http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 125

இதழ் 125
[ நவம்பர் 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு வெள்ளி இதழ் வெளியீட்டு விழா - ஒளிப்படத் தொகுப்பு (Videos)
திருச்சிராப்பள்ளி மாவட்டக் கோயிற் கட்டடக்கலை-2
THIRUNEDUNGALAM
கீழ்க்குளத்தூர் அகத்தீசுவரமுடைய மகாதேவர் திருக்கோயில்
மதுரகாளியம்மன் கோயிலில் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
திசைகாட்டும் ஒள்எரிமாடம்
இதழ் எண். 125 > கலைக்கோவன் பக்கம்
திருச்சிராப்பள்ளி மாவட்டக் கோயிற் கட்டடக்கலை-2
இரா.கலைக்கோவன், மு.நளினி
சோழர் காலம்

சிராப்பள்ளி மாவட்டச் சோழர் காலக் கற்றளிகளுள் குறிப்பிடத்தக்கனவாக அல்லூர், திருச்செந்துறை, தவத்துறை, சீனிவாசநல்லூர், குழுமணி, கோபுரப்பட்டி, எறும்பியூர், உறையூர், நங்கவரம், பெருங்குடி, துடையூர், வயலூர், திருமங்கலம், திருப்பைஞ்ஞீலி, இடையாற்றுமங்கலம் ஆகிய ஊர்களிலுள்ள விமானங்களைக் கொள்ளலாம்.


அல்லூர் பசுபதீசுவரர்



இடையாற்றுமங்கலம்



சோழமாதேவி



குழுமணி



திருத்தவத்துறை



திருவாசி



துடையூர் விசமங்கலீசுவரர்


துணைத்தளம், தாங்குதளம்

இவ்விமானங்களுள் பெரும்பாலன பாதபந்த (பெருங்குடி, சோழமாதேவி முதலியன) அல்லது பிரதிபந்தத் தாங்குதளம் (வயலூர், சீனிவாசநல்லூர் முதலியன) பெற்றுள்ளன. பிரதி பந்தம் சிலவற்றில் பத்மபந்தமாகவும் (தவத்துறை, செந்துறை) காட்டப்பட்டுள்ளது. முற்சோழர், இடைச்சோழர் கால விமானங்களில் அரிதாகவே காணப்படும் கபோதபந்தத் தாங்குதளம் (இடையாற்றுமங்கலம்), பிற்சோழர் காலத்தின் இறுதிப்பகுதியில் சற்றுக் கூடுதலாக இடம்பெற்றுள்ளமையைக் காணமுடிகிறது (நத்தம், கண்ணனூர் (உறுப்பு மாற்றமாக), குழலூதும்பிள்ளைக் கோயில்). பாதபந்தத் தாங்குதளத்தின் ஓரங்கமான கண்டபாதங்கள் தொடர்ச் சிற்பங்கள் பெற்றுச் சிறப்பதைச் சில விமானங்கள் வெளிப்படுத்துகின்றன (துடையூர், திருமங்கலம், கோபுரப்பட்டி, இடையாற்றுமங்கலம் முதலியன). இது பல்லவர் மரபில் காணமுடியாத புதிய எழுச்சியாகும். இவ்வமைப்பு, தாங்குதளத்தின் கவர்ச்சியைக் கூட்டுவதுடன், சமகாலச் சமுதாயத்தின் சமய, சமூகச் சிந்தனைகளைப் பதிவுசெய்யச் சிற்பிகளுக்குப் பயன்பட்ட களமாகவும் விளங்குகிறது. சிராப்பள்ளி மாவட்ட விமான ஆதிதளங்களில் கிடைக்கப்பெறும் கண்டபாதச் சிற்பங்களின் பரவலான ஆய்வு பொ. கா. 9, 10ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியில் நிலவிய பண்பாட்டுச் சூழலின் புரிதலுக்குப் பேருதவியாக அமையும்.

ஒரே தாங்குதளத்தில் சாலை, கர்ண பத்திகளில் காட்டப் படும் உறுப்பு மாற்றங்கள் (வர்க்கபேதம்) சிராப்பள்ளி மாவட்டக் கட்டுமானங்களிலும் காணப்படுகின்றன. ஜகதியில் பத்ம அமைப்பு மட்டுமே மாற்றமாக அமைய, குமுதம் சில பத்திகளில் உருள் குமுதமாகவும் சிலவற்றில் எண்பட்டைக் குமுதமாகவும் அரிதாகச் சிலம்புவரிக் குமுதமாகவும் மாற்றப்பட்டுள்ளது. பட்டிகை சில பத்திகளில் கபோதமாக உருமாறியுள்ளது. இத்தகு உறுப்பு மாற்றங்கள் தாங்குதளப் பத்திகளை முதன்மைப்படுத்த வும் அவற்றுக்குக் கூடுதல் எழில் ஊட்டவும் விமானத்தைக் கண்கவர் அமைப்பாக மாற்றவும் பயன்பட்டுள்ளமை தெளிவு.

விமானத்தை உயர்த்திக் காட்டும் துணைத்தளம் பல்லவர் கட்டுமானங்களைத் தொடர்ந்து திருமங்கலம், திருமணல்மேடு கோபுரப்பட்டி மேற்றளி முதலிய சோழர் கோயில்களிலும் பிற்சோழர் கால இறுதிக்கட்டத்தில் உருவான ஒய்சளர் விமானங் களிலும் இடம்பெற்றுள்ளது. திருமங்கலத்தின் துணைத்தளக் கண்டபாதங்கள் இராமாயணத் தொடர்ச் சிற்பங்களைப் பெற்று மாவட்டத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டுமானமாக மிளிர் கின்றன. தமிழ்நாட்டில் தருமபுரி மல்லிகார்ச்சுனேசுவரர் தவிர, வேறெங்கும் இத்தகு துணைத்தளத் தொடர் அமையவில்லை.

பல்வேறு அலங்கரிப்புகளுடன் விளங்கும் துணைத் தளமாய்க் குழலூதும்பிள்ளை விமானத்தைக் குறிப்பிடலாம். இங்குப் பத்திகளுக்கிடையில் உறுப்பு மாற்றம் காணப்படுவ துடன், சிராப்பள்ளி மாவட்டப் பல்லவர், சோழர் விமானங் களில் இடம்பெறாத புத்தமைப்பான குறுவிமானங்கள் கோட்டச் சிற்பங்களுடன் துணைத்தளத்தை அலங்கரிப்பது குறிப்பிடத்தக்க உத்தியாகும். இதே காலகட்டத்தைச் சேர்ந்த சிராப்பள்ளி மாவட்டத்தின் பிற ஒய்சளர் விமானங்களான காட்டழகியசிங்கர், போசளீசுவரம், மாற்றுரை வரதீசுவரர் ஆகியவற்றில் இப்புத்தமைப்பு இடம்பெறவில்லை. பிற்சோழர் காலக் கட்டுமானமான தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலின் இராஜகம்பீரன் மண்டபம் இத்தகு அழகூட்டல்கள் பொருந்திய துணைத்தளம் கொண்டுள்ளமை இங்கு நினைக்கத்தக்கது. இதன் வழி ஒய்சளர் ஆதிதளங்களின் துணைத்தள மேலாண்மை பிற்சோழர் கலைமரபைத் தழுவியதே என்பதை உணரலாம்.

ஆதிதள அமைப்புகள்

மூன்று வகையான ஆதிதள அமைப்புகளைச் சோழர் கால விமானங்களில் காணமுடிகிறது. தாய்ச்சுவரின் அனைத்துப் பத்திகளும் பிதுக்கம், ஒடுக்கம் இன்றி ஒரே நேர்க்கோட்டில் அமையும் எளிய வகை ஆதிதளம் முதல் வகை. பெருங்குடி அகத்தீசுவரர், திருவாசி மாற்றுரை வரதீசுவரர் விமானங்கள் இத்தகையன. நடுப்பத்தி மட்டும் நாற்புறத்தும் பிதுக்கம் பெற்றுச் சாலையை முதன்மைப்படுத்தும் இரண்டாம் வகை ஆதிதளமே பெரும்பான்மையான விமானங்களில் கொள்ளப் பட்டுள்ளது. அல்லூர், நங்கவரம், சோழமாதேவி, துடையூர், தவத்துறைக் கட்டுமானங்கள் இவ்வகையின. மிகச் சில ஆதி தளங்களே அனைத்துப் பத்திகளும் வெளியிழுக்கப்பட்ட நிலை யில் இடைப்பட்ட தாய்ச்சுவர் ஒடுக்கம் காட்டி நிற்குமாறு அமைந்துள்ளன. சீனிவாசநல்லூர்க் குரங்கநாதர், குழுமணி சிவன் கோயில், கண்ணனூர்ப் போசளீசுவரம் ஆதிதளங்கள் இத்தகு வடிவின.

வேதிகை

விமானத்தின் தாங்குதளத்திற்கும் சுவருக்கும் இடையில் காட்டப்படும் வேதிகைத்தொகுதி கம்புகளுக்கு இடைப்பட்டுப் பாதங்கள் கொண்டமையும் கண்டம், தாமரைவரி, வேதிகை எனும் உறுப்புகள் கொண்டது. இத்தொகுதி இல்லாத ஆதி தளங்களை இக்காலகட்ட விமானங்களில் (பெருங்குடி, குழு மணி) காணமுடிந்தாலும், பல கட்டுமானங்கள் (தவத்துறை, இடையாற்றுமங்கலம், கோபுரப்பட்டி, சோழமாதேவி முதலி யன) சிறப்பான எழுச்சியூட்டும் வேதிகைத்தொகுதிகளைப் பெற்றுள்ளன. சிலவற்றின் வேதிபாதங்கள் சிற்பக்காட்சிகளை யும் பெற்றுள்ளன. அவற்றுள்ளும், தவத்துறையின் வேதிபாதங் கள், கொண்டிருக்கும் சிற்பக்காட்சிகளால் அந்த விமானத்திற்கே பேரெழிலை அளிக்கின்றன. அதனை மேம்படுத்தும் விதமாகத் தாங்குதளத்தின் பிரதிவரி, வீறுடன் நடைபயிலும் யாளிகளை யும் யானைகளையும் காட்டிப் புதுமைமிகு தோற்றத்தை விமானத் திற்கு வழங்குகிறது. சிராப்பள்ளி மாவட்டத்தின் வேறெந்தக் கட்டுமானத்திலும் காணவியலாத சீர்மிகு காட்சி இது.

சுவர்

ஆதிதளத்தின் சுவர்ப்பகுதியே ஒரு விமானத்தின் கம்பீரத் தையும் கவர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது. அதைக் கருத்தில் கொண்டே கட்டுமான அறிஞர்கள் தங்கள் முழுத் திறனையும் சுவர் அலங்கரிப்பில் ஒருங்கிணைத்தனர். ஆதிதளத்தின் கீழ், மேல் பகுதிகளை இணைக்கும் இந்தச் சுவர்ப்பகுதியை உயிரோட்டமானதாகவும் கண்களை ஈர்க்குமாறும் பங்கீடு செய்வதில் பல்லவச் சிற்பிகள் வெளிப்படுத்திய கலைமரபு களிலிருந்து மாறுபட்ட போதிலும் சீர்மை குறையாது சிறக்கச் செய்வதில் சோழத் தச்சர்கள் தங்கள் ஆற்றலைப் புலப்படுத்தத் தவறவில்லை.

ஆதிதளத்தின் சுவர்ப்பகுதி பல உறுப்புகள் கொண்டமை யும் அரைத்தூண்களால் அளவான பத்திகளாக வரையறுக்கப் பட்டு, மூன்று திசைகளின் நடுப்பத்திகளில் கோட்டமும் இறையகம் நோக்கும் திசையின் நடுப்பத்தியில் வாயிலும் பெற்றுள்ளது. பத்திகளை வரையறுக்கும் தூண்கள் பெரும்பா லான ஆதிதளங்களில் நான்முகம் (பெருங்குடி, அல்லூர், செந்துறை), எண்முகம் (தவத்துறை, சோழமாதேவி, உய்யக் கொண்டான் திருமலை) கொண்டு அமைய, ஒரு சில பன்முக வடிவினவாகவும் (துடையூர், திருவாசி) உள்ளன. எறும்பியூரில் உருளைத்தூண்களையும் காணமுடிகிறது. கர்ணபத்திகளை யும் சாலைப்பத்திகளையும் பிரிக்கும் தூண்கள் ஒரே வடிவின வாக அமையாமல், மாறுபட்டு அமைவதையும் மூன்று பத்தி களும் முன்னிழுக்கப்பட்ட நிலையில் இடைப்படும் ஒடுக்கங் களில் உருளைத்தூண்கள் அமைவதையும் சீனிவாசநல்லூரில் காணமுடிகிறது. கோட்டங்களின் சட்டத்தலை பெறும் அணைவு அரைத்தூண்கள் பல கட்டுமானங்களில் உருளை அல்லது நான்முகமாகவும் சிலவற்றில் எண்முகமாகவும் உள்ளன.

