http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 147

இதழ் 147
[ ஆகஸ்ட் 2019 ]


இந்த இதழில்..
In this Issue..

புள்ளமங்கைக் கல்வெட்டுகள் ‍-1
திருப்புள்ளமங்கை விமானம் - 1
கரை தழுவும் நினைவலைகள் - 4
கரை தழுவும் நினைவலைகள் - 3
சான்றோர் சினம்
இதழ் எண். 147 > கலையும் ஆய்வும்
புள்ளமங்கைக் கல்வெட்டுகள் ‍-1
மா. இலாவண்யா
தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலுருந்து பதினான்கு கிலோமீட்டர் தொலைவில் புள்ளமங்கை அமைந்துள்ளது.

ஊர் - கோயில் பெயர்

பண்டை காலத்தில் ஊரின் பெயர் புள்ளமங்கை என்றும் புள்ளமங்கலம் என்றும் வழங்கப்பட்டது. திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமான இவ்வூர் பின்வருமாறு தொடங்கும் தேவாரப்பாடலில் புள்ளமங்கை என்று குறிக்கப்பட்டுள்ளது.

பால்உந்துஉறு திரள்ஆயின பரமன்,பிர மன்தான்
போலும்திறல் அவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்திறல் அறச்சாடிய கடவுள்இடம் கருதில்,
ஆலந்துறை தொழுவார்தமை அடையாவினை தானே.

கல்வெட்டுகளில் இவ்வூர் புள்ளமங்கலம் என்றே வழங்கப்பட்டுள்ளது.

இவ்வூரில் பிரம்மபுரீசுவரர் கோயில் என்று இன்று வழங்கப்படும் சிவன் கோயில், கல்வெட்டுகளிலும், தேவாரத்திலும், திருவாலந்துறை மகாதேவர் கோயில் என வழங்கப்பட்டுள்ளது. ஆலமரத்தை தல மரமாக கொண்ட கோயில் அதுவே இப்பெயர் காரணம். ஆலமரத்தை தல விருட்சமாக (மரமாக) கொண்ட பல சிவன் கோயில்கள் உள்ளன. திருவாலங்காடு, ஆலந்துறை, ஆலங்குடி, பழுவூர் திருவாலந்துறை மகாதேவர் கோயில் என ஆலமரம் தொடர்புடைய பெயர் கொண்ட ஊர்கள், கோயில்கள் நாகை, தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இருக்கின்றன.

கல்வெட்டுக்கள்

புள்ளமங்கை கோயிலில் படியெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களின் எண்ணிக்கை 22. இவற்றுள் 14 கல்வெட்டுக்கள் நடுவணரசுத் தொல்லியல் கள ஆய்வுத் துறையினரால் 1921ம் வருடம் படியெடுக்கப்பட்டு அவ்வாண்டறிக்கையில் அக்கல்வெட்டுக்களின் குறிப்புக்கள் வெளியிடப்பட்டன. தென்னிந்திய கல்வெட்டு தொகுதிகளில் 5 கல்வெட்டுக்களும் (தொகுதி 13 - எண் 257, தொகுதி 19 - எண் 63,138,168,188), இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தினரால் படியெடுக்கப்பட்டு வரலாறு ஆய்விதழில் 6 கல்வெட்டுக்களும் (தொகுதி 2 - எண் 16.1, 16.2, 16.3, தொகுதி 3 - என் 9.1, 9.2, 9.3) பதிப்பிக்கப்பட்டுள்ளன. 2004 இல் புதுச்சேரி பிரஞ்சு ஆசியவியல் பள்ளி ஆய்வில் மொத்தம் உள்ள 22 கல்வெட்டுக்களும் படியெடுக்கப்பட்டு, Bulletin of Ecole Francaise Extreme Orient என்னும் பிரஞ்சு ஆய்விதழில் (பக். 114-143) ஆங்கில ஒலி மற்றும் பிரஞ்சு மொழி பெயர்ப்பிலும் 2005 இல் (இதழ் எண் 92) வெளியிடப்பட்டு, 2014 இல் தமிழ் வடிவில் வெளியிடப்பட்டன. 2014 வரை இப்படி பல்வேறு ஆய்விதழ்களில் வெளியான மொத்த கல்வெட்டுப் பாடங்களும் ஆவணம் ஆய்விதழ் 25இல் (பக் 64-84) வெளியிடப்பட்டுள்ளன.

