http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 139
இதழ் 139 [ டிசம்பர் 2017 ] இந்த இதழில்.. In this Issue.. |
முன்றில்
முன்னுரை "இவ்வளாகத்திலுள்ள வெள்ளைப்பிள்ளையார் திருமுன் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பெற்றது எனக்கொள்ளுமாறு கல்வெட்டுகள் கண்காட்டுகின்றன. தொடங்கப்பெற்ற சில ஆண்டுகளிலேயே வலஞ்சுழியின் முதன்மைக்கோயிலாய் அது உருமாறியதை மூன்றாம் இராஜராஜனின் ஐம்பதிற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. வெள்ளைப் பிள்ளையார் திருமுன்னில் உள்ள இருமொழிக்கல்வெட்டுக் கொண்டு இக்கோயில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் கருத்துச் சரியானதன்று. கோயிலின் கட்டுமானமும்,தூண்களின் அமைப்பும்,பஞ்சரப்பெண்களின் தோற்ற அமைதியும் மிகத்தெளிவாக அவை பிற்சோழர் காலத்தன என்பதை உறுதிப்படுத்துகின்றன.இரண்டாம் இராஜராஜனின் இராஜராஜேஸ்வரமும் மூன்றாம் குலோத்துங்கரின் திரிபுவன வீரேசுவரரும் கண்ட கண்கள் இந்தக் கட்டுமானத்தை ஒய்சளருக்கோ விஜயநகர வேந்தர்களுக்கோ விட்டுக்கொடுக்க ஒருபோதும் ஒருப்படா." மேற்கண்ட வரிகள் டாக்டர்.திரு .இரா.கலைக்கோவன் மற்றும் மு.நளினி ஆகியோர் எழுதிய "வலஞ்சுழி வாணர்" என்ற நூலின் 169 மற்றும் 170 ம் பக்கத்தில் உள்ளன. "வலஞ்சுழிக்கோயில் வளாகம் மிகப்பெரிய வளாகம். சோழர் கால கட்டடக்கலை,சிற்பக்கலை,கல்வெட்டெழுத்துக்களின் வளர்ச்சி அறிய விரும்புவாருக்கு இக்கோயில் உகந்த களமாக அமையும்.எத்தனை விதமான போதிகைகள்! வெவ்வேறு அளவுகளில் எத்தனை சிற்பங்கள்! சோழ மன்னர்களின் பெரும்பாலோர் கல்வெட்டுகள் இங்கிருப்பதால், உத்தமசோழர் காலத்திலிருந்து மூன்றாம் இராஜேந்திரர் காலம் வரையிலான தமிழ் எழுத்து வளர்ச்சிநிலை அறிய இங்குப் பயிலலாம். இந்த வளாகத்தில் அளவான ஆரவாரமும் இருக்கிறது! அளவற்ற அமைதியும் இருக்கிறது! அதனால், 'எங்கே நிம்மதி என்று தேடுவோரும் இங்கு வரலாம். பத்திமைக்காலத்து நினைவுகளில், 'ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே' என்று களித்துத் துள்ளுவாரும் இவ்வளாகத்தில் வாழ்க்கை வளர்க்கலாம். வரலாற்றுக் காற்று வருடிக்கொண்டு போகும் வலஞ்சுழிக்குத் தவறாமல் வாருங்கள் என்று சரித்திரத் தேர்ச்சி கொள்ள விரும்பும் ஒவ்வொருவரையும் இந்நூல் வழிப்படுத்துமானால் அது வலஞ்சுழியின் பெருமை என்று மகிழ்வோம்" என்று நூலாசிரியர்கள் முன்னுரையில் பகன்றவை முற்றிலும் உண்மையே! இவ்வளாகத்தின் அளவான ஆரவாரமும் அளவற்ற அமைதியும் நம்மை ஈர்க்கவே செய்கிறது . ஈர்ப்பதோடல்லாமல் இனம்புரியாத வகையிலும், வார்த்தைகளில் வர்ணிக்க இயலாத தன்மையிலும் ஏதோ செய்கிறது என்பதையும் நம்மால் அனுபவத்தில் உணர முடிகிறது! 