http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 147

இதழ் 147
[ ஆகஸ்ட் 2019 ]


இந்த இதழில்..
In this Issue..

புள்ளமங்கைக் கல்வெட்டுகள் ‍-1
திருப்புள்ளமங்கை விமானம் - 1
கரை தழுவும் நினைவலைகள் - 4
கரை தழுவும் நினைவலைகள் - 3
சான்றோர் சினம்
இதழ் எண். 147 > கலையும் ஆய்வும்
கரை தழுவும் நினைவலைகள் - 3
அர. அகிலா
ஐஹொளெயின் கொற்றவைக் கோயில் கட்டுமானத்திற்கும் சிற்பச்சிறப்பிற்கும் புகழ்பெற்றது. அங்குள்ள தூண், கோட்டச் சிற்பங்கள் நெடிதுயர்ந்த வடிவின. எளிமையாகவும் ஆனால், அழகாகவும் புத்திணைவுகளுடனும் உருவாக்கப்பட்டுள்ள அச்சிற்பங்கள் அனைத்துமே சாளுக்கியர் உளித்திறம் பேசுகின்றன. இக்கோயிலில் நான் பார்த்த பெரும்பாலான சிற்பங்கள் தமிழ்நாட்டுக் கோயில்களில் கண்டவைதான் என்றாலும், இங்குள்ள ஒவ்வொன்றும் ஏதாவது ஒருவிதத்தில் அவற்றிலிருந்து மாறுபட்டிருப்பதை உணரமுடிந்தது. எல்லாவற்றைப் பற்றியும் எழுத விருப்பம்தான் என்றாலும், உளம் கொள்ளாக் கிளர்ச்சியை உருவாக்கிய நந்தியணுக்கரை முதலில் பார்ப்போம்.

தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் குடைவரைக் காலத்திலேயே இடம்பெறத் தொடங்கும் நந்தியணுக்கர் சிற்பவடிவம் மாமல்லபுரம் அருச்சுனர் ரதத்தின் தெற்குக் கோட்டத்தில் பேருருக் காட்சியாகக் கிடைக்கிறது. முற்சோழர் கோயில்கள் பலவற்றில் விமானத் தென்கோட்டச் சிற்பமாக விளங்கும் இந்த நந்தியணுக்கரின் நிற்கும் கோலம் இணையற்ற எழிலினது. திருநாமநல்லூர், திருச்செந்துறை, திருமீயச்சூர் கோயில் நந்தியணுக்கர்களில் இறைவனின் நெருக்கத்தையும் நந்தியின் நேயத்தையும் நன்கு உணரமுடியும். சிவபெருமானின் பல்வேறு திருவுருவங்களில் என்னை மிகவும் கவர்ந்த தோற்றங்களுள் நந்தியணுக்கரும் ஒன்று.ஐஹொளெ நந்தியணுக்கர் நான் அதுநாள்வரை பார்த்திருந்த தோற்றங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தமை என் கவனத்தை ஈர்த்தது. வலப்பாதத்தை சமத்திலிருத்தி, இடப்பாதத்தைத் திரயச்ரமாக்கி நந்தியின்மீது இலகுவாகச் சாய்ந்த மிக அழகான நின்ற திருக்கோலம். சுற்றிலும் தாமரையிதழ்கள் பொருத்திய தலைச்சக்கரம் அவர் சடைமகுடத்தை எடுப்பாக்கிக் காட்ட செவிகளில் வலப்புறம் பனையோலைக் குண்டலம், இடப்புறம் சிதைந்த நிலையில் பூட்டுக்குண்டலம். தோள்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சடைப்புரிகள். பெருமுத்து மாலை, தோள், கை வளைகள், உதரபந்தம் பெற்றுள்ள அவரது முப்புரிநூல் முத்துச்சரங்களாய் மார்பில் விரிகிறது. வளையாக அவர் இடத்தோளை அலங்கரிக்கும் பாம்பு நெளிந்து மேலெழும்பிப் படம்விரித்துள்ளது. இடக்கைகள் நான்கனுள் கீழிரண்டும் இறைவனின் பின் நிற்கும் நந்தியின் செவிகளைத் தொட்டவாறிருக்க, மேலிரண்டும் சிதைந்துள்ளன.

வல முன் கைப் பொருளை அடையாளப்படுத்த முடியவில்லை. அடுத்தடுத்த வலக்கைகளில் அக்கமாலை, உடுக்கை, மகுடத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சடைப்புரி. இறைவனின் இடையைப் பட்டாடை அலங்கரிக்க, மடிப்பகுதியில் புலித்தோல். இவ்விரண்டையும் இடையில் இருத்தும் மணிகள் பதித்த அரைக்கச்சில் அகலமான யாப்பு. தமிழ்நாட்டு சிவபெருமான் தோற்றங்கள் சிலவற்றிலும் புலித்தோலாடையைக் காணமுடிகிறதென்றாலும், இங்கு தலையும் கால்களும் வாலுமாய் முழுமையான அளவில் அமைந்துள்ளது அத்தோலாடை. இறைவனின் வலத்தொடையருகே புலியின் முகத்தைக் கண்டபோது சற்றே அதிர்ந்தமை இன்னமும் நினைவிருக்கிறது.

இறைவனின் பின் நிற்கும் நந்தியின் பேரெழில் இணையற்றது. இறைவனின் தொடுகையால் அதன் முகத்திலும் பார்வையிலும் பரிணமித்துள்ள உணர்வலைகள் மிக நுட்பமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கழுத்தை ஒட்டிய மணியும் நெகிழ்ந்து தொங்கும் கிளிஞ்சல் மாலையும் அதன் கம்பீரத்தை மேம்படுத்துகின்றன. மிக நேர்த்தியாகவும் இயல்பாகவும் வடிக்கப்பட்டிருக்கும் அதன் கால்கள் தமிழ்நாட்டுச் சிற்பங்களுடன் ஒப்பிடச்செய்தன. இறைவனின் இடப்புறம் தொங்கலுடனான இடைச்சிற்றாடை அணிந்து இடக்கையை நெகிழ்த்தியிருக்கும் பூதம் குறும்புச் செல்லம் போலும்! இறைவனைப் போலவே நந்தியிடம் பரிவுகாட்ட விழைந்த அது தன் கைக்கெட்டிய நந்தியின் வாலை மெல்லப் பிடித்து தலையில் தவழவிட்டு மார்பில் நெகிழச் செய்துள்ளது. குழந்தைகள் அம்மாவின் புடவை முந்தானையைப் பிடித்திழுத்துத் தலையில் சுற்றிக்கொள்ளும் காட்சிதான் என் நினைவுக்கு வந்தது. ஒரு சிறிய படப்பிடிப்புதான் என்றாலும், அந்தப் பூதத்தின் குறும்புப் பூசிய பரிவு சிற்பத்தின் சிறப்பைப் பன்மடங்காக உயர்த்தியுள்ளது.

நந்தியணுக்கர் என்ற மரபு வடிவத்தைச் சிற்பி அதற்குரிய இலக்கணம் மட்டும் அமையுமாறும் செய்யலாம், அதே சமயம் அம்மரபுவடிவம் மாறாமல் அதற்குள் அவர் கைவினையையும் கற்பனையையும் அழகுபோல வெளிப்படுத்தலாம் என்பதற்கு ஐஹொளெ கொற்றவைக் கோயில் நந்தியணுக்கர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இதை வடித்த சாளுக்கியக் கைகளுக்குக் காலம் காலமாய்க் கண்டுமகிழும் கண்கள் நன்றி சொல்லும்.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.