பெரும்பாலான அரைத்தூண்கள் சதுரபாதம், உடல், தொங்கல், கட்டு, தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம் எனும் உறுப்புகளைக் கீழிருந்து மேலாகப் பெற்றுள்ளன. இவற்றுள் பாதம் இடம்பெறாத தூண்களை அல்லூர், செந்துறை, குழுமணி முதலியவற்றிலும் தொங்கலற்ற தூண்களை அல்லூரிலும் பாலிக்கு மாற்றாகத் தாமரை கொண்ட தூண்களைச் செந்துறை, போசளீசுவரம், துடையூர் முதலியவற்றிலும் காணமுடிகிறது. அலங்கரிப்புப் பெற்ற பாதங்களைப் போசளீசுவரம் கொள்ள, திருமங்கலப் பாதங்கள் குறுஞ்சிற்பங்கள் கொண்டுள்ளன. திருவாசி, போசளீசுவரப் பாதங்களை நாகபந்தம் அழகூட்டுகிறது. அரைத்தூண்களின் சிறப்புக்குரிய பகுதியே தொங்கல்தான். இதை மாலை, மாலைத்தொங்கல் என்று கூறுவாரும் உண்டு. முற்சோழர் கட்டுமானங்களில் இம்மாலைத்தொங்கல் மிகுந்த கவனத் துடன் அழகூட்டப்பெற்றுத் தனித்துவம் பெறுவதைத் தமிழ் நாடு முழுவதும் காணமுடிகிறது.

சிராப்பள்ளி மாவட்டக் கீழ்க் குடைவரையிலும் பட்டூர்க் கயிலாசநாதர் கோயிலிலுமே அழகிய தொங்கல்கள் பல்லவர் கைவண்ண வெளிப்பாடுகளாக விளங்கியபோதும், தொங்கல் களின் அரசியாக விளங்குவது சீனிவாசநல்லூர்க் குரங்கநாதர் கோயிலே. தமிழ்நாட்டில் வேறெங்கும் காணப்படாத மகப் பேறுக் கொண்டாட்டம் இக்கோயில் அரைத்தூண் தொங்கலி லும் கட்டிலும் தொடர்க்காட்சியாகப் படம்பிடிக்கப்பட்டுள் ளது. ஆடல், கருவிக்கலைஞர்களின் சிறப்பான பதிவையும் இங்குள்ள தொங்கல்கள் காட்சிப்படுத்துகின்றன. சிவபெரு மான் நிகழ்த்திய 108 கரணங்களுள் ஒன்றான ஊர்த்வஜாநு இங்கும் செந்துறைத் தொங்கலிலும் இணையற்ற படப்பிடிப் பாகக் காணக் கிடைக்கிறது. இதே ஊர்த்வஜாநு வடக்குச் சாலைக்கோட்டத்தில் பேரளவுச் சிற்பமாகத் திருப்பட்டூர்க் கயிலாசநாதர் விமானத்தை வளப்படுத்துவதும் இங்கு எண்ணத் தக்கது. பூப்பதக்கங்களுடனான மலர்ச் சரங்களைத் தவத்துறை யிலும் செந்துறையிலும் பார்க்கமுடிகிறது. செந்துறைத் தொங்கல்கள் பிடாரி தொடர்பான சில குறுஞ் சிற்பங்களைக் கொண்டுள்ளன.

கொடிக்கருக்குகளால் பிணைக்கப்பட்ட அழுத்தமான கட்டு, நன்கு விரிந்த இதழ்கள் பெற்ற கூர்மையான தாமரைக் கட்டு ஆகியன பல விமானங்களின் தூண்களில் இடம் பெற்றுள்ளன. கலசம், தாடி, பாலி அல்லது தாமரை ஆகிய மேலுறுப்புகளும் பல விமானங்களில் சிறப்பான அலங்கரிப்புப் பெற்றுள்ளன.

இக்காலகட்டத்தில் சிராப்பள்ளி மாவட்டத்தில் உருவான அனைத்து விமானங்களும் ஆதிதளச் சுவரில் முப்புறத்தும் கோட்டங்கள் கொண்டுள்ளன. இக்கோட்டங்கள் பெரும்பா லும் தாங்குதளத்திற்கு மேலிருக்குமாறு, வேதிகைத்தொகுதியை ஊடறுத்துக் காட்டப்பட்டுள்ளன. கோட்ட அணைவுத் தூண் கள் சட்டத்தலை பெற்ற உருளை அல்லது நான்முகமாகப் பல கோயில்களிலும் எண்முகமாக மிகச் சில கோயில்களிலும் அமைய, இவை தாங்கும் கூரையுறுப்புகளை அடுத்துக் கோட்டத் தலைப்பாகப் பல விமானங்களில் மகரதோரணங்கள் உள்ளன. செறிவான சிற்பங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ள மகர தோரணங்களை எறும்பியூர், பெருங்குடி, சீனிவாசநல்லூர், கோபுரப்பட்டி, வயலூர் விமானங்கள் பெற்றுள்ளன. அருமை யான ஆடவல்லான், நான்முகன் சிற்பங்களை எறும்பியூரிலும் பூவராகரைச் சீனிவாசநல்லூரிலும் சிவபெருமானின் ஆடற் திருக்கோலத்தை வயலூரிலும் பார்க்கமுடிகிறது. சீனிவாச நல்லூர் மேற்கு மகரதோரணமே மாவட்டத்தின் மிகச் சிறந்த அமைப்பெனலாம்.

பெரும்பாலான வடக்குக் கோட்டங்களில் நான்முகனும் தெற்குக் கோட்டங்களில் ஆலமர்அண்ணலுமே காட்டப் பட்டுள்ளனர். தவத்துறை அக்கோட்டங்களில் பிச்சையேற்கும் அண்ணலையும் வீணையேந்திய சிவபெருமானையும் பெற்றுள் ளது. துடையூரிலும் தெற்கில் வீணையேந்திய சிவபெருமான் காட்சிதருகிறார். செந்துறை தெற்கில் நந்திதேவரைப் பெற்றிருந் தாலும் வடக்குக் கோட்டம் வெறுமையாக உள்ளது. அல்லூரி லும் தவத்துறையிலும் வடக்குக் கோட்டத்தில் பிச்சையேற்கும் அண்ணலையே காணமுடிகிறது. சீனிவாசநல்லூர் உள்ளிட்ட சில விமானங்களில் வடக்கு, மேற்கு இரண்டு கோட்டங் களுமே சிற்பங்களின்றி வெறுமையாக உள்ளன.

தெற்கு, வடக்குப் போலன்றி மேற்குக் கோட்டம் பெரும்பாலான விமானங்களில் மாறுபட்ட இறைத்திருமேனி களைக் கொண்டுள்ளது. எறும்பியூரிலும் திருமங்கலத்திலும் அரிஅரரைப் பெற்றுள்ள இக்கோட்டம், தான்தோன்றீசுவரம், உய்யக்கொண்டான் திருமலை, நெடுங்களம், தவத்துறை, பைஞ்ஞீலி, பெருமுடி, திருவாசி ஆகியவற்றில் அம்மையப்ப ரைக் கொண்டுள்ளது. இடையாற்றுமங்கலம், சோழமாதேவி, நகர், நங்கவரம், ஆலம்பாக்கம் கோயில்களில் இக்கோட்டத்தை விஷ்ணு அலங்கரிக்கிறார். துடையூர், இம்மாவட்டத்தில் வேறெங்கும் காணப்படாத உமாசகிதரைக் கொண்டுள்ளது.

தவத்துறை மூன்று கோட்டங்களிலும் சிவபெருமானின் மாறுபட்ட தோற்றங்களைக் கொண்டு (கிழக்கில் அம்மையப் பர், வடக்கில் பிச்சையேற்கும் அண்ணல், தெற்கில் வீணை யேந்தியவர்) இம்மாவட்டத்தின் தனித்துவமான ஆதிதளமாக இலங்குகிறது. இது போல் அனைத்துக் கோட்டங்களிலும் சைவம் சார்ந்த சிற்பங்களே இடம்பெறும் அமைப்புத் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பழனம் உள்ளிட்ட சில கோயில்களில் காணப்படுவது இங்கு எண்ணத்தக்கது.

கோட்டச் சிற்பங்களோடு தொடர்புடைய காட்சிகள் கோட்டங்களை அடுத்துப் பரவும் சுவர்ப்பகுதிகளில் காட்டப் படும் பல்லவ உத்தியின் எச்சங்களைச் சோழர் கால ஆதிதளங் கள் சிலவற்றில் (சீனிவாசநல்லூர், சோழமாதேவி, அல்லூர்) காணமுடிகிறது. குழலூதும்பிள்ளைக் கோயில் துணைத்தள அமைப்பிலிருந்தே பல புத்தமைப்புகளைப் பெற்று இம்மாவட் டத்தின் முற்றிலும் மாறுபட்ட ஆதிதளக் கட்டுமானமாகப் பொலிகிறது. இதன் சுவர்ப்பகுதியில் கோட்டச் சிற்பங்களோடு தொடர்பற்ற நிலையிலும் பல்வேறு அளவிலான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்குள்ள பிற ஒய்சள விமானங்களில் காணமுடியாத இந்த அலங்கரிப்புகள் இவ்விமானத்தைப் பதின்மூன்றாம் நூற்றாண்டின் மகத்தான தமிழ்நாட்டு விமானமாக முன்னிருத்துகின்றன. இவ்விமானத் தின் அலங்கரிப்பு உத்திகள் குறித்துத் தனியொரு ஆய்வு நிகழ்த்துவது சால்புடையது.

பஞ்சரங்கள்

பல்லவர் காலத்திலிருந்தே கட்டுமானங்களில் இடம் பெறத் தொடங்கும் பஞ்சரங்கள் சோழர் காலத்தில் பல்கிப் பெருகின. சுவர்ப் பஞ்சரங்கள், கோட்டப் பஞ்சரங்கள், நிஷ்க ராந்த பஞ்சரங்கள், குடப்பஞ்சரங்கள் என ஆதிதளத்திற்கு அழகூட்டும் இப்பஞ்சர வகைகள் அனைத்துமே சிராப்பள்ளி மாவட்ட விமானங்களின் ஒடுக்கங்களிலோ, கர்ணபத்தி களிலோ இடம்பெற்றுள்ளன. திருமங்கலத்தில் ஒடுக்கங்களில் காணப்படும் சுவர்ப் பஞ்சரங்கள் போசளீசுவரத்தில் சாலைப் பத்தியில் காட்டப்பட்டுள்ளமையை மரபு மாற்றமாகக் கொள்ளலாம். நிஷ்கராந்தப் பஞ்சரங்கள் இடம்பெற்றுள்ள அனைத்து விமானங்களிலுமே (திருவாசி, துடையூர், எறும்பியூர், கோபுரப்பட்டி) அவற்றைக் கர்ணபத்திகளில்தான் காணமுடி கிறது. கோட்டப் பஞ்சரம் போசளீசுவரத்தின் ஒடுக்கங்களில் உள்ளது. குழலூதும்பிள்ளைக் கோயிலில் சிறக்க அலங்கரிக்கப் பட்டனவாகக் காட்சிதரும் இப்பஞ்சரங்களில் சிற்பங்களையும் காணமுடிகிறது. சில ஆதிதளங்களின் நிஷ்கராந்த, சுவர்ப் பஞ்சரங்கள் தாங்குதளங்களிலிருந்து மாறுபடும் உறுப்பு களைக் கொண்டு தனித்து நிற்கின்றன. குடப்பஞ்சரம் ஒடுக்கங் களிலேயே (இடையாற்றுமங்கலம்) காட்டப்பட்டுள்ளது.

(வளரும்)
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.