http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 113

இதழ் 113
[ நவம்பர் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

கண்களும் பார்வைகளும்
Arivar Koil - 3
வன்பார்த்தான் பனங்காட்டுர் திருக்கோயில் - 2
Mutts in Thiruchirappalli District (C.E. 600 - 1300)
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 6
தேடலில் தெறித்தவை - 17
தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர்
ஒரகடம் வாடா மல்லீஸ்வரம்
வீரப்பூந்தொடை விழா
இதழ் எண். 113 > கலையும் ஆய்வும்
வன்பார்த்தான் பனங்காட்டுர் திருக்கோயில் - 2
கி.ஸ்ரீதரன்
காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள வன்பார்த்தான் பனங்காட்டூர் எனும் திருப்பனங்காடு திருத்தலத்தைப் பற்றிய சில அறிமுகச் செய்திகளை சென்ற கட்டுரையில் கண்டோம். இக்கட்டுரையில் அதன் தொடர்ச்சியாக இத்தலத்தைப் பற்றிக் கல்வெட்டுக்கள் குறிப்பிடும் செய்திகளை விரிவாக அறிந்து கொள்வோம்.





கல்வெட்டுக்கள் அழிப்பு

இக்கோயில் 1928ஆம் ஆண்டு தேவக்கோட்டையைச் சேர்ந்த பெரி. ஏகப்பச் செட்டியார் குடும்பத்தினரால் திருப்பணி செய்யப்பட்டதை நுழைவு வாயிலில் உள்ள கல்வெட்டால் அறிய முடிகிறது.

இத்திருப்பணியினால் கோயில் தொன்மையான கட்டிடப் பகுதிகள் பலவற்றையும் இழந்ததோடு 1928 ஆண்டிற்கு முன் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களையும் முழுமையாக இழந்து நிற்கிறது. மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுக்களை இதுபோன்று திருப்பணிகளுக்குப் பறிகொடுத்த பழங்கோயில்கள் ஏராளம் ! ஏராளம்! இதுபோன்ற திருப்பணிகளின் வாயிலாகக் பழங்கோயில்களின் சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் கட்டுமானங்களையும் அழிக்கும் கொடுமை இன்று வரையில் எந்தத் தடையுமின்றித் தொடர்கிறது என்பதே உண்மை.

படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களிலிருந்து அறியப்படும் செய்திகள்

இக்கோயிலின் கல்வெட்டுக்கள் 1906 ஆம் ஆண்டு படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுப்பு பின்வரும் மத்திய அரசின் தொல்லியல் அளவீட்டுத் துறை கல்வெட்டு அறிக்கைகளிலும் தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 22லும் காணப்படுகின்றன.

1. ARE Report : 1906 - 233 to 254
2. ARE Report : 1923 - 421
3. ARE Report : 1968 - 69 - 213
4. South Indian Inscriptions No.22 : 233 - 254

இக்கல்வெட்டுக்களின்படி பண்டைய காலத்தில் இவ்வூரில் பனைமரத்தைப் போற்றிப் பாதுகாப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது அரிய செய்தியாகும். அத்துடன் சோழ மன்னர்கள் காலம் தொடங்கி விஜயநகர மன்னர்கள் வரை இக்கோயில் பல்வேறு அரசாங்கங்களால் இத்திருக்கோயில் புரக்கப்பட்டுள்ளது என்பதும் முக்கியமான தரவாக அமைகிறது.

மன்னர்கள்

முதலாம் இராஜேந்திர சோழர் (1043-44), இராஜாதிராஜன் (1049-50), முதலாம் குலோத்துங்க சோழன் (1114-15), இரண்டாம் குலோத்துங்க சோழன் (1142-43) மூன்றாம் இராஜராஜன் (1233-34) ஆகிய சோழமன்னர்களின் கல்வெட்டுக்களையும் விருப்பண்ண உடையார், விருபாக்ஷ உடையார், கம்பண உடையார், தேவராயர், கிருஷ்ணதேவராயர், அச்சுத தேவ மகாராயர் ஆகிய விஜயநகர மன்னர்களின் காலக் கல்வெட்டுக்களையும் இக்கோயிலில் ஒருகாலத்தில் தாங்கி நின்றது.

நாட்டுப்பிரிவு

இத்தலம் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர் கோட்டத்துக் கழுமல நாட்டுத் திருப்பனங்காடு என்றும் இக்கோயில் திருப்பனங்காடு உடையார் கோயில் என்றும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது. பிரம்மதேசம் என்கிற சோழர்காலத் தொன்மை வாய்ந்த தலம் இவ்வூருக்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



இறைவன் பெயர்

இக்கோயிலில் இரண்டு கருவறைகள் உள்ளன. இன்றைய தேதியில் தாலபுரீசுவரர், கிருபாநாதேசுவரர் என இறைவன் அழைக்கப்படுகிறார். கல்வெட்டுக்கள் இவ்வூர் இறைவனை விடையின் மேல் வருவார் என்றும் அடையிலன்புடையார் என்றும் அன்புடைய நாயனார் என்றும் அன்புடன் குறிப்பிடுகின்றன. சுந்தரர் தாம் அருளிய பனங்காட்டுப் பதிகத்தின் துவக்கத்தில் விடையின் மேல் வருவானை என்று விளித்துள்ளார். அதனைப் பின்பற்றி கல்வெட்டுக்களும் ‘விடையின் மேல் வருவார்’ என்று தேவார சொல்லாட்சியினை எடுத்தாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இத்தலத்து இறைவன் ‘திருப்பனங்காடு உடையார்’, ‘திருப்பனங்காடு உடைய மகாதேவர்’, திருப்பனங்காவுடைய நாயனார், திருப்பனங்காடு ஆளுடையார் தம்பிரானார், ஆளுடையார் திருப்பனங்காடு உடையார், வடக்கில் உடைய நாயனார் (கிருபாநாதேசுவரர்), அன்புடைய நாயனார் என்றெல்லாம் அழைக்கப்படுவதைக் கல்வெட்டுக்களில் காணமுடிகிறது.

தானங்கள் - செய்திகள்

திருப்பனங்காடு கோயில் இறைவனுக்கு அமுது. தயிரமுது, நெய் அமுது, நாள்தோறும் படைக்கவும் நான்கு தபஸ்விக்கள் மற்றும் சிவயோகிகளுக்கு உணவளிக்கவும் தானமளிக்கப்பட்டது.

திருக்கோயிலில் விளக்கெரிக்க செம்பியன் விழுப்பரையன் என்பவன் 10 காசு தானமளித்துள்ளார். மேலும் ஒரு காசுக்கு 3 உழக்கு எண்ணை அளிக்கப்படவேண்டும் என்ற செய்தியை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இறைவனுக்கு நாள்தோறும் அபிஷேகம் செய்ய வேண்டிய தண்ணீர் அளிக்கவும் ‘தனபரிபாலன நந்தவனம்’ எனும் பெயரில் அமைந்திருந்த நந்தவனத்தைப் பராமரிக்க செல்லப்பிள்ளையார் சைவசேகர காலார் என்பவர் நியமிக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது.



இப்பகுதியில் மழை இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டபடியால் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி செலுத்தப்படாமலிருக்க, அதற்காக கோயில் கணக்குப் பணி 350 பணத்திற்கு திருவண்ணாமலை உடையார் என்பவருக்கு விற்கப்பட்டதை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

திருப்பனங்காடு கோயிலில் வைகாசி மாதம் 6ம் திருவிழாவான வசந்த மண்டப உபயம் என்கிற திருவிழாவிற்கு வேண்டிய செலவினங்களுக்குத் திருப்பனங்காடு கைக்கோளர்களிடமிருந்து வரிவசூல் (பட்டாடை நூல் ஆயம்) பெற்று நடத்தப்பட்டது.

ஒரு காலத்தில் இவ்வூரில் உள்ள ஏரி உடைந்து நிலம் பாழடைந்துவிட்டதால் அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய வரி செலுத்தப்படாமலிருக்க கோயிலுக்கு உரிமையான மனை 150 பணத்திற்கு விற்கப்பட்டதாக ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.



இவ்வூரில் இருந்த செவ்வை வசவணன் திருவீதி எனும் பெயர் ஒரு கல்வெட்டில் உள்ளது.

கோயில் நிர்வாகத்திற்கும் திருப்பனங்காடு கைக்கோள முதலிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம் பற்றி ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஒரு தறிக்கு அளிக்கப்பட வேண்டிய வரி குறித்து நிர்ணயம் செய்யப்பட்டது. அதில் ஒன்பது பேர் கோயிலைக் கண்காணித்துக் கொள்ள 150 குழி நிலம் சடை ஏரி என்ற ஏரிக்கு அருகே அளிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு நாள்தோறும் இரு நாழிச் சோறு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. கோயிலைக் கண்காணிப்பவர்கள் ‘திருமேனிக் காவல்’ எனக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றனர்.

திருப்பனங்காவுடைய நாயனார் கோயிலில் தட்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வ வடிவங்களை எழுந்தருளவும் வழிபாடு மேற்கொள்ளவும் தானங்கள் அளிக்கப்பட்டன. இவை தேவகோட்டச் சிற்ப வடிவங்களுக்காக இருக்க வேண்டும். மேலும் கோயிலில் தேவிக்கு வெள்ளிக்கிழமை தோறும் அபிஷேகம் நடத்தவும் தானம் அளிக்கப்பட்டது.

இக்கோயிலில் விளக்கெரிக்க விக்கிரம சோழ பேரையாயிரவன் என்பவர் 32 பசுக்களும் சேதிராயன் என்பவர் 30 பசுக்களும் அளித்தாகச் சோழர்காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

திருப்பனங்காட்டுக்கு அருகில் உள்ள வண்பாக்கம், சடைப்பள்ளி, சிறு பனங்காடு என்பவை திருக்கண்ணப்ப வளாகம் எனப்பெயரிடப்பட்டு அந்நிலங்கள் வடக்கில் உடைய நாயனார்க்கு (அதாவது கிருபாநாதீசுவர ர ருக்கு) அமுது அளிப்பதற்காக வேட்டை விச்சாதிரன் என்பவரால் சம்புவரையர்களிடம் அளிக்கப்பட்டது.

இக்கோயிலில் விளக்கெரிக்க இடையர்கள் (மன்றாடிகள்) நியமிக்கப்பட்டனர். இவர்கள் திருவிளக்குக் குடிகள் என்று அழைக்கப்பட்டனர். நாள்தோறும் ஆழாக்கு நெய், 2 நாழி பால் கோயிலுக்கு அளிக்க வேண்டிய கடமை இவர்களுக்கு இருந்தது.

விஜயநகர மன்னர் காலத்தில் பணியாற்றிய அதிகாரிகள் அடைபத்து இலக்கப்பர், ஆனைகுந்தி விட்டப்பர் என்ற பெயர்கள் ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது.

கோயில் காரியங்களைக் கவனிக்க ஆரிய பாரத்வாஜு முதலியான விசயசிங்க தேவன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவருக்கு வசிக்க வீட்டுமனையும் அளிக்கப்பட்டது. கல்வெட்டில் "நம்முடைய முத்திரையுமிட்டு நம்முடைய வாசலுமகக் கடவராகவும் இப்படி இவனுக்குக் குடுத்தோம்" என்று வீரகுமார கம்பண உடையார் (கி.பி. 1368) கல்வெட்டில் (250 of 1906) குறிப்பிடப்படுவதால் மன்னனே இக்கோயில்மீது ஈடுபாடு கொண்டு ஆணை பிறப்பித்தார் எனக் கொள்ளலாம்.

அச்சுததேவராயர் நன்மைக்காக நிலத்திலிருந்து வரும் வருவாய் (பொலியூட்டு உபயமான) கோயிலில் நாள்தோறும் வழிபாட்டுக்காக அளிக்கப்பட்டது.

கோயில் நிர்வாகிகள் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த திருமலை தேவமகாராஜாவிடம் முறையிட்டு வரிவிலக்கு வேண்டிய செய்தி அச்சுததேவ மகாராஜாவின் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. (253 of 1906).

திருப்பனங்காடு கிருபாநாதேசுவரர் கோயிலில் காணப்படும் விஜயநகர மன்னர் (பெயர் தெளிவில்லை) காலக் கல்வெட்டில் திருப்பனங்காடு ஆசாரிக்கு (சிற்பி) "கற்தச்சக் காணியாக" நிலம் அளித்த செய்தி குறிக்கப்படுகிறது.

பனைமரம் போற்றுதல்

திருப்பனங்காடு எனும் பெயருக்கு ஏற்ப இன்றும் இவ்வூரில் அதிகமாக பனைமரங்கள் உள்ளன. இக்கோயிலில் உள்ள இரண்டு கருவறை வாயில்களிலும் பனைமரம் புடைப்புச் சிற்பமாக க் காணப்படுகிறது. திருச்சுற்றில் பனைமரத்தின் வடிவமும் அதனருகே சிவலிங்கமும் அம்மன் வடிவமும் வைத்து வழிபடப்பெறுவது சிறப்பானது என்பதையெல்லாம் சென்ற மாதக் கட்டுரையில் கண்டோம்.



தாளபுரீசுவரர் கோயிலில் கிழக்குச்சுவரில் அளவுகோல் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அந்த அளவுகோயின் இரு முனைகளிலும் பனைமர வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் அருகே 15ம் நூற்றாண்டு எழுத்தில் "தம்பிரானார் பிரம்மதேசப் பற்றுக்கு இட்ட நாட்டளவு" எனப் பொறிக்கப்பட்டுள்ளது (237 of 1906) சிறப்பானது. மேலும் கிருபாநாதேசுவரர் கோயிலில் காணப்படும் கல்வெட்டு "ஸ்வஸ்திஸ்ரீ உசிருள்ள பனை வெட்டுவார் ஸ்ரீ ... திருவாணை" எனப் பொறிக்கப்பட்டுள்ளது. உயிருள்ள பனைமரத்தை வெட்டக்கூடாது என்பது இதன் பொருள்.



திருப்பனங்காடு திருக்கோயில் கல்வெட்டுகள் பல அரிய வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகளை அளிக்கின்றன என்றால் மிகையில்லை!
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.