http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 141
இதழ் 141 [ ஏப்ரல் 2018 ] இந்த இதழில்.. In this Issue.. |
முற்றுப்பெறாத குடைவரைகள்
2. கலங்கரை விளக்கக் குடைவரை மாமல்லபுரம் பழைய அர்ச்சுனன் தவம் சிற்பத் தொகுதியிலிருந்து மகிஷாசுரமர்த்தினி குடைவரைக்குச் சற்று முன்னரே அமைக்கப்பட்டிருக்கும் சிறிய இரும்புக் கதவாலான வாயில் வழியாக தருமராஜா மண்டத்தினை அடையலாம். தருமராஜா மண்டபத்தின் வடபுறத்தில் கலங்கரை விளக்கக் குடைவரை அமைந்துள்ளது. இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் அமைக்கப்பட்டுள்ள படிகள் குடைவரையை அடைய உதவுகின்றன. இப்படிவரிசை, குடைவரை நிலமட்டத்தைத் தொடுமிடத்தில் முடிவடைகிறது. நிலமட்டத்திற்கு மேலே எழும் குடைவரையின் முன்பகுதியில் பாறைத்தளம் உள்ளது. இப்பாறைத்தளத்தின் மேற்பரப்பு நன்கு சீர் செய்யப்பட்டுள்ளது. பாறைத்தளத்தின் கிழக்குமுகத்தின் மேற்குப் பகுதி மட்டும் பொளியப்பட்டு நிறைவுறாமல் கைவிடப்பட்டுள்ளது. இப்பாறைத் தளத்தையடைய அதன் தென்புறத்தில் மூன்று படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பாறைத்தளத்தின் மேற்கில் கலங்கரை விளக்கக் குடைவரை கிழக்குப் பார்வையாய் அகழப்பட்டுள்ளது. குடைவரை: சீர் செய்யப்பட்ட பாறைத்தளத்தின் மேற்கில் கிழக்கு முகமாகக் குடைவரை அமைந்துள்ளது. முகப்பு திறக்கப்பட்டு உட்புறம் மண்டபப் பகுதிக்காக அகழப்பட்டு நிறைவுறாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. குடைவரை முகப்பு: முகப்பின் நடுவில் உறுப்பு வேறுபாடற்ற இரண்டு நான்முக முழுத்தூண்களும், பக்கச் சுவர்களையொட்டி உறுப்பு வேறுபாடற்ற இரண்டு நான்முக அரைத்தூண்களும் அமைக்கப் பெற்றுள்ளன. மையத் தூண்கள் மண்டபப் பின்சுவரிலிருந்து விடுபடாமல் பாறைத் தொடர்ச்சியுடன் காணப்படுகின்றது. முகப்பினையடுத்து மண்டபமும் நிறைவுறாது பிளப்பு நிலையில் கைவிடப்பட்டுள்ளது. முகப்பின் நான்கு தூண்களிலும் தூணின் மேல் உறுப்புகளுக்கான ஒதுக்கீடுகள் காணப் பெறுகின்றன. மேற்புறம் வளைமுகப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன. வாஜனம் உருப்பெறவில்லை. கூரை வடிவமைக்கப்படாதக் கபோதமாய் முன்னிழுக்கப்பட்டுள்ளது. முகப்பின் தென்புறமும், வடபுறமும் அகழப்பட்டு நிறைவுறாமல் காணப்படுகின்றது. கிழக்கு நோக்கிய இப்பாறை அகழ்வுகள் இக்குடைவரையின் வாயிற் காவலர்களுக்கான ஒதுக்கீடாக இருக்கலாம். அரைத்தூண்களையொட்டி வடபுறம் விரியும் பாறைச்சுவர் கிழக்கு நோக்கிய சரிவாக மாறி பாறைத்தளத்தில் அமர்கிறது. தென்புறத்தே விரியும் பேரளவிலான பாறைச்சுவர் வடசுவரைப் போன்று மாற்றம் ஏதுமின்றி அகழ்வு நிலையில் கைவிடப்பட்டுள்ளது. அதேபோன்று முகப்புக் கூரையின் தென்புறமும் அகழப்பட்ட நிலையில் நிறைவுறாவண்ணம் கைவிடப்பட்டுள்ளது. இக்குடைவரையின் முகப்பு, மாமண்டூர் சிறிய குடைவரையின் வளர்ச்சி பெற்ற வடிவமைப்பினைக் கொண்டுள்ளதைக் காணலாம். நன்றி: மாமல்லபுரம் குடைவரைகள் மு. நளினி டாக்டர் இரா. கலைக்கோவன் ஒளிப்படங்கள் உதவி: ஆர். கே. லக்ஷ்மி |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |