http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 152

இதழ் 152
[ மார்ச் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 4
விளக்கேற்றல் எனும் அறம் - 3
ஐராவதீசுவரம்
ஆலந்துறையார் மகரதோரணங்கள்
இதழ் எண். 152 > கலையும் ஆய்வும்
விளக்கேற்றல் எனும் அறம் - 3
இரா.கலைக்கோவன், மு.நளினி

விளக்கேற்றல் - சில சிறப்புச் செய்திகள்



கோயிலுக்குச் செய்யும் அறம் என்ற நோக்கில் இருள்நீக்க ஏற்றப்பட்ட விளக்குகள் நாளடைவில் நோக்கங்கள் சார்ந்தும் ஒளிவிடலாயின. ஏற்றியவர் பலராக அவரவர் விழைவிற்கேற்ப விளக்கேற்றல் பல படிநிலைகளைக் கண்டது. விளக்குகளின் அமைப்பும் வடிவும் போலவே நோக்கங்களும் பலவாய்ப் பெருகின. உயிரிழந்தவருக்காக ஏற்றப்பட்ட விளக்குகள் உடன்கட்டையேறியவர்களாலும் ஏற்றப்பட்டன. அது போலவே போர் வெற்றிக்காகவும் வெற்றியைக் கொண்டாடவும்கூட விளக்குகள் ஏற்றப்பட்டன. 



தீப்பாய்ந்த விளக்குகள்



கணவர் இறந்ததும் அவருடன் உடன்கட்டையேறிய தமிழ்நாட்டு மகளிர் குறித்த கல்வெட்டுகளும் தலைவர் இறந்தபோது அவருடன் தாமும் எரியூட்டலில் இணைந்த காவலர் குறித்த கல்வெட்டுகளும் தமிழ்நாட்டில் சிலவாகவேனும் கிடைத்துள்ளன. அவ்வாறு இணைந்து உயிர்நீத்த இருவர் அந்நிகழ்வின்போது அவரவர் ஊர்க்கோயில்களில் விளக்கேற்றியுள்ளனர். 



சிராப்பள்ளி மாவட்டம் அல்லூர்ப் பசுபதீசுவரர் கோயிலிலுள்ள முற்சோழர் கல்வெட்டொன்று கொடும்பாளூர் வேளிரான வீரசோழ இளங்கோவேளாரின் அரசி கங்கமாதேவி கணவருடன் உடன்கட்டையேறியதைப் பதிவுசெய்துள்ளது. தீப்பாயும் முன் அல்லூர்க் கோயில் இறைத்திருமுன் நாளும் ஒரு நந்தாவிளக்கேற்றத் தமக்கு உரிமையுடைய நிலப்பகுதியை அவ்வம்மை அளிக்க, கோயில் பணிசெய்தார் அதை விற்றுப் பெற்ற 20 கழஞ்சுப் பொன்னை முதலாக வைத்துத் தீப்பாய்ந்த தேவியின் வேணவாவை நிறைவேற்றினர். 



தமிழ்நாட்டின் பெருமைக்குரிய பழுவேட்டரையர் மரபின் தொடக்கக் கால அரசர்களுள் ஒருவரான குமரன்மறவன் உயிர்துறந்தபோது அவரது அணுக்க வீரர்களுள் ஒருவரான அழகியான் மறவன் அரசரை எரியூட்டிய சிதையில் தாமும் தீப்பாய்ந்தார். தம்மை இழக்கும் முன் இத்தீப்பாய்வின் நினைவாகப் பழனம் இறைவன் முன் நந்தாவிளக்கேற்ற 30 கழஞ்சுப் பொன்னளித்தார். அதையேற்ற அணியமங்கல சபையார் 6 மா நிலம் கோயிலுக்களித்து விளக்கேற்றச் செய்தனர். 



போர்முடித்த விளக்குகள்



தீப்பாய்ந்தவர் ஏற்றிய விளக்குகள் போலவே போர் வெற்றியாலும் வெற்றிநோக்கியும் ஏற்றப்பெற்ற விளக்குகள் குறித்தும் கல்வெட்டுகள் பேசுகின்றன. இலங்கைப் படையின் துணையுடன் சோழர் மீது போர்தொடுத்த பாண்டிய அரசர் ராஜசிம்மரை வெள்ளூரில் எதிர்கொண்ட பழுவேட்டரையர் கண்டன்அமுதனுக்குக் களத்தில் வெற்றி கிடைக்க வேண்டுமென்று பரதூரைச் சேர்ந்த படைபடுவாயன் நக்கன் சாத்தன் சிறுபழுவூர் ஆலந்துறையார் கோயில் இறைத்திருமுன் நந்தாவிளக்கு ஏற்றினார். 



