http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 152

இதழ் 152
[ மார்ச் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 4
விளக்கேற்றல் எனும் அறம் - 3
ஐராவதீசுவரம்
ஆலந்துறையார் மகரதோரணங்கள்
இதழ் எண். 152 > கலையும் ஆய்வும்

காஞ்சிபுரத்து ஐராவதீசுவரம் பேரழிவைச் சந்தித்துள்ள மேற்கு நோக்கிய பல்லவ மணற்கல் தளி. கீழ்த்தளமும் முக மண்டபமும் மட்டுமே எஞ்சியுள்ளன. துணைத்தளத்தின் மீது பாதபந்தத் தாங்குதளம் கொண்டெழும் அதன் கண்டபாதத்தில் யானைத்தலைகள். திருப்பங்களில் அவை பாதத்தின் முப்புறத்தும் காட்டப்பட்டுள்ளன. சுவர்த்திருப்பங்களைப் பாதம் பெற்ற வீரர் அமர் தாவுயாளி எண்முக அரைத்தூண்கள் அணைக்க, விமானச் சுவரை இரு எண்முக அரைத்தூண்கள் மூன்று பிரிவுகளாக்குகின்றன. 





அவற்றுள், குறுகலான கர்ணப்பிரிவுகளில் காவலர்கள் நிற்க, எண்முகத் தூண்களுக்கு இடைப்பட்ட அகலமான நடுப்பிரிவில் நான்முக அரைத்தூண்கள் தழுவும் கொடிக்கருக்குச் சட்டகம் பெற்ற கோட்டம் மகரதோரணத்துடன் அமைந்துள்ளது. கோட்டங்களில் வடக்கில் நான்முகன், தெற்கில் ஆலமர்அண்ணல். கிழக்குச் சிற்பம் சிதைந்துள்ளது. கோட்டத்தின் இருபுறச் சுவர்த் துண்டுகளில் சிவபெருமான் தொடர்புடைய சிதைந்த சிற்பங்கள். நான்முகனின் இடச்சுவர்த் துண்டில் முப்புரம் எரித்தவர். வலச் சுவர்த்துண்டில் சிவபெருமான். கிழக்கில் சுவர்த்துண்டுச் சிற்ப மாய்க் குடமுழவுக் கலைஞரும் தெற்கில் விஷ்ணுவும் மட்டுமே எஞ்சியுள்ளனர். 



வடக்குக் கோட்டச் சிற்பங்கள்



வடகோட்டத்தில் உயரமான இருக்கையில் சுகாசனத்தில் நான்முகன். பின்கைகள் அக்கமாலை, குண்டிகை கொள்ள, முன் கைகள் சிதைந்துள்ளன. நான்முகனின் இடப்புறச் சுவர்த்துண் டில் முப்புரம் எரித்தவர். வலக்கால் தேருக்குள்ளிருக்க, இடப் பாதத்தைத் தேர்த்தட்டில் நிறுத்தியுள்ள சிவபெருமானின் வலக்கைகளுள் இரண்டு கடகத்திலும் ஒன்று இடுப்பிலும் உள்ளன. சடைமகுடம், சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூலென மடித்த துண்டு, இடைக்கட்டுடனான அரைக்கச்சு இருத்தும் இடையாடை பெற்றுள்ள இறைவனின் இட முன் கை வில்லை அணைத்திருக்க, மேற்கையில் அம்பு. இரண்டுக்கும் இடைப்பட்ட இடக்கை அச்சுறுத்த, பின்புலத்தில் நந்திக்கொடித்தண்டு. 



இறைவனின் வலப்புறம் சடைமகுடம், பூட்டுக்குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், பட்டாடையுடன் தேரோட்டியாக நிற்கும் நான்முகன் முன்னிரு கைகளால் இறை வனை வணங்குகிறார். பின்கைகளுள் வலக்கை இடுப்பில் அமர, இடக்கை இடுப்பருகே கடகத்தில். கோட்டத்தின் வலச்சுவர்த் துண்டில் இடுப்பிற்குக் கீழ்ச் சிதைந்த நிலையில் வல முன் கையைத் தாக்கும் மெய்ப்பாட்டில் மேலுயர்த்திச் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, மார்புநூலுடன் முகத்தை இடத்திருப்பத்தில் கொண்டுள்ள சிவபெருமானின் இடக்கைகள் சிதைந்துள்ளன. அவரது வல இடைக்கை வியப்பில் விரிய, மூன்றாம் கை கொண்டுள்ள பொருள் முத்தலைஈட்டியின் தண்டாகலாம்.  



முகமண்டபம்



முகமண்டப மேற்குத் திருப்பங்களைத் தாவுயாளி எண்முக அரைத்தூண்கள் தழுவ, வட, தென்சுவரின் நடுப்பகுதியில் நான்முக அரைத்தூண்கள் தழுவும் கோட்டங்கள். வடகோட்டத் தில் கொற்றவையும் அவர் வலப்புறத்தே மானும் அதை நடத்தும் பூதமும் அமைய, இடப்புறத்தே கவரியேந்திய பெண் பூதம். கோட்ட மேற்பகுதியில் இரு அன்னங்கள். முகமண்டபத் தென் கோட்டத்திலும் அதன் இருபுறச் சுவர்த்துண்டுகளிலும் கங்காளர் தொகுதி. திருப்பத்தூண்களின் மேலுள்ள வளைமுகத் தரங்கப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, மேலே கபோதம். 



முகமண்டப மேற்குச்சுவரில் தாவுசிம்ம நான்முக அரைத் தூண்கள் தழுவிய வாயில். அவற்றுக்கும் திருப்பத் தூண்களுக்கும் இடைப்பட்ட சுவர்க் கோட்டங்களில் காவலர்கள். அவர்களுக்கு மேலுள்ள வளைமாடத்தில் பிள்ளையார். வாயில் தூண்களின் மேலுள்ள வளைமுகப் பெருந்தரங்கப் போதிகைகள் உத்திரம் தாங்க, மேலே வாஜனம், பூதவலபி, கபோதம். 



முகமண்டப அகச்சுவர்கள் வடக்கில் இராவண அருள்மூர்த்தியையும் தெற்கில் ஊர்த்வதாண்டவரையும் சுவரளாவிய சிற்பங்களாய்ப் பெற, கிழக்குச் சுவரில் கருவறைக்கான வாயில். அதன் இருபுறத்தும் கொடிக்கருக்கு அலங்கரிப்புப் பெற்ற நான்முக அரைத்தூண்கள் தழுவும் கோட்டங்களில் காவலர்கள். கோட்டத் தூண்கள் தாங்கும் உத்திரத்தின் மேல் வாஜனம், தாமரையிதழ் வலபி. சுதையில் தொங்கல்கள் பெற்றுள்ள வாயில் உத்திரத்தின் நடுப்பகுதியில் பிள்ளையார் சிற்பம் அமைய, வலபிக்கு மேல் ஏறத்தாழ ஓரடி உயரத்தில் கூரை. 



இராவண அருள்மூர்த்தி



முகமண்டப வடசுவரை நிறைத்துள்ள இராவண அருள் மூர்த்தி சிற்பம் இறவாதான் ஈசுவரம், உலக்கணேசுவரம் படைப்பு களிலிருந்து வேறுபட்டுள்ளது. கயிலாயமலையின் மேற்பகுதியில் வல முன் கையைத் தளத்தில் ஊன்றி, இட முன் கையில் காக்கும் குறிப்பு காட்டி உத்குடியிலுள்ள சிவபெருமானின் பின் கிளைத்துச் செழித்திருக்கும் மரம். இறைவனின் இடப் பின் கை கடகத்தி லிருக்க, வலப் பின் கையில் பாம்பு. சடைமகுடம், முப்புரிநூலென மடித்த துண்டு, இடைக்கட்டுடனான இடையாடை பெற்றுள்ள அவரது இடப்புறம் இடுப்பிற்குக் கீழ் இடஒருக்கணிப்பில் உத்குடியிலுள்ள உமையின் இடக்கையில் மலர். கேசபந்தம், கழுத் தணிகள், இடையாடையுடன் இடுப்பிற்கு மேல் நேர்ப்பார்வை யிலுள்ள அம்மையின் வலக்கை இறைவனின் இடமுழங்கால் மீதுள்ளது. சிவபெருமானின் வலமிருக்குமாறு மேற்புறத்தே இரு கைகளையும் கட்டியநிலையில் இடுப்பளவினராகக் காட்சிதரும் வானவர் சடைமகுடம், கழுத்தணிகள், தோள், கை வளைகள் பெற்றுள்ளார். 



மலையின் கீழ்ப்பகுதியில் கருடாசனத்திலுள்ள இராவண னின் எட்டுக் கைகளுள், முன்னிரு கைகள் எதிரிலுள்ள லிங்கத்திருமேனியை வணங்க, பிற வலக்கைகள் அனைத்திலும் மலர். கிரீடமகுடம், சரப்பளி, முப்புரிநூலென மடித்த துண்டு, தோள், கை வளைகள், முத்து அரைக்கச்சு இருத்தும் இடைக்கட்டுடனான பட்டாடை பெற்றுள்ள அவரது இடக்கைகளுள் ஒன்று உயர்ந்து முகம் நோக்கித் திரும்ப, கீழ்க்கை லிங்கத்தைத் தொட்ட வாறுள்ளது. இடைக்கையில் மலர். சதுர ஆவுடையாரின் மீதுள்ள லிங்கபாணத்தின் உடலில் தொங்கல், பதக்க அலங்கரிப்பு, முத்துப்பட்டை. இலிங்கத்தின் உச்சியில் இராவணன் இட்ட மலர்.



ஊர்த்வதாண்டவர்



முகமண்டபத் தென்சுவரை நிறைத்துள்ள ஊர்த்வதாண்ட வர் இடப்பாதத்தைப் பார்சுவத்தில் இருத்தி, வலக்காலை முதுகுக்குப் பின் தலைவரை உயர்த்தியுள்ளார். சடைமகுடம், மகர, பனை யோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், சரப்பளி, முப்புரிநூல், இடைக்கட்டுடனான புலித்தோல்ஆடை, தாள் செறி அணிந்துள்ள அவரது பத்துத் திருக்கைகளுள் வல முன் கை காக்கும் குறிப்பில் அமைய, பிற வலக்கைகளில் கவரி, பதாகக் குறிப்பு, மழு, பாம்பு சுற்றிய உடுக்கை. இட முன் கை தலைக்கு மேல் உயர்ந்து கவிய, பிற இடக்கைகளில் கீழிருந்து மேலாகப் பாசம், பாம்பு, கடகக் குறிப்பு, தீச்சுடர். இறைவன் அணிந்துள்ள தோலாடையின் தொங்கலாய்ப் புலிமுகமும் அதன் வாலும் இடத்தொடையொட்டி நெகிழ, அதற்குச் சற்று மேலிருக்குமாறு படமெடுத்த பாம்பு. 



மேற்பகுதியில் இறைவனின் இருபுறத்தும் வானவர்கள். கிரீட மகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், கழுத்தணி, பட் டாடை அணிந்து வலப்புறம் உள்ளவர், வலக்கையை மார்பருகே சின்முத்திரையில் இருத்தி, இடக்கையால் போற்றுகிறார். முப்புரி நூலென மடித்த துண்டுடன் மார்பளவினராக உள்ள இடப்புறத் தாரின் வலக்கை போற்ற, இடக்கை மார்பருகே. கேசபந்தம், பனை யோலைக் குண்டலங்கள், பட்டாடையுடன் இறைவனின் இடப் புறம் நிற்கும் இறைவியின் வலக்கை தளத்தில் ஊன்ற, இடக் கையில் மலர். இறைவியின் இடையாடைத் தொங்கல்கள் இடத் தொடையில் நெகிழ்ந்துள்ளன. இறைவன் திருவடியின் வலப்புறத்துள்ள கருவிக்கலைஞர்களுள் ஒருவர் குடமுழவு இயக்க, மற்றொருவர் கைகள் சிதைந்துள்ளபோதும் அவரை தாளக்கலை ஞராகக் கொள்ளலாம். 



கருவறை



கருவறைப் பின்சுவரில் நான்முக அரைத்தூண்கள் தழுவும் கோட்டத்தில் சோமாஸ்கந்தர். இருபுறத்தும் கவரிப்பெண்கள். நடுக்கோட்ட அணைவுத் தூண்களின் வளைமுகத் தரங்கப் போதி கைகள் உத்திரம், வாஜனம், வலபி தாங்க, கபோதம் கந்தருவத் தலைகள் பெற்ற கூடுவளைவுகளுடன் கோணப்பட்டமும் கொண்டுள்ளது. வடசுவரில் வணங்கும் நான்கு வானவர்களுடன் நான்முகன் போற்ற, தென்சுவரில் ஐந்து வானவர்களுடன் திருமால். சுவர்களின் மேற்புறத்தே பாயும் எருதுகளின் மேல் வானவர். 



சோமாஸ்கந்தர்



சோமாஸ்கந்தர்  தொகுதியில் சுகாசனத்திலுள்ள சிவபெரு மானின் வல முன் கை கடகம் காட்ட, பின்கையில் பாம்பு. சடைமகுடம், குண்டலங்கள், தோள், கை வளைகள், முப்புரிநூல், கழுத்தணிகள், இடைக்கட்டுடனான இடையாடை பெற்றுள்ள அவரது இட முன் கை மடியில் ஏந்தலாக, இடப் பின் கை தோளுக்காய் உயர்ந்துள்ளது. இறைவனின் இடக்கால் இருக்கையின் கீழமர்ந்துள்ள முயலகன் தலைமீதுள்ளது. 



இறைவனின் இடப்புறம் அவருக்காய் ஒருக்கணித்துள்ள உமையின் இடக்கால் கீழே முயலகன் மீது. அவரது வலக்கை வலத்தொடையில் அமர்ந்துள்ள முருகனை அணைத்திருக்க, இடக்கை தளத்தில். கேசபந்தம், பனையோலைக் குண்டலங்கள், கழுத்தணிகள், தோள், கை வளைகள், தொங்கல்களுடனான இடையாடை பெற்றுள்ள அம்மையின் தலைக்கு மேல் குடை. இறைவியின் தொடையில் அமர்ந்துள்ள முருகனின் இடக்கை மார்பருகே. முகம் இறைவனை நோக்கியுள்ளது. 



இறைவன் அமர்ந்துள்ள இருக்கையின் பின்புறம் மார்பள  வினராய் வலப்புறம் நான்முகனும் இடப்புறம் விஷ்ணுவும் காட்சியாகின்றனர்.  இருக்கையின் கீழ்ப்பகுதியில் நடுவில் முயலகனும் அவரின் இடப்புறம் கேசபந்தம், பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடையுடன் வலஒருக்கணிப்பில் அமர்ந்துள்ள பெண் பூதமும் அதன் முன் குண்டிகையும் காட்சியாக, முயலகனின் வலப்புறம் சிதைந்தநிலையில் மற்றொரு பூதம். பெண்பூதத்தின் இடக்கை இடத்தொடையின் மீது படர்ந்துள்ளது.  



ஒப்பீடு



கீழ்த்தளம் மட்டுமே பெற்றுள்ள உலக்கணேசுவரம், நரபதி சிம்மப் பல்லவ விஷ்ணுகிருகம், ஐராவதீசுவரம் ஆகிய இம்மூன்று கற்றளிகளில் இரண்டு கட்டுமானங்கள் நாகரமாகவும் ஒன்று சாலை அமைப்பிலும் உள்ளன. மூன்றும் முகமண்டபம் பெற்றுள்ளன. மூன்றிலுமே சுவர் முழுவதும் சிற்பங்கள் கொள்ளும் பாங்கைக் காணமுடிகிறது. இம்மூன்றில் உலக்கணேசுவரம் மட்டுமே தளப்பஞ்சரங்கள் கொண்டுள்ளது. நரபதி தவிர்த்த பிற இரண்டும் சுவர்க் காவலர்கள் கொள்ள, நரபதியிலும் ஐராவதியிலும் கருவறை வாயிலில் காவலர்கள். உலக்கணேசுவரம் ஐந்து கோட்டங்களிலும் சிவபெருமான் பெற, ஐராவதியின் வடக்குக் கோட்டம் நான்முகனையும் மண்டபக் கோட்டங்கள் கொற்றவை, பிள்ளையார் வடிவங்களையும் பெற்றுச் சிறப்பதைக் காணமுடிகிறது. 



நான்முக, எண்முக அரைத்தூண்களும் யாளி, சிம்மம், யானை, ஆடு முதலிய விலங்கடி பெற்ற தூண்களும் சங்கூதும் பூதம், வாயிற்காவலர் உருவங்களை அடிப்பகுதியாகப் பெற்ற தூண்களும் இம்மூன்று கட்டுமானங்களின் கொடைகள். கோட்ட மேல்நிலை அன்னஇணை, மகரதோரணத் தலைப்பு, கொடிக்கருக்கு அலங்கரிப்பு, கூடுவளைவுகளின் கந்தருவத்தலை கள் எனப் பல்லவ அலங்கரிப்பு உத்திகளையும் காணமுடிகிறது. ஐராவதீசுவரத்துக் கருவறையின் உட்புறத்துள்ள பாயும் எருதுகள் சங்க இலக்கியப் பாண்டில்களாய் இக்கோயிலின் தனிப்பெரும் சிற்பக்காட்சிகளாய்ப் பொலிகின்றன.

 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.