2004 ம் ஆண்டு டாக்டர் மேற்கொண்ட வலஞ்சுழி ஆய்வுப்பயணங்களில் அவருடைய அண்மையில் பெற்ற அனுபவங்கள் மிகவும் சுகமானவை! ஆனால் அடியேன் அந்த அற்புத சந்தர்ப்பங்களை என்னுள் வரலாறு வளர்க்கவும்,கோயில் கட்டுமானம் அறியவும் துளியேனும் பயன் படுத்தாமல் அப்பெருமகனாரின் அண்மையை வரலாற்று நாவல்களின் விவாதங்களாக பொழுதைப் போக்கியது குறித்து அவரிடமே பலமுறை வருந்தியிருக்கிறேன். அப்பொழுது அவர் கூறுவார் " வருந்த வேண்டாம் சீத்தாராமன்! அவ்வாலயத்தில் நீங்கள் இருந்த பொழுது, நிலைத்த உங்களின் இருப்பே உங்களை வரலாற்றில் இணையச்செய்யும்". இவ்வாறு அவர் கூறியதை நமக்கு ஆறுதல் சொல்லவே கூறியிருக்கிறார் என்பதாகவே எடுத்துக்கொண்டேன். மீண்டும் டாக்டர் கூறியதை கவனியுங்கள்! "எங்கே நிம்மதி என்று தேடுவோரும் இங்கு வரலாம். பத்திமைக்காலத்து நினைவுகளில், 'ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே' என்று களித்துத் துள்ளுவாரும் இவ்வளாகத்தில் வாழ்க்கை வளர்க்கலாம். வரலாற்றுக் காற்று வருடிக்கொண்டு போகும் வலஞ்சுழிக்குத் தவறாமல் வாருங்கள்!" ஆம். அவ்வளாகத்தில் நான் களித்துத் துள்ளியிருக்கிறேன்! என் வாழக்கை அதன் பிறகு நன்றாகவே வளர்ந்திருக்கிறது! அப்பயணங்களில் வரலாறு கற்றுக்கொண்டேனோ இல்லையோ, டாக்டர்.இரா.கலைக்கோவன் அவர்களின் அண்மையையும், அன்பையும், நட்பையும் நன்கு அனுபவித்தேன். இந்நிகழ்வுகளே என்னையும் அறியாமல் என்னுள் வரலாற்றாய்வு என்னும் வித்தை விதைத்து விட்டுச்சென்றிருக்கின்றன என்றால் அக்கூற்று மிகையானதல்ல! டாக்டர் அவர்களின் வரலாற்றறிவு மலையுச்சியில் தொடங்கும் ஆறு,அடர்ந்த மூலிகை வனங்களில் பயணித்து, மூலிகைகளின் சாரங்களையும்,செறிவையும் தன்னுள் பெற்று அருவியாகவும், ஆர்ப்பரித்து வரும் நதியாகவும்,தெளிந்த அமைதியான,அகண்ட நீரோட்டம் கொண்ட தன்னுடைய நீண்ட பயணத்தில் அரித்தல்,கடத்தல்,படிய வைத்தல் போன்ற பணிகளை செய்து செல்லுமிடமெல்லாம் செழுமை சேர்த்து, குளம் குட்டைகளை நிரப்பி பின்பு அகண்ட சமுத்திரத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் முழுமை கொண்டது! அதன் தொடர் ஓட்டத்தால் தூய்மை பெற்றதோடல்லாமல் பின்விளைவுகளற்ற நுகர்வுத்தன்மையுடையதாய் சிறந்து விளங்குகிறது! நம்முடைய அறிவு குளத்து நீரை ஒக்கும்! இதனுடைய மூலம் ஆறு மற்றும் வான் மழை ஆகும்! இதனுடைய மூலம் சிறந்ததாயினும் தேக்கநிலை பெறுவதால் நேரடி நுகர்வுத்தன்மை பெற்றதல்ல! இதனை நுகர விரும்புவோர் காய்ச்சி வடிகட்டி நுகர்ந்தால் தான் பின் விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்! இந்த நீண்ட பீடிகை எதற்கு என்பதை வாசகர்களிடம் தெரிவித்து விட்டு இக்கட்டுரையைத் தொடர்வது பொருத்தமாயிருக்கும்! இம்முயற்சியே "வலஞ்சுழி வாணர்" என்ற நூலை வாசித்தனால் ஏற்பட்ட தாக்கத்தில் விளைந்ததாகும். அப்படி ஒரு சிறந்த நூல் ஏற்கனவே இருக்க உனக்கேன் இந்த தேவையற்ற வேலை என்று பலர் மனதுள் கேட்பது மானசீகமாக என் காதுகளை அடைகிறது! ஆற்றில் நீந்த முற்படுவோர் நீந்தத் தெரியாவிட்டாலும் ஆற்றில் விழுந்து தத்தளித்தால் தான் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும்! கோயில் கட்டுமானக்கலையை கற்றுக் கொள்ளும் என் தொடர் முயற்சியில் வலஞ்சுழியின் ஈர்ப்பு என்னை ஸ்வேத விநாயகர் ஆலயத்தை பற்றி எழுதத் தூண்டியது என்றால் அது மிகையாகாது! எனவே, இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது நீங்கள் சிறந்த கருத்துக்களாக எதனையாவது உணர்ந்தால் அது டாக்டர்.இரா.கலைக்கோவன் அவர்களையும், முதிர்ச்சியற்ற கருத்துக்களைக் காண நேர்ந்தால் அது அடியேனையும் சாரும் என்று சொல்லிக்கொண்டு இம்முயற்சியைத் தொடருகிறேன். தெற்கு நோக்கி அமைந்துள்ள இம்முன்றில் தளம் ஒழுங்கற்ற வடிவுடனும் சமமான மேற்பரப்புடனும் கூடிய பல பலகைக்கற்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் இருபுறமும் இத்தளத்தை அடைய சுருள்யாழிப்பிடியுடன் மேற்புறம் மூன்று படிகளும் அவற்றுள் ஒன்று மட்டும் அரை வட்ட வடிவுடனும் கீழ்புறம் இரண்டு படிகளும் அமைந்துள்ளன. கிழக்குப் புறமும் மூன்றாவது படி இருந்திருக்க வேண்டும். இதனை சுருள்யாழிப் பிடிச்சுவரின் நீட்சியிலிருந்து ஊகிக்கலாம். மேலும் கிழக்கில் உள்ள அலங்கார மண்டபத்தின் தரை தளம் இதன் மூன்றாவது படியை மறைத்திருக்கலாம் வலஞ்சுழி ஸ்வேத விநாயகர் ஆலய முன்றில் வரைபடம் வலஞ்சுழி ஸ்வேத விநாயகர் ஆலய முன்றில் கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம் போன்ற தலையுறுப்புகள் பெற்ற அழகிய பன்னிரண்டு அரைத்தூண்கள் முன்றில் தள முகப்புச்சுவரை அலங்கரிக்க எழும் தளத்தின் முன்பகுதியை வேகமாக ஓடும் இரண்டு குதிரைகள் இழுக்கின்றன. அரைத்தூண்கள் போதிகைகள் பெற்று முன்றில் தளத்தைத் தாங்க மேலே கூடு வளைவுகளுடனான கபோதமும் சிறிய அளவிலான பூமிதேசமும் காட்டப்பட்டுள்ளன. தேரின் சக்கரங்கள் இருபுறமும் படிகளுக்குத் தென்புறம் அமைந்துள்ளன. இவைகளின் ஆரக்கால்கள் எழிலுற அமைக்கப்பட்டு அவைகள் சக்கரத்தின் மையப்பகுதியிலுள்ள குடத்திலிருந்து கிளைத்து சக்கரச் சட்டகத்தில் நிலை பெறுகிறது. சக்கரச் சட்டகத்தின் வெளிப்பகுதி கொடிக்கருக்கு வளையங்களால் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. தாமரை இதழ்களால் தழுவப் பெற்ற குடத்தின் மையப்பகுதி தேரின் அச்சில் கோர்க்கப்பட்டு கழன்று விழாமல் இருக்க கடையாணி பெற்று எழிலுற காண்பிக்கப்பட்டுள்ளது. முன்றிலின் தென்புறம் அழகிய இரண்டு தூண்கள் தன் போதிகைக் கைகளால் முப்புறமும் கூரையைத்தாங்கும் உத்தரங்களைத் தாங்குகின்றன.இதில் தெற்கு வடக்காக நீளும் இரண்டு உத்திரங்களும் வடக்கில் நுழைவாயிலின் இருபுறமும் சற்று தள்ளி அமைந்துள்ள இரண்டு அரைத்தூண்களின் போதிகைக் கைகளால் தாங்கப்படுகின்றன. முன்றில் கூரையைத் தாங்கும் நான்காவது உத்திரம் முகமண்டபச் சுவற்றில் பதிய இரண்டு அரைத்தூண்களும் இரண்டு முழு தூண்களும் இம்முன்றிலைத் தாங்குகின்றன. இம்முன்றிலைத் தாங்கும் இரண்டு அரைத்தூண்களும் இவ்வாலயத்தின் மண்டபம் முழுக்க ஒரே அமைப்பில் இடம் பெற்றிருக்கும் மற்ற அரைத்தூண்களை ஒத்திருந்தாலும் இங்கு மட்டும் உத்திரத்தின் அகலம் கருதி இவற்றின் போதிகைக்கைகள் மற்ற அரைத்தூண்களிலிருந்து பெரிதும் வேறுபடுவதைக் காணலாம். மேலும் இவ்விரண்டு தூண்களில் காட்டப்பட்டுள்ள போதிகைகளே நன்றாக வேறுபடுவதைக் காணலாம். இவற்றில் மேற்கிலுள்ள தூண் ஒரே ஒரு பூமொட்டுநாணுதலும் கிழக்கிலுள்ள தூண் மூன்று பூமொட்டு நாணுதல்கள் கொண்டு வேறுபடுவதைக் காணலாம். இவ்வரைத்தூண்கள் இரண்டு செவ்வக வடிவ அடிப்பாகத்திலிருந்து எழும்பி பின் எண்முகமாக மாற்றம் காண்கின்றன.நான்முக அடிப்பாகம் முடிந்தவுடன் ஒரு நாகபந்தம் காண்பிக்கப்பட்டுள்ளது. இத்தூண்கள் எட்டு பாகமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டு செவ்வக வடிவ அடிப்பாகத்தில் முதன்மைத்திசைகளிலும், இரண்டாம் நிலைத்திசைகளிலும் நாகரமாகவே காட்டப்பட்டு அடிப்பாகம் தாண்டி எழும் எண்முகத்தில் முதன்மைத்திசைகளில் நாகரமும் இரண்டாம் நிலைத்திசைகளில் வேசரமும் முயற்சிக்கப்பட்டிருப்பதை நன்கு காண முடிகிறது. இவற்றின் முழு காட்சியை முன்றிலின் தென்புறமுள்ள இரண்டு தூண்களிலும் நம்மால் காணமுடிகிறது. இவ்வரைதூண்கள் தொங்கல், தானம்,தாமரைகட்டு,கலசம்,தாடி,கும்பம்,தாமரைப் பாலி,பலகை மற்றும் வீரகண்டம் பெற்று போதிகைகள் பெறுகின்றன. இவ்விரண்டு அரைத்தூண்களின் போதிகைகளில் மேற்கில் உள்ளது குளவுடன் தரங்கம் பெற்று நடுவில் பட்டை காட்டப்பட்டுள்ளது. கிழக்கில் உள்ள அரைத்தூண் குளவுத்தரங்கத்துடன் பூவெட்டுப்போதிகையாக காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்போதிகைகளின் மதலைகள் மேலெழும் தாமரைக்கம்பு உத்திரம் தாங்குகிறது. உத்திரத்தின் மேல் வாஜனமும் வலபியும் இடம்பெற வலபியில் நீலோத்பல மலர்கள் அலங்கரிக்கப்பட்டு அவைகளின் காம்புகள் வாஜனத்தில் நிலை கொண்டுள்ளன. இந்நீலோத்பல மலர்கள் முன்றிலில் அமைந்துள்ள தெற்கு,மேற்கு மற்றும் கிழக்கு உத்திரங்களின் இருபுறமும் விரிய உட்புறம் முன்றிலின் கூரையையும் வெளிப்புறம் கொடுங்கைகளாக விரியும் கபோதங்களையும் மேல் சட்டம் பெற்று தாங்குதல் குறிப்பிடத்தக்கதாகும். முன்றிலின் உட்கூரை எழிலுற செதுக்கப்பட்ட தாமரைப் பதக்கத்துடன் விளங்குகிறது. இத்தாமரைப்பதக்கம் வட்டமாக வளைக்கப்பட்ட மூங்கில் கம்பிற்குள் காண்பிக்கப்பட்டுள்ளது. இம்மூங்கில் கம்பின் கணுக்களிலிருந்து கிளைக்கும் கொடிக்கருக்கு வளையங்களில் பெரும்பாலும் அன்னப்பறவைகளும் சில வளையங்களில் பூதங்களும் காண்பிக்கப்பட்டுள்ளன. இக்கொடிக்கருக்கு வளையங்கள் மற்றொரு வட்டமாக வளைக்கப்பட்ட மூங்கில் கம்பால் அணைவு பெற்றுள்ளது.இந்த இரண்டாவது மூங்கில் வளையல் இருபுறமும் தாமரை இதழ்களால் அணைவுபெற்ற சதுர கம்புகளால் சூழப்பட்டுள்ளது.இச்சதுரக் கம்புகளுக்கும் மூங்கில் வளையலுக்கும் இடைப்பட்ட நான்கு மூலைகளும் சிம்ம யாழியின் முகம் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச்சதுரக் கம்புகளின் நாற்புறமும் அழகிய ஆடல் மங்கைகளின் ஆடல் காட்சிகள் குறுஞ்சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்றிரண்டு ஆண்கள் இசைக்கருவிகள் வாசிப்பதாகவும் இடம் பெற்றுள்ளன. இவ்வாடல் சிற்பங்கள் இருபுறமும் தாமரை இதழ்களால் அலங்கரிக்கப்பட்ட சதுர கம்புகளின் அணைவு