முதல் ராஜராஜர் காலத்தில் சீட்புலி, பாக்கை நாடுகளை வென்ற போரில் பங்கேற்ற பரமன் மழபாடி, அப்போரில் தமக்குக் கிடைத்த 900 ஆடுகளைக் காஞ்சிபுரம் ஐஞ்சந்தி துர்க்கைக் கோயிலுக்களித்து அரசர் ராஜராஜர் பெயரால் 10 நந்தாவிளக்குகள் ஏற்றச் செய்தார். அதற்கான அரசாணை மன்னர் இசைவுடன் உயர் அலுவலர் வீதிவிடங்கனால் பிறப்பிக்கப்பட்டது. 



தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 13இல் 149ஆம் எண் கல்வெட்டாகப் பதிவாகியிருக்கும் இதன் பாடம் 12 வரிகளைக் கொண்டுள்ளது. கல்வெட்டின் தொடக்கத்திலும் இறுதியிலும் 10 நந்தா விளக்குகளுக்கு 900 ஆடுகள் அளிக்கப்பட்ட செய்தி இடம்பெற்றிருந்தபோதும் கல்வெட்டுப் பாடத்தில் 8 விளக்குகளே சுட்டப்பெற்று, அவற்றுக்கான 720 ஆடுகளே கணக்குக் காட்டப்பட்டுள்ளன. எஞ்சிய இரு விளக்குகளுக்கான 180 ஆடுகள் என்னவாயிற்று என்பதற்குக் கல்வெட்டில் விடையில்லை. பதிவான கல்வெட்டுப் பாடமே இவ்விழப்புடன் காட்சியளிக்கிறதா அல்லது படியெடுத்தவர்கள் 180 ஆடுகளைக் குறிக்கும் வரிகளைத் தவறவிட்டனரா என்பதைக் கள ஆய்வே முடிவுசெய்யும். 



விளக்குக் குற்றங்கள்



எண்ணிக்கையில் பெருகிய விளக்குகளாலும் படையல், வழிபாடு சார்ந்த பிற கொடைகளாலும் கோயிலில் செல்வம் கொழிக்க, பெருகிய செல்வம் குற்றங்களுக்கு வழிகோலியது. அறக்கட்டளைக்குப் பொறுப்பேற்றவர்களே கடமை தவறினர். இத்தகு முறைகேடுகளைத் தவிர்க்க, கோயில் கணக்குகளை ஆய்வுசெய்ய அலுவர்களை அனுப்பியது அரசு. முதல் ராஜராஜர் காலத்தில் நிகழ்ந்த இத்தகு கோயில் கணக்காய்வுகள் ‘தேவகள் சோதினை’ என்றழைக்கப்பெற்றன. 



தீக்காலிவல்லம், உய்யக்கொண்டான் திருமலை, திருநெடுங்களம், திருஎறும்பியூர் உள்ளிட்ட பல கோயில்களில் அரசு அலுவலர்களால் அறக்கட்டளைகள் ஆராயப்பெற்றன. எறும்பியூரில் இரண்டு நந்தாவிளக்குகளுக்கான எண்ணெய்க் கணக்கில் குழப்பம் இருந்தது. தீக்காலிவல்லத்து நந்தாவிளக்குகள் நலிந்தநிலையில் ஒளிதந்தன. நெடுங்களக் குற்றங்களுக்குத் தண்டமாகப் பெறப்பட்ட பொன்னில் நிலம் வாங்கி, அதன் விளைவு கொண்டு இறைவனுக்குச் சிறுகாலைப் பயற்றுப் போனகம் வழங்கத் திட்டமிடப்பட்டது. உய்யக்கொண்டான் திருமலையில் தவறுசெய்தவர்கள் அடையாளம் காணப்பட்டுத் தண்டமாக 31 கழஞ்சுப் பொன் பெறப்பட்டு, ஜயங்கொண்ட சோழன் என்னும் பெயரில் இறைவனுக்கு நெற்றிப்பட்டம்  செய்தளிக்கப்பட்டது. 



