http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 139

இதழ் 139
[ டிசம்பர் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

கற்பவை கசடறக் கற்க
இருண்டகாலமா? - 1
வலஞ்சுழி ஸ்வேத விநாயகர் ஆலயம் - 1
வரலாற்றுச் சிறப்பு மிக்க மங்க(ல) நல்லூர்
கயிலைப் பயணம் - 1
புள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 4
மாமல்லபுரம் – பல்லவர் சிற்பக் கலைக்கூடம்
ஒருநாள் பயணத்தில் ஒரு வாழ்க்கை
திரிபுராந்தகரும் இராஜராஜரும்
இலக்கியப்பீடம் - சிவசங்கரி விருது
Architecture of the RaṅgaVimāna at Sri Raṅganāthaswāmi Temple, Srīraṅgam
ORNAMENTAL DOOR FRAMES IN THE EARLY STRUCTURAL TEMPLES
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 4
இதழ் எண். 139 > பயணப்பட்டோம்
மாமல்லபுரம் – பல்லவர் சிற்பக் கலைக்கூடம்
ச.சுந்தரேசன்

முதலாம் மகேந்திரப் பல்லவரின் மகேந்திரவாடிக் குடைவரையின் தெற்கு அரைத்தூணில் இடம் பெற்றுள்ள பல்லவக் கிரந்தக் கல்வெட்டுத் தரும் செய்தியை இங்குக் காண்போம். மகேந்திரவாடியில் குணபரனாகிய மகேந்திரர் பாறையைப் பிளந்தாராம்! அங்குள்ள மகேந்திர தடாகக் கரையில் முராரிக்கு மகேந்திர விஷ்ணுகிருகம் செய்வித்தாராம். அழகின் இருப்பிடமாகிய அக்கோயிலைக் குணபரன் எதற்காகச் செய்தார் என்றால் "மனிதக் கண்களை மகிழ்விப்பதற்காக" வேண்டிச் செய்தாராம்! ஆஹா, சர்வ வல்லமை படைத்தவரான மன்னர், ஒரு கோயிலை எடுப்பித்த செயலைப் பதிவு செய்கையில் "ஆமாம்பா, இது நான் எடுப்பித்த குடைதளி" என்று பெருமையுடன் சொல்லிச் சென்றிருக்கலாம். அது தானே அரசர்களின் வழக்கம்? ஆனால் அவ்வாறு சொல்லாமல் "பார்ப்பவர் கண்கள் மகிழ்வதற்காகச் செய்வித்தேன்" என்று சொன்ன மகேந்திரர் மனதில்தான் எத்தனை பரிவும், கனிவும் இருந்திருக்க வேண்டும்!

பல்லவப் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தவும், எதிரிகளிடமிருந்து தனது நாட்டைப் பாதுகாக்கவும் ஓயாமல் போர்க்களத்துக் குருதிச் சகதியில் உயிரற்ற உடல்களைத் தாண்டி வந்துகொண்டிருந்த ஓர் அரசரின் மனதுக்குள் இப்படியும் ஒரு சிந்தனை உதிக்குமா என்ன! அடடா, அவர் தான் எத்தனை உயர்ந்த மனிதர்!

மகேந்திரரின் மேற்குறிப்பிட்ட கல்வெட்டுப் பாடமே என்னை வெகுவாக ஈர்த்துத் தமிழகத்தின் மற்ற அரச மரபினரை விடுத்து "பல்லவர் பாதையில்" தவழ விட்டது எனலாம்.

தமிழகக் கட்டடக்கலையின் சிறப்பினைக் கூறும் புடைப்புச் சிற்பங்கள், குடைவரைகள், ஒருகல் தளிகள், கட்டுமானக் கோயில்கள் எனப் பலவகைகள் இருப்பினும், அவற்றுள் என்னைப் பெரிதும் வியக்கச் செய்தவை குடைவரைகளே!! அந்நாளில் இறந்தோரை அடக்கம் செய்யவும், ஈமச்சின்னங்களாக நிறுத்தவும் மட்டுமே கற்பாறைகள் பயன்படுத்தப்பட்டன. பின்னாளில் இக்கற்பாறைகளைக் குடைந்து குடைவரைகள் உருவாக்கம் பெற்றன.

