http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 152

இதழ் 152
[ மார்ச் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 4
விளக்கேற்றல் எனும் அறம் - 3
ஐராவதீசுவரம்
ஆலந்துறையார் மகரதோரணங்கள்
இதழ் எண். 152 > கலையும் ஆய்வும்
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 4
பால.பத்மநாபன்

ஒன்றினோடு ஒன்று சென்றுமுகில் தடவி

ஆடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகை

தெய்வக் கம்மியர் கைம் முயன்று வகுத்த

ஓவநூற் செம்மைப் பூவியல் வீதிக்

குயிலென மொழியும் மயிலியல் ஆயத்து

மான்மாற விழிக்கும் ஆனாச் செல்வத்து

இடைமருது இடங்கொண்டு இருந்த எந்தை . . . . (1)

(பட்டினத்துப் பிள்ளையார்)



பொருள்: ஒன்றுடன் ஒன்று உயர்வில் போட்டி கொண்டு மேகத்தைத் தொடவும் கொடிகள் ஆடுகின்ற பெருமை மிக்க மாளிகைகள் சூழப் பெற்றதும், தெய்வப் பொற்கொல்லர்களால் கைமுயன்று வகுத்த ஓவநூல் செம்மைப் பூவியில் வீதிகளில் குயில்பொல் மொழியும், மயிலன்ன சாயிலும், மான் போல் விழிகளும் கொண்ட மகளிர் செல்வ சிற்ப்போடு வாழ்கின்ற திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கும் எந்தந்தையே!



திருவிடைமருதூர் கல்வெட்டுகளில் பொதுப் பெயரான இராஜகேசரி என்று பட்டம் சூடிய மன்னர்களின் கல்வெட்டுக்ள் 10 உள்ளன .இவை ஒவ்வொன்றும் எந்தெந்த மன்னர்களுடையது என்பதை ஆராய்வோம். இதில் 



2-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்------------------ 1

3-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்----------------- 3

6-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்------------------ 1

9-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்----------------- 1

10-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்---------------- 1

16-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்----------------- 1

17-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்---------------- - 1

ஆட்சியாண்டு இல்லாத கல்வெட்டுகள்-------- 1

மொத்தம் -----------10



2-ம் ஆட்சியாண்டு கல்வெட்டு



1. ARE 239/1907- S.I.I.Vol 13- NO:7



கிழார் நாட்டு தலைவனுடைய பணியாள், மண்ணிநாட்டு பிரம்மதேயம் ஏமநல்லூர் கிரமவித்தன் குராணைதுக்கை என்பவர், திருவிடைமருதூரிலுள்ள வணிகக் குழுவின் வழியாக 8 ஈழக்காசு கொடுத்து அதன் மூலம் பெறப்படும் வட்டியைக் கொண்டு திருவிடைமருதூர் கோயிலில் மூலஸ்தானத்திற்கு தெற்கே எழுந்தருளியிருக்கும் புராண கணபதிக்கு தினமும் 10 வாழைப்பழம் படைக்க தானம் செய்தார். இக் கல்வெட்டில் வேறு எந்த தகவலும் இல்லை.எனவே இந்த இராஜகேசரி கல்வெட்டு எந்த மன்னனுடையது என்பதை அறிய இயலவில்லை.



3-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்



1.ARE 152/1895-S.I.I.Vol 5- No:716



திருவிடைமருதூர் இறைவனுக்கு கவுரி வீசும் பெண்களுக்கு ஊதியமாக தினமும் 3 நாழி நெல் வழங்க திரைமூர் சபையாரும், திருவிடைமருதூர் நகரத்தாரும், கோயில் நிர்வகிப்பவர்களும், கோயில் மேலாண்மை செய்யும் அரசு அதிகாரியான இருமுடிசோழப்பல்லவரையரும் கூடி முடிவு செய்தனர். 



இவ்வதிகாரி இருமுடிசோழப்ல்லவரையர் மதிரை கொண்ட பரகேசரி என்ற பட்டம் சூடிய முதலாம் பராந்தகனின் 35 ஆம் ஆண்டில் பணியாற்றிய அதிகாரி ஆவார். என்பதை இக் கோயிலில் இருந்த மற்றொரு கல்வெட்டு தெருவிக்கின்றது.(2)



இருமுடிசோழன் என்பது பராந்தகனின் சிறப்புப் பெயராகும்.(3) ஏற்கனவே தெரிவித்துள்ளபடி, ஆளும் மன்னரின் கீழ் பணிபுரியும் அரசு அதிகாரிகள், அம் மன்னர்களின் சிறப்புப் பெயரை தன் பெயரோடு இணைத்துக்கொள்வது வழக்கம். அம்முறையில் பார்த்தால், இப் பராந்தகனின் அதிகாரி பராந்தகனின் கடைசி ஆட்சியாண்டுகளில் பணிபுரிந்தவர் அல்லது அடுத்து வந்த பராந்தகனின் கடைசி ஆட்சியாண்டுகளில் சேர்ந்து ஆட்சி நடத்திய கண்டராதித்திய காலத்திய அதிகாரி ஆவார். பராந்தகன் பரகேசரியாக இருப்பதாலும், கண்டராதித்தன் இராஜகேசரியாக இருப்பதாலும் இராஜகேசரியான இக் கல்வெட்டு பராந்தகருக்குப்பின் ஆட்சிபுரிந்த கண்டராதித்தனுடையது என உறுதியாக கூறலாம்.



2.ARE 202/1907-S.S.I. Vol..13-No.37



இக் கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. இரண்டு வரிகள் மட்டுமே உள்ளது. விபரம் ஏதும் அறிய இயலவில்லை இந்த இராஜகேசரி கல்வெட்டு எந்த மன்னருடையது என்பதை அறிய இயலவில்லை.



3.ARE 242/1907-S.S.I.Vol..13-No.38



கிழார் நாட்டு தலைவனின் பணியாள் கானநாட்டு அரிசாத்தனூர் உடையான் கருத்தன் சாத்தன் என்பவன் திருவிடைமருதூர் இறைவனுக்கு மதியம் பூஜை முடிந்த பின்பு, தினமும் வழுக்கையுடன் உள்ள இளநீர் இரண்டு படைக்க திருவிடைமருதூர் வணிகக் குழு மூலமாக 6 கருங்காசு கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வட்டியினை கொண்டு இத் தர்மத்தை செய்வித்தான் இவ் விபரம் கொண்டு இந்த இராஜகேசரி கல்வெட்டு எவர் என்று அறிய இயலவில்லை.



6-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்



1.ARE-215/1907-S.S.I. VOL..13-NO.133.



இவ் இராஜகேசரி கல்வெட்டு, இராஜகேசரி என்ற பட்டம் சூடிய மன்னரின் மனைவி பஞ்சவன் மாதேவி என்பவர், திருவிடைமருதூர் கோயிலுக்கு வந்ததையும் அவர் நிவந்தங்கள் அளித்ததையும் தெரிவிக்கின்றது



பஞ்சவன் மாதேவி என்ற பெயர் கொண்ட மனைவியினை உடைய சோழ மன்னர்கள் மூன்று நபர்கள் உள்ளனர். அவர்கள் உத்தம சோழன் (4), முதலாம் இராஜராஜன் (5) மற்றும் முதலாம் இராஜேந்திரன் (6) ஆவர். இவர்களில் உத்தம சோழனும் முதலாம் இராஜேந்திரனும் பரகேசரி பட்டம் கொண்டவர்கள். முதலாம் இராஜராஜன் மட்டுமே இராஜகேசரி பட்டம் சூடியவர். எனவே இக் கல்வெட்டு முதலாம் இராஜராஜனுடையது ஆகும். 



9-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்



1.ARE-260/1907-S.S.I. VOL..13 No.195.



திருவிடைமருதூர் கோயிலை நிர்வகிக்கும் அரசு அதிகாரி நிதிய நிராகுல பிரமாதிராயரும், திரைமூர் சபையினரும், திரைமூர் ஊராரும், திருவிடைமருதூர் நகரத்தாரும் மற்றும் கோயில் பதிபாதமூலத்தாரும் சேர்ந்து திருவெண்காடு பிச்சன் என்பவன் ஏற்படுத்திய சிறு நந்தவனத்திற்கு நீர் இறைக்கும் நபர்களுக்கு நில நிவந்தம் செய்தனர்.



இவ் இராஜகேசரி கல்வெட்டு இராஜகேசரி பட்டம் சூடிய கண்டராதித்த சோழன், சுந்தர சோழன் அல்லது முதல் இராஜராஜ சோழன் ஆகிய மன்னர்களில் ஒருவராகலாம்.



ஆதித்த கரிகாலனின் ஆட்சியாண்டு சிதைந்தபோன கல்வெட்டு ஒன்று (7) திருவெண்காடு பிச்சன் ஏற்படுத்திய நந்தவனத்தை குறிப்பிடுகின்றது. எனவே இக் கல்வெட்டு ஆதித்த கரிகாலனுக்கு முன்னர் ஆண்ட இராஜகேசரியான கண்டராதித்தன் அல்லது சுந்தர சோழன் ஆகிய இருவரில் ஒருவராகலாம். மேலும் இராஜகேசரி பட்டம் சூடிய மன்னரின் 10 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று (8) கோயில் அரசு அதிகாரியாய் நிதிய நிராகுல பிராமாதிராயரைக் குறிப்படுகின்றது. இராஜகேசரியான முதல் இராஜராஜன் 9 மற்றும் 10 ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் கோயில் அரசு அதிகாரியாக குழலூருடையான் என்பவரை சுட்டுகிறது (9). எனவே இக் கல்வெட்டு இராஜராஜருடையது அல்ல என முடிவு செய்யலாம்



கண்டராதித்தன் 7 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தவன் என்று .குடந்தை சேதுராமன் தெரிவிக்கிறார். (10) ஆனால் சுந்தர சோழன் 17 ஆண்டுகள்வரை ஆட்சி செய்தவன். (11) எனவே இக் கல்வெட்டு சுந்தர சோழனுடையதாகும்.



10-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்



1.ARE156/1895-S.S.I. Vol..5 No:720



திருவிடைமருதூர் கோயில் நிர்வாக மேலாண்மை செய்யும் அரசு அதிகாரியான நிதிய நிராகுல பிரமாதிராயர் பணிபுரியும் காலத்தில், ஆனைமேல் துஞ்சிய உடையாரின் ஆச்சியார் கோக்கிழானடிகளின் பணிமகன் பொதுவன் சிற்றடி என்பவர் இக்கோயிலுக்கு ஒரு நுந்தா விளக்கு எரிக்க 10 கழஞ்சு மதிப்புள்ள 20 ஈழக் காசுகளை வழங்கி நிவந்தம் செய்தான். நிதிய நிராகுல பிரமாதிராயர் என்பவர் சுந்தர சோழன் காலத்தில் பணிபுரிந்த ஒரு அதிகாரி என்பதனை ஏற்கனவே பார்த்தோம். மேலும் ஆனைமேல் துஞ்சிய இராஜாதித்த சோழனின் தாயான கோக்கிழானடி முதலாம் பராந்தக சோழனின் மனைவிஆவார் (12) இவர் சுந்தர சோழனின் பாட்டியும் ஆவார் .இராஜகேசரியான கண்டராதித்தன் 7 ஆண்டுகள்வரை மட்டுமே ஆட்சிபுரிந்தார் முதலாம் இராஜராஜன் இராஜகேசரி பட்டம் சூடி ,29 ஆண்டுகள் ஆட்சி செய்திருந்ததாலும், முதலாம் இராஜராஜன் காலத்தில் முதலாம் பராந்தக சோழனின் மனைவி கோக்கிழானடிகள் உயிருடன் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்பதாலும், அரசு அதிகாரியான நிதிய நிராகுல பிரமாதிராயர் என்பவர் சுந்தர சோழர் ஆட்சிக்காலத்தில் பணிபுரிந்த அதிகாரி என்பதை சென்ற கல்வெட்டுச் செய்தியில் பார்த்ததாலும் இக் கல்வெட்டு சுந்தரசோழனுடையதாக கருதவேண்டியுள்ளது. 



16-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்



1.ARE148/1895-S.S.I. Vol..5 No.712



இக் கல்வெட்டு, திருநறையூர் நாட்டு மத்தியஸ்தன் வெண்ணையூர் உடையான் அரையன் பாரதாயனாகிய வியாழ கமல பல்லவரையர் என்பவர் இக் கோயிலுக்கு ஒரு நுந்தா விளக்கு எரிக்க 90 சாவா மூவா பேராடுகள் வழங்கியதை தெரிவிக்கின்றது. 16 ஆண்டிற்குமேல் ஆட்சிபுரிந்த இராஜகேசரி மன்னர்களாக ஆதித்த சோழன், சுந்தர சோழன் மற்றும் முதலாம் இராஜராஜன் உள்ளதால் ,இக் கல்வெட்டு எந்த மன்னருடையது என்பதை அறிய இயலவில்லை, 



17-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்



1.ARE216/1907-S.S.I. Vol..13 No.270



விளங்குடி கிராமத்தில் சிவபிச்சன் என்பவன் ஏற்படுத்திய 5 மா அளவுள்ள மல்லிகை நந்தவன நிலத்தையும், பன்மாகேஸ்வரத் தொண்டன் என்பவர் ஏற்படுத்திய 5 மா அளவுள்ள மல்லிகை நந்தவன நிலத்தையும் எந்தவித உரிமையும், ஆவணமும் இன்றி பூக்களை தொடுத்து மாலை செய்யும் மாலைக்காரன் ஒருவன், ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வந்ததை , கோயில் அரசு அதிகாரியான பராந்தக மூவேந்த வேளாளர், திரைமூர் சபையினர், திரைமூர் ஊரார், திருவிடைமருதூர் நகரத்தார் மற்றும் கோயில் தேவகன்மிகள் இவர்கள் அனைவரும் கூடி கண்டறிந்து இந்த 10 மா நிலத்திலிருந்த ஆக்கிரமிப்பினை அகற்றி கோயிலுக்கு நந்தவன நிவந்தமாக அளித்தனர். இக் கல்வெட்டில் குறிப்படப்படும் அரசு அதிகாரி பராந்தக மூவேந்த வேளார் என்பவர், சுந்தர சோழன் காலத்தில் இளவரசராய் ஆட்சிபுரிந்து இளவரசனாகவே மாண்டுபோன ஆதித்தகரிகால சோழனின் ஆட்சி காலத்திலும், பின் ஆண்ட பரகேசரியான உத்தம சோழன் காலத்திலும் பணிபுரிந்தவர் என்பதை கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர் சிற்றிங்கன் உடையான் கோயில் மயிலையான பராந்தக மூவேந்த வேளான் என்று அழைக்கப்படுவதை ஆதித்த கரிகாலனின் 4 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று கூறுகின்றது (13) இவ்வதிகாரி உத்தம சோழனின் 