கல்வெட்டு காலம்

இக்கோயிலில் சோழர் கல்வெட்டுக்கள் மட்டுமே உள்ளன. இக்கல்வெட்டுக்களுள் காலத்தால் பழமையானது முதலாம் பராந்தகரின் ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். முதலாம் பராந்தகரின் கல்வெட்டுக்கள் 12 உள்ளன. இவை இவ்வேந்தரின் 5ம் ஆட்சியாண்டிலிருந்து 33ம் ஆட்சியாண்டு வரை பரவியுள்ளன. மேலும் இரண்டாம் பராந்தகனின் கல்வெட்டு 1, உத்தம சோழனின் கல்வெட்டு 1, முதலாம் இராசராசரின் கல்வெட்டுக்கள் 3, முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டு 1 மற்றும் விக்கிரம சோழனின் கல்வெட்டு 1 உள்ளன. 3 துண்டுக் கல்வெட்டுகளின் காலம் தெளிவில்லை. இவை சோழர் கால எழுத்தமைதியை கொண்டுள்ளதால், சோழர் கால கல்வெட்டாகலாம் என கருதப்படுகிறது.

நாட்டுப்பிரிவுகள்

முதலாம் பராந்தகரின் காலந்தொட்டு முதலாம் இராசராசரின் 12ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வரை கிழார் கூற்றத்தில் உள்ள பகுதியாக புள்ளமங்கலம் குறிக்கப்படுகிறது. முதலாம் இராசராசரின் 23ம் ஆடசியாண்டுக் கல்வெட்டிலிருந்து இவ்வூர் நித்தவிநோத வளநாட்டுக்கு உட்பட்ட கிழார் கூற்றத்தில் உள்ள பகுதியாக குறிக்கப்படுகிறது.

பிரம்மதேயம்

சோழர் காலத்தில் பல கோயில்களுக்கு நிலங்கள் வரி நீக்கி இறையிலி தேவதானமாக வழங்கப்பட்டது. அப்படி இறையிலி நிலங்களை பெற்ற கோயில் இருக்கும் ஊர் பிரம்மதேயம் என குறிக்கப்பட்டது.

முதலாம் பராந்தகரின் 18ம் ஆட்சியாண்டில் திருவாலந்துறை கோயிலுக்கு ஐந்தரை மா அரைக்காணி நிலம் இறையிலி தேவதானமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புள்ளமங்கலம் பிரம்மதேயமாக இக்கல்வெட்டில் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலத்திற்கு பிந்தைய கல்வெட்டுக்களிலும் புள்ளமங்கலம் பிரம்மதேயம் எனவே குறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வூர் கல்வெட்டுகளில் மற்ற பிரம்மதேயங்களான கண்டமங்கலம் மற்றும் நிலமங்கலம் சுட்டப்படுகின்றன.

கோயில் நிர்வாகம்

கல்வெட்டுகள் இக்கோயிலின் நிர்வாகம் புள்ளமங்கலத்து மகாசபையாரிடம் இருந்ததை காட்டுகின்றன. இவ்வூர் பிரம்மதேயமானதால் அந்தணர் மகாசபையாரின் நிர்வாகத்தில் இருந்தது. கோயிலுக்கு அரசும் தனியர்களுள் அளிக்கும் கொடைகளைப் பெற்று நிர்வகிக்கும் பணியும், நிலப்பரிவர்தனைகளும், கோயில் கொடை மற்றும் நிர்வாகத் தொடர்பான குறைகள் இருந்தபோது சபை கூட்டி உரிய நடவடிக்கைகள் எடுத்து, உத்தரவுகள் பிறப்பித்ததையும் இங்குள்ள கல்வெட்டுகள் காட்டுகின்றன. மேலும் இக்கோயில் கல்வெட்டுகள் இவ்வூர் நடுவிற்சேரி திருமணி மண்டபத்தில் ஸ்ரீ காளாபிடாரிக்கு ஒரு கோயில் இருந்தமையை சுட்டி, காளாபிடாரிக்கான கொடை மற்றும் செயற்பாடுகளை இவ்வூர் மஹாசபையார் நிர்வகித்ததையும் காட்டுகின்றன. மற்றும் இவ்வூரில் திருஇளங்கோயில் என்று ஒரு கோயில் இருந்தமையையும் அதை கணபெருமக்கள் நிர்வகித்ததையும், அக்கோயில் ஆடல்வல்லானுக்கு திருவமுது படைப்பதற்கு புள்ளமங்கலத்து மஹாசபையாரிடம் நிலம் விலைக்கு வாங்கித் தரப்பட்டதையும் ஒரு கல்வெட்டு சுட்டுகிறது.

கோயில் கொடைகள்

இக்கோயில் கல்வெட்டுகளுள் பெரும்பான்மையானவை மக்கள் கோயிலுக்கு விரும்பியளித்த பல்வேறு கொடைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றன.

விளக்கெரிக்க கொடைகள்

கோயிலில் இரவும் பகலும் எரியும் திருநந்தா விளக்குகளும் திருவிளக்கும் எரிக்க நிலம், ஆடுகள் மற்றும் நெல் கொடை வழங்கப்பட்டதை 9 கல்வெட்டுகள் சுட்டுகின்றன. ஒரு நந்தா விளக்கெரிக்க தினமும் ஒரு உழக்கு எண்ணை தேவைப்பட்டது என பின்வரும் கல்வெட்டு பாடங்களில் கல்வெட்டு எண் 1, 5 மற்றும் 20 காட்டுகின்றன. தினமும் உழக்கு நெய்யால் எரிக்கப்பட்ட நந்தா விளக்குக்கு 90 ஆடுகள் (எண் 13) கொடை வழங்கப்பட்டதை குறிக்கும் கல்வெட்டும், மற்றும் ஒரு நந்தாவிளக்கெரிக்க 72 ஆடுகள் கொடையினைப் பற்றி ஒரு கல்வெட்டும் (எண் 19), திருவிளக்கு எரிக்க நிலக்கொடை அளித்தமை பற்றிய ஒரு கல்வெட்டும் (எண் 4), நந்தா விளக்கெரிக்க நிலம் கொடுத்தமை பற்றி ஐந்து கல்வெட்டுக்களும் (எண் 1, 5, 10, 11, 20), ஐந்து நந்தா விளக்கிற்காக நெல் கொடையளித்தமை பற்றி ஒரு கல்வெட்டும் (எண் 21) காட்டுகின்றன. பல நந்தா விளக்குகள் பல்வேறு காரணங்களுக்காக எரிக்க படும் வழக்கம் இருந்திருக்கின்றது. கல்வெட்டு 19ல் கோயில் காவலுடைய இருவரிடையே பகையால் மூண்ட சண்டையில் ஒரு காவலரின் மகன் இறந்துபட மற்றோரு காவலர் அம்மகன் நினைவாக தினமும் திருநந்தாவிளக்கெரிக்க நெய்யில் முக்கால் பாகம் தர வேண்டி 72 ஆடுகள் கொடையளிக்க, கோயிலைச் சார்ந்த மன்றாடிகள் மூவர் அவ்வாடுகளை பெற்றுக்கொண்டு தினமும் ஒரு நந்தாவிளக்கெரிக்க தேவையான நெய்யில் முக்கால் பாகம் அளிக்க ஒப்புக்கொண்டனர். கோயில்களில் ஒரு நந்தாவிளக்கெரிக்க பொதுவாக 90 ஆடுகள் தரப்பட்டன. இக்கல்வெட்டில் முக்கால் பாகம் நெய்க்கு 72 ஆடுகள் கணக்கிடப்பட்டுள்ளது.

பிற கொடைகள்

விளக்குக் கொடைகள் தவிர இத்திருவாலந்துறை மகாதேவர் கோயிலில் திருவமுது படைப்பதற்கும் அளித்த நிலக்கொடை பற்றி இரு கல்வெட்டுக்களும் (எண் 3, 12), மற்றும் அர்ச்சனா போகமான நிலம் தேவதானமாக அளிக்கப்பட்டதை குறிக்கும் துண்டுக் கல்வெட்டொன்றும் (எண் 22) காணப்படுகின்றன.

தனியர்களின் கொடைகள் தவிர ஊர் மஹாசபையார் இறைவர்க்கு கொடுத்த நிலம் பற்றி கல்வெட்டொன்றும் (எண் 9), அரச கொடையாக வரி நீக்கிய நிலமும், நெல்லும், பொன் கழஞ்சுகளும் கொடையளிக்கப்பட்டதை பராந்தகரின் 18ம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்றும் (எண் 7) குறிப்பிடுகின்றன.

இவை தவிர இவ்வூரில் வேறு இடத்தில் அமைந்திருந்த பிடாரி கோயிலுக்கு திருவமுது செய்விக்க கொடை பற்றிய கல்வெட்டொன்றும் (எண் 2 - என்ன கொடை என்பதை தெரிவிக்கும் எழுத்துக்கள் அழிந்துள்ளன), திருவிளங்கோயில் ஆடல்வல்லானுக்கு திருவமுது படையலும் நிலக்கொடை பற்றிய கல்வெட்டொன்றும் (எண் 6) இக்கோயிலில் இருக்கின்றன.

நிலப் பங்கீடுகள் மற்றும் பிற நடவடிக்கைகள்

ஊர் மஹாசபையார் கோயில் நிலங்களை பங்கிட்டு அளித்து, நிலத்தை பெற்றுக்கொண்டவர் கோயிலுக்கு வேண்டியது செய்யுமாறு பணித்தனர். இறைவர்க்கு திருவமுது செய்விக்கவும், விளக்கெரிக்கவும் நிலம் பங்கிட்டு வழங்கப்பட்டது. மேலும் கோயில் திருவிழாவில் ஆரியக்கூத்து - சாக்கை கூத்து ஆடுபவர்க்கு காணி நிலம் வரி நீக்கி இறையிலியாக மஹாசபையாரால் விற்றுக்கொடுக்கப்பட்டது (எண் 8).

இராசராசரின் 12ம் ஆட்சியாண்டு கல்வெட்டொன்று கோயில் மேளம் கொட்டுபவர்க்கும், கிணற்றில் நீர் இறைப்பவனுக்கும், கோயிலை கூட்டி மெழுகுவானுக்கும், கோயில் அம்பலம் அழித்து புதுக்கவும் தண்ணிராட்டவும் மஹாசபையார் நிலத்தை இறையிலியாக கொடுத்தமையை சுட்டுகின்றது (எண் 16).

கொடையளிக்கப்பட்ட ஆடுகளை மஹாசபையார் மன்றாடிகளுக்கு கொடுத்து கோயில் விளக்கெரிக்க மன்றாடிகள் தினமும் நெய் தருமாறு ஏற்பாடுகள் செய்தனர்.

முதலாம் இராசராசரின் 12ம் மற்றும் 24ம் கல்வெட்டுகள் இரண்டு, இவ்வூர் சபையாரும், தண்டலுடைய அதவத்தூர் உடையாரும் கூடியிருந்து நிறைவேற்றிய செயற்பாட்டைக் கூறுகிறது. இதில் இராசராசரின் 12ம் ஆடசியாண்டுக் கல்வெட்டில் கோயிலில் தம்மி (பறை அல்லது மேளம்) கொட்டி காளம் ஊதியபின் சபையோர் கூடி புள்ளமங்கலத்தை சேர்ந்த நின்றோதும் சட்டப்பெருமக்களுக்கு நிலப்பகுதியொன்றை வரி நீக்கி இறையிலியாக கொடுத்ததை தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து இராசராசரின் 23ம் ஆட்சியாண்டில் சட்டம் ஓதுவார்கள் இல்லாத காரணத்தால் முன்பு இறையிலியாக விடப்பட்ட நிலங்களுக்கு மீண்டும் வரி பெற்றுக்கொள்ளலாம் என்னும் அரசரின் ஆணையை சபையார் கூட்டம் கூட்டி நடைமுறைப் படுத்தினர் (எண் 17).

உத்தமசோழன் கால கல்வெட்டொன்று இவ்வூர் மத்யஸ்தன் திருவெண்காட்டடிகளான இயசவன் அல்லது எழுநூற்றைம்பத்துநாலவனிடம் அவ்வூர் வெள்ளாளருக்கும் பிராமணருக்கும் கொடுக்குமாறு விடப்பட்ட நெல், பயறு மற்றும் காசுக்கு கணக்கு காட்டாததினால், அந்த மத்யஸ்தன் மற்றும் அவரின் தம்பிகளுக்கு சொந்தமான மற்றோரு பிரம்மதேயமான கண்டமங்கலத்தில் இருக்கும் 3 மா நிலம் பறிமுதல் செய்யப்பட்டதையும், அப்படிப் பறிமுதல் செய்யப்பட்ட நிலத்திலிருந்து 1 1/2 மா நிலத்தை மகாசபையார் நடுவிற்சேரி கரணத்தாரிடம் 25 ஈழக் காசு பெற்றுக்கொண்டு காளாபிடாரி கோயிலுக்கு வரி நீக்கி இறையிலியாக விற்றுக் கொடுத்ததையும் விவரித்துள்ளது.

புள்ளமங்கை கல்வெட்டுக்கள் தரும் மேலும் பல செய்திகளும், கல்வெட்டுப் பாடங்களும் அடுத்த இதழில் காணலாம்.

(தொடரும் )
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.