http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 139
இதழ் 139 [ டிசம்பர் 2017 ] இந்த இதழில்.. In this Issue.. |
கலைமாமணி அமரர் விக்கிரமனின் அரும்புதல்வரான திரு. கண்ணனை ஆசிரியராகக் கொண்டு திங்கள் தோறும் வெளிவரும் இலக்கியப்பீடம் ஆகஸ்டு இதழின் (2017) அட்டைப்படக் கட்டுரை வழி எனக்கு அறிமுகமானார், விடுதலைப் போராட்ட வீரர் திரு. ஜெ. ஜெகதீசன். முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுவதால் முதுகலை, ஆய்வியல்நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுகளுக்கான கருப்பொருளை வேண்டும் மாணவர்களுக்கு வழங்கும் பொறுப்பு எனக்குள்ளது. அவ்வகையில் இலக்கியப்பீடக் கட்டுரை புதிய கருப்பொருள் ஒன்றை வழங்கியிருப்பதாக நினைத்தே திரு. கண்ணனைத் தொடர்பு கொண்டு திரு. ஜெகதீசனின் முகவரி பெற்றேன். என்னிடம் பயின்று சென்னைச் சேத்துப்பட்டு மேனிலைப்பள்ளி ஒன்றில் வரலாற்றாசிரியராகப் பணியாற்றும் திரு. ஜெயக்குமாருக்குத் தொலைப்பேசி, திரு. ஜெகதீசனை நேரில் கண்டு நேர்முகத்துக்கு இசைவு பெற வேண்டினேன். அந்தச் சந்திப்பு ஜெயக்குமாருக்கு மட்டுமல்லாது எனக்கும் புதிய கதவுகளைத் திறந்தது. என் வழிகாட்டலில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வு செய்யும் திருமதி இரா. காந்திமதி திரு. ஜெகதீசனின் விடுதலைப் போராட்ட வாழ்க்கையைப் பதிவு செய்து ஆய்வு மேற்கொள்ள விருப்பத்துடன் இசைந்ததால், ஜெயக்குமார் வழிப் பெற்ற தகவல்களுடன் இலக்கியப்பீடத் தகவல்களையும் இணைத்து ஆய்வேட்டைத் தொடங்கினோம். நாமே அவரை நேர்முகம் காண்பது கூடுதல் பயனளிக்கும் எனக் கருதியதால், திரு ஜெகதீசனின் மகன் திரு. ஜெ. வெங்கட்ராமனிடம் பேசினேன். 26.11. 2017 ஞாயிறன்று பகல் வேளையில் சந்திக்க முடிவாயிற்று. நேர்முகம் முடிந்ததும் எங்கள் இல்லத்திலேயே உணவருந்தலாம் என்று திரு. வெங்கட்ராமன் அன்போடு அழைத்ததை மறுக்கக் கூடவில்லை. நானும் காந்திமதியும் பல்லவனில் பயணித்தபோது என் உள்ளத்தில் பல்வேறான எண்ணங்கள். முதன்முறையாக விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரைச் சந்தித்து அளவளாவப் போகிறோம் என்ற நினைவே பேரெழுச்சியைத் தந்தது. திரு.ஜெகதீசன் நூறாண்டுகளைக் கடந்தவர். பல பெருந் தலைவர்களின் தோள் தொட்டுப் பழகியவர். ஆசார சீலர் என்றும் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். என்னென்ன கேள்விகள் கேட்பது, எப்படித் தரவுகளைப் பெறுவது என்றெல்லாம் சிந்தித்தவாறே அவர் வாழ்க்கைக்குள் பல்லவனின் பேரிரைச்சலுக்கு இடையே மெல்ல நுழைந்தேன். திண்டிவனத்தை ஒட்டிய பிரும்மதேசத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கர்ணம் பதவி வகித்த திரு. வெ. ஜானகிராமரின் நான்காம் மகனாக 1918 ஜூன் 6 ஆம் நாள் தேர்க்குணம் கிராமத்தில் பிறந்தவர் திரு. ஜெகதீசன். அன்னையின் பெயரும் ஜானகி. திண்டிவனம் தேசியப் பள்ளியில் படிப்பைத் தொடங்கியவர். தம் ஏழாம் வயதிலிருந்தே கதராடை அணியத் தொடங்கினார். இரண்டாம் வகுப்புப் படிக்கும்போதே மகாத்மாவின் காந்தி நிர்மாணக் கதர் திட்டத்தின்படி பஞ்சு ஆய்ந்து, சிட்டம் செய்து, நூல் நூற்றுத் தறி நெய்தமையால் நேர்ந்த மாற்றம் அது. அன்று தொடங்கிய கதர் இந்த நிமிடம் வரை அவரோடு ஒன்றியுள்ளது. 14 வயது ஜெகதீசனை மிகக் கவர்ந்தவர் காங்கிரஸ் தலைவர் திரு. சத்தியமூர்த்தி. அவர் உரைகளைக் கேட்டு உரங்கொண்ட ஜெகதீசன் வெளிநாட்டுத் துணிகளை இந்தியர் அணியக் கூடாது எனும் போராட்டம் திண்டிவனத்தில் நிகழ்ந்தபோது யாரும் எதிர்பாராத செயலைச் செய்தார். திண்டிவனம் வட்ட அலுவலகத்தின் மீது தனியொருவராக ஏறி அங்கிருந்த கொடிமரத்தில் காங்கிரஸின் மூவர்ணக் கொடியை ஏற்றினார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சப் ஜெயில் காவலர் ஓடி வந்து கையில் உள்ள தடியால் ஜெகதீசனை அடிக்க, வந்தே மாதரம், மகாத்மா காந்திக்கு ஜே, தீரர் சத்தியமூர்த்திக்கு ஜே என்று கூவியபடியே தப்பியோடினார் ஜெகதீசன் . 1930 இல் அரசியல் பயணத்தைத் தொடங்கிய ஜெகதீசன் 1936 இல் தேர்தல் பரப்புரைத் தொண்டராக மாறினார். திண்டிவனம் ஈச்சங்காட்டு ஓடையில் நிகழ்ந்த உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதானார். தந்தை பெரியார், இராஜாஜி ஆகியோரின் வழியில் மது விலக்குப் போராட்டத்தில் முனைப்புக் காட்டினார். விடுதலைக்குப் பிறகும் காங்கிரஸ் பேரியக்கத்தில் தொடர்ந்து இருந்த ஜெகதீசன் மண்டலக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் தொடர்ந்து மும்முறை குடிசை வாழ் மக்களின் சங்கத் தலைவராகவும் விளங்கியுள்ளார். பின்தங்கிய மக்களுக்கு கல்வி, நலவாழ்வு, பாதுகாப்பு பற்றிய அறிவூட்டுபவராகவும் தொண்டு செய்பவராகவும் தம் வாழ்நாளைப் பயனுற வளர்த்த பெருந்தகை அவர். ஆனந்தவிகடன் அலுவலகத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இப்பெரியவரைப் பாராட்டி மகிழ்ந்த தலைவர்களின் பட்டியல் நீளமானது. தமிழகத்தை ஆண்ட அண்ணா தவிர்த்த பிற அனைத்து முதலமைச்சர்களையும் சந்தித்து உரையாடி விருதுகள் பல பெற்றிருக்கும் திரு. ஜெகதீசனை நாளிதழ்களும் பருவ இதழ்களும் தக்கவாறு பதிவு செய்துள்ளன. மேடம் எழும்பூரை அடைந்துவிட்டோம் என்ற காந்திமதியின் குரல் என்னைப் பெரியவர் ஜெகதீசனிடமிருந்து தற்காலிகமாகப் பிரித்தது. நடைமேடையில் தம்பி ஜெயக்குமாரின் முகம் தெரிந்தது. ஓலா வாடகை வண்டி பெரியவரின் வீடு இருக்கும் கொடுங்கையூர் நோக்கிப் பறந்தது. வாயிலில் எங்கள் வருகை அறிந்த திரு. வெங்கட்ராமன் காத்திருந்தார். எப்போது வருவீர்கள் என்று இப்போது கூடக் கேட்டார் என்று கூறியவாறே புன்சிரிப்புடன் வரவேற்ற வெங்கட்ராமனுடன் உள் நுழைந்த எங்கள் முன் கூப்பிய கைகளுடன் கதர் வேட்டியும் துண்டுமாய் விடுதலை வீரநாயகர் திரு ஜெகதீசன் எதிர்பட்டார். மலர்ந்த கண்களும் திருநீறு பூசிய நெற்றியும் பழுத்த மேனியுமாய்க் காட்சியளித்த அப்பெருந்தகையை வணங்கி, கையோடு கொண்டு சென்றிருந்த கதராடையை அவருக்கு அணிவித்து மகிழ்ந்தோம். சற்றும் எதிர்பாராத வகையில் அவரும் எங்களில் ஒருவர் விடாது மூவருக்கும் கதராடை அணிவித்து வாழ்த்தினார். அவரது வாழ்க்கை திறந்த புத்தகமாக நூல்களாகவும் இதழ்களாகவும் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தமையால் சற்று மாறுபட்ட கேள்விகளை அவரிடம் கேட்டோம். எந்தக் கேள்விக்கும் சற்றும் தயங்காது பொருத்தமான விடைகளை எளிய மொழியில் அவர் அளித்தபோது அவரது மென்மையும் அனுபவமும் உணர்ந்து மகிழ்ந்தோம். அவரது வாழ்க்கை வரலாற்றில் விடுபட்டுப் போன சில தகவல்களும் அப்போது வெளிவந்தன. கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படாத தாழ்த்தப்பட்ட மக்களைச் சிறு வயதிலேயே அவர் தம்முடன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றமை, காவல் துறையின் கைது நடவடிக்கையிலிருந்து விடுபடக் கருதிச் சில காலம் கோயில் அர்ச்சராகப் பணி செய்தமை, ஏழை மக்களுக்குப் பல காலம் தொண்டு செய்தமை, விடுதலைக்குப் பின் சில அமைப்புகளை நிறுவி அவற்றின் வழிப் பொதுப்பணியில் ஈடுபட்டமை எனப் பல புதிய செய்திகளை அறியமுடிந்தது. நேர்முகம் முடிந்த நிலையில் தாம் வழிபடும் ஆன்ம இலிங்கத் திருமேனியைக் கொணர்ந்து எங்கள் அனைவரையும் அதைத் தொட்டு ஆசி பெறச் செய்தவர், இளைஞர்களை வழி நடத்தும் பொறுப்பில் நீங்கள் மூவரும் இருப்பதால், உங்களிடம் ஒரு வேண்டுகோள் என்றார். என்ன சொல்லப் போகிறாரோ என்று ஆர்வமும் வியப்புமாய் அவரையே நோக்கினோம். ஏழை மாணவர்களிடம் சிறப்பு கவனம் கொள்ளுங்கள், கல்வி மட்டுமே வாழ்க்கையை வளமாக்கும், இந்த நாட்டின் பெருமைகளை இளைஞர்கள் உணர்ந்து நாட்டுப்பற்றுடன் வாழத் துணையாகுங்கள், பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மதித்து வளரும் இளைஞர்களே இந்த நாட்டை வளப்படுத்த முடியும், போராட்டங்களை விடத் தழுவிச் செல்வதன் வழி எண்ணியது எய்தலாம்,. ஏனெனில், இது உரிமையுள்ள நாடு,. எங்கள் வாழ்க்கையை விதைத்து உங்கள் வாழ்க்கைக்காக விடுதலை பெற்றிருக்கிறோம். அந்த விடுதலையைப் போற்றிக் காப்பாற்றுங்கள் என்று கூப்பிய கைகளுடன் அவர் கூறியபோது அவர் கண்கள் மட்டுமல்ல எங்கள் கண்களும் கலங்கின. அருமையான மதிய உணவும் குடும்பத்தார் அனைவரின் அன்பான உபசரிப்பும் பெற்றுத் திரு ஜெகதீசனிடம் விடைபெற்றபோது விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு பக்கத்திலிருந்து விடுபடுவது போலவே தெரிந்தது. பல்லவனில் பயணிக்கையில் காந்திமதி சொன்னார். மேடம் என் வாழ்க்கையில் இன்று நேர்ந்த சந்திப்பு அழுத்தமான பதிவாகும். இதுநாள் வரை வரலாற்றைப் படித்திருக்கிறேன் பார்த்ததில்லை. இன்றுதான் வாழ்வில் முதன்முறையாக வரலாற்றை நேருக்கு நேர் சந்தித்தேன். இப்பொழுதுதான் புரிகிறது மேடம் வரலாறு எத்தனை உயிர்ப்புடைய விஷயம் என்று. நான் அவரை உற்று நோக்கினேன். அவரது கண்கள் கலங்கியிருந்தன. டாக்டர் கலைக்கோவன் அடிக்கடி சொல்லும் தொடர்தான் நினைவுக்கு வந்தது. வாழ்க்கைதான் வரலாறு. எத்தனை உண்மை என்று நினைப்பதற்குள் திருவரங்கம் சந்திப்பில் பல்லவன் நுழைந்தது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |