http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 128



இந்த இதழில்..
In this Issue..

அருள்மிகு நாகநாதசாமி திருக்கோயில்
SOMESWARA SHRINE OF SOMUR-Continued
திருக்கழுக்குன்றம் குடைவரை
கண்ணாரக் கண்டும் கையாரக் கூப்பியும்....
பரமேசுவரமங்கலம் திருக்கோயில்கள்
சிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள் - 9
இன்குதல் விறலியர் இசை மரபு
இதழ் எண். 128 > கலையும் ஆய்வும்
பரமேசுவரமங்கலம் திருக்கோயில்கள்
கி.ஸ்ரீதரன்

சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில், சுமார் 70 கி.மீ. தொலைவில் புதுப்பட்டினம் ஊர் அருகில், பாலாற்றைக் கடந்தவுடன் அமைந்துள்ள வேப்பஞ்சேரி என்ற ஊரிலிருந்து பாலாற்றின் கரையில் மேற்காக 2 கி.மீ. தொலைவில் பரமேசுவரமங்கலம் ஊரில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இவ்வூருக்கு அருகில் வாயலூர், வசவசமுத்திரம் போன்ற தொன்மைச் சிறப்புமிக்க ஊர்கள் அமைந்துள்ளன.



பெருமாள்கோயில்-வைகுண்டபெருமாள்       இவ்வூரில் பலாற்றுக்குச் செல்வதற்கு முன்னர் முதலில் காண்பது சௌமியதாமோதரப்பெருமாள்கோயில். இங்கே பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராகக் காட்சி தருகிறார். அழகிய பல்லவர் காலத்திருமேனி. தலையில் கிரீடமகுடம். மேற்வலது கையில் பிரயோக நிலையில் சக்கரத்தைத் தாங்கியுள்ளார். கோயில் வளாகத்தில் அமர்ந்த நிலையில் காணப்படும் சிம்மத்தூண்கள் இங்கு பல்லவர் காலக்கோயில் இருந்து அழிந்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. கோயிலுக்கு முன்பாகக் காணப்படும் ஆழிக்கல் கல்வெட்டில் கி.பி. 1522ல் விஜயநகர மன்னர்க்காலத்தில் அளிக்கப்பெற்ற கொடை பற்றி குறிக்கிறது. இக்கோயில் திருப்பணி செய்யப்பெற்று விட்டாலும் பல்லவர்க்கால திருமேனிகள் வழிபடப்பெறுவது சிறப்பாகும்.



கைலாசநாதர் கோயில் - சைலேசுவரம் 1       பெருமாள் கோயிலுக்கு அருகாமையில் பாலாற்றின் கரை அருகில் அமைந்துள்ள சிறிய குன்றின் மீது, கனகாம்பிகை சமேத கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. பல்லவர்க்காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருந்தாலும், தற்போது பிற்கால கலைப்பாணியுடன் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய கோயில். கோயிலின் மகாமண்டபத்தில் பல்லவர்க்காலத்தைச் சேர்ந்த அழகிய திருமேனியாக கணபதி வழிபடப்பெறுகிறார். கோயில் வாசலின் அருகில் கற்பலகைக் கல்வெட்டு பத்திரமாக நிறுவப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பல்லவமனன் நிருபதுங்கவர்மனின் (கி.பி. 865-906) 16வது ஆட்சி ஆண்டில் "பரமேசுவரமங்கலம் சைலேசுவரம்" எனப்படும் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள மகாதேவர்க்கு வழிபாட்டிற்காக 11 கழஞ்சு பொன் இக்கோயில் கணப்பெருமக்களிடம் அளிக்கப்பட்டது. இக்கொடையானது மண்ணைக்குடி விழுப்பேரரையன் மகன் நந்தி நிறைமதி என்பவரால் அளிக்கப்பட்டது. இக்கற்பலகைக் கல்வெட்டின் பின்புறத்தில் நிருபதுங்கவர்மனின் 15-வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு காணப்படுகிறது. இக்கோயிலில் வழிபடப்பெரும் கணபதி பட்டாரரைத் தண்டியக்கிழார் பாண்டிய கிரமவித்தனின் மனைவி நிறுவி, விளக்கு எரிப்பதற்காக 40 காடிநெல் அளித்தாள் எனக்கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டு, "சத்ருசிங்கப்பெருந்தச்சன்" என்ற சிற்பியால் அழகாகப் பொறிக்கப்பட்டது என்பதையும் அறியமுடிகிறது. சிறிய குன்றின் மீது கோயில் அமைந்துள்ளதால் "சைலேசுவரம்" என அழைக்கப்பட்டது.



நத்தம் - செண்பகேசுவரர் திருக்கோயில்2 பரமேசுவரமங்கலம் ஊரின் தென்மேற்குப்பகுதியில் உடல்காரகுப்பம் என்ற நத்தம் பகுதி உள்ளது. இதில் அமைந்துள்ள கோயில் செண்பகேசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கிய கோயில். கோயில் முன்பாக சிதறி காணப்படும் துவாரபாலகர் சிற்பங்கள், கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட தூண்கள், சண்டிகேசுவரர் சிற்பம், நவகண்ட சிற்பங்கள் போன்றவற்றைக் காணும் பொழுது, இதுவும் ஒரு பல்லவர்காலக் கோயிலாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யமுடிகிறது. நிருபதுங்கவர்மன் காலத்திலேயே கட்டப்பட்ட இக்கோயில், சோழமன்னர்களால் பெரிதும் போற்றப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. ஆனால் பிற்காலத்திருப்பணிகளின் போது கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட கற்களை தலைகீழாகவும் வைத்து கட்டியுள்ளனர் என்பதைக் காணமுடிகிறது. இந்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள 1912-ம் ஆண்டு கல்வெட்டு அறிக்கையில் காணப்பட்ட கல்வெட்டுச் செய்திகளை அறியும்பொழுது இக்கோயிலின் வரலாற்றுச் சிறப்பினை உணரமுடிகிறது.3 இக்கோயிலில் முதலாம் ராசேந்திரன் (கி.பி. 1012-1044) முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070-1120), மூன்றாம் ராசராசசோழன் (கி.பி. 1216-1256), திரிபுவனசக்கரவர்த்தி கோனேரிண்மைக்கொண்டான், விஜயநகர அரசர் வீரகம்பண்ண உடையார் ஆகியோரது கல்வெட்டுகள் காணப்படுகின்றன.



நிகரிலிசோழசதுர்வேதிமங்கலம்: முதலாம் ராசேந்திர சோழனின் 3, 6, 9 ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பரமேசுவரமங்கலம் என்ற ஊர் 'நிகரிலிசோழசதுர்வேதிமங்கலம்' என அழைக்கப்பட்டது. இராஜராஜசோழனுக்கு 'நிகரிலிசோழன்' என்ற சிறப்புப்பெயர் உண்டு. எனவே இம்மன்னன் பெயரால் இவ்வீர் சிறப்பித்து அழைக்கப்பட்டது. இவ்வூர் சபையின் 12 உறுப்பினர்கள் அடங்கிய 'சம்வத்கரவாரியம்' குழுவினர், ஒவ்வொரு ஆண்டும் துலா மாதத்தில் (ஐப்பசி) தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஊர்ப்பைகளை கவனிக்கும் இக்குழுவினர் "ராஜேந்திரசோழன் சதுஸ்சாலி" என்ற மண்டபத்தில் கூடி விவாதித்துள்ளனர். கஞ்சரன் அய்யன் சூரியன் என்பவர் 'வகை செய்கின்ற' அலுவலராகப் பணியாற்றி உள்ளார் என்பதையும் அறிய முடிகிறது. மேலும், இவ்வூர் ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் செம்பூர்க்கோட்டத்தில் இருந்ததையும், இறைவன் வழிபாட்டிற்காக நெல் வழங்கப்பட்டதையும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கோவிலுக்கு விளக்கு எரிப்பதற்காக 90 ஆடுகளும், விளக்குத்தூணும் அளிக்கப்பட்டது. கோயிலுக்கு முன்னர், முன்பு தானமாக அளிக்கப்பட்ட விளக்குத்தூண் கீழே விழுந்து கிடப்பதையும் காணமுடிகிறது. முன்மண்டபத்தில் காணப்படும் குலோத்துங்க சோழன் கல்வெட்டு நிலவிற்பனைப் பற்றி குறிப்பிடுகிறது.



சோழகுலசதுர்வேதிமங்கலம் இக்கோயிலில் காணப்படும் மூன்றாம் ராஜராஜசோழனின் கல்வெட்டில் இவ்வூர் 'சோழகுலச்சதுர்வேதிமங்கலம்' எனப்பெயர் மாற்றம் பெறுகிறது. ஊர்சபை கோயிலுக்கு அளித்த நிலதானம் பற்றீ ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் விளக்குக்காகவும் தானம் அளிக்கப்பட்டது. கோயிலுக்கு முன்பாக கல்வெட்டுகள் பொறிக்கப்ட்டுள்ள தூண்கள் காணப்படுகின்றன. இக்கோயிலுக்கு நந்தவனம் ஒன்றினை கொலோத்துங்கசோழகாங்கேயராயன் என்பவன் அளித்தான் என அறியமுடிகிறது. மற்றொரு தூணில் காணும் கல்வெட்டில் அரசியர் தண்டிபிராட்டியார், வீரகோசமங்கலமுடையார் உடைய பிராட்டியார் ஆகியோர் கோயிலின் 'மடைப்பள்ளிப்புறமாக' ஊரில் இருந்த தரிசுநிலங்களை வழங்கினர். அவற்றை விளைநிலங்களாக்கி அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு சித்திரை விசு, ஐப்பசிவின், மாசி மகம் போன்ற திருவிழாக்களை நடத்த தானம் அளித்தனர். இவ்வழிபாடு ராஜேந்திர சோழனுக்கும், தண்டிபிராட்டியார் நன்மைக்காகவும் அளிக்கப்பட்டது எனக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. கோயில் மண்டபத்தில் காணப்படும் திரிபுவனசக்கரவர்த்திகள் கோனேரிண்மைக்கொண்டான் கல்வெட்டில் (மாறவர்மன் சுந்தரபாண்டியன்?) 'பழம்பட்டிணம் பெருமன்றத்தாழ்வார்' என்ற குறிப்பு காணப்படுகிறது.பரமேசுவர மங்கலம் ஒரு பழமையான, தொன்மையான ஊர் என்பதைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.



 



செண்பகேசுவரர் கோயில் கலைச்சிறப்பு இக்கோயில் சோழர்க்கால கட்டடக்கலை அமைப்புடன் விளங்குகிறது. கருவறை தேவகோட்டங்களில் விநாயகர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை வடிவங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி வடிவங்கள் கைகள், கால்கள் உடைக்கப்பட்டிருப்பது கண்ணில் நீர்வரவழைக்கிறது. லிங்கோத்பவர் வடிவத்தில் பிரம்மா அன்னப்பறவை வடிவத்தில், பாதி மனித வடிவத்துடன் காணப்படுவதுச் இரப்பாக விளங்குகிறது. கருவறை விமானம் மூன்று தளங்களுடன் காட்சி தருகிறது. கோயில் கருவறை, முன்மண்டபம், மகா மண்டபம் அமைப்புடன் விளங்குகிறது. மகாமண்டபத்தில் ராமர் வடிவங்கள், பைரவர், சூரியன் வடிவங்கள் வழிபடப்படுகின்றன. வாயிலை அடுத்து தெற்கு நோக்கி சுப்ரமணியர் சந்நிதியும், அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன. கோய்லுக்கு எதிரில் அழகிய நந்தியின் வடிவம் அமைந்துள்ளது. இதன் அருகில் துவாரபாலகர் சிற்பங்கள், விளக்குத்தூண்கள், (கல்வெட்டு பொறிக்கப்பட்டவை), தன் தலையைத் தானே அரிந்துகொள்ளும் நவகண்ட சிற்பங்கள் காணப்படுகின்றன. கோயிலைச்சுற்றி ஆங்காங்கே சிவலிங்கங்களும் அமைந்துள்ளன. இக்கோய்ல் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. வரலாறு, கலைச்சிறப்பு வாந்த இக்கோயிலை உரிய முறையில் பாதுகாக்கவேண்டியது நமது கடமையாகும். பரமேசுவரமங்கலம் என்ற இப்பகுதி தொன்மையான, வரலாற்றுச்சிறப்புமிக்க பகுதியாக விளங்கியது. பல்லவ அரசர்கள் வழிமுறைப்பற்றி குறிப்பிடும் கல்வெட்டு உள்ள வாயலூர், மற்றும் பாலாறு கடலோடு கலக்கும் இடத்தில், வருவசமுத்திரம் என்ற ஊரில் கி.பி.1-2ஆம் நூற்றாண்டில் ரோமானிய நாட்டுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தமைக்கு அகழ்வாய்வில் சான்றுகள் கிடைத்துள்ளன. பரமேசுவரமங்கலம் கோயில் கல்வெட்டுகள் சம்வத்சர வாரியப்பெருமக்கள் தேர்ந்தடுத்தது பற்றியும், பணிகள் பற்றியும் உத்திரமேரூர்க் கல்வெட்டு போல குறிப்பிடுவது சிறப்பானது. இக்கோயிலில் தற்பொழுது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வரலாற்றுச்சிறப்பு மிக்க இக்கோயிலில் உரிய முறையில் வரலாற்றுச்சான்றுகளைப் போற்றினால் வரலாற்று ஆர்வலர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவர்.



அடிக்குறிப்புகள்




  1. பரமேசுவரமங்கலம் திருக்கோயில்கள் - வரலாறு.காம் 91-வது இதழ்

  2. காஞ்சிபுரம் மாவட்டத் தொல்லியல் கையேடு - இரா. சிவானந்தம், தமிழகத்தொல்லியல் துறை - 2008, பக்கம் - 80

  3. A Topographical list of the inscriptions of the Madras Presidency - V. Rangacharya, Page 402-403 (718 to 727)

  4. A.R.E. 1912 No: 260 to 269


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.