4 ம் ஆட்சியாண்டு கல்வெட்டில் சிற்றிங்கன் உடையான் கோயில்மயிலையான மதுராந்தக மூவேந்த வேளாளர் என்று குறிப்படபடுகின்றார். (14) ஆதித்தய கரிகாலனும் உத்தம சோழனும் பரகேசரி பட்டம் புனைந்தவர்கள். எனவே இக் கல்வெட்டு உயர் ஆட்சியாண்டுகள் கொண்ட சுந்தர சோழனுடையது என உறுதியாக கூறலாம்.



ஆட்சியாண்டு இல்லாத (சிதைந்த) கல்வெட்டுகள்.



1.ARE 153/1895- S.I.I. VOL..5-No:717



திரைமூர் நாட்டு குமாரமார்த்தாண்டபுரத்து வியாபாரி உதையடி வெங்கடவன் என்பவன் 35 கழஞ்சு பொன் கொடுத்து 6 மா நிலத்தை விலைக்கு வாங்கி கோயிலில் ஒரு நுந்தா விளக்கு எரிக்க நிவந்தமாக வழங்கினான்.



இக் கல்வெட்டில் இராஜகேசரி யார் என்பதை அறிவதற்கான குறிப்புகள் ஏதும் இல்லாததால் இக் கல்வெட்டு எந்த இராஜகேசரி மன்னனுடையது என்பதை அறிய இயலவில்லை.



மேற்கண்ட 10 இராஜகேசரி கல்வெட்டுகளை ஆராய்ந்ததில் 5 கல்வெட்டுகள் மட்டும் கீழ்க்கண்ட மன்னர்களுடையது என்பதை ஆராய்ந்தோம்.



கண்டராதித்த சோழன் ----- - - -- -- -- - -- --- 1

சுந்தர சோழன் --- --- ---- --- ---- ---- ---- ---- ---- -- 3

முதலாம் இராஜராஜன் -- --- --- ---- ----- ----- ---- 1

மொத்தம் ----------5



மீதமுள்ள 5 கல்வெட்டுகள் எந்த மன்னர்களுடையது என்பதை அறிய முடியவில்லை. இப்போதைக்கு இராஜகேசரி என்ற பட்டம் சூடிய மன்னர்களுடைய கல்வெட்டுகள் என பொதுவாக முடிவு செய்யலாம். இனி மெய்கீர்த்தி இல்லாமல் குலோத்துங்கசோழன் என பொதுவாக அழைக்கப்பட்ட கல்வெட்டுகள் முதல் குலோத்துங்கனா? இரண்டாம் குலோத்துங்கனா? அல்லது மூன்றாம் குலோத்துங்கனா? என்பதைப் பற்றி ஆராய்வோம்.



{வளரும்} 



அடிக்குறிப்புகள்

1) திருவிடைமருதூர் மும்மணிக்கோவை --பட்டினத்துப் பிள்ளையார் 

2) S.I.I. Vol:5-No:713

3) பிற்காலச் சோழர் சரித்திரம்-தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்-பக்கம்-52 

4) S.I.I. Vol :19-No:382

5) நன்னிலம் கல்வெட்டுகள் இரண்டாம் தொகுதி தொடர் எண்: 334/1978

6) முதலாம் இராஜேந்திரசோழன் –ம.இராசசேகர தங்கமணி-தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் பக்கம்-177 

7) ARE 249/1907-S.I.I. Vol-23 No;249

8) S.I.I. Vol-5 No:720

9) S.I.I. Vol-23 No:278, 254

10) Early Cholos Mathematics Reconstructs The Chronology-N.Sethuraman Page-59

11) S.I.I. VOl 13-No:270

12) சோழர்கள்-கே.ஏ.நீலகண்டசாஸ்திரி பக்கம்-181

13) S.I.I. Vol-5-No:718

14) S.I.I. Vol-19- No:92 

 


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.