விளக்குப் பாடல்கள்



விளக்கேற்றல், விளக்குகளுக்குக் கொடையளித்தவர்களைப் பாராட்டுதல் எனப் பல நிலைகளில் விளக்குப் பாடல்களைத் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. சிராப்பள்ளி மாவட்டம் திருச்செந்துறைக் கோயிலில் விக்கிரமசோழர் ஆட்சிக்காலத்தே கோயிலில் நந்தாவிளக்கேற்ற அறக்கட்டளை இல்லாதிருந்த நிலையில், கோயில் சிவபிராமணர்கள் சிலர் உரகூரிலிருந்த சொற்றுணை கங்கை சடைக்கரந்தான் எனும் வள்ளலிடம் உதவிபெற்று விளக்குக்கட்டளை அமைத்தனர். வள்ளல் தந்த 10 காசை முதலாகக் கொண்டு அதன் வட்டியில் நாளும் உழக்கு எண்ணெய்ச் செலவில் கோயிலில் நந்தாவிளக்கு ஏற்றப்பட்டது. கேட்டதும் கொடுத்த வள்ளலைப் பாராட்டி அறக்கட்டளைக் கல்வெட்டின் தொடர்ச்சியாக அருமையான வெண்பா ஒன்றைக் கொடைபெற்றவர்கள் பதிவுசெய்துள்ளனர். 



‘உண்ணலாம் நெய்யொடு சோறுஓவாதே எப்பொழுதும்

பண்ணெலாம் பாடி இருக்கலாம் - மண்ணெலாம்

அகல்மாட நீடுரகூர் கங்கைசடைக் கரந்தான்

பொன்மாடத் தெப்பொழுதும் புக்கு’



சிராப்பள்ளி மாவட்டத்தின் பாடல் பெற்ற கோயில்களுள் ஒன்றான உய்யக்கொண்டான் திருமலை இறைவன் விழுமியதேவர் திருமுன் நந்தாவிளக்கேற்ற நக்கன் திருவேகம்பனான கேரளாந்தக விழுப்பரையன் 90 ஆடுகள் அளித்தமையை மற்றொரு வெண்பா மகிழ்ந்து பாராட்டுகிறது.



‘கருப்பூர்மன் கம்பனுக்குக் காதலன்சீர் நக்கன்

விருப்பூர் விழுமிய தேவர்க்கு - திருப்பூர்

விளக்குவைத்துத் தொண்ணூறா டாங்களித்தான் மெய்யே

உளக்கருத்தால் சால உகந்து’



கடலூர் தீர்த்தநகரி சிவாங்குரேசுவரர் கோயில் கல்வெட்டு ஆட்கொள்ளிக் காடவராயர் அக்கோயில் இறைவனுக்கு நந்தாவிளக்கு ஏற்றியதையும் அதற்கான செலவைச் சந்திக்க பாடிகாவல், வெட்டி எனும் வரிகள் வழி வந்த பொருளை அளித்தமையையும் கட்டளைக் கலித்துறைப்பாடல் வடிவில் பகிர்ந்துகொள்கிறது. 



‘கூடாத வன்புகழ்க் கூடல்மன் ஆட்கொள்ளி காடவர்கோன்

சேடார் பொழில்தினை மானகர் ஈசரைச் சிந்தைசெய்து

பீடார் நிலத்து பெரும்பாடி காவல் வெட்டிதவிர்த்து

நாடார் அமுதுக்கு நுந்தா விளக்கும் நாட்டினனே’



தஞ்சாவூர் மாவட்டம் திருச்சோற்றுத்துறை ஓதவனேசுவரர் கோயிலிலுள்ள பாடல் கல்வெட்டு பரகேசரிவர்மரின் இரண்டாம் ஆட்சியாண்டில் மழநாட்டு வேளான கொற்றன்மாறன் அக்கோயில் இறைத்திருமுன் விளக்கேற்றிய தகவலைத் தருகிறது.



‘யாண்டுபர கேசரிக்கு இரண்டென் றிட்டாண்டில்

தூண்டொளிநீர்ச்  சோற்றுத் துறையார்க்கு - பண்டிழந்த

மண்ணோர்க் குதவும் மழநாட்டு வேள்வைத்தான்

விண்ணோர்க்கும் காட்சி விளக்கு’



திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மேலச்செவ்வல் ஆதித்தவருணேசுவரர் கோயில் தூணில் எண்சீர் விருத்தமாக அமைந்துள்ள பாடல் கல்வெட்டு பொ. கா. 1578இல் கயிலாயன் மார்த்தாண்டன் இறைத்திருமுன் மண்டபத்தில் மகரதோரண விளக்கு அமைத்தமை கூறுகிறது. 



‘நன்னெறிசேர் கொல்லம்எழு நூற்றைம் பத்து 

    நாலாண்டில் ஆனியிரு பத்தே ழாநாள்

மின்னவிர் பூசவியா ழத்தில் எங்கள்

    வீரைநகர் ஆதித்த வன்மீ சன்தன்

சன்னதிமண் டபத்தில்மங்கை அனந்த னன்பால்

    தரும்புதல்வன் கயிலாயன் மாத்தாண் டன்தான்

வன்னமுறு மகரதோ ரணவி ளக்கு 

    வார்ப்பித்தே நிலைநிறுத்தி வைப்பித் தானே’



தமிழ்நாட்டில் மட்டுமல்லாது தமிழர் ஆட்சி நிலவிய பிற மாநிலங்களிலும் விளக்குப் பாடல் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. ஆந்திரமாநிலம் கோதாவரி மாவட்டம் ராமச்சந்திரபுரம் வட்டம் திராட்சாராமம் பீமேசுவரர் கோயிலில் காணப்படும் வெண்பா வடிவக் கல்வெட்டு ஊரின் பெயரை இடர்க்கரம்பை எனக் குறிப்பதுடன், உய்யநின்றாடுவான் ஏற்றிய விளக்கைச் சுட்டுகிறது.



‘இம்பர் நிகழவிளக் கிட்டான் இடர்க்கரம்பைச்

செம்பொன்அணி வீமேச் சரம்தன்னில் - உம்பர்தொழ

விண்ணுய்ய நின்றாடு வானுக்கு வேலைசூழ்

மண்ணுய்ய நின்றாடு வான்’



திருவல்லத்துக்கு அருகிலுள்ள மேல்பாடி சோழீசுவரம் கோயிலிலிருந்து படியெடுக்கப் பட்டுள்ள முதல் ராஜேந்திரரின் 9ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, ஒரு சிறப்புச் செய்தியைப் பகிர்ந்துகொள்கிறது. சோழீசுவரம் கோயில் இறைத்திருமுன் நந்தாவிளக்கேற்ற இசைந்து அதற்கென ‘தேவர் ஆடு’களாகக் கொடையளிக்கப்பட்ட 90 ஆடுகளைக் கைக்கொண்ட இடையர் ஏறன்சாத்தனை, ராசகேசரி எனும் அளவையால் நாளும் உழக்கு நெய் கோயிலுக்கு வழங்கச் செய்யும் பொறுப்பை, அவ்வூர் வாழ் இடையர் பதின்மர் ஏற்றனர் (புணைப்பட்டனர்). 



இறப்பு, ஊரை விட்டு ஓடிப்போதல், சிறைப்படுதல், குற்றமிழைத்துக் கால், கை விலங்கிடப்பெறல் ஆகிய காரணங்களால் விளக்கேற்ற இசைந்த சாத்தன் அப்பணி செய்யவியலாது போகுமாயின், பொறுப்பேற்ற பதின்மரே நாளும் விளக்கேற்ற உரிய நெய் வழங்குவதாக உறுதியளித்தனர். அவர்தம் கூற்று ஆவணத்தில் ‘இவன் சாவிலும் போகிலும் சிறை தளை சங்கிலி புகிலும் இவ்வனைவோமுன்பு நின்றோமே சந்திராதித்தவர் திருவிளக்கெரிக்க நெய்யட்டுவதாக புணைப்பட்டோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயர் பெருமக்களின் கூட்டுப் பொறுப்பையும் அச்சமூகத்தின் ஒற்றுமை உணர்வையும் வெளிப்படுத்தும் இக்கல்வெட்டு விளக்கேற்றல் என்ற செயற்பாட்டை இயக்கிய அறஉணர்வுக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டாக அமையும். இருள்நீக்க விளக்கேற்றிய ஒரு செயல்,  கோயில்களில் பதிவானபோது மனித வாழ்க்கையின் பல பரிமாணங்கள் உடன்விளைவென வரலாறாகி வடிவம் பெற்றன. 

 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.