http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 138

இதழ் 138
[ அக்டோபர் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

THE ORNAMENTAL DOORFRAMES IN SRI RANGANATHA SWAMI TEMPLE, SRIRANGAM – REMNANTS OF EARLY CHOLA ARCHITECTURE
புள்ளமங்கை கோபுரம்
பெரியபுராணமும் கற்சிற்பமும் (காரைக்கால் அம்மையார்)
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்! - 2
விசலூர் ஆய்வுப்பயணம்
கலைக்கோயில்களில் கல்கியின் கதை மாந்தர்கள்
சந்திரபுரத்து நடுகற்கள்
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் -3
இதழ் எண். 138 > பயணப்பட்டோம்
சந்திரபுரத்து நடுகற்கள்
ச.சுந்தரேசன்

கடந்த 3.10.2017 அன்று காலை 11 மணியளவில் டாக்டர் இரா. கலைக்கோவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் திருப்பத்தூர் அருகில் சந்திரபுரம் என்னும் ஊரின் ஏரிக்கரை அருகே நடுகல் ஒன்று கிடைத்திருப்பதாகவும், அதன் அருகே கல்வெட்டுப் பலகையும் இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது எனவும், சந்திரபுரம் சென்று அந்நடுகல் தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படம் எடுத்து வருமாறும் பணித்தார். நாளிதழின் நறுக்கினை மின்னஞ்சலில் அனுப்பியும் வைத்தார். கரும்புத் தின்னக் கூலியா என மகிழ்ந்து மதிய உணவை முடித்து விட்டு திருப்பத்தூர் பயணத்தைத் துவங்கத் திட்டமிடலானேன்.

 





 



தொடர் மழை காரணமாக இன்றைய தினம் நமது வேலைக்குச் சாதகமாக இருக்குமா என்ற ஐயம் மனதில் தோன்றினாலும் 'சரி அவ்விடம் சென்று பார்த்துக் கொள்ளலாம்' என்ற எண்ணம் மனதில் தோன்றி மறைந்தது. ஆவின் நிறுவனத்தில் பணி புரிந்த போது பால் உற்பத்தியாளர் சங்க ஆய்விற்காகப் சென்றிருப்பதால் சந்திரபுரம் ஊர் எனக்குப் புதிதல்ல. இருப்பினும் அவ்விடத்தை அடையத் தடங்கள் சரியாக நினைவில் இல்லாததால் ஆம்பூர் சரகப் பால் சேகரிப்புக்குழுத் தலைவர் திரு. நரசிம்மனைக் கைப்பேசியில் தொடர்பு கொண்டு சந்திரபுரத்திற்குச் செல்லும் சாலை விபரம் கேட்டேன். ஆனால் அவரோ நீங்கள் திருப்பத்தூர் வந்து விடுங்கள். அங்கிருந்து நானே உங்களைச் சந்திரபுரம் அழைத்துச் செல்கிறேன் என்று நம்பிக்கையளித்தார்.



பயணத் திட்டத்தின்படி எனது ஊரிலிருந்து இருசக்கர வாகனத்தில் 20 கி.மீ சென்று வேலூரில் திருப்பத்தூர் செல்லும் பேருந்தினைப் பிடிக்க வேண்டும். மழையும் நின்று பயணத்திற்கு ஊக்கமளித்தது. வேலூரில் திருப்பத்தூர் செல்லும் பேருந்தில் அமர்ந்து பயணத்தைத் தொடர்ந்தேன். பேருந்து திருப்பத்தூர் சென்றடைய இரண்டு மணி நேரம் ஆகலாம். வாருங்கள்…அதுவரை தரவுகளின் அடிப்படையில் தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழக்கு எவ்வளவு சிறந்து விளங்கியது என்பது பற்றிச் சிறிது பேசுவோம்.



தமிழகத்தில் நீத்தார் வழிபாடு:



இறந்துபட்ட முன்னோர்களை வழிபடும் வழக்கம் மிகத் தொன்மையானது. உலகம் முழுவதும் இவ்வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது என்பதனை ஆய்வாளர்கள் பல்வேறு கால கட்டங்களில் விளக்கியுள்ளனர். இறந்துபட்ட முன்னோர்களின் வழிபாடே பிற்காலத்தில் கோயிலமைப்புகளுக்கு முன்னோடியாகவும், கடவுளர் உருவங்களின் தோற்றத்திற்கு அடிப்படையாயின என்ற ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள் இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 



பண்டைய தமிழகத்தில் தமிழரின் வாழ்க்கை மற்றும் வழிபாட்டு முறைகளைப் பற்றி தொல் இலக்கியங்களின் வழி அறியப்படும் செய்திகளுக்குச் சான்றுகளாகப் பாறைகளால் ஆன நெடுங்கற்கள், கல்பதுக்கைகள், கல்திட்டைகள், தொப்பிக்கல், கல்வட்டங்கள், ஈமப்பேழைகள், முதுமக்கள்தாழிகள், குடைவரைத் தாழ்வறை, நடுகற்கள், போன்ற தொல் எச்சங்கள் கேரளம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் காணக் கிடைக்கின்றன. 



தமிழகத்திலும், கேரளத்திலும் கிடைக்கப் பெற்ற சில தொல் ஈமச் சின்னங்கள் (படங்கள் இணையத்திலிருந்து பெற்றவை)



1.    நெடுங்கல் (Menhirs):

 





 



 



வேம்பூர், ஆண்டிப்பட்டி





 



 





 



 



பல்லடம், திருப்பூர்





 



 





 



 



சிங்காரிப்பாளையம், திருப்பூர்



 



2.    கல் பதுக்கைகள் (Slab cists):

 





 



3.    கல்திட்டைகள் (Dolmenoid cists):

 





 



 



மல்லசந்திரம், கிருஷ்ணகிரி





 



 





 



4.    தொப்பிக்கல் அல்லது குடைக்கல் ( Hood stones):

 





 



 



செருமங்காடு, திருச்சூர், கேரளா



 



5.    கல் வட்டங்கள் (Cairn circles):

 





 



 



சித்தன்னவாசல், புதுக்கோட்டை



 



 





 



 



கொடுமணல், சென்னிமலை



 



6.    ஈமப் பேழைகள் (Sarcophagi):

 





 



7.    முதுமக்கள் தாழிகள் (Burial urns):



 





 



 



முதுமக்கள் தாழி, மூர்த்திக்குப்பம்



 



8.    குடைவரைத் தாழ்வறை (Rock cut cave tomb):



 





 



 



கொச்சி, கேரளா



 



 





 



9.    நடுகற்கள் (Hero stones):



நடுகற்கள், நெடுங்கல்லின் வளர்ந்த நிலை ஈமச்சின்னமாக  இருக்கலாம். 

 





 



 



ஆநிரை மீட்டல், திருவண்ணாமலை பொ.கா. ஆறாம் நூற்றாண்டு





 



 





 



 





 



 



வீரனும், நாயும் - எடத்தனூர், திருவண்ணாமலை (பொ.கா. 624)





 



 





 



 



இந்தளூர், விழுப்புரம், பொ.கா. ஆறாம் நூற்றாண்டு



 



 





 



இவை அனைத்தும் மூதாதையர் வழிபாடு மற்றும் நீத்தார் வழிபாட்டினைச் சார்ந்த நினைவுச் சின்னங்கள் ஆகும். இவை அமைப்பாலும் உள்ளடக்கத்தினாலும் தமிழ் மக்களின் மிக உயர்ந்த பண்பாட்டுச் சிறப்பை எடுத்துரைக்கின்றன.



மேற்குறிப்பிட்ட ஒன்பது நினைவுச் சின்னங்களுள் தமிழ்நாட்டில் பெருமளவில் காணக் கிடைப்பது நடுகல் எனலாம். இப் பண்பாட்டுச் சிறப்பினைச் சங்க இலக்கியங்களிலும் அதனைத் தொடர்ந்து பிற்கால இலக்கியங்களிலும் நடுகல் வழிபாடு என்னும் சிறப்பைக் காணலாம். இந்நடுகல் வழிபாட்டு மரபு தென்னிந்தியாவில் பொ.கா.மு மூன்றாம் நூற்றாண்டு அளவில் தோன்றிப் பின்னாளில் நாயக்கர் மரபு மன்னர்கள் காலம் வரை தொடர்வதைக் காணலாம்.



நடுகல் வழிபாடு:



இவை வீரன் கல், வீரக்கல் எனவும் அழைக்கப் பெறுகின்றது. வீரர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக இறந்தவர் நினைவாகவும் நடுகல் நடும் வழக்கம் இம்மண்ணில் நிலவியுள்ளது. நடுகல் வழிபாடு என்பது போரில் இறந்துபட்ட வீரர்க்கு அவனது வீரச்செயலினை உலகறிய செய்யும் பொருட்டு ஓர் கல்லினை நட்டு அதில் அவனது உருவத்தை செதுக்கி அவன் பெயரையும், வீரச்செயலையும் பொறிப்பர்.  அக்கல்லினை நீராட்டி, நெய் பெய்து, வாசனைப் புகை காட்டி விளக்கேற்றுவர். அதற்குப் பூச்சொரிவர், மாலை சூட்டுவர், மயிற்பீலி சாத்தி காப்பு நூல் கட்டுவர். ஆட்டுக் கிடாய்களைப் பலியிட்டுத் துடிப்பறை ஒலிப்பர், எண்ணெய் பூசிக் கள் படைப்பர். 



அத்துடன் அவர்கள் விரும்பிய உணவைப் படையல் இட்டு உறவினர்களும் உறவினர் அல்லாதோரும் வழிபட்டு ஈமக்கடனைச் செலுத்தினர். இச்சடங்கு செய்யப்படும் இடம் அவ்வீரன் இறந்துபட்ட போர்க்களமாகவோ அல்லது அவனைப் புதைத்த இடமாகவோ இருக்கலாம். 



நடுகற்கள் பெரும்பாலும் ஊர்களின் புறத்தே காணப்படுகின்றன. ஊரகத்தே அமைவதில்லை. ஒரே இடத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நடுகற்கள் காணப்படுவதும் உண்டு. ஓரே போரில் இறந்த பல போர்வீரர்களுக்கும் நடுகற்கள் ஒரே இடத்தில் காணப்படுவதும் உண்டு.



நடுகற்கள் கிடைக்கப் பெற்ற இடங்கள்:



இது வரை கிடைத்துள்ள நடுகற்கள் திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பல்லவர், பாண்டியர், கங்கர், சோழர், நுளம்பர், போசளர், விஜயநகர மன்னர் ஆகிய அரசரது காலத்து நடுகற்கள் கிடைத்துள்ளன. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம் புலிமாங்கோம்பையில் பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டன. இந்நடுகற்களே இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டவற்றுள் மிகப் பழமையானவை என அறியப்படுகிறது.



பிறவகை நடுகற்கள்:



மேலும் ஆநிரை மீட்டோர் கல், வடக்கிருந்தோர் கல், பத்தினிப் படிமக்கல், கடலுள் மாய்ந்தோர் கல், ஊர்காத்தான் கல், பெண் மீட்டான் கல், அறம் காத்த நடுதல் கல், கழி பேராண்மைக் கல், சாவாரப் பலிக்கல், புலிக் குத்திக் கல், பன்றிக் குத்திக் கல், குதிரைக் குத்திக் கல், எருது பொருதார் கல், மாடு பொறித்த கல், யானைப் போர் நடுகல், நாய்க்கு நடுகல் என பல்வேறு சமுதாயக் காரணங்களுக்காகவும் நடுகல் எடுக்கப்பட்டமை அறிகிறோம். கோழிச்சண்டையில் உயிர் நீத்த கோழிகளுக்கும் கோழிக் கற்கள் என்ற பெயரில் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளமை வியப்பைனை அளிப்பதாக உள்ளது. 



நடுகல் பிற பெயர்கள்:



திருவண்ணாமலை, வேலூர், சேலம், தர்மபுரி, மாவட்டங்களில் நடுகற்கள் வேடியப்பன் கல் என்றழைக்கப்படுகின்றன. "வேடர்”, "கிருஷ்ணாரப்பன்”, "மீனாரப்பன்”, "சன்யாசியப்பன்” என்று பல பெயர்களிலும் நடுகற்கள் அழைக்கப்படுகின்றன. சிறை மீட்டான் கோயில் "ஊமை வேடியப்பன்”, "இரட்டை வேடியப்பன்”, "சாவுமேட்டு வேடியப்பன்”, "நத்தமேட்டு வேடியப்பன்” எனப் பல பெயர்களில் நடுகற்கள் சுட்டப்படுகின்றன. 



இதோ திருப்பத்தூரில் பேருந்து நிலையத்தை அடைந்து விட்டோம்! நண்பர் நரசிம்மனுடன் சந்திரபுரம் நோக்கி செல்ல ஆரம்பித்தேன்.



சந்திரபுரம், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள சிறு கிராமம் ஆகும். திருப்பத்தூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள பாரண்டப்பள்ளி பிரிவிலிருந்து 4 கி.மீ பயணித்தால் சந்திரபுரம் ஊரை அடையலாம். அண்மையில் பெய்துள்ள மழை சாலையை அறுத்துச் சென்றிருந்ததால் கார் ஊர்ந்து செல்ல வேண்டி இருந்தது. 



ஊர் மக்களிடம் நடுகல் தொடர்பாக விசாரித்த போது அவ்வூர் ஏரிக்கரையின் தென்புறத்தே இருப்பதாகச் சொல்லி வழி காட்டினர். நடுகல் அமைந்திருக்கும் திரு. ஜெயக்குமார் என்பவரது இடத்தை அடைந்த போது சரியாக 4 மணி.

 





 



 



நடுகல் அருகாமையில் உள்ள ஏரிக்கரை



 



நடுகல் அமைவிடம்:



சந்திரபுரம் ஊரின் தென் புறத்தே உள்ளது சந்திரபுரம் ஏரி. ஏரிக்கரையின் மதகு ஒன்றின் தென் திசையில் இருக்கும் திரு. ஜெயக்குமார் என்பவரது நிலத்தில் மையப்பகுதியில் நாம் தேடிச் சென்ற நடுகல் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள நடுகல்லைச் சுற்றி அரணாக பூவரசு மரங்கள் நின்றிருக்க அவற்றின் வேர்ப்பகுதி மழை நீரினால் அரிக்கப்பட்டு வெளிப்பட்டிருந்தது. 



 





 



 



நடுகல் அமைவிடம் ஏரிக்கரையின் பின்னணியில்



 



நில மட்டத்திருந்து சிறிதே உயர்ந்த மேட்டில் நடுகல் அமைக்கப்பட்டுள்ளது. அதனைச் கீழ்ப்புறம் செவ்வகமான கல்லைப் பாவியுள்ளனர். தென்புறத்தில் ஒரு கற்பலகை கற்சுவரைத் தாங்கி நிற்கிறது. நடுகல்லினைப் பாதுகாக்கும் வண்ணம் கிழக்கு தவிர மூன்று பக்கங்களிலும் கற்பலகைகள் மண்ணில் புதைக்கட்டிருந்தவற்றுள் இடதுபுறக் கற்பலகை கீழே சாய்ந்து உள்ளது. இடதுபுறத்தில் கல் அணைவு ஏதும் இல்லாத காரணத்தால் பிடிமானமின்றி  வடதிசைப் பலகை விழுந்திருக்கக் கூடும். நடுகல்லின் எதிரே பூசைக்காக, விளக்கெரிக்கத் தேவையான பொருட்கள் மழையில் நனைந்து காணப்பட்டன. 



 





 



 



நடுகல் கோட்டம்



 



கீழே சாய்ந்துள்ள கற்பலகை ஐந்து துண்டுகளாக உடைந்து காணப்படுகிறது.  அதில் 20 வரிகளுடன் கல்வெட்டுப்  பொறிப்புகள் உள்ளன. 



 





 



 



கல்வெட்டுப் பலகை



 



இப்போது சந்திரபுரத்து நடுகற்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 

நடுகல் I:

 





 



 



சந்திரபுரத்து முதல் நடுகல்



 



செவ்வக வடிவில் அமைந்துள்ள இந்நடுகல் 2 அங்குல கனமுள்ள கற்பலகையில் அமைக்கப்பட்டுள்ளது. நடுகல்லின் நீளம் மேற்பகுதியில் 102.5 அங்குலமும், கீழே 91.75 அங்குலமும் ஆகும். இதன் உயரம் தென்புறம் 54.5 அங்குலமும் வடபுறம் 57.5 அங்குலமும் உள்ளது. நடுகல்லின் மையத்தில் பொறிக்கப்பட்டுள்ள வீரனின் உயரம் 46 அங்குலமாகவும், அகலம் 36 அங்குலமாகவுமுள்ளது.

 





 



 



நடுகல்லில் வீரனின் உருவம்



 



நெடிய போர்வாளை உயர்த்தி இடது கையை இடுப்பில் ஊன்றிய நிலையில் நிற்கும் வீரனின் வலது கை வாளினை இறுகப் பற்றியுள்ளது. வீரனின் தலைமுடி கொண்டை போன்று கட்டப்பட்டுள்ளது. நீண்ட செவிகளில் காதணியுடன் காணப்படுகின்றார்.  கழுத்தை ஒட்டியவாறு ஆபரணம், மார்பில் முத்துமாலை. இரு கைகளிலும் தோள்வளை, கைகளிலும், காலிலும் காப்பு அணியப் பெற்றுள்ளார். இடையாடையுடன் இடைக்கச்சின் முடிச்சு அழகுறக் காட்டப்பட்டுள்ளது.



வீரனின் வலது கணுக்காலிலும், மார்பிலும், தலையிலும் இடது புறத்திலிருந்து மூன்று அம்புகள் பாய்ந்து துளைத்த நிலையில் இச்சிற்பம் காட்டப்பட்டுள்ளது.



வீரனின் இருபுறத்திலும் சிற்பத்தொகுதிகள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. வலதுபுறம் நான்கு தொகுதிகளும், இடது புறத்து நான்கு தொகுதிகளும் இவ்வீரன் இறந்த விதத்தினையும், அதன் பின் அவனுக்கு அளிக்கப்பட்ட சிறப்புகளையும் கூறுவனவாகக் கொள்ளலாம்.



வலது புறத்தின் மேற்புறத்தில் நான்கு குதிரைகள் பாய்ந்தோடுவதையும்  அதன் கீழே ஒரு ஆடவர் தன் தோளில் காவடி சுமந்து வருவதாகவும், அவர் முன் வீரனின் பக்கம் முகம் திருப்பியவராய் ஒரு பெண். அவரது வலக்கையில் நீண்ட கைப்பிடியுடன் உள்ள பொருள் கண்ணாடி ஆகலாம். 

 





 



 



குதிரை வீரர்களும், காவடி முன் செல்லும் பெண்ணும்



 



கீழே இரு ஆடவர் பல்லக்கு சுமந்து வருபவராகக் காட்டப்பட்டுள்ளனர். 

 





 



 



சிவிகை தாங்குவோர்



 



இதனையடுத்து தரையையொட்டிய பகுதியில் இருவர் குதிரையருகே நிற்க, குதிரையின் முன்னால் கொற்றக் குடை பிடித்தவாறு ஓர் ஆடவர் நடந்து செல்கிறார். 

 





 



 



குதிரையில் வீரன்



 



வீரனின் இடப்புறத்துத் தொகுதிகளில் மேற்புறத்தில் அமர்ந்த நிலையில் உள்ள ஆடவர் சிற்பமும் அவர் இருபுறத்திலும் மங்கையர் சாமரம் வீசுவது போலும் காட்டப்பட்டுள்ளது.

 





 



 



சாமரம் வீசும் காட்சி



 



அதன் கீழ்ப்புறம் உள்ள தொகுதியில் போர்க்களக் காட்சி விரிகிறது. வலதுபுறம் நான்கு வீரர்கள் வில்லேந்தி போரிடும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இடதுபுறத்தில் இரண்டு வீரர்கள் வில்லேந்தி போரிடும் நிலையில் நிற்கின்றனர்.

 





 



 



போர்க்களத்தில் வீரர்கள்



 



இதையடுத்து கீழே மூன்று மனிதர்கள் ஊதுகுழல் இசைத்தவாறு முன்னே செல்ல அவர்களைத் தொடர்ந்து தாளமிசைத்து ஒருவர் செல்கிறார். 

 





 



 



இசைக் கலைஞர்கள்



 



தரையை ஒட்டிய தொகுதியில் ஒருவர் சேகண்டி வாசிக்க மற்ற மூவர் மத்தளம் இசைத்தபடி செல்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.



 





 



 



மத்தளம் இயம்புவோர்



 



நடுகல் II:



இந்நடுகல் 2 அங்குல கனமுடைய 47 அங்குல நீளம், 51 அங்குல உயரமும்  உடைய கற்பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. வீரன் 37.5 அங்குல உயரமும், 28 அங்குல அகலமும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளான்.

 





 



 



சந்திரபுரத்து இரண்டாவது நடுகல்



 



முதல் நடுகல்லின் முன்புறம் கிழக்கே சுமார் நான்கு அடி தூரத்தில் மற்றுமொரு நடுகல் சிற்பம் காணப்படுகிறது. பெரிய நடுகல் கோட்டத்திற்கு எதிரே முன்புறம் சிறிது சாய்ந்து காணப்படும் நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ள வீரன் உயர்த்திய வாளுடன் நின்ற நிலையில் அவனது வயிற்றில் அம்பொன்று துளைத்து மறுபக்கம் வெளிப்படுவதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 



இந்நநடுகல் சிற்பத்தின் கீழ்ப்பகுதி தரையைத் தொடும் இடத்தில் மக்கள் ஊர்வலமாகச் செல்வது காட்டப்பட்டுள்ளது.



நடுகல் கோட்டத்திலிருக்கும் வீரனையும், இந்நடுகல்லினையும் ஊரார் முறையே கோடியூரப்பன், முனீஸ்வரன் என்று அழைத்து ஆண்டு தோறும் பூசைகள் செய்து ஆடுகள், கோழிகளை பலியிட்டு வழிபட்டு வருகின்றனர்.



இந்த நடுகல் கோட்டம் தமிழகத்தில் இதுவரை கிடைக்கப் பெற்றவற்றுள் அளவில் பெரியது எனவும், அதிக எண்ணிக்கையில் சிற்பங்களைக் கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதே அளவினவாகவும், இதை விடச் சற்றுப் பெரியதாகவும் கூட குன்னூரை அடுத்துள்ள சிற்றூர் பகுதிகளில் நடுகற்கள் காணப்படுகின்றன. இந்நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் சொல்லும் வரலாறு, உடைந்து கிடக்கும் கல்வெட்டுப் பலகையின் தரவுகள் ஆகியவற்றை மேலாய்வுகள் வழி நெறிப்படுத்தலாம். 



 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.