பெற்று அற்புதமாக விளங்குகிறது. இம்முன்றில் கிழக்கு மேற்காக சற்று அதிக நீட்சியுடன் செவ்வக வடிவில் அமைவதால் ஆடல் சிற்பங்களை வெளிப்புறமாக அணைக்கும் தாமரை இதழ்களால் அலங்கரிக்கப்பட்ட சதுர கம்புகளின் மேற்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் கொடிக்கருக்கு வளையங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. முன்றிலின் தெற்கு வாயிலைத தாங்கும் இரண்டு தூண்களும் ஆறு உருளைப்பகுதிகள்,அதிஷ்டான உறுப்புகள் அமைந்த அடிப்பகுதி ஆக ஏழு பகுதிகளாக அமைந்து போதிகைகள் பெற்று உத்திரம் தாங்குகின்றன. முன்றில் தூண்களின் (தெற்கு)வடிவ அமைப்பு இத்தூண்கள் எட்டு பாகமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதன்மைத்திசைகள் நாகரமாகவும் இரண்டாம் நிலைத்திசைகளில் வேசரமும் காட்டப்பட்டு அடிப்பாகத்தில் ஒரு முமையான அதிஷ்டானத்தைக் கொண்டு விளங்குகிறது. இவ்வதிஷ்டானம்,உப்பீடம்,உபானம்,பத்மஜகதி,சிலம்புவரிக்குமுதம்,கண்டம், பட்டிகை,வேதிக்கண்டம் ஆகியவை பெற்று பத்ம பந்த தாங்குதளமாய் காட்சியளிக்கிறது.இத்தூணின் துணைத்திசைகளில் வேசரமாக அமைந்த பகுதி குளவுத்தரங்கமாக காண்பிக்கப்பட்டுள்ளது. இவ்வதிஷ்டானத்தின் மேலெழும் ஆறு உருளைப் பகுதிகளிலும் நாகரமாகக் காட்டப்பட்டுள்ள முதன்மைத்திசைகளில் பஞ்சரங்கள் காட்டப்பட்டுள்ளன. இவ்விரண்டு தூண்களில் மட்டும் 48 பஞ்சரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் மேலெழும் போதிகைக்கைகள் உத்திரங்கள் முடியும் இடத்தில் சிறிய அளவிலும் உத்திரங்கள் நீளும் இடங்களில் சற்று நீண்டும் காட்டப்பட்டுள்ளன . இப்போதிகைகளின் மதலைகள் மேலெழும் தாமரைக்கம்பு உத்திரம் தாங்குகிறது. உத்திரத்தின் மேல் வாஜனமும் வலபியும் இடம்பெற வலபியில் நீலோத்பல மலர்கள் அலங்கரிக்கப்பட்டு அவைகளின் காம்புகள் வாஜனத்தில் நிலை கொண்டுள்ளன.இந்நீலோத்பல மலர்கள் உத்திரங்களின் இருபுறமும் விரிய உட்புறம் முன்றிலின் கூரையையும் வெளிப்புறம் கொடுங்கைகளாக விரியும் கபோதங்களையும் குறுக்கு,நெடுக்கு சட்டம் பெற்று குமிழாணிகளால் முடுக்கப்பட்டு தாங்குதல் குறிப்பிடத்தக்கதாகும். இக்கபோதங்களின் மேற்பரப்பு மாவிலைத்தோரணங்கள் போல் அலங்கரிக்கப்பட்டு,தென்மேற்கு மூலை மற்றும் தென்கிழக்கு மூலைகளில் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்ட தாமரை இதழ்கள் போல் அலங்கரிப்புச்செய்யப்பட்டுள்ளது.இதன் மேலெழும் பூமிதேசம் செவ்வகப்பட்டிகளாக அமைந்து அதனை அடுத்து சிறிய அளவிலான வேதிகையும் காட்டப்பட்டுள்ளது.இதன்மேலெழும் ஆரவரிசை மூன்று புறமும் கர்ணகூடு,பஞ்சரம்,சாலை,பஞ்சரம்,கர்ணகூடு என்றவரிசையில் அமையப்பெற்று அற்புதமாய் காட்சியளிக்கிறது.இவ்வுறுப்புகள் இணைவுப்பிடிச்சுவரால் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வார உறுப்புகள் அனைத்தும் பஞ்சரங்களால் அழகுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். (தொடரும்) |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |