருந்தளி அது. அந்த விமானத்தின் நாற்புறத்துச் சிற்பங்களுமே கண்ணாளர்கள்தான். ஒவ்வொரு சிற்பத்தையும் கண் கொட்டாமல் பாக்கலாம். தமிழ்நாட்டில் ‘கலை’ தன் அத்தனை அழகுகளையும் மொத்தமாய்க் கடைவிரித்திருக்கும் ஒரே கற்றளி இதுதான். தென்திசை அண்ணலாகட்டும், மேற்கிலுள்ள வீணையராகட்டும், வடக்குச் சிவக்குடும்பம் என்று எந்தச் சிற்பத்தின் பக்கலில் நின்று பார்த்தாலும், அந்தச் சிற்பங்களின் உயிர்ப்பு ததும்பும் நோக்கில் நீங்கள் அனைத்தும் இழக்கவேண்டிவரும். குறிப்பாக வடக்கிலுள்ள சிவக்குடும்பம் பேருருவக் காட்சியாக விளைந்துள்ளது. சுதை முற்றிலும் நீக்கப்பட்ட நிலையில் உமையின் கண்கள், சிற்பிகளின் பேராற்றலால், நம்மை ஆட்கொள்ளுமாறு அருளும் அன்பும் பொலியப் படைக்கப்பட்டுள்ளமை கண்கொள்ளாக் காட்சியாகும்.

சிங்கவரம் கொற்றவையின் நாண நகை நோக்கு, குடந்தைக் கீழ்க்கோட்டத் தென்திசை அண்ணலின் இளநகை பொலியும் மென்னோக்கு எனக் கண் நிறைந்த சிற்பங்கள் பல்லவர் பூமியிலும் சோழ மண்ணிலும் தொடர்ந்து விளைந்துள்ளன. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்துச் சோழர் ஓவியக் காட்சியில்தான் எத்தனை விதமான கண்கள்! அந்தச் சாந்தாரத்தில் நாம் மட்டுமா நடக்கிறோம்? நம்மோடு காட்டுயிர்களும் நாட்டுயிர்களும் சேர்ந்தல்லவா உலாவருகின்றன! என்னதான் சொல்லுங்கள், ‘கண்கள் பலவிதம், அவை காட்டும் காட்சிகளும் பலவிதம்’ என்ற சொற்சிலம்பம் எல்லாம் மீறி, நம்மைக் கவர்ந்திழுக்கும் அந்த அவலம் தோய்ந்த கண்கள்,

‘முப்புரம் எரித்த சிவனார்’ ஓவியக்காட்சியில் பதிவாகியுள்ள அந்தக் காரிகையின் கண்கள்! கடவுளே! கண்களின் இத்தனை உணர்வுகள் தூரிகைத் தொடலில் கூடுவதா?

இது எழுதிய கைகள் மானுடக் கைகளா, மகேசன் விரல்களா?

தவித்துப் போகிறோம். உருக்கம் உலுக்கத் துடித்தும் போகிறோம்.

இது, இதுதான் கலையின் மாண்பு.

கூடுதல் காட்சிகள் அடுத்தத் திங்களில்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.