http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 141

இதழ் 141
[ ஏப்ரல் 2018 ]


இந்த இதழில்..
In this Issue..

செய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 2
கோட்டாராப்பட்டியில் ஒரு காலை!
கயிலைப் பயணம் - 3
எழும்பூர் அற்புதக் காட்சியகம்
ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகுமோ?!
மாமல்லபுரக் குடைவரைகள் - 2
இதழ் எண். 141 > கலையும் ஆய்வும்
கோட்டாராப்பட்டியில் ஒரு காலை!
அர. அகிலா
அது ஓர் இன்காலைப் போது. சிராப்பள்ளியிலிருந்து திருஎறும்பியூர்வரை பயணித்து, எறும்பியூர்க் கிளியூர்ச் சாலையில் திரும்பிய அந்த மாருதி மகிழ்வுந்தில் நான்கு பயணிகள். பின்னிருந்த இருவரையும் நமக்குத் தெரியும். டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவனும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் மு. நளினியும்தான் அவர்கள். வண்டியின் முன்னிருக்கையில் கல்வெட்டாய்வாளர் புலவர் பி. தமிழகன். ஓட்டுநராக மகிழ்வுந்தின் உரிமையாளரும் சிராப்பள்ளி கலைஞர் கருணாநிதி நகரிலுள்ள பாரதி மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியின் முதல்வருமான திரு. கா. பாலகிருஷ்ணன். பாறைஓவிய ஆய்வாளரான அவர் பறவையியல் வல்லுநரும்கூட.

புலவர் தமிழகனின் நண்பரான பாலகிருஷ்ணன் பறவையியல் ஆய்வுக்காகத் திருச்சிராப்பள்ளி மாவட்டம் கிளியூருக்கு அருகிலுள்ள பத்தாளப்பேட்டை சென்றபோது அவ்வூரின் ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் திரு. ம. முருகேசனும் திரு. க. தமிழ்ச்செல்வனும் அவரைச் சந்தித்தனர். பத்தாளப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வரும் கோட்டாரப்பட்டியில் நீர்வற்றிய குளம் ஒன்றின் கரையைச் சீரமைத்தபோது கல்வெட்டெழுத்துக்களுடன் கற்பலகை ஒன்று கிடைத்த தகவலை பாலகிருஷ்ணனிடம் பகிர்ந்து கொண்ட அவர்கள், அதிலுள்ள செய்தியை அறிய விரும்புவதாகவும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா.கலைக்கோவன் உதவியுடன் அக்கல்வெட்டைப் படித்துச் செய்தியைத் தெரிவிக்குமாறும் வேண்டினர். அதற்காகத்தான் 14. 3. 2018 காலை தொடங்கியது இந்தக் கோட்டாரப்பட்டிப் பயணம். நளினியும் பறவையியல் ஆர்வலர் என்பதால் வழியெல்லாம் பறவைகள் பற்றிய கருத்துப் பரிமாறல்கள்தான். கேள்விகளும் பதில்களுமாக நேரம் பறந்தது. ஆங்காங்கே நிறுத்திப் பறவைகளைப் பார்த்தும் படமெடுத்தும் பத்தாளப்பேட்டை நெருங்கியபோது முருகேசனும் தமிழ்ச்செல்வனும் ஊர்மக்கள் சிலருடன் அங்குக் காத்திருந்தனர்.

அவர்கள் வழிகாட்ட அங்கிருந்து 2 கி. மீ. தொலைவிலுள்ள கோட்டாரப்பட்டி சில நிமிடங்களில் பார்வையில் பட்டது. கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட கற்பலகை களர் நிலம் ஒன்றின் அருகில் மண் சாலையின் ஓரத்தே நிறுத்தப்பட்டிருந்தது. 69 செ. மீ. உயரம், 48 செ. மீ. அகலம் கொண்ட அப்பலகையில் 10 வரிகளில் தமிழ் எழுத்துக்களில் செய்தி பதிவாகியிருந்தது. சிற்சில எழுத்துக்கள் தவிர கல்வெட்டுச் சிதைவின்றி முழுமையாக இருந்தமையால் படிப்பது எளிதானது. கல்வெட்டுப் பொறிப்பின் கீழுள்ள பகுதியில் கல்வெட்டுக் காலத்தோடு தொடர்பில்லாத கோட்டுருவமாக நடக்கும் பாவனையில் நாயின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இக்கற்பலகையின் அருகே மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் சூலம் பொறிக்கப்பட்ட கனமான கல்லொன்றும் உள்ளது. அது சிவன்கோயில் ஒன்றுக்குக் கொடையளிக்கப்பட்ட நிலத்துண்டின் எல்லைக்கல்லாக இருந்திருக்கலாம் என்றார் கலைக்கோவன்.

உடன்வந்தோர் ஆர்வத்துடன் பார்க்க, கல்வெட்டைப் படித்துப் படியெடுத்த மு. நளினி, மூன்றாம் இராஜேந்திரசோழரின் முதன்மை அரசு அலுவலர்களுள் ஒருவரான மனசய தண்டநாயக்கர் அரசரின் மூன்றாம் ஆட்சியாண்டின்போது கரணப்பற்றின் கீழிருந்த கீழைச் செந்தாமரைக்கண்ணநல்லூரில் பாசன வசதிக்காக வாய்க்கால் ஒன்றை வெட்டியதையும் அந்த வாய்க்கால் கிராமத்தில் வடக்கு நோக்கிப் பாய்ந்து சூழ இருந்த நிலங்களை வளப்படுத்தியதையும் கல்வெட்டுச் செய்தியாகத் தெரிவித்தார்.

'பெரியஸ்ரீகோயில்' என்று கல்வெட்டுகளில் அழைக்கப்படும் திருவெள்ளறைப் புண்டரீகாட்சப் பெருமாள் கோயில் இறைவன், சோழர் காலத்தில் செந்தாமரைக்கண்ணன் என்றழைக்கப்பட்டதாகக் கூறிய இரா. கலைக்கோவன், அக்காலத்தே காவிரியின் இருகரைகளிலும் வெள்ளறைக் கோயிலுக்கான நிலத்துண்டுகளைப் பெற்றிருந்த ஊர்கள் சில இப்பெயரையேற்றுச் செந்தாமரைக்கண்ணநல்லூர் என்றழைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். அதற்கான சான்றுகள் திருப்பைஞ்ஞீலி, திருவரங்கம் கல்வெட்டுகளில் காணப்படுவதையும் சுட்டிய அவர், அதன் பின்னணியில், மனசய தண்டநாயக்கர் வாய்க்கால் வெட்டிய செந்தாமரைக்கண்ணநல்லூரும் வெள்ளறைப் பெருமாள் பெயரிலேயே அமைந்தது எனக் கொள்ளலாம் என்றார். கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலத்துண்டுகள் அவ்வூரில் இருந்தமையை ஊர்ப்பெயரின் பின்னொட்டான நல்லூர் நிறுவுகிறது.

திருச்சிராப்பள்ளியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் சோழ அரசர்களின் கல்வெட்டுகள் பலவாகக் கிடைத்தபோதும் அம்மரபின் இறுதி மன்னரான மூன்றாம் இராஜேந்திரசோழரின் கல்வெட்டுகள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. அவ்வகையில் இப்புதிய கல்வெட்டு முக்கியத்துவம் பெறுவதாகக் குறிப்பிட்ட பேராசிரியர் நளினி, சிராப்பள்ளியின் வடபுறத்தே ஒய்சளர் ஆதிக்கம் பெற்றிருந்தபோதும் பத்தாளப்பேட்டை, கிளியூர்ப் பகுதிகளில் சோழ அரசரின் மேலாண்மை இருந்ததை இக்கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துவதாகக் கூறினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ள கற்பலகையைக் காப்பாற்றும் விதமாக இதைத் திருச்சிராப்பள்ளி அருங்காட்சியகத்தில் சேர்க்கவேண்டும் என முருகேசனும் தமிழ்ச்செல்வனும் விழைய, காப்பாட்சியரிடம் தெரிவித்து அதற்கான முயற்சியை மேற்கொள்ளச் செய்யலாம் எனத் தெரிவித்த டாக்டர் இரா. கலைக்கோவன், கல்வெட்டைக் காப்பாற்றிய ஊர்மக்களுக்கு நன்றி கூறினார்.





வரலாறு இப்படித்தான் நண்பர்களே ஊருக்கு ஊர் சிதறிக் கிடக்கிறது, தேடித் தொகுத்து அதை முழுமைப்படுத்த வேண்டும். கோட்டாரப்பட்டியில் மலர்ந்த அந்தக் காலைப் பொழுது சோழர் காலப் படைத்தலைவர் ஒருவரின் அருஞ்செயலை வரலாற்றுக்கு வழங்கிப் பெருமை கொண்டது. அது சரி, அப்படியானால் பத்தாளப்பேட்டை? அது காட்டிய காட்சிகள், அடுத்த திங்களில்.

       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.