http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 157

இதழ் 157
[ ஆகஸ்ட் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 6
புள்ளமங்கை ஆலந்துறையார் விமானம்
பெரிய பெருமாளும் நம்பிராட்டியாரும்
மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு - 2
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் - 3
பதாமி சாளுக்கியரின் கட்டுமானக் கோயில்கள் - பட்டடக்கல் நினைவுச் சின்னங்கள்
இதழ் எண். 157 > கலையும் ஆய்வும்
புள்ளமங்கை ஆலந்துறையார் விமானம்
இரா.கலைக்கோவன், மு.நளினி

தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் 12 கி. மீ. தொலைவிலுள்ள பசுபதிகோயில் இரண்டு பழங் கோயில்களைப் பெற்றுள்ள பெருமைக்குரிய சிற்றூர். இங்குள்ள முற்சோழர் கட்டுமானமான புள்ளமங்கை ஆலந்துறையார் விமானத்தின் கீழ்த்தளம் நான்கு திசைகளிலும் உபானத்திலிருந்தே மூன்று பத்திகளாகப் பிரிக்கப்பட்ட நிலையில் கபோதக்கட்டுத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, சுவர், கூரையுறுப்புகள் என எழுகிறது. தாய்ச்சுவரிலிருந்து நன்கு வெளித்தள்ளிக் கட்டுமானத்தின் கம்பீரத்தை மேம்படுத்தும் இப்பத்திகளுள் மூலைகளிலுள்ளவை கர்ணபத்திகளாகவும் இடைப்பட்டிருப்பவை சாலைப்பத்திகளாகவும் அறியப்படும்.

தாங்குதளம்

ஜகதி, உருள்குமுதம், மேனோக்குத் தாமரைவரி, பாதங்களும் கம்புகளும் பெற்ற கண்டத்தொகுதி, கோணப்பட்டம், சந்திரமண்டலத்துடன் கபோதம், பூமிதேசம் என அமைந்த கபோதக்கட்டுத் தாங்குதளத்தின் பூமிதேச மகரங்கள் சாலைப்பத்திகளில் திருப்பங்களில் அமைய, கர்ணபத்திகளில் அவை தெற்கிலும் வடக்கிலும் நேர்ப்பார்வையிலுள்ளன. மேற்குக் கர்ணபத்திகளில் சற்று மாறுபட்டுத் தெற்கிலும் வடக்கிலும் திசைக்கொரு மகரம் திருப்பத்தில் உள்ளது.

மகரங்களுக்கு இடைப்பட்டனவாய்ச் சாலைப்பத்திகளில் பன்னிரண்டு யாளிகளும் தெற்கு, வடக்குக் கர்ணபத்திகளில் நான்கும் உள்ளன. மேற்குக் கர்ணபத்திகள், தெற்கில் ஆறு யாளிகளும் வடக்கில் ஐந்தும் பெற, யாளிகள் அனைத்துமே அளவில் சிறியன. அங்காத்துள்ள மகரவாய்களிலிருந்து ஒரு கால் மடித்து ஒரு கால் நீட்டி வல அல்லது இடஒருக்கணிப்பில் வெளிப்படும் வீரர்களில் பலர் வாளும் கேடயமும் கொண்டிருக்க, சிலர் ஒரு கையைப் போற்றிமுத்திரையில் கொண்டு, மற்றொரு கையால் மகரத்தின் மேலண்ணம் தொட்டுள்ளனர். பெரும்பாலோர் கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி அல்லது முத்துமாலை, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டும் அரைக்கச்சும் பூண்ட இடையாடையினராய் இளமை பொலிய காட்சிதருகின்றனர்.

தாங்குதளக் கண்டபாதங்கள் சைவம், வைணவம், சாக்தம் தொடர்பான சிற்றுருவச் சிற்பங்களையும் பொதுநிலை, ராமாயணச் சிற்பங்கள் சிலவற்றையும் கொடிவளையங்கள், பூப்பதக்கங்கள் உள்ளிட்ட கருக்கணிகளையும் கொள்ள, வேதிபாதங்களில் கருக்கணிகளுக்கிடையே தொடரான ராமாயணக் காட்சிகள்.

சுவர்

கர்ணபத்திகளை நான்முக அரைத்தூண்கள் தழுவ, சாலைப்பத்திகளை சதுரபாதத்தின் மீதெழும் எண்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. இருவகைத் தூண்களுமே தொங்கல், கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம் என அனைத்து உறுப்புகளும் கொண்டுள்ளன. சில தூண்களின் தொங்கலும் கட்டும் கொடிக்கருக்கு, பூப்பதக்க அலங்கரிப்பு கொள்ள, சிலவற்றில், முற்சோழர் கால ஆடற்கலைப் பதிவுகளும் விலங்கு, பறவைக் காட்சிகளுடன் வாள்சண்டை உள்ளிட்ட மாறுபட்ட படப்பிடிப்புகளுமுள்ளன. தூண்களின் மேலுறுப்புகளும் கொடிக்கருக்குகள், பூப்பதக்கங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. கூரையின் வெளிநீட்டலாய் இறங்கும் கபோதத்தைப் பத்தி அணைவுத் தூண்களின் பலகைகள் மீதிருந்து தாங்கும் சிற்பங்களாய்த் தாவு யாளிகளும் ஆடல், இசைக்கலைஞர்களும்.

கூரையுறுப்புகள்

தூண்களின் வீரகண்டம் ஏந்தும் போதிகைகள் குளவும் பட்டையும் பெற்ற தரங்கக் கைகளால் உத்திரம் தாங்க, மேலே வாஜனம், பூதவலபி. கர்ணபத்திகளின் மேல் இணைநாசிகைகளும் சாலைப்பத்திகளின் மேல் இடைவெளிவிட்ட நாசிகைகளும் கொண்டுள்ள கபோதம் சந்திரமண்டலம், கோணப்பட்டம் முதலிய அழகூட்டல்களோடு கம்பீரமாக விளங்குகிறது. சாலைப்பத்திகளின் பக்கங்களிலும் பக்கத்திற்கொரு நாசிகை. பல நாசிகைகள் வெறுமையாக அமைய, சிலவற்றில் கொக்கு, கழுத்தைத் திருப்பி நிற்கும் புறா, வாத்து, படுத்தும் பதுங்கியும் குரங்குகள், நந்தி, தமிழம் கொண்டையும் பனையோலைக் குண்டலங்களுமாய்க் கந்தருவத்தலைகள் ஆகியவற்றுடன் கண்ணனும் காட்சியாகிறார். சாலைப்பத்திக் கூரைக் கபோதங்களின் நடுப்பட்டக் கருக்கணி சரத்தொங்கலாய் இறங்கிப் பூப்பந்தென விரிகிறது.

கோட்டங்கள்

தெற்கு, மேற்கு, வடக்குச் சாலைப்பத்திகள் பூப்பதக்கங்கள் நிறைந்த சட்டத்தலை உருளை அரைத்தூண்களால் தழுவப்பெற்ற கோட்டங்கள் கொள்ள, கிழக்குச் சாலைப்பத்தி கருவறை வாயிலாகியுள்ளது. கோட்டங்களின் இருபுறத்துள்ள பத்திச்சுவர்கள் கோட்டக் கடவுள்சார் துணைச்சிற்பங்களைப் பெற்றுள்ளன. கோட்ட அணைவுத்தூண்களின் வீரகண்டங்கள் கூரையுறுப்புகள் தாங்க, மேலே மகரதோரணம். கோட்டங்களில் தெற்கில் தென்திசைக்கடவுளும் மேற்கில் லிங்கோத்பவரும் வடக்கில் நான்முகனும் அமைய, மேற்கு மகரதோரணம் வெறுமையாக உள்ளது. தெற்கில் வடிப்புக்கூர்மையற்ற சிற்பத்தொகுதி. வடக்கு மகரதோரணம் முற்சோழர் காலத்திற்கே உரிய அனைத்துச் சிறப்புகளும் பெற்று எழிலார்ந்து விளங்குகிறது.

பஞ்சரங்கள்

கர்ண, சாலைப்பத்திகளுக்கு இடைப்பட்ட கீழ்த்தளத் தாய்ச்சுவரில் விமானத்தின் நான்கு திசைகளிலும் திசைக்கு இரண்டென உபானத்திலிருந்து கபோதம்வரை உயரும் அழகிய தளப்பஞ்சரங்கள். பல்லவர் காலத்திருந்தே காணப்படும் இப்பஞ்சரங்கள் கட்டுமானத்திற்கு இணையற்ற கவர்ச்சியையும் கம்பீரத்தையும் தருகின்றன. சிராப்பள்ளியில் பல முற்சோழர் கோயில்கள் இத்தகு பஞ்சரங்களைப் பெற்றிருந்தபோதும் ஆலந்துறையார் பஞ்சரங்கள் சோழர் கலையாற்றலின் தனித்துவமான வெளிப்பாடுகளாகக் கண்களை நிறைக்கின்றன.

உபானத்தின் மீது அடர்த்தியான தாமரைஜகதி, உருள்குமு தம், நான்கு பிரதிமுகங்களும் திருப்பங்களில் மகரவாய்களும் பெற்ற பிரதிவரி எனப் பிரதிபந்தத் தாங்குதளத்துடன் தொடங்கும் தளப்பஞ்சரங்களின் ஜகதி, குமுதம் இவற்றுக்கிடையே அழகிய மேனோக்குத் தாமரைவரி. பிரதிவரியில் ஒன்றையொன்று நோக்கியோ, எதிர்ப்பார்வையிலோ உள்ள சிம்ம, வேழயாளிகளின் செதுக்குத்திறம் சிறப்பானது. துளைக்கையைச் சுருட்டித் தலை மீதிருத்தி அங்காத்துள்ள மகரங்களின் தந்தங்கள் நன்கு வளைந்து நீண்டுள்ளன. பற்கள் நிறைந்துள்ள அவற்றின் வாயிலிருந்து ஒரு காலை மடக்கி, ஒரு காலை நீட்டி வெளிப்படும் வீரர்கள் உயர்த்திய கையில் வாளும் மற்றொரு கையில் கேடயமும் ஏந்தியுள்ளனர்.

கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி அல்லது முத்துமாலை, தோள்வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்று வல அல்லது இடஒருக்கணிப்பிலுள்ள அவர்களுள் சிலர் கேடயக் கையை மடக்கிய முழங்கால் மீது தாங்கலாக்கியுள்ளனர். தெற்கு மகரம் ஒன்றின் வாயிலிருந்து வீரர்களைப் போலவே ஆடை, அணிகளுடன் வெளிவரும் அழகிய பெண்ணின் வலக்கை மகரத்தின் மேல் தாடை தொட, இடக்கை தொடையில். சில மகரங்கள் தாவிவரும் வேழ, சிம்மயாளி மீதமர்ந்த வாள்வீரர்களைக் கொண்டுள்ளன. ஒரு வீரர் வாளுக்கு மாற்றாக உருள்தடி கொள்ள, ஒன்றில் வீரர்களற்ற தாவுசிம்மம். இப்பிரதிவரியும் மகரங்களும் தளப்பஞ்சரங்களுக்கு உயிரூட்டி அவற்றின் கம்பீரத்தையும் எழுச்சியையும் பன்மடங்காக்குகின்றன.

இத்தாங்குதளத்தின் மேல் வளரும் வேதிகண்டம், கீழ்நோக்குத் தாமரைவரித் தழுவலுடன் வேதிகை பெற, அதன் பெரும்பாலான பாதங்களில் பூ அல்லது கொடிக்கருக்கு அலங்கரிப்பு. இந்த அழகூட்டல்கள் பஞ்சரத்திற்குப் பஞ்சரம் சிறு அளவிலேனும் மாறுபட்டு, எழிலார்ந்த செதுக்கல்களாய்க் கண்சிமிட்டுகின்றன. செதுக்கல்கள் பெற்றுள்ள பஞ்சரப் பாதங்களில் இரண்டில் மட்டுமே சிற்பங்கள் அமைய, விமானத்தின் கிழக்குமுகப் பஞ்சர வேதிபாதங்கள் வெறுமையாக உள்ளன. விமான மேற்குப் பஞ்சரங்களில் தெற்கிலுள்ளதன் வலப்பாதத்தில் வாத்து. வடக்குப் பஞ்சரங்களில் கிழக்கிலுள்ளதன் இடப்பாதத்தில் மிரளும் யானையை அதன் மேலேறி வீரர் ஒருவர் அடக்கும் காட்சி. முன் கால்களைத் தூக்கித் துளைக்கையைச் சுருட்டி மேலேறுபவரைச் சாய்க்குமாறு முரண்டு பிடிக்கும் யானையின் மெய்ப்பாடுகள் அருமையாக வெளிப்பட, எச்சரிக்கையுடன் யானை முதுகின் மேல் தவழ்ந்தேறும் வீரரின் பேராண்மைத் துணிவு கண்களை நிறைக்கிறது.

வேதிகையை அடுத்துள்ள துணைக்கம்பின் மேலெழும் நான்முக அரைத்தூண்கள் தொங்கல், கட்டு, தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம் என அனைத்து மேலுறுப்புகளும் பெற்றுக் குளவும் அழகிய கொடிக்கருக்குப் பட்டையும் கொண்ட தரங்கப் போதிகைக் கைகளால் உத்திரம் உள்ளிட்ட கூரையுறுப்புகள் தாங்குகின்றன. நான்முகத் தூண் களின் தொங்கல்கள் பல்வேறு அமைப்பிலான பூச்சரங்கள், கொடிக்கருக்குகள், பதக்கங்கள் கொள்ள, கட்டுகளிலும் கொடிப்பின்னல்கள். தூண்களின் பாலி உள்ளிட்ட மேலுறுப்புகளும் பல்வேறு வகைப்பட்ட எழில்நிறை கருக்கணிகளால் நிறைக்கப்பட்டுள்ளன. பாலியின் கீழ்முகம் கொடியமைப்பில் மின்ன, விளிம்புகளில் பூப்பதக்கங்கள்.

பஞ்சரங்களின் வலபித் திருப்பங்களில் தோளளவான தாவுசிம்மங்கள். அவற்றுக்கு இடைப்பட்டும் பக்கங்களிலும் விலங்கு, பறவை, பூதம் உள்ளிட்ட உயிரினங்கள். போதிகைக்கு மேலான வலபிமடிப்புகளில் ஆலிலைக்கண்ணன், கைகளை ஊன்றி எட்டிப்பார்க்கும் பூதங்களின் முகங்கள், பதுங்கும், உறங்கும், அமர்நிலைகளில் புலி, சிம்மம், நந்தி, எருமை காட்சிதர, விமானக் கிழக்குப் பஞ்சரங்களில் இப்பகுதி வெறுமையாக வுள்ளது. விமான மேற்குமுகப் பஞ்சரங்களில் தெற்கிலுள்ளதன் இப்பகுதியில் ஒரு குரங்கு படுத்திருக்க, மற்றொரு குரங்கு அதனருகே அமர்ந்து பேன் பார்க்கும் காட்சி. பல பஞ்சரங்களில், மடிப்புகளுக்கு இடைப்பட்ட வலபியில் ஒவ்வொன்றிலும் இரு வாத்துகள்.

கூரையின் முன்னிழுப்பான கபோதம் முகப்பில் இணை நாசிகைகளும் பக்கங்களில் திசைக்கொரு நாசிகையும் எனச் சிம்மத்தலைப்புப் பெற்ற நான்கு கூடுவளைவுகளுடன் சந்திர மண்டலமும் எழிலார்ந்த கோணப்பட்டமும் கொண்டமைய, சில கூடுகளில் வாத்து, நடைபயிலும் பன்றிகள், கந்தருவமுகங்கள், பூதத்தலை உள்ளிட்ட செதுக்கல்களைக் காணமுடிகிறது. கூட்டைத் தழுவியுள்ள வளைவின் கொடிக்கருக்கு, தலைப்பாக உள்ள சிம்மத் தலையின் அகலத் திறந்த வாய்வழி வெளிப்பட்டு, இருபுறத்தும் கீழிறங்கி, வளைவும் நெளிவுமாய்ச் சிலவற்றிலும் படமெடுத்த பாம்புகளின் அணிவகுப்பெனச் சிலவற்றிலும் சிறக்க அமைந்துள்ளது.

விமானத்தின் மேற்குமுகத்திலுள்ள வடபஞ்சரத்தின் முகப்புக் கபோதநாசிகைகளுள் தெற்குநாசிகையின் வளைவு பிற வளைவுகள் போல் கொடிக்கருக்குப் பெற்றிருந்தாலும் அக்கருக்கு வளைவுகளிடையே வலப்புறம் மூன்றும் இடப்புறம் மூன்றுமாய் அழகிய ஆடல், கருவிக்கலைஞர்களின் வடிவங்களைக் கொண்டுள்ளது. அறுவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வலப்புறம் கீழுள்ள பெண் சுவஸ்திகக் கரணத்தில் வலக்கையைக் கடகத்தில் இருத்தி, இடக்கையை அர்த்தரேசிதத்தில் வீசியுள்ளார். தமிழம் கொண்டையும் சிற்றாடையும் பெற்றுள்ள அவரது முகம் வலத்திருப்பமாய். சடைமகுடத்துடன் அவருக்கு மேலுள்ளவரும் சுவஸ்திகக் கரணக் காரிகையே. வலக்கை பதாகத்திலிருக்க, இடக்கை அர்த்தரேசிதத்தில். முகம் வலத்திருப்பத்தில். சடைமகுடராய் நேர்ப்பார்வையிலுள்ள வலஉச்சியர் இசைக்கலைஞராய்ச் செண்டுதாளத்துடன்.

இடப்புறத்தே மேலுள்ளவர் மண்டலநிலையில் இடக்கை வாசிக்கும் கலைஞர். வலக்கை கருவி இயக்க, கயிற்றுப்புரிகளுக் குள் இடக்கை கவித்துவம் காட்டுகிறது. இக்கலைஞரின் கீழுள்ள வர் சுவஸ்திகக் கரணத்தில் வலக்கையைக் கடகத்திலிருத்தி, இடக் கையை அர்த்தரேசிதத்தில் வீசியுள்ளார். சடைமகுடரான அவரது முகம் வலச்சாய்வாக உள்ளது. மண்டலத்திலுள்ள இறுதி ஆடலழகி வலக்கையில் பதாகம் காட்டி, இடக்கையை இடப்புறம் நீட்டியுள்ளார். அனைவரையும் இணைத்துப் பார்க்கச் சோழர்கால ஆடரங்கும் அங்கு ஆடிய தலைக்கோலியரும் இசைக்கலைஞர்களும் நினைவில் மின்னுகின்றனர்.

கபோதத்திற்கு மேலுள்ள பூமிதேசத்துண்டுகள் அனைத்துப் பஞ்சரங்களிலும் முகப்பில் நான்கு யாளிகளும் திருப்பங்களில் மகரதலைகளும் கொண்டுள்ளன. தோகையுடனுள்ள நடு யாளிகள் ஒன்றையொன்று நோக்கியிருக்க, பின்னுள்ள இரண்டும் முன்னதன் பார்வையில் உள்ளன. பூமிதேசத்தையடுத்துள்ள வேதிகைத்தொகுதியின் பெரும்பாலான கண்டபாதங்களிலும் கிரீவசுவரைத் தழுவியுள்ள உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்களில் பலவற்றிலும் அழகிய கொடிக்கருக்குகள். இத்தூண்களின் புறத்தே பின்கால்களை ஊன்றி முன்கால்களை நன்கு மடக்கியவாறு வாய்திறந்து நிற்கும் தாவுயாளிகளை விமானத்தின் கிழக்குமுகப் பஞ்சரங்கள் கொள்ளவில்லை.

கிரீவசுவர் நடுவிலுள்ள கோட்டத்தை அளவில் சிறிய சட்டத்தலை நான்முக அரைத்தூண்கள் அனைத்து மேலுறுப்புகளும் கொண்டு தழுவ, மேலே போதிகை, உத்திரம், வாஜனம், வெறுமையான வலபி உள்ளிட்ட கூரையுறுப்புகள். விமானத்தின் கிழக்கு முகத்திலுள்ள வடக்குப்பஞ்சர கிரீவகோட்டத் தூண்கள் மட்டும் செவ்வகப் பாதம் பெற்ற எண்முக அரைத்தூண்களாக உள்ளன. மேலே போதிகை, கூரையுறுப்புகள். சில அணைவுத் தூண்களில் அழகிய தொங்கல். கிரீவகோட்டங்களில் முற்சோழர் கலை மரபிற்கே உரிய எழிலார்ந்த நின்றநிலைச் சிற்பங்கள்.

கிரீவகோட்டத்தின் தலைப்பாய் விமானக் கபோதத்தில் காட்டப்பட்டுள்ள பெருவளைவுக்கூடுகள் விமானக் கிழக்குமுகத்தில் இடம்பெறவில்லை. ஏனைய முத்திசை வளைவுகளிலும் சிற்பச்செதுக்கல்கள். விமான மேற்குமுகத் தெற்குப் பஞ்சர வளைவின் உட்பகுதியில் மட்டும் சிவபெருமான் திருக்கோலம். பிற உட்குழிவுகளில் ஒருதளவிமானங்களின் ஆட்சி.

ஆரங்களும் தளங்களும்

கீழ்த்தளக் கபோதத்தின் மேல் நன்கு வடிவமைக்கப்பெற்ற பூமிதேசமும் வேதிகைத்தொகுதியும் அமைய, ஆரம் மூலைகளில் கர்ணகூடங்களையும் அவற்றிற்கு இடைப்பட்டுத் திசைக்கொரு சாலையையும் அவற்றை இணைக்கும் ஆரச்சுவரையும் கொண் டுள்ளது. ஆரஉறுப்புகளுக்கு இடைப்பட்ட ஆரச்சுவர்த் துண்டு களில் பக்கத்திற்கிரண்டெனத் திசைக்கு நான்கு குறுநாசிகைகள். ஆரஉறுப்புகளின் சிறுநாசிகைகளும் சுவரின் குறுநாசிகைகளும் எழில்நிறை வானவர்களின் சிறப்பான தோற்றங்களைப் பெற்றுள்ளன. சில நாசிகைக்கூடுகளில் அழகிய சிற்பங்கள்.

ஆரத்தின் பின்னெழும் இரண்டாம் தளமும் கீழ்த்தளம் போலவே தாய்ச்சுவரினின்றும் வெவ்வேறு அளவுகளில் முன்தள்ளிய கர்ண, சாலைப்பத்திகளைப் பெற்றுள்ளது. நான்முக அரைத் தூண்களால் தழுவப்பட்டுள்ள இப்பத்திகளின் போதிகைகள் பட்டையும் குளவும் பெற்ற தரங்கக் கைகளால் கூரையுறுப்புகள் தாங்க, வலபிப் பூதவரி பல இடங்களில் சிதைந்துள்ளது. மேலே கோணப்பட்டம், சந்திரமண்டலத்துடன் கூடுவளைவுகள் பெற்ற கபோதம், பூமிதேசம், வேதிகைத்தொகுதி, இரண்டாம் தள ஆரம். கபோதக்கூடுகளில் பெரும்பாலன வெறுமையாக உள்ளன. கீழ்த் தள ஆரம் போலன்றி, இரண்டாம் தள ஆரம் ஆரஉறுப்புகளுக்கு இடைப்பட்டுப் பக்கத்திற்கொரு குறுநாசிகையென திசைக்கிரு குறுநாசிகைகள் பெற்றுள்ளது. ஆரஉறுப்புகளின் சிறுநாசிகைகளும் இக்குறுநாசிகைகளும் கீழ்த்தள ஆரம் போலவே வானவர்களைக் கொண்டுள்ளன.

ஆரத்தின் பின்னெழும் மூன்றாம் தளம் இரண்டாம் தளத்தினும் உயரம், அகலம் ஆகியவற்றில் குறைந்து, சாலைப்பத்தி முன்னிழுப்பு மட்டும் பெற்றுத் திருப்ப, பத்தி அணைவுத் தூண்களாக நான்முக அரைத்தூண்களைக் கொண்டுள்ளது. தூண்களின் மேலுள்ள தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகளில் வலபியில் பெரிதும் சிதைந்த பூதவரி. சாலைப்பத்திக் கபோதத்தில் இருநாசிகைகள். கர்ணபத்தியில் பக்கத்திற்கொன்றாகவுள்ள அவற்றில் சிற்பங்கள் இல்லை. சுவர்த்திருப்பங்களில் திருப்பத்தூண்களின் மீது கபோதம் தாங்கும் தாவுயாளிகள். இவை இரண்டாம் தளச் சுவர்த்திருப்பங்களில் இடம்பெறாமை குறிக்கத்தக்கது.

கிரீவம், சிகரம்

மூன்றாம் தளத்தின் மேலமைந்துள்ள நாகர கிரீவமும் சிகரமும் திருப்பணிக் காலச் செங்கல் கட்டமைப்புகள். தளக்கூரையில் பூமிதேசத்தையடுத்து நான்கு மூலைகளிலும் மூலைக்கிரு சோழர் கால நந்திகள். கழுத்தில் மணிகளும் உடற்பகுதிகளில் மாலைகளும் பெற்றமர்ந்துள்ள அவற்றுள் ஒன்று தலை நிமிர்ந்திருக்க, மற்றொன்று இயல்பாக உள்ளது. கிரீவசுவரின் நடுப்பகுதியில் உறுப்பு வேறுபாடற்ற வேதிகை, வெறுமையான பெருநாசிகை அமைய, நாசிகைகளை உருளை அரைத்தூண்கள் தழுவியுள்ளன. மேலே கூரையுறுப்புகள். சிகரம் அலங்கரிப்புகளுடன் நாகரமாக விரிந்துள்ளது. மேலே தூபி.

கருவறை

விமானக் கீழ்த்தளக் கிழக்குமுகத்தில் அதன் கர்ணபத்திகளைத் தழுவும் முகமண்டபத்தின் தென், வடசுவர்களை அடுத்துப் பஞ்சரங்களும் அவற்றிற்கு இடைப்பட்டு நான்முகத் தூண்கள் தழுவும் சாலைப்பத்தியும் உள்ளன. சாலைப்பத்தி அணைவுத் தூண்களில் தெற்குத் தூணின் கட்டும் தொங்கலும் ஆடற்சிற்பங்கள் பெற்றுள்ளன. இந்த அணைவுத் தூண்களுக்கு இடைப்பட்டுள்ள நீள் நடையை அடுத்து 1. 73 மீ. உயர, 86 செ. மீ. அகலக் கருவறை வாயில் கீழ், மேல் நிலைகளும் நிலைக்கால்களும் பெற்று அமைந்துள்ளது. 3. 53 மீ. பக்கமுடைய சதுரமாக அமைந்துள்ள கருவறையின் சுவர்கள் வெறுமையாக அமைய, தரையில் வேசர ஆவுடையாருடன் லிங்கத்திருமேனி. கருவறையின் கூரை பொள்ளலாகப் படிப்படியாகக் குறுகி உயர்ந்து உச்சியில் சதுரக்கல்லால் மூடப்பட்டுள்ளது.சுவர்க்கோட்டச் சிற்பங்கள்

விமானக் கீழ்த்தளத் தெற்கு, மேற்கு, வடக்குக் கோட்டங்களில் முறையே ஆலமர்அண்ணல், லிங்கோத்பவர், நான்முகன் சிற்பங்களும் கோட்டங்களின் இருபுறத்துள்ள சுவர்களில் தொடர்புடைய சிற்பங்களும் உள்ளன. கோட்டத்தின் தலைப்பாக மகரதோரணம் காட்டப்பட்டுள்ளது.

ஆலமர்அண்ணல்

விமானத் தென்கோட்டத்தில் சிதைந்த சோழர் கால ஆலமர் அண்ணல் உட்புறத்தும் பின்னாளைய ஆலமர்அண்ணல் முன்புறத்துமாய் உள்ளனர். சோழர் பதிவில் மரத்தின் மேற்பகுதிக் கிளைகளும் இறைவனின் இடைவரையிலான தோற்றமும் காட்சியாகின்றன. சிரஸ்திரகச் சுருள்களுடன் சடைப்பாரம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சவடி, முத்துமாலை, தோள், கை வளைகள், முப்புரிநூலென மடித்த துண்டுடன் லேசான இடஒருக்கணிப்பில் சற்றே முன்சாய்ந்த இறைவனின் இட முன் கையில் சுவடி. பின்கையில் தீ. வல முன் கை சின்முத்திரையில் இருக்கப் பின் கை சிதைந்துள்ளது. மரக்கிளைகளில் இடப்புறம் இறக்கை விரித்த பறவை. பத்திச்சுவரின் இருபுறத்துமுள்ள அடுக்குகளில் வலப்புறத்தே மேலும் கீழும் கின்னரர், முனிவர் இணைகள். இடையில் ஆண்சிங்கம். இடப்புறத்தே மேலிருந்து கீழாகக் கிம்புருடர், புலி, முனிவர் இணைகள்.

இறக்கைகளுடன் கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள் முத்துமாலை, இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் காட்சிதரும் கின்னரஇணையில் வலஒருக்கணிப்பிலுள்ள ஆண் வீணை மீட்ட, பெண் கைகளில் செண்டுதாளம். நீள்செவிகளுடன் தலையிலிருந்து தொடைவரை ஆடை போர்த்தி ஒருவர் பின் ஒருவராய் லலிதாசனத்திலுள்ள கிம்புருடர் இணையின் முகங்களும் அவர்களுள் முன்னவர் கைகளும் சிதைந்துள்ளன. பின்னவரின் இரு கைகளும் மார்பருகே.

இடையடுக்குகளில் வலப்புறத்தே பிடரியுடன் வால்சுருட்டி, முன்காலொன்றை உயர்த்தி, வாய்திறந்திருக்கும் சிங்கமும் இடப் புறத்தே முன்கால்களை ஒன்றன் மேல் ஒன்றாய் இருத்தி உறங்கும் புலியும் அதன் பின்புறத்தே அதை நோக்கியவாறு அமர்ந்துள்ள மற்றொரு புலியும் காட்டுச்சூழலைக் கண் முன் நிறுத்துகின்றன. மகாராஜலீலாசனத்தில் சடைமகுடம், ருத்திராக்கத் தோள், கை வளைகள், கழுத்தணிகள், முப்புரிநூலென மடித்த துண்டுடன் லேசான இடஒருக்கணிப்பிலுள்ள வலப்புற நீள்செவி இளம் முனிவர்களில், முன்னவர் இடக்கையால் இறைவனைப் போற்றியவாறு முழங்கால் மீது ஊன்றிய வலக்கையை மார்பருகே ஏந்தலாகக் கொண்டுள்ளார். பின்னவர் வலக்கைப் பொருள் கொடித்தண்டாகலாம். அதே அழகூட்டல்களுடன் வலஒருக்கணிப்பிலுள்ள இடமுனிவர்களும் இளையவர்களே. அவர்களுள் மகாராஜ லீலாசனத்திலுள்ள முன்னவரின் இடக்கை தொடையில். வலமுழங்கால் மீதுள்ள வலக்கை சிதைந்துள்ளது. கழுத்தில் சவடி. அதே அமர்விலுள்ள பின்னவர் முகத்தை இடஞ்சாய்த்துள்ளார்.

சடைப்பாரம், பாம்புக்குண்டலங்கள், முத்துமாலை, சரப்பளி, முப்புரிநூல், இடைக்கட்டுடன் பட்டாடை பெற்று வீராசனத்திலுள்ள புதிய ஆலமர்அண்ணல் வலப்பாதத்தைக் குப்புறப் படுத்துள்ள முயலகன் முதுகின்மீது ஊன்றி, வல முன் கையைச் சின்முத்திரையில் வைத்து இட முன் கையில் சுவடி கொண்டுள்ளார். பின்கைகளில் வலப்புறம் பாம்பு சுற்றிய உடுக்கை. இடப்புறம் முத்தலைஈட்டி.

இலிங்கோத்பவர்

மேற்குக் கோட்டத்தில் லிங்கோத்பவர். இலிங்கத்தின் மேற்பகுதியில் இருகால்களையும் மடித்த வானுலாவியாய் நான்முகனும் கீழ்ப்பகுதியில் தவழ்ந்து தலைகுனிந்து பூமியைக் கைகளால் அகழ்பவராய் வராகரும். சடைமகுடம், பூட்டுக்குண்டலங்கள், பதக்கமாலை, தோள், கை வளைகள், முப்புரிநூலென மடித்த துண்டு, உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடையுடனுள்ள நான்முகனின் இட முன் கை போற்ற, வல முன் கை மார்பருகே சின்முத்திரையில். பின்கைகள் கர்த்தரீயில் இருந்தபோதும் கருவிகளில்லை. அவரது மூன்று முகங்களிலும் இளமை பொலிகிறது.

தீக்கங்குகள் சூழ்க் கோளத்திறப்பில் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், அரைக்கச்சும் இடைக்கட்டும் இடையிலிருத்தும் சிற்றாடையுடன் விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம். இறைவனின் சிதைந்த வல முன் கையைக் காக்கும் குறிப்பிலுள்ளதாகக் கொள்ளலாம். இட முன் கை கடியவலம்பிதத்தில் அமையப் பின்கைகள் சிதைந்துள்ளன.

பத்திச்சுவரின் வலப்புறத்தே நான்முகனும் இடப்புறத்தே விஷ்ணுவும் லிங்கோத்பவருக்காய் ஒருக்கணித்துள்ளனர். வலக்கையைக் கடியவலம்பிதமாக்கியுள்ள நான்முகனின் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை. சடைமகுடம், பூட்டுக்குண்டலங்கள், தோள், கை வளைகள், தொங்கல்களுடன் பதக்கம் பெற்ற பெருமுத்துச்சரம், முப்புரிநூலென மடித்த துண்டு, உதரபந்தம், முத்துக்கள் பதித்த அரைக்கச்சும் முத்துச்சரமும் இருத்தும் பட்டாடை, இடைக்கட்டு, தாள்செறிகள் என எழிலுடன் விளங்கும் அவரது இட முன் கை ஏந்தலாக உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள வேறெந்தக் கோயிலிலும் இத்தகு இளமுறுவலுடன் அழகின் சிகரமாய் நான்முகனைக் காண இயலாது.

அவருக்கு இணையான எழிலராய் அருள்பொலியும் முகத்துடன் இடப்புறமுள்ள விஷ்ணு கிரீடமகுடம், மகரகுண்டலங்கள், கம்பிவடமாய்ப் பதக்கம் பெற்றுப் பொலியும் இருமாலைகள், தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான பட்டாடை பெற்றுள்ளார். அவரது வல முன் கை கடகத்திலமைய, இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது. பின்கைகளில் இடப்புறம் சங்கும் வலப்புறம் எறிநிலைச் சக்கரமும்.

நான்முகன்

வடகோட்டத்தில் இளமை ததும்பும் எழிலராய் உயரமான தாமரைத்தளத்தில் சமபாதத்திலுள்ள நான்முகனின் இடையில் கற்கள் பதித்த அரைக்கச்சும் இடைக்கட்டும் இருத்தும் நடுத் தொங்கலுடனான பட்டாடை. நீள்சடைமகுடம், பூட்டுக்குண்டலங்கள், சரப்பளி, தொங்கல்களுடனான பதக்கமாலை, முப்புரிநூலென மடித்த துண்டு, கற்கள் பதித்த உதரபந்தம், தோள், கை வளைகள், மோதிரங்கள் விளங்கும் அவரது பின்கைகளில் சிதைந்த அக்கமாலை, குண்டிகை. வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கை கடியவலம்பிதத்தில். இடப்புற இடுப்பருகே ஆடையின் முந்தானை. தலைக்கு மேல் எளிய குடை. இருபுறத் தும் கவரிகள்.

நான்முகனின் இருபுறத்தும் நான்முகன் போலவே இளமைப் பொலிவுடன் கருடாசனத்திலுள்ள முனிவர்கள் சடைமகுடம், நீளவளர்த்த செவிகள், முப்புரிநூலென மடித்த துண்டு, சரப்பளி, தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடை கொண்டு நான்முகனுக்காய் ஒருக்கணித்துள்ளனர். அவர்தம் இரு தோள்களிலும் சடைப்புரிகள் நெகிழ்ந்துள்ளன. வலப்புறமுள்ளவர் வலமுழங்கால் தரையில்பட இடமுழங்காலைச் சற்றே உயர்த் தியுள்ளார். தொடைமேலுள்ள இடக்கை ஏந்தலாக, வலக்கையில் மலர். இடப்புறமுள்ளவர் இடமுழங்காலைத் தரையிலிருத்தி, வல முழங்காலை உயர்த்தியுள்ளார். வலக்கை போற்ற, ஏந்தலாக உள்ள இடக்கை சிதைந்துள்ளது.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.