http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 139
இதழ் 139 [ டிசம்பர் 2017 ] இந்த இதழில்.. In this Issue.. |
திருவண்ணாமலை மாவட்ட்த்தில் வந்தவாசி அருகே(பிருதூர்-வழி) 5கி.மீ தொலைவில் மங்க நல்லூர் என்ற அழகிய கிராம்ம் அமைந்துள்ளது.
இக்கிராமத்தின் தென்பகுதியில் சிறு மண் மேடுமீது அழகிய சிவலிங்கத்திருமேனி வழிபாட்டில் உள்ளது. சிவலிங்கத்தைச்சுற்றி (நீள்சதுர) செவ்வக வடிவில் இடிந்த கோயிலின் செங்கற்கட்ட்டப் பகுதிகள் காணப்படுகின்றன. இங்கு கோயில் இருந்து இடிந்து விட்டதாகவும்,பின்னர் வழிபாடு நின்று விட்டதாகவும்.ஊர் மக்கள் கூறுகின்றனர்.தற்போது ஊர்மக்கள் இணைந்து சிவலிங்கத்திருமேனிக்கு வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலின் வடக்குப் பக்கத்தில் கோமுகை அருகே அழகிய சண்டிகேஸ்வரர் சிற்பம் பூமியில் பாதி புதைந்த நிலையில் காணப்படுகிறது. அழகிய சோழர் கால சிற்பம். மேலும் இடிந்த கட்டடப் பகுதியின் மேல் வைக்கப்பட்டுள்ள தட்சிணாமூர்த்தி சிற்ப வடிவம் பாதியாக உடைந்த நிலையில் உள்ளது.இத்திருமேனி 16-17 நூற்றாண்டை சேர்ந்ததாக விளங்குகிறது. சிவலிங்கத்திருமேனிக்கு எதிரில் நந்தி அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. அதற்குப்பின்னால் சதுர வடிவ கல் நடுவில் வட்ட வடிவமான துளையுடன் கூடியது தரையில் கிடக்கிறது. இக்கல் கோயில் கொடி கம்பத்தின் அடிப்பாகமாக விளங்கியிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது.முன்பு இக்கோயிலில் சிறப்பாக நடைபெற்று வந்ததை எடுத்துக்கூறும் சான்றுகளாக விளங்குகின்றன. இக்கோயில் பரிவார ஆலயங்களுடன் இருந்ததற்கு அடையாளமாக விநாயகர் சிற்ப வடிவம்,இவ்வூரில் உடையார் தெரு-முருகன் கோயிலில் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. கல்வெட்டுகள் இக்கோயிலை ஆய்வு செய்யச்சென்றபோது கோயில் அருகே பலகைக்கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டினைப் பார்க்க நேரிட்டது. மேலும் ஊரில் இது போன்ற கல்வெட்டு பொறிக்கப்பட்ட கற்கள் ஏதேனும் உள்ளதா என்று இக்கட்டுரை ஆசிரியர் விசாரித்த போது , இவ்வூரில் உடையார் தெரு (மண்பானை செய்பவர்) அருகே கல்வெட்டு பொறிக்கப்பட்ட கற்கள் இருப்பது கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. கல்வெட்டுக் குறிப்புகள் கல்வெட்டுகளில் தொன்மையான கல்வெட்டாக இராஜாதிராஜன் கல்வெட்டு விளங்குகிறது. எனவே இவர் காலத்திற்கு முன்பே இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். அனைத்தும் பலகைக் கல்வெட்டுகளாக விளங்குவதால் இக்கோயில் முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்பதை ஊகிக்க முடிகிறது. நாட்டுப்பிரிவு சோழர் காலத்தில் இப்பகுதி ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து வெண்குன்றக்கோட்டத்து, மருத நாட்டுப்பிரிவில் இருப்பதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவ்வூருக்கு அருகில் வெண்குன்றமும், மருத நாடு என்ற ஊரும் உள்ளன. இறைவன் பெயர் : இக்கோயிலின் இறைவன் பெயர் திருவக்கீசுவரமுடைய மகாதேவர் எனக் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது. ஆனால் இப்பகுதியில் பல திருக்கோயில்களில் இறைவன் 'திருஅகத்தீசுவரமுடையார்' என அழைக்கப்படுவதைக்காணமுடிகிறது.இவ்வூரைச் சேர்ந்த அருமொழி அருளாளன் என்பவர் இக்கோயிலில் சந்தி விளக்கெறிக்க மூன்று பசுக்கள் தானம் அளித்தது பற்றி ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. 'மங்க நல்லூர் – மங்கல நல்லூர்' இவ்வூர் கல்வெட்டுகளில் 'மங்கல நல்லூர்' என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால் இன்று மங்க நல்லூர் என்றே அழைக்கப்படுகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க மங்க நல்லூர்க்கோயிலில் இறைவன் திருமேனிக்கு தற்காலிகமாக கொட்டகை அமைத்து வழிபாடுகள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வூர் வரலாற்றைக்கூறும் கல்வெட்டுகளின் சிறப்பை உணர்ந்த ஊர் மக்கள் அவற்றை கோயில் அருகே பாதுகாப்பாக வைக்க 'நடவடிக்கை மேற்கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் திருக்கோயிலை சீரமைத்து திருப்பணி மேற்கொள்ள முயற்சிகளை ஊர் மக்கள் மேற்கொண்டுள்ளனர். 1) இவ்வூர் சிவலிங்கத்திருமேனி குறித்து தகவல் தெரிவித்து கள ஆய்வுக்கு உதவியவர் திரு.கேசவன் ஸ்ரீராம் – சென்னை 2) கள ஆய்வில் ஆர்வமுடன் பங்கேற்ற ஊர் மக்களுக்கு நன்றி 3) கல்வெட்டுகளின் நிழற்படங்களைப் பார்த்து,படிக்க உதவியவர் திரு.எஸ்.ராசகோபால்(ஓய்வு) தமிழக தொல்லியல்துறை. 4) கல்வெட்டுகள் பற்றி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.தொல்லியல்துறை கல்வெட்டாய்வாளர் திருமதி.K.பாக்கியலெட்சுமி தலைமையில் இவ்வூர் சென்று கல்வெட்டுகள் அண்மையில் படியெடுக்கப்பட்டுள்ளன. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |