http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 138
இதழ் 138 [ அக்டோபர் 2017 ] இந்த இதழில்.. In this Issue.. |
சைவசமய வரலாற்றில் காரைக்கால் அம்மையார் வரலாறு சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. புனிதவதியார் என்ற இயற்பெயர் பெற்ற அம்மையார் பரமதத்தனை மணந்து வாழ்ந்தபொழுது, இறைவனிடமிருந்து பெற்ற மாங்கனி அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையே ஏற்படுத்திவிட்டது. பரமதத்தன் புனிதவதியாரைத் தெய்வ அம்சமாகவே கருதினான். எனவே, புனிதவதியார் இல்லற வாழ்வினைத் துறக்க, பேய் வடிவினைத் தனக்குத் தருதல் வேண்டும் என இறைவனிடம் வேண்டினார். இறைவன் அருளால் 'அற்புதத் திருவந்தாதி', 'திருவிரட்டை மணிமாலை' என்ற இரண்டு பதிகங்களை அளித்தருளினார். இறைவனைக் கண்டு வணங்கிப் போற்றக் கைலாயம் சென்றார். புனிதமான கைலாயமலையைக் காலால் மிதித்து நடக்கக் கூடாது என எண்ணித் தலையால் நடந்து சென்றார். காரைக்கால் அம்மையாரின் இறைபக்தியைக் கண்ட இறைவன் "அம்மையே" என அழைத்துப் போற்றியதைப் பெரியபுராணம் கூறுகிறது. "வரும் இவள் நம்மைப் பேணும் அம்மைகாண் உமையே மற்றிப் (-பாடல் 1774) மகிழ்ந்த இறைவனிடம் நீ ஆடும்பொழுது உனது திருவடியின்கீழ் இருக்கும் பேறு வேண்டும் என வேண்டிப் பெற்றார். மேலும், 'ரத்னசபை' என அழைக்கப்படும் திருவாலங்காட்டில் ஆடும் ஊர்த்துவ நடனத்தைக் கண்டு பாடியவண்ணம் இரு என இறைவனால் அருள்பெற்றார். திருவாலங்காடு திருத்தலத்திற்கும் தலையால் நடந்துபோய் "மூத்த திருப்பதிகத்தையும்" பாடி அருளினார். இறைவன் ஆடவல்லானாகக் காட்சிதரும் சிற்பங்களில் இறைவன் காலடியின்கீழ் எலும்பு உருவம் கொண்டு காரைக்கால் அம்மையார் தாளம் இடுவதைக் காணலாம். அம்மையாரைச் செப்புத் திருமேனிகளிலும் காணலாம். கங்கைகொண்ட சோழபுரம், திருவாலங்காடு, மதுரை போன்ற பல திருக்கோயில் சிற்பங்களில் காரைக்கால் அம்மையாரைக் கண்டு வணங்கலாம். அவரது வரலாற்றில் கயிலை மலையில் காலால் மிதிக்காமல் தலையால் நடந்து சென்றதாகப் பெரியபுராணம் கூறுகிறது. "கைலை வெற்பின் பாங்கணைந் தாங்குகாலின் (பாடல் 1771) பெரியபுராண வரலாற்றைத் தொடர் சிற்ப வடிவங்களாகக் கூறும் தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் யானை - மான் - பாம்பு - புலிகள் நடுவே அம்மை பேய் வடிவம் கொண்டு தலையால் நடந்து செல்வது போன்று சிற்பம் காணப்படுகிறது. இதேபோன்று காரைக்காலம்மையார் தலையால் நடந்து செல்வது போன்ற சிற்பத்தை அண்மையில் சென்னை அருங்காட்சியகத்தில் காண வாய்ப்புக் கிடைத்தது. சிற்பப்பூங்காவில் உள்ள சிற்பம் ஒன்றில் சிவபெருமானும் உமையும் அமர்ந்திருக்க, எதிரே தலையால் நடந்துவரும் பெண் உருவைக் காணலாம்.
அம்மையார் திருவாலங்காடு திருத்தலம் வரும் பொழுதும் தலையால் நடந்து வந்ததாகப் பெரியபுராணம் குறிக்கிறது. "செப்பரும் பெருமை அன்பால் திகழ் திருவாலங்காடாம் (பாடல் 1778) அருங்காட்சியகச் சிற்பம் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் கிடைத்ததாகக் குறிப்பு கூறுகிறது. கோயிலின் விமானத்தில் கபோதவரியில் அமைந்திருந்த சிற்பமாக விளங்குகிறது. இலக்கியமும் சிற்பமும் ஒருங்கிணைந்து காட்டும் காரைக்கால் அம்மையாரின் வரலாற்றுக் காட்சி கண்டு இன்புறத் தக்கது.
|
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |