![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 125
![]() இதழ் 125 [ நவம்பர் 2015 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் பசுமையான வயல்கள், சுவைமிகுந்த கரும்பு வயல்கள், தென்னை மரங்கள் சூழ்ந்து விளங்கும் கீழ்க்குளத்தூர் என்ற கிராமத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அகத்தீசுவரமுடைய மகாதேவர் திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 95 கி.மீ தொலைவிலும், செய்யாறு-வந்தவாசி சாலையில் சுமார் 10 கி.மீ தொலைவிலும் கீழ்க்குளத்தூர் அமைந்துள்ளது. இவ்வூரின் வடகிழக்கு மூலையில் அகத்தீசுவரம் உடையார் சிவன் கோயில் அமைந்துள்ளது. கோயில் கிழக்கு நோக்கியும், கோயிலின் நுழைவுவாயில் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் கிழக்குச்சுவரில் ஐந்து துளை உடைய சாளரம் (ஜன்னல்) அமைந்துள்ளது. கோயில் கருவறை, இடைநாழி, மகாமண்டபம் என்ற அமைப்புகளுடன் விளங்குகிறது. கருவறைச் சுவரில் தேவகோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் காணப்படவில்லை. இக்கோயில் பாதபந்த அதிட்டான அமைப்புடன் காணப்படுகிறது. தெற்கு நுழைவாயிலின் முன்பாக இரு தூண்களுடன் கூடிய சிறுமண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்துத் தூண்களின் போதிகைகளில் சிறுசிறு குழிகள் (Sockets) உள்ளன. முன்மண்டபத்தை ஒட்டி விழா நாட்களில் பந்தல் கழிகள் செருகுவதற்கு ஏற்றவாறு இவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுச் சிறப்பு: ஊரிலிருந்து அகத்தீசுவரமுடைய மகாதேவர் கோயிலுக்குச் செல்லும் வழியில், சாலை அருகே பலகைக் கல்லில் வடிக்கப்பட்ட கொற்றவையின் சிற்பம் ஊர்மக்களால் வழிபடப்பெறுகிறது. வனதுர்க்கை என ஊரார் அழைக்கின்றனர். தேவி எருமைத்தலையின் மீது நின்ற திருக்கோலம். எட்டுக் கரங்கள் - சங்கு, சக்கரம், கத்தி, வில், மணி, கேடயம், முன் இடதுகை இடையில் வைத்தும், வலதுகை அபயமுத்திரை தாங்கி, புன்னகை தவழும் முகத்துடன் காட்சி தருகிறார். இச்சிற்பத்தின் மேற்பகுதியில் தேவியின் வாகனமான மான், சிங்கம் காணப்படுகிறது. தேவியின் காலின் கீழே ஒரு வீரன் தன் தலையைத் தானே அரிந்து கொள்ளும் காட்சியைக் காணலாம். எதிர்ப்புறம் மற்றொரு வீரன் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இச்சிற்ப வடிவினைக் காணும் பொழுது இதன் காலம் கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பல்லவர் கலைப்பாணியுடன் காட்சி அளிக்கிறது. எனவே, இவ்வூர் தொன்மையானதாகவும், பழமையான கோயில் இருந்து அழிந்திருக்க வேண்டும் என்பதையும் ஊகிக்க முடிகிறது. அக்கோயில் செங்கற்கோயிலாக இருந்து அழிந்து போயிருக்கலாம். கல்வெட்டுகள்: அகத்தீசுவரமுடைய மகாதேவர் கோயிலில் மகாமண்டபச் சுவர், தெற்குச் சுவர், நுழைவு வாயிலின் இடப்புறம், மகாமண்டபத்தின் கிழக்குச் சுவர், கருவறை வாயிலினுள் நுழையும் இடத்திற்கு மேலே நெற்றிப்பகுதி என்ற இடங்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஒரு கல்வெட்டு தலைகீழாக வைத்துக் கட்டப்பட்டுள்ளது. எனவே பிற்காலத்தில் இக்கோயிலில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். செய்திகள்: இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளிலிருந்து பெறும் செய்திகளிலிருந்து இக்கோயில் முதலாம் இராஜேந்திரசோழன் (கி.பி. 1012-1044) காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது. இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலத்தின் எல்லை குறிப்பிடப்படுகிறது. ஆனால் கல்வெட்டு முழுமையாகக் காணப்படவில்லை. மேலும், இராஜேந்திரசோழனின் மூத்த மைந்தனான முதலாம் இராஜாதிராஜன் (கி.பி. 1018-1054) காலத்தில் 5, 7 ஆம் ஆட்சி ஆண்டுக் காலங்களில் வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் "திருஅகத்தீசுவரம் உடைய மகாதேவர்" என்றும், இவ்வூர் "சிறுகுளத்தூர்" எனவும் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது. இன்று இவ்வூர் கீழ்க்குளத்தூர் என அழைக்கப்படுகிறது. ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் வெண்குன்றக் கோட்டத்தில் அரியூர் என்ற நாட்டுப்பிரிவில் இருந்ததையும் அறியமுடிகிறது. வந்தவாசி அருகில் வெண்குன்றம் என்ற ஊரும் கோயிலும் அமைந்துள்ளது. 'தில்லைவானவன் அழகியதேவன்' மற்றும் 'அமுதுவல்லவக்கோன்' என்ற இருவர் இக்கோயிலுக்கு வழிபாட்டிற்காக நிலம் அளித்தும், விளக்கு எரிக்கவும், வீட்டு மனைகள் அளித்துப் பெரிதும் போற்றியிருக்கின்றனர் என்பதை அறியமுடிகிறது. சோழர்காலத்தில் சிறப்பிடம் பெற்று இக்கோயில் விளங்கியிருப்பதை வரலாற்றுச் சான்றுகளால் அறியமுடிகிறது. ஆனால் சோழர்காலச் சிற்பங்கள் ஏதும் இக்கோயிலில் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. செடி கொடிகள் வளர்ந்த கோயிலின் தோற்றம் வழிபாடு இல்லாமல் சிவலிங்கம் தனியே இருந்த காட்சி கோயிலின் தற்போதைய நிலை போதிகை - குழிகளுடன் கட்டடக்கலை முதலாம் இராஜாதிராஜன் கல்வெட்டு சிறுகுளத்தூர் - ஊர்ப்பெயர் கல்வெட்டில் ஆளுடையார் திருஅகத்தீசுவரமுடைய மகாதேவர் - இறைவன் பெயர் வனதுர்க்கை - பிற்காலச் சிற்பம் ஏரிக்கரையில் உள்ள தெலுங்குக் கல்வெட்டு - செல்லியம்மன் என வணங்கப்படுகிறது தெலுங்குக் கல்வெட்டு: மேலும் இவ்வூரின் தெற்கில் ஏரி ஒன்று உள்ளது. அதன் வடக்குக் கரையில் 15-16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தெலுங்கு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கற்பலகை நடப்பட்டுள்ளது. இரு பக்கங்களிலும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இதனைச் செல்லியம்மன் என ஊரார் வழிபடுகின்றனர். தொன்மைச் சிறப்பு வாய்ந்த கீழ்க்குளத்தூர் ஊரில் காணப்படும் அகத்தீசுவரமுடைய மகாதேவர் திருக்கோயில் சோழர்காலத்தில் சிறப்பிடம் பெற்ற திருக்கோயிலாக விளங்குகிறது. அடிக்குறிப்பு: 1. கல்வெட்டு A.R.E 1968-69 குளத்தூர், செய்யாறு வட்டம். 2. அண்மையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. 3. வழிபாடு இல்லாமல், செடி-கொடி முளைத்து இருந்த இக்கோயில் சென்னையைச் சேர்ந்த அண்ணாமலை உழவாரப் பணிக் குழுவினரால் தூய்மை செய்யப்பட்டு வழிபாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |