http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 166

இதழ் 166
[ ஜூலை 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

நெடுங்களநாதர் கோயில் -2
நெடுங்களநாதர் கோயில் கல்வெட்டுகள் - 3
திருச்சென்னம்பூண்டி - மருத்துவச் சிற்பம்
வடகுரங்காடுதுறை
மன்னார்கோயில் குறுஞ்சிற்பம்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 19 (எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 18 (கனவிலேனும் வாராயோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 17 (கடவுளும் காணா அதிசயம்)
இதழ் எண். 166 > கலையும் ஆய்வும்
நெடுங்களநாதர் கோயில் கல்வெட்டுகள் - 3
இரா.கலைக்கோவன், மு.நளினி

விளக்குக் கொடைகள்

கோளம்பன் ஆச்சன் இக்கோயிலில் நந்தாவிளக்கொன்று ஏற்றக் கோயிலுடையாரான ஸ்தானபதிகள் அறுவரிடம் 12 கழஞ் சுப் பொன்னளித்தார். கீர்த்திஆயிரவன் நாளும் ஆழாக்கு நெய் யால் பகல் நந்தாவிளக்கேற்ற அளித்த 45 ஆடுகள் மன்றாடிகளி டம் பகிர்ந்தளிக்கப்பட்டு நெய் பெறப்பட்டது. அவ்விளக்கை ஏற்ற ஆயிரவன் தராநிலை விளக்கொன்றும் அளித்தார்.

இக்கோயிலில் நந்தாவிளக்கேற்ற விழைந்த புதுவூர் அரை யன் சிவந்தகால்அழகியானுக்கு நந்தாவிளக்குப்புறமாகக் கோயி லார் இறையிலி திருநாமத்துக்காணி மாங்கானமான நித்தமண வாளநல்லூரில் வயக்கல் நிலம் இரண்டரை மாவும் காடன் வயக் கலில் மாகாணியுமாக 3மா 3காணி நிலத்தை அன்றாடுநற்காசு 4,000க்கு விற்றனர். இத்தொகை அக்காலத்தே வழக்கிலிருந்த இரு பதேகால் பணத்திற்கு இணையாக அமைந்தது. இந்நிலத்திற்கான மாக்கலக் கடமை இறுக்கும் பொறுப்பைக் கோயிலார் ஏற்றனர். இதற்கென அமைந்த ஆவணத்தில் கோயில்கணக்குப் பெரும்புலி யூருடையானும் மாடாபத்தியம் இடர்களைவானான அற்புதக் காலாண்டானும் ஸ்ரீமாகேசுவரக்கண்காணி சண்டேசுவரநம்பியும் கண்காணித் திருஞானசம்பந்தரும் கையெழுத்திட்டனர்.

கோயில் சித்திரைத் திருவிழாவில் 12 நாழி நெய்யால் விளக்கேற்ற மன்றாடியர் நட்டன்காரி 10 ஆடுகளும் மாறன் வலியன் 2 ஆடுகளும் கோயிலாரிடம் அளிக்க, அவர்கள் விளக்கேற்றும் பொறுப்பேற்றனர். முதலாம் ஆதித்தர் காலத்தில் பாண்டிய மன்னர் வரகுணர் கோயிலில் விளக்கேற்றத் தந்த 60 பழங்காசுக்கு சபை இறையிலியாக நிலமளித்தது. சூரலூர்க் கிழவர் கம்பன்மணியனான விக்கிரமசிங்க மூவேந்தவேளார் இக்கோயிலில் இரண்டு நந்தாவிளக்குகளேற்ற 180 ஆடுகள் வழங்கினார். அவற்றுள் 90 ஆடுகளைப் பராமரிக்கும் பொறுப்பேற்ற நிச்சல்காரி, காடன்சேனன், மாணி, சூரன்கஸியன் ஆகிய இடையர்ப்பெருமக்கள் தலைக்குக் கால் விளக்கிற்கான நெய் அட்டுவதாக உறுதியளித்தனர்.

நாகன்குடியைச் சேர்ந்த நாகக்குடான் இக்கோயிலில் சூல உழக்கால் நாளும் உரி நெய் கொண்டு நந்தாவிளக்கேற்றக் கொடையளித்தார். இவ்விளக்கு ஞாயிறு மறைந்ததும் ஏற்றப்பட்டு ஞாயிறு எழும்வரை ஒளிரவேண்டும் என்பது அவர் வேண்டு கோள்.62 இராஜகேசரிவர்மரின் 7ஆம் ஆட்சியாண்டின்போது இக் கோயிலில் நந்தாவிளக்கேற்ற ஒருவர் கொடையளித்துள்ளார்.

துண்டுக் கல்வெட்டொன்று விளக்கிற்கு அளிக்கப்பட்ட கொடை சுட்ட, புதிதாகக் கண்டறியப்பட்ட முதலாம் ஆதித்த ரின் 27ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இக்கோயிலில் நந்தா விளக்கேற்ற வடுகன் வடுகி பொற்கொடையளித்த தகவலைத் தருகிறது. முதல் பராந்தகர் ஆட்சிக்காலத்தில் குழித்தண்டலை முருகன் அளித்த 45 ஆடுகளை ஏற்ற அட்டுப்பள்ளி நியமத்துக் கள்வன் விளங்கண், நாளும் ஆழாக்கு நெய் கொண்டு பகல்விளக்கேற்ற ஒப்பினார். மலைநாட்டுக் கொடுங்கோளூர் குமரன் ஸ்ரீகண்டன் இக்கோயிலில் நந்தாவிளக்கேற்ற நெடுங்களம் சபையாரிடம் நிலம் விலைக்குப்பெற்றுக் கோயிலுக்களித்தார். இந்நிலத்தின் எல்லைகளாக அம்பலச்செய்யும் குளமும் சுட்டப்பட்டுள்ளன. செம்பியன் வடபுறையூர்நாட்டு மூவேந்த வேளார் இக்கோயிலில் ஸ்ரீகாரியமாக இருந்தபோது வானவன்பேரையனும் தாங்கி இருள்நீக்கியும் தலைக்கு 45 ஆடுகள் தந்து இக்கோயிலில் விளக்கேற்றினர். இவ்வாடுகள் கல்வெட்டில் சவாமூவாப் பல்லாடுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.

இக்கோயிலில் இரு நந்தாவிளக்குகள் ஏற்றப் பாடிக்கல்லால் 120 கழஞ்சுப் பொன் அளிக்கப்பட்டது. பொன் பெற்ற நெடுங்கள சபையாரும் ஊராரும் கிளிமதிமங்கலத்து சபையாரும் விளக் கேற்றவும் அதற்குரிய நூல்திரி இடவும் பொறுப்பேற்றதுடன், கொடைமுதலில் இடையூறு ஏற்படினும் நாளும் நாராயநாழியால் இரண்டு நாழி நெல் கொண்டு விளக்கேற்றுவதாக உறுதி யளித்தனர்.

சிறப்புச் செய்திகள்

வளம்பக்குடியைச் சேர்ந்த தில்லைத் திருநட்டப் பெருமாளான விசயாலய முத்தரையரின் நலத்திற்காக நெடுங்களம் திருக்கோயில் முதல் சுற்றில் உலகநாதீசுவரமுடையார் எனும் பெயரில் லிங்கத்திருமேனியொன்றை எழுந்தருளச்செய்ய விழைந்த அவர் மகன் ஆளுடையபிள்ளையார் அடியார்கள் இடர்களைவானான அனபாய முத்தரையர், உலகாண்டாரான முத்தரையருக்குச் சொல்லிச் சோழப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்கர் ஊற்றத்தூரில் ராசராசன் மண்டபத்தில் வீற்றிருந்தபோது அவர் இசைவு பெற்றுத் தம் விழைவை நிறைவேற்றினார். இவ்விறைத்திருமேனிக்கான பூசைக்கு உடலாகத் தியாகவல்லிச் சதுர்வேதிமங்கலத்து சபையாரிடம் குடிநீங்காத் தேவதானமாக நிலம் விலைக்குப் பெற்ற அனபாயன், அதை இறையிலியாக்கி, நிலத்தின் அனைத்து ஆயங்களும் வாசிகளும் துண்டங்களும் உட்பட வேலிக்கு 30 கலம் நெல் நித்தமணவாள மரக்காலால் கோயில் பண்டாரத்தில் இறுக்கும்படிச் செய்தார்.

இறைமிகுதி கொண்டு தம் வழிபாட்டிடத்தில் (தேவாரம்) பூசை நிகழவும் வழிசெய்தார். உலகநாதீசுவரமுடையாரைப் பூசிக்க ஆடையணி நிவந்தமாக உழுதிறுக்குடி நிலம் தரப்பட்டது. கோயில் சிவபிராமணர்கள், வம்பான்றாள் அம்மை, அல்லியங் கோதை நாச்சியார், பெரியநாச்சியார், இடர்களைவான், பெருமாள், தேவர்கள் தம்பிராட்டியார், திருமஞ்சனமழகியாள், வீதிவிடங்கப் பெருமாள் உள்ளிட்ட கோயில் அலுவலர்கள் அனைவருக்கும் நிலம் ஒதுக்கப்பட்டது. கல்வெட்டு முற்றுப் பெறாமையால் பிறதரவுகளை அறியக்கூடவில்லை.

முதலாம் ராஜராஜர் ஆட்சிக்காலத்தே சூரலூர்க் கிழவர் கம்பன்மணியனான விக்கிரமசிங்க மூவேந்தவேளார் கோயில் திருப்பலியின்போது எழுந்தருளும் கொள்கைத்தேவருக்கு 6 கழஞ்சுப் பொன்னில் அணிகலன் செய்தளித்ததோடு, செம்புமூக்கு மத்தளிகையும் வழங்கினார். இக்கோயில் சோமாஸ்கந்தர் திருமுன் உத்திரத்தில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு, மூன்றாம் குலோத்துங்கர் காலத்தில் கள்ளிக்குடி அரையன் மகன் ஆதித்தன் உலகனான விசையாலய முத்தரையன் திருமண்டபம் செய்வித்த தகவலைத் தருகிறது.

பொ. கா. 1464இல் அரசர் வல்லாளதேவர் இக்கோயிலில் நாயகத் திருஅரங்கும் மண்டபமும் அமைத்ததோடு, களந்தைநாயகர் அமுது செய்ய தன்மம் எனும் நிலத்தையும் மேலைத்தெருவில் மூன்று கோலளவு மனை ஒன்றையும் திருநாமத்துக்காணியாக அளித்தார். குருவிக்குப் பரிவழங்கிய வீரப்பநாயக்கச் சாமந்தர் மகன் பெரிய எதிராலா சாமந்தர் தம் அன்னை தயலாத்தாள் கொடையாக இறைவனுக்கு நாளும் நாழிப்பிரசாதம் பலியாக அளித்து அதைக் காகங்களுக்கு உணவாகஇட அறக்கட்டளை அமைத்து 18 பணம் தந்தார்.

இக்கோயில் சுற்றுமாளிகையின் மேற்கிலும் வடக்கிலும் உள்ள சில தூண்களை அளித்தவர்களாக மாத்தூர் மடந்தை பாகன் குருகுலராயன், நுணாங்குறிச்சிச் சுருதிமான் அணைஞ்சா ஆனைவிடப்பாடி மாறினான், கீரனூர் வாசிதேவன் காலிங்கராயன், செங்கனிவாயன் ஆகியோர் அறிமுகமாகின்றனர்.

இவ்வளாகப் பலித்தளத்தின் முன் புதையுண்டிருந்த பலகைக் கல்வெட்டு, ஸ்ரீபுறக்குடிப்பள்ளிச் சேந்தன் குழுவினர் காவலிருந்த தகவலைத் தருகிறது. எழுத்தமைதி கொண்டு இக்கல்வெட்டை 9 அல்லது 10ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளலாம். கல்வெட்டுப் பகுதிக்கு மேல் 2 வீச்சரிவாள்கள், குத்துவிளக்குகள், துரட்டி ஆகியன செதுக்கப்பட்டுள்ளன. ‘இது காத்தார் அடி என் தலை மேலன’ என்று கூறும் மரபிலிருந்து மாறுபட்டு, இக்கல்வெட்டில், ‘காத்தார் அடி மேல் என் கையும் தலையும்’ எனக் கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. ஸ்ரீபுறக்குடிப்பள்ளியுடன் தொடர்புடைய வணிகக்குழுவினருக்கான காவலாட்களின் கல்வெட்டாக இதைக் கொள்ளலாம்.

கோயிலின் உள்சுற்று நடையில் கண்டறியப்பட்ட முதலாம் ஆதித்தர் காலக் கல்வெட்டு, இப்பகுதியில் விளங்கிய வீரதொங்கபுரத்து இறைவனுக்குத் தோடன்காடன் 2 காளம், மத்தளிகை, மூக்குமத்தளிகை, பரிகலம், சட்டுவம் தந்த தகவலைத் தருகிறது.

முதலாம் ராஜேந்திரரின் புதிதாகக் கண்டறியப்பட்ட மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, பரதன் கண்டனான உத்தமசோழன் கவிரநாட்டு மூவேந்தவேளார் இக்கோயில் இறைவனுக்கு அர்த்தயாம வழிபாட்டிற்கும் படையலுக்குமாய்ப் பண்படுத்தித் திருத்திய 2 நிலத்துண்டுகளை வழங்கியதாகக் கூறுகிறது. இந்நிலங்களை உழுத, அடியான் சூற்றிக்கூத்தனும் பிராந்தகன் பிடவூரும் முறையே 40, 60 கலம் நெல்லைக் குடிநீக்காத் தேவதானமாகக் கோயிலுக்களித்து அறக்கட்டளையை நிறைவேற்றினர். அந்நிலத்துண்டுகளுள் ஒன்று இறைவன் தேவதானமாக விளங்கிய முழுக்குடிப்பாலையில் இருந்தது. அரையன் மயக்கல் என்று பெயரிடப்பட்டிருந்த அதன் எல்லைகளாக மாங்கானலுக்குப் போன பெருவழி, கண்ணபிரான் வயக்கல், கிளியூர் நாகன் உழுத ஓடைநிலம், தென்வாய் வாய்க்கால் ஆகியன அமைந்தன. மற்றொரு நிலத்துண்டும் இறைவன் தேவதானமான கிள்ளிவயல் தென்கண்டத்தில் விளங்கியது. அதன் எல்லைகளாக கணவதி வயக்கல், வடக்குநோக்கிப்போன பெருவழி, கிள்ளிவயல் கடைபோக்கு, பரதன் வயக்கல், குடிதாங்கி வயக்கல் ஆகியன அமைந்தன.

ஹொய்சள அரசரான வீரசோமீசுவரர் தம் 20ஆம் ஆட்சியாண்டில் நெடுங்கள இறைவனின் தேவதான - திருநாமத்துக்காணி நிலங்கள், அரசர் குடிக்காட்டுப் பேறான ஊர்கள், மானவாரி பூமி ஆகியவற்றிலிருந்து அரசுவரியாக வந்த கடமையை ஒன்று பாதி மட்டும் கொள்வதாகவும் மற்றது பூசை, திருப்பணி குறைவுபடாமல் நிகழக் கோயில் பெறுவதாகவும் ஆணையிட்டுக் கையொப்பமிட்டதாகப் புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டுப் பகிர்ந்துகொள்கிறது.

இரண்டு துண்டுகளாய்க் கிடைத்துள்ள சோழர் காலக் கல்வெட்டு அக்காலத்தே இக்கோயில் ஸ்ரீகாரியமாகச் சோழ மாராயர் இருந்தமை கூறுவதுடன், மன்னரின் 11ஆம் ஆட்சியாண்டில் கோயிலாரிடம் கொடையாளி ஒருவர் அளித்த 10 கழஞ்சுப் பொன் கொண்டு இறைவனுக்குப் பட்டம் 2ம், பொற்பூக்கள் 3ம் செய்தளிக்கப்பட்டமை தெரிவிக்கிறது.

ஏனத்தன்குடி சாத்தன் சேரன் 2 கழஞ்சு அளித்த தகவலைத் தரும் கல்வெட்டு, ‘இது மாங்கானலன் கடவது’ என்கிறது. தூணொன்றின் உடைந்த பகுதியாகக் கிடைத்த புதிய கல்வெட்டு மாசி, சித்திரை விழாக்களில் இக்கோயிலில் புவனசுந்தரி கல்லியாணம், திருநெடுங்களபுராணமான வினைய பராக்கிரமம் எனும் கூத்துகள் உள்ளிட்டு 5 கூத்துகள் ஆடப்பட்டதாகவும் ஆடியவருக்கு 90 கலம் நெல் அளிக்கப்பட்டதாகவும் கூறுகிறது.

இக்கோயில் கல்வெட்டுகளின் வழி இப்பகுதியிலிருந்த பெருவழிகளும் (கண்ணங்குடிப் பெருவழி, மதிரைப்பெருவழி, வடக்குநோக்கிப்போன பெருவழி, மாங்கானலுக்குப் போன பெருவழி, மேலைப்பெருவழி) நெடுங்களத்தின் சுற்றுப்புறத்தே விளங்கிச் சுவடழிந்த கோயில்களும்81 (திருநாராயண சதுர்வேதிமங்கலத்துக் கயிலாயநாதர், வீரதொங்கபுரத்து மகாதேவர், ஸ்ரீபுறக்குடிப்பள்ளிச் சமணர்கோயில்) வரலாற்று வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஓரிரு கல்வெட்டுகள் நெடுங்களத்திலிருந்த வீதிகளையும் (திருநட்டப்பெருமாள் திருவீதி, மேலைத்தெரு), மனைகளின் அளவுகளையும் தருவதோடு, நெடுங்களம் கோயிலில் பணியாற்றிய தேவரடியார்களையும் அறிமுகப்படுத்துகின்றன.

காலம்

சம்பந்தரின் பதிகத்தோடு பொ. கா. ஆறாம் நூற்றாண்டில் வாழ்க்கையைத் தொடங்கும் நெடுங்களநாதர் கோயில் பல்லவர், சமகாலப் பாண்டியர், முற்சோழர் காலத்தில் செழிக்க வளர்ந்தாற் போலவே, பிற்சோழர் பிற்பாண்டியர், விஜயநரத்தார், நாயக்கர் காலத்தும் அருளாளர்களால் புரக்கப்பட்டு வளமாகவே திகழ்ந் துள்ளமையை இவ்வளாகத்துக் கல்வெட்டுகள் இன்முகத்தோடு எடுத்தோதுகின்றன. அவற்றுள் பாண்டியர், முற்சோழர் கல் வெட்டுகள் சுற்றின் கூரைக்கும் மண்டபச் சுவர்களுக்குமாய்ச் சிதறியுள்ளமையும் பெரும்பாலான சோழர் கல்வெட்டுகளைப் பிள்ளையார் கோயிலும் கொண்டுள்ளமையை நோக்க, திருப் பணிக் கைகளால் இக்கோயிலின் முந்து வடிவம் முற்றிலுமாய் மாற்றத்திற்குள்ளானமை தெளிவாகும். இப்போதுள்ள இறை விமானமும் முகமண்டபமும் பிற்பாண்டியர் கலைக்கூறுகளைக் கொண்டுள்ளன. வளாகத்துள்ள சில மண்டபங்கள் பிற்சோழர், விஜயநகரத்தார் காலத்தனவாகக் கல்வெட்டுகளுடன் கண்சிமிட்டு கின்றன. தொடர்ந்த திருப்பணிகள் இவ்வளாகத்தைப் பெருக்கி னாற் போலவே இதன் பழைமையை மாற்றியுமுள்ளன. எனினும், ஆறாம் நூற்றாண்டிலிருந்து நெடுக வாழ்ந்திருக்கும் நெடுங்கள நாதரின் வரலாற்றைத் தப்பிப் பிழைத்திருக்கும் இவ்வளாகக் கல்வெட்டுகளில் தொடர்ச்சியாகக் காணமுடிவது பெரும்பேறே.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.