குடைவரைக் கலை, கோயில் கட்டடக்கலை வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த காரணத்தால் மட்டுமன்றி அவற்றின் உருவாக்கத்தின் மீதெழுந்த மலைப்பும் குடைவரைகளின்பால் எனது ஆர்வமிகுதிக்குக் காரணம் எனலாம். குடைவரை எவ்வாறு அமைய வேண்டும் என்று திட்டமிட்டுப் பின்னர் பாறையினைக் குடைந்து உள்சென்று எங்ஙனம் சிறியதொரு சிதைவுமின்றி அழகியதொரு கோயிலை கச்சிதமாக வடித்திருப்பார்கள் என்றெண்ணும் போது மேலோங்கும் வியப்பு அளவிடற்கரியது அல்லவா! நாம் இதுவரை பயணித்து வந்த பல்லவர் பாதையில் விசித்திரசித்தரான மகேந்திரரின் ஏழு குடைவரைகளுள் ஆறினையும், (பல்லாவரம் குடைவரை நீங்கலாக) அவர் காலத்தில் அகழப்பெற்ற இரண்டு குடைவரைகளையும் (வல்லம் மற்றும் மேலச்சேரி), மாமல்லன் நரசிம்ம பல்லவரின் குடைவரை ஒன்றையும் கண்டு வந்தோம்.

இனி, நரசிம்மப் பல்லவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த பல்லவ மன்னர்களையும், குடைவரைகள் உருவாக்கத்திற்கு அவர்தம் பங்களிப்பினையும் காண்போம்!

முதலாம் நரசிம்மப் பல்லவரையடுத்து ஆட்சிக்கு வந்த இரண்டாம் மகேந்திரரின் ஆட்சிக் காலம் குறுகிய காரணத்தால் பல்லவக் கலை வரலாற்றில் அவரால் இடம்பெற இயலவில்லை.

அவரது புதல்வர், சாளுக்கிய விக்கிரமாதித்யனைப் பெருவளநல்லூரில் வெற்றி கொண்டவரும், கூரம் செப்பேடுகளை அளித்தவருமான முதலாம் பரமேஸ்வரவர்மர் ஆவார். கூரம் என்னும் ஊரில் தமிழ்நாட்டின் முதல் கட்டுமானக் கோயிலாகக் கருதப்படும் "வித்யவிநீத பல்லவ பரமேஸ்வர கிருகம்" என்னும் தூங்கானைத் தளியினைக் கட்டுவித்தவர் இவரே!



வித்யவிநீத பல்லவ பரமேஸ்வர கிருகம், கூரம், காஞ்சிபுரம்


முதலாம் பரமேஸ்வரனுக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்தவர் அவரது புதல்வரான இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மப் பல்லவன் ஆவார். இவர், அத்யந்தகாமன், நயனமனோகரன் அதிரணசண்டன், ஸ்ரீவித்ய வித்யாதரன், சிவசூடாமணி முதலான விருதுப் பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.

மகேந்திரவர்மர், நரசிம்மப் பல்லவர், பரமேஸ்வரப் பல்லவர் ஆகியோர் குடைவரைகளையும் கட்டுமானக் கோயிலையும் எடுப்பித்த நிலையில், புடைப்புச் சிற்பங்களில் தொடங்கி அழகு மிளிரும் குடைவரைகள், ஒருகல் தளிகள், கட்டுமானக் கோயில்கள் எனப் பரந்து விரிந்தது இராஜசிம்மப் பல்லவரின் கலைப் பேராற்றல். அவரது கவின்மிகுக் கலைப்பாணியின் உயரம் எவராலும் எட்ட இயலாதது என்றால் அது மிகையல்ல.

காஞ்சியில் கைலாசநாதர், ஐராவதேஸ்வரர், திரிபுராந்தகர், இறவாதீஸ்வரர் கோயில்கள், பனைமலையில் தாளகிரீஸ்வரர் கோயில் முதலான கட்டுமானக் கோயில்கள் இராஜசிம்மப் பல்லவரின் கலையார்வத்திற்குச் சான்றுகளாய் விளங்குபவை ஆகும்.

மேலும், காலத்தை வென்று நிற்கும் பல்லவர்களின் கலைப் படைப்புகளுள் மாமல்லபுரத்திலுள்ள இராஜசிம்மரின் கலைப்படைப்புகளே ஒப்பற்றவையாகும். புடைப்புச் சிற்பமாகட்டும், குடைவரைகளாகட்டும், ஒருகல் தளிகளாகட்டும் அல்லது கட்டுமானக் கோயில்களாகட்டும் அவரது படைப்புகள் அனைத்துமே திட்டமிடுதல், கட்டமைப்பு, சிற்பச்செழுமை, ஓவியச்சிறப்பு என அனைத்துக் கூறுகளும் ஒருங்கமைந்து விளங்குபவை ஆகும். அவருடைய கைகள் தொடாத கலைகளே இல்லை என்னும்படி கற்பாறைகளைக் கவிதைகளாய்ப் படைத்த ஒப்பற்றக் கலைஞர் அவர்.

மாமல்லபுரத்தில் 14 குடைவரைகள், கடற்கரைக் கோயில், ஒலக்கனேஸ்வரர் கோயில், முகுந்தநாயனார் கோயில் முதலான கட்டுமானக் கோயில்கள், ஒன்பது ஒருகல் தளிகள், இவையன்றி உலகிலேயே பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதியான 'அர்ச்சுனன் தவம்'!

ஒரு மன்னர் எத்தனை அதிகாரம் பொருந்தியவராக இருப்பினும் தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு போர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு அதே வேளையில் கலைகளிலும் ஆழ்ந்த கவனம் செலுத்தி வெற்றி பெற இயலுமா? இயலும் என்று சாதித்துக் காட்டியவர் இராஜசிம்மர். இந்தக் கடற்கரைப் பட்டினத்தைக் கலையழகு கொஞ்சும் நகராக மாற்றிய இராஜசிம்மரை "படைத்ததனால் அவரைப் பேரிறைவன்" என்றே பாராட்டலாம்தானே!

திருச்சிராப்பள்ளி கீழ்க் குடைவரை மற்றும் சிங்கவரம் அரங்கநாதர் குடைவரை போன்ற குடைவரைகள் இராஜசிம்மப் பல்லவர் காலத்திற்குப் பின்னர் உருவாக்கம் பெற்றவற்றுள் சிறந்தவை எனலாம்.

இராஜசிம்மப் பல்லவரின் குடைவரைகளைப் பற்றிப் பேசுவதற்கு முன் பல்லவரின் சிற்பக் கலைக்கூடமான மாமல்லபுரத்தை ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்து விட்டு வருவோமா?

மாமல்லபுரம்

உங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது! மாமல்லபுரம் என்றவுடன் மனதுக்குள் மின்னல் கீற்றாய்த் தோன்றி மறைவது கல்யாணசுந்தரம் தான்! கல்யாணசுந்தரம் யார் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது எங்கள் பள்ளியில் மகாபலிபுரத்திற்குக் கல்விச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டு அதன்படி ஒப்பந்தப் பேருந்து ஒன்றில் மகாபலிபுரம் புறப்பட்டோம். இந்தச் சுற்றுலாவிற்குத் தலைமை ஏற்றவர் எங்கள் இராசகோபால் சார்.

மாமல்லபுரம் சென்றோம். பார்க்க வேண்டிவற்றைப் பார்த்தாகி விட்டது. அந்தி சாயும் நேரம். பேருந்து வேலூர் நோக்கிப் புறப்பட்டது. இரவு உணவிற்காக வண்டி ஆற்காட்டில் நின்று புறப்பட்டது. நள்ளிரவில் பள்ளி வந்து சேர்ந்தோம். மாணவர்களைப் பேருந்திலிருந்து இறக்கி எண்ணிக்கையைச் சரி பார்த்த இராசகோபால் சார் முகத்தில் கலவர ரேகை ஓடியதைக் காண முடிந்தது. கல்யாண சுந்தரத்தைக் காணவில்லை.

பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது. எந்த மாணவனைக் கேட்டாலும் பதில் சொல்லத் தெரியவில்லை. எல்லோரும் தான் தூக்கத்தில் இருந்தோமே! காவல் நிலையத்திலும் தகவல் கொடுத்தாகி விட்டது. மறுநாள் காலை சுற்றுலா சென்ற மாணவனைக் காணோமென்று பள்ளி அமர்க்களப்பட்டது. இராசகோபால் சார் முகம் வாடியிருந்தது.

வகுப்புகள் துவங்கிய நேரத்தில் பள்ளிப்பையுடன் கல்யாணசுந்தரம் அங்கே தோன்றினான். பள்ளியே அவனைச் சுற்றி வளைத்துக் கேள்வி மேல் கேள்வி கேட்டது. இராசகோபால் சாருக்கு அப்போது தான் உயிரே வந்தது போலிருந்தது.

கல்யாணசுந்தரத்தைத் தனியே அழைத்து பக்குவமாக விசாரித்த போது அவன், "சார்! பஸ் ஒரு வளைவில் வேகமாய் திரும்பிய போது நான் பஸ்ஸிலிருந்து உருண்டு விழுந்து விட்டேன், நீங்கள் என்னை ஏன் ரோட்டிலேயே விட்டுச் சென்று விட்டீர்கள்?" என அப்பாவியாய்க் கேட்டான்.

'அதனால் நான் ஆற்காட்டில் இருக்கும் அத்தை வீட்டில் இரவு தங்கிக் காலையில் பஸ் பிடித்து ஊருக்கு வந்தேன்' எனப் பதட்டமிலாமல் சொன்னான். எத்தனை முறை எல்லா விதத்திலும் கேட்டும் மாற்றமின்றி இதே பதில் தான் அவனிடமிருந்து வந்தது.

'சரியான கல்லுளிமங்கனாக இருக்கிறானே' எனத் திட்டித் தீர்த்த ஆசிரியர்கள், 'எப்படியோ காணாமல் போன மாணவன் கிடைத்து விட்டான்' என்ற நிம்மதியில் விஷயத்தை அத்தோடு விட்டு விட்டனர். அன்று முதல் மாமல்லபுரம் என்றாலே கல்யாண சுந்தரத்தின் நினைவு வருவது வாடிக்கையானது.

உண்மை என்றோ ஓர் நாள் வெளி வரும் தானே? நாங்கள் இரவு உணவிற்காக ஆற்காட்டில் பேருந்தை நிறுத்திய போது கல்யாணசுந்தரம் எவரும் அறியாமல் பேருந்திலிருந்து இறங்கியிருக்கிறான் என்பதும், இரவு அத்தை வீட்டில் தங்கி மறுநாள் ஏதும் அறியாதவன் போல் பள்ளிக்கு வந்தான் என்பதும் சில நாட்களில் வகுப்புத் தோழர்கள் மூலம் தெரிய வந்தது. அதை இரகசியமாகப் பகிர்ந்து கொண்டோம். இராசகோபால் சாருக்குத் தெரிந்தால் அடி பின்னி விடுவார் என்ற பயம் தான்.

கல்யாணசுந்தரம் எனது பக்கத்து வீட்டுப் பையன் தான்! 'டேய், என் கிட்டேயாவது சொல்லு அன்னைக்கு நீ ஆற்காட்டில் இறங்கிப் போயிட்டத் தானே' என்று அவனிடம் நான் கேட்க, அதற்கு கல்யாணசுந்தரம் 'நீங்க தான்டா என்னை ரோட்டுல விட்டு விட்டுப் போயிட்டீங்க' என்றானே பார்க்கலாம்!

சரிங்க... …. …..

கல்யாணசுந்தரத்தை அவன் போக்கிலேயே விட்டு விடுவோம்!

இனி மாமல்லைக் கடற்பரப்பில் காலத்தை வென்று நிற்கும் இராஜசிம்மரின் கலையழகுச் சின்னங்களையும் பிற சிற்பங்களையும் என் ஒளிப்படத் தொகுப்பிலிருந்து காண்போமா?

மாமல்லபுரம் – பல்லவர் படைப்புகளும் அவற்றின் அமைவிடங்களும்




மாமல்லபுரம் வரைபடம் இணையத்திலிருந்து


I. புடைப்புச் சிற்பங்கள் (Bas reliefs):



1. அர்ச்சுனன் தவம் (தலசயனப் பெருமாள் கோயில் அருகே)




2. அர்ச்சுனன் தவம் (மகிடாசுரமர்த்தினிக் குடைவரைக்குப் போகும் வழியில்)




3. யானை, குரங்கு, மயில்




4. கிருஷ்ண மண்டபம்: கோவர்த்தனகிரி குடையாதல்










II. ஒருகல் தளிகள் (Monoliths)



ஐந்து இரதங்கள்




1. கொற்றவைத் தளி




அடியவர்களுடன் கொற்றவை




2. இருதளத் திராவிடத் தளியும், கொற்றவைத் தளியும்




இருதளத் திராவிடத் தளி




3. பெருஞ்சாலைத் தளி




பெருஞ்சாலைத் தளியின் பக்கவாட்டுத் தோற்றம்




4. முத்தள ஒருகல் தளி




இரண்டாம் தளம் - மேற்கு




சோமாஸ்கந்தர் தொகுதி




5. தூங்கானைத் தளி




6. இருதளச் சாலைத் தளி






முகமண்டபம்




7. பிடாரித் தளிகள்




8. வளியான் குட்டைத் தளி




யாளி மண்டபம்


III. கட்டுமானக் கோயில்கள்

1. கடற்கரைக் கோயில்
















வராகரும், வேசர சிறு தளியும்




அமர்ந்த நிலை சிம்மம்




2. ஒலக்கனேசுவரர் கோயில் (மகிடாசுரமர்த்தினி குடைவரையின் மேல் தளத்தில்)




ஒலக்கனேசுவரர் கோயில்




3. முகுந்த நாயனார் கோயில்




சோமாஸ்கந்தர் தொகுதி




சாமுண்டியுடன் அன்னையர் அறுவரும், வீரபத்திரரும்


உலகப் பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவினரால் அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையினரின் பராமரிப்பில் உள்ளது.

மனதை மயக்கும் பல்லவர் கலைக்கூடத்தைக் கண்டு களித்தோமல்லவா? எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் மாமல்லபுரத்தைக் காண மறுபடியும் இங்கு வருவோம்!

இனி வரும் இதழ்களில் மாமல்லபுரக் குடைவரைகளோடுப் பழகி அவற்றை அறிவோம்!!
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.