http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 139
இதழ் 139 [ டிசம்பர் 2017 ] இந்த இதழில்.. In this Issue.. |
'பிரகதீசுவரம்' என்ற பிழையான பெயரால் கூசாமல் அழைக்கப்பட்டு வரும் இராஜராஜீசுவரம் தமிழ்நாட்டுக் கலையறிஞர்களின் தலைநிமிர்த்தும் கட்டுமானம். இக்கோயில் விமான முதல் தளச் சாந்தார நாழியில் காலக் கவிதைகளாய்ப் படைக்கப்பட்டிருக்கும் ஓவியக்காட்சிகளில் தம் வரலாறும் இடம்பெறும் பேறுற்றவர் சுந்தரர். சிவபெருமானும் சேரமான் பெருமாளும் அவர்பால் கொண்ட 'நட்பு' அவருக்கு அந்தப் பேற்றை வழங்கியது.
அஞ்சைக்களத்தில் மகிழ்ந்திருந்த சுந்தரரைக் கயிலாயத்திற்கு அழைத்துக் கொள்ளும் எண்ணம் இறைவனுக்கு வந்ததால் அழைத்து வர ஆணையிட்டார். யார் வந்து தகவல் தந்து எங்ஙனம் அழைத்துச் சென்றார்கள் என்பதைச் சுந்தரரே தம்முடைய திருநொடித்தான்மலைத் திருப்பதிகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். கயிலாயத்திலிருந்து வந்த யானையின் மீது இவர்ந்து சுந்தரர் வான்வழி ஏகும் காட்சிக்கு இரண்டாம் பத்தியில் இருமடங்கு இடம் தரப்பட்டுள்ளது. அவர் வாழ்க்கையின் தலையாய திருப்புமுனை இதுவென்பதை மிகத் தெளிவாக அறிந்திருந்த இராஜராஜரின் சிந்தனைக் கோடுகள் ஒதுக்கீடு செய்த அளவல்லவா! அதனால்தான், தடுத்தாட்கொண்ட காட்சியினும் வழக்குரைத்த காட்சியினும் வான்வழியேகும் காட்சிக்கே பேரிடம் கிடைத்துள்ளது. கை, கால் தேய, நரம்பும் எலும்பும் தெரிய, குருதி கசிய, இறைவனைத் தேடியவர் அப்பர். அந்தப் பெருமகனை 'அங்கு வா, இங்கு வா', என்றெல்லாம் அலைக்கழித்துத் திருவடி முத்திரை தந்த இறைவன், காட்சி கொடுப்பதற்கே கரைய வைத்தார். செல்லப்பிள்ளையாய் உமாவிடமே பாலருந்திய சம்பந்தரைக்கூட நல்லூர்ப் பெருமணத் தீக்குள் நுழைத்தே கயிலாயம் சேர்த்தார் கடவுள். ஆனால், தம்மையே பொய்ச் சான்று கூற வேண்டியவரை, நம்பியவர்களைக் கைவிட்டவரை, ஊரே பஞ்சத்தில் தத்தளித்தபோது பெண்டாட்டிக்குப் பசிக்கிறதென்று நெல் கேட்டவரை, யானையனுப்பிக் கயிலாயத்திற்கு வரவழைத்தாரே சிவபெருமான், அவரது அச்செயல் நியாயமானதுதானா? சிந்தனையைத் தூண்டும் இந்தக் கேள்விக்கு இராஜராஜர் விடை வைத்திருந்தமையால்தான் சுந்தரர் வாழ்க்கை இராஜராஜீசுவரத்தில் சுவர்க்காட்சியானது. தம் அடியவர்களை மிக நேசித்தவர் சிவபெருமான். அவர்களை மிகச் சோதித்தவரும் அவரேதான். யாரைச் சோதிப்பது, எதற்குச் சோதிப்பது என்பதெல்லாம் அவர் விருப்பம். ஆனால், அனைத்திற்கும் காரண, காரியங்கள் உண்டு. சுந்தரரிடம் சிவபெருமானுக்குச் சினம் இல்லாமல் இல்லை. நட்பு காரணமாகவே சுந்தரரின் தவறுகளைப் பொறுத்துக்கொண்டவர், தவறுகள் எல்லை மீறிய காலத்துத் தண்டனை தரவும் தயங்கவில்லை. பார்வையிழக்கச் செய்து பரிதாப ஓலமிட்டுச் சுந்தரரைப் பாட வைத்தவர் அவர்தானே? உளோம் போகீரென்று ஒதுக்கலாக நின்று கொண்டதும் உண்டுதானே? சுந்தரர் கேட்டதையெல்லாம் தந்தாலும் அவரை வழிப்படுத்தும் முயற்சிகளிலும் இறைவன் ஈடுபட்டதைப் பல நிகழ்ச்சிகள் உணர்த்தவல்லன. சங்கிலியிடம் சுந்தரரைச் சிக்க வைத்தமை, தாம் தூதுபோக நேர்ந்த அவலத்தைக் கலிக்காமர் வழி உலகுக்கும் சுந்தரருக்கும் உணர்த்தியமை, தமக்கு மட்டுமே நெல் கேட்ட சுந்தரை ஊர் முழுக்க நெல்லளிக்க வைத்தமை என மிகுதிக்கண் மேற்சென்று இடித்து நகுதற் பொருட்டன்று நட்பென்பதைச் சுந்தரருக்கும் உலகுக்கும் உணர்த்தியவர்தான் இறைவன். அப்பருக்கும் சம்பந்தருக்கும் வராத, 'யானையுலா மரியாதை', சுந்தரருக்குக் கிடைத்ததன் காரணமறிந்தவர் இராஜராஜர். அப்பரும் சம்பந்தரும் இறைவனைப் பாடியவர்கள். ஆங்காங்கே இறையடியார்களையும் பொதுவில் பாடியவர்கள். தனியடியார், தொகையடியார் என்று தமக்கு முன்னிருந்தவர்களையும் தம் காலத்தவர்களையும் பற்றி ஒருவர்விடாது தகவல் தேடி, தரவுகள் சேகரித்து, ஒரு தேர்ந்த ஆய்வாளர் போலத் திருத்தொண்டத்தொகை பாடிய சுந்தரருக்கு இறைவன் அளித்த மிகப் பெரிய மரியாதையே யானையுலா. இது நட்பிற்காக நிகழ்ந்ததன்று. 'இறைப்பற்றின் காரணமாக இகலோகத்தில் மானிட இனம் எத்தகு அநுபவங்களையெல்லாம் பெற்றுய்கிறது' என்பதை வாழ வருவோருக்குத் தலைமுறைத் தலைமுறைப் பாடமாக நெஞ்சில் ஊன்றவைக்கும் அரிய முயற்சியென விளைந்த ஆய்வுப் பிழிவிற்கு இறைவனளித்த பரிசு அது. இறைத் தொண்டர்களைப் பற்றிய இத்தனை அருமையான தொகுப்பு இந்தியாவில் வேரூன்றிய வேறெந்த சமயத்திற்கும் கிடைக்கவில்லையென்பது கருதத்தக்கது. தமிழ்நாட்டின் தனிப்பெருஞ் சமயங்களாகக் கிளைத்து விரிந்த சைவம், வைணவம் இரண்டிலும் சைவத்திற்கு மட்டுமே கிடைத்த தனிப்பெருமை இந்தத் திருத்தொண்டத்தொகை. உலகளாவிய நிலையிலும் தனித் தொண்டர், தொகைத் தொண்டர் என்று இருபெரும் சிறப்புப் பிரிவுகளின் கீழ் இறையடியார்கள் தொகுக்கப்பட்டு இலக்கிய வாழ்வு பெற்றது தமிழ்நாட்டில் மட்டும்தான்; சைவசமயத்தில் மட்டும்தான். இன்றுவரையும் நீடிக்கும் இத்தகு அரிய பெருமையை இந்தத் துணைக்கண்டத்திற்கு, இனிய தமிழ்நாட்டிற்குத் தென்னாடுடைய சிவத்திற்கு வழங்கிய சுந்தரரை, அந்த சிவபெருமானே யானையனுப்பி உரிய மரியாதைகளுடன் கயிலாயத்துக்கு வரவழைத்துச் சிறப்பித்ததைக் கருத்தில் கொண்டே, இராஜராஜீசுவரத்துச் சாந்தார நாழியில் அந்த உலாவையும் கயிலாய மரியாதையையும் காட்சிகளாக்கித் தாமும் பெருமையுற்றுச் சைவத்திற்கும் பெருமை சேர்த்தார் இராஜராஜர். கயிலாயஉலா ஓவியக்காட்சியில் வலப்புறம் வெள்ளை யானையும் இடப்புறம் குதிரையும் காட்டப்பட்டுள்ளன. யானையின் மேல் சுந்தரரும் குதிரையின் மேல் சேரமான் பெருமாளும் பயணிக்கின்றனர். யானை பேரளவினதாக கம்பீரமாகக் காட்டப்பட்டுள்ள வெள்ளை யானையின் மூன்று கால்கள் கடல் அலைகளிலும் ஒரு கால் நடைக்கென உயர்த்தி மடக்கிய நிலையிலும் உள்ளன. வான்வழிப் பயணத்தைத் தொடங்குமாறு போலக் காட்டப்பட்டுள்ள யானையின் நான்கு கால்களிலும் மணிச்சரங்கள். முன்னிரண்டு கால்களில் முழங்கால்களுக்கு மேலும் பின்னிரண்டு கால்களில் முழங்கால்களுக்குக் கீழுமாக உள்ள இச்சரங்கள் நன்கு அலங்கரிக்கப்பட்ட தோல்பட்டையிலிருந்து தொங்குகின்றன. முதுகிலிருந்து நான்கு அலங்கார மணிச்சரங்கள் உடலின் இருபுறத்தும் முன் பின்னாய், ஈரிரு சரங்களாய் இறங்கி, முன் சரங்கள் கழுத்தைச் சுற்றியும் பின்சரங்கள் வாலிற்கடியில் சுற்றியும் இணைகின்றன. கீழ்ச்சரங்களில் மணிகளும் அழகிய வெண்கவரிக் குஞ்சலங்களும் அடுத்தடுத்துச் சேர்க்கப்பட்டுள்ளன. அலங்கரிக்கப்பட்ட தோள்பட்டையிலிருந்து தொங்கும் இச்சரங்கள் எழிலுடன் அமைய, மேற்சரங்கள் மணிச்சரங்களாக உள்ளன. முதுகிலிருந்து அடிவயிற்றைச் சுற்றி மறுபக்கம் முதுகேறி இணையும் அழகிய வார்ப்பட்டை, முதுகுப்பகுதியில் முன், பின் மணிச்சரங்கள் இணையும் இடத்தில் தானும் இணைகிறது. யானையின் கழுத்தைச் சுற்றியும் முத்துக்கள் இடையிட்ட செவ்வகப் பதக்கங்கள் பெற்ற அழகிய ஆரம். மூன்று கூறுகளாகப் பிரிந்துள்ள இருபுறத் தந்தங்களிலும் வாய்ப்பகுதியிலிருந்து பிரிவின் தொடக்கம்வரை பூண்கள் அணியப்பெற்றுள்ளன. நெற்றியின் எழிலார்ந்த முகபடாம், பல மணிகள் பதித்த பதக்கங்கள் நடுப்பகுதியில் அமைய, சுற்றிலும் முத்துச்சரத் தொங்கல்களும் மணியார வளைவுகளும் கொண்டு சிறக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்முத்துத் தொங்கல்கள் மூன்று சரங்களாக இறங்கி முனைகளில் பருத்த முத்துக்களுடன் முடிகின்றன. அழகிய தோரணம் போலப் பதக்க முகபடாத்தைச் சுற்றியும் அமைந்துள்ள இச்சரங்கள் தமிழரின் தோரண அலங்காரத் திறன் காட்டுகின்றன. முதுகின் நடுப்பகுதியிலிருந்து இருபுறத்தும் சங்கிலியால் கோத்த பெருமணிகள் பக்கத்திற்கொன்றாகத் தொங்க, வலப்புற மணி யானையின் வேகத்திற்கேற்பப் பின்காலின் தொடையருகே வீசப்பட்டுள்ளது. சுந்தரர் யானையின் முதுகில் அழகிய இருக்கை. அதன் மேல் சம்மணமிட்டுள்ள சுந்தரரின் கழுத்தில் சரப்பளியுடன், நீள் முத்துமாலையும் உள்ளது. கருந்தாடியுடன் காட்சிதரும் அவரது கையணிகளாய் ருத்திராக்க, முத்து வளைகளுடன், கடகவளைகளும் உள்ளன. செவிகளில் குண்டலங்கள், செவிப்பூக்கள். நன்கு கருத்த தலைமுடி தமிழம் கொண்டையாகப் பூச்சரங்களுடன் முடியப்பட்டுள்ளது. இடுப்பில் அரைப்பட்டிகையுடன் சிற்றாடை. இடுப்புச் சிற்றாடையின் முடிச்சுகள் வலப்புறம் நெகிழ, செண்டுதாளம் இயக்கும் விரல்களில் மோதிரங்கள். மயக்கம் நிறைந்த சுந்தரப் பார்வை. கடல் யானையின் மூன்று கால்களைத் தழுவி நிற்கும் சுருள்சுருளான கடலலைகளைச் சிற்றலைகளாகவும் பேரலைகளாகவும் பிரித்துக் காட்டியுள்ள சோழ ஓவியர்கள், இவ்வலைகளினூடே, பல அளவுள்ள வகைவகையான மீன்கள், முதலைகள், நண்டுகள், ஆமை, சிப்பி, சங்கு எனப் பல்வகைக் கடல்வாழ் உயிரினங்களையும் படம்பிடித்துள்ளனர். இவையனைத்துமே அங்கும் இங்கும் செல்வனவாய்ச் செயற்பாட்டிலுள்ளமை குறிப்பிடத்தக்கது. வாணன் யானையின் வாலை, இரண்டு கைகளாலும் இறுகப் பிடித்தபடி கால்களை மடக்கித் தொங்கிய நிலையில் கீழ் நோக்கிய பார்வையுடன் ஒரு மனிதர் காட்டப்பட்டுள்ளார். நெற்றியின் நடுவே இணைந்துள்ள புருவங்களுடன், இடையில் சிற்றாடை அணிந்துள்ள அவரது வலக்கால் யானையின் வாலைச் சுற்றி வளைத்திருக்க, இடக்கால் முழங்காலளவில் மடங்கி நீண்டுள்ளது. யானையின் வால் பற்றிப் பயணம் செய்யும் இம்மனிதரை இவ்வோவியங்கள் பற்றி எழுதியுள்ள அறிஞர்கள் பலர் குறிக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. யாரிவர்? சுந்தரரே தம் திருநொடித்தான்மலைத் திருப்பதிகத்தில் இவரை அடையாளம் காட்டுகிறார். 'அரகர என்னும் ஒலியும் ஆகமங்கள் அறிவார் அறிந்து பாடும் தோத்திரங்களின் இனிய ஒலியும் விரவிய வேத ஒலியும் விண்ணெலாம் வந்து எதிர்ந்து இசைக்க, மேன்மைக்குரிய கணத் தலைவனான வாணன் என்பான் வந்து, வழி சொல்லி எனக்கு ஏறுவதற்கோர் மேன்மைமிகு யானையும் அளிக்குமாறு செய்தான் நொடித்தான்மலை இறைவன்' எனும் பொருள்பட, 'வரமலி வாணன்வந்து வழி தந்தெனக் கேறுவதோர் சிரமலி யானைதந்தான் நொடித் தான்மலை உத்தமனே' என்று பாடுகிறார் சுந்தரர். கயிலைக்குச் சுந்தரரை உரிய மரியாதைகளுடன் அழைத்து வர முடிவு செய்த இறைவன், வெள்ளை யானையுடன் சென்று சுந்தரரை அதில் ஏற்றி வருமாறு கணத் தலைவர்களுள் ஒருவரான வாணனுக்கு ஆணையிட்டார். ஆணையைச் சிரமேற் கொண்டு அஞ்சைக்களம் வந்த வாணன், சுந்தரரை வணங்கித் தகவல் கூறி, யானைமீது இவர்ந்து கயிலாயத்துக்கு வந்தருளுமாறு வேண்டினார். இறைவனைக் காணும் வாய்ப்பிற்காகவே காத்திருந்த சுந்தரர், தம்மை நம்பி நட்பு பூண்டிருந்த சேரமானைச் சிறிதும் சிந்தியாது, உடன் யானையேறி அஞ்சைக்களத்தைத் துறந்து கயிலாயம் பறந்தார். சிவபெருமானே அழைத்து வரச் சொன்ன பெருமைக்குரியவர் என்பதால் சுந்தரருடன் ஒன்றாக அமர்ந்து செல்லத் தயங்கிய வாணன் யானையின் வாலைப் பிடித்தபடி பயணமானார். அலைகடல் அரையன் இறைஞ்சினான் யானையின் கால்களின் கீழ்க் காட்டப்பட்டுள்ள கடல் பற்றி இவ்வோவியம் குறித்துக் கட்டுரையெழுதியுள்ள அறிஞர்களுள் பெரும்பாலோர் சுட்டியிருந்தபோதும், அந்தக் கடல் அங்கு இடம்பெற்றதற்கான காரணத்தைக் கூறவில்லை. அஞ்சைக்களம் கடற்கரை ஊரல்ல. அதனால், கோயிலிலிருந்து புறப்பட்ட சுந்தரர் நிலவழியாகவே கயிலாயம் அடைந்திருப்பார். கடல் வழிச் செல்லத் தேவையில்லை. பின் எப்படிக் கடலலைகளில் களிறு கால் பதித்துள்ளது? இந்தக் கேள்விக்கும் சுந்தரரின் திருநொடித்தான்மலைத் திருப்பதிகமே விடைதருகிறது. 'நிலைகெட, விண்ணதிர, நிலம் எங்கும் அதிர்ந்தசைய, யானையேறி மலையிடை வழியே வருவேன். எதிரே அலைகடலால் அரையன் அலர் கொண்டு முன்வந்து இறைஞ்சினான்.' 'அலை கடலுக்கு அரசனான வருணன் மற்றவர்களுக்கெல்லாம் முற்பட்டவனாக, நான் வரும் வழியில் பூக்களோடு வந்து என்னை வணங்கினான்' என்று சுந்தரர் மகிழ்ந்துரைப்பதை நினைவுகூர்ந்தால், களிற்றின் காலடிகளைக் கடல் அலைகள் தழுவி நிற்பதன் புதிர் கதிர் முன் பனியாய் விலகும். யானையின் வால் பற்றிச் செல்லும் வாணன், வான்வழியேகும் சுந்தரரை வாழ்த்த வந்த கடலரசன் எனும் இவ்விரண்டு காட்சிகளுமே சோழ ஓவியர்கள் இலக்கியம் படித்தே தூரிகை பிடித்தனர் என்பதற்குச் சான்றாக அமைகின்றன. சுந்தரரின் பதிகங்களை எந்த அளவிற்கு உள்வாங்கியிருந்தால், இராஜராஜரும் அவர் ஓவியர்களும் இத்தனை பொருளார்ந்த காட்சிகளைப் பதிகப் பின்னணி வழுவாமல் படம்பிடித்துக் காட்டியிருப்பார்கள்! இக்கயிலைப் பயணக் காட்சி, மேலைக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் திருக்கோயிலிலும் உலகபுரம் சிவன்கோயில் வலபியின் பூதவரியிலும் சிற்பங்களாய் இடம்பெற்றுள்ளமையும் இவ்விரண்டு கோயில்களுமே பெரியபுராண காலத்திற்கு முற்பட்டவை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கன. சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் சுந்தரரின் கயிலைப் பயணம் பாடும்போது, இவ்வாணனைச் சுட்டாமை இங்குக் கருதத்தக்கது. (வளரும்) |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |