http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 166

இதழ் 166
[ ஜூலை 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

நெடுங்களநாதர் கோயில் -2
நெடுங்களநாதர் கோயில் கல்வெட்டுகள் - 3
திருச்சென்னம்பூண்டி - மருத்துவச் சிற்பம்
வடகுரங்காடுதுறை
மன்னார்கோயில் குறுஞ்சிற்பம்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 19 (எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 18 (கனவிலேனும் வாராயோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 17 (கடவுளும் காணா அதிசயம்)
இதழ் எண். 166 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 17 (கடவுளும் காணா அதிசயம்)
ச. கமலக்கண்ணன்

பாடல் 17: கடவுளும் காணா அதிசயம்

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்
ちはやぶる
神代もきかず
竜田川
からくれなゐに
水くくるとは

கனா எழுத்துருக்களில்
ちはやぶる
かみよもきかず
たつたがは
からくれなゐに
みづくくるとは

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் நரிஹிரா

காலம்: கி.பி. 825-880.

இத்தொடரின் 16வது செய்யுளான "நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்"ஐ இயற்றிய ஆளுநர் யுக்கிஹிராவின் இளவலும் 9வது செய்யுளான "இணையற்ற அழகும் நிலையற்றதே"வை இயற்றிய புலவர் கொமாச்சி ஓனோவின் காதலர்களுள் ஒருவரும்தான் இச்செய்யுளின் ஆசிரியர் நரிஹிரா. கொமாச்சி ஓனோவைப் போலவே இவரும் காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலிலும் புலவர் ட்சுராயுக்கி தலைமையில் தொகுக்கப்பட்ட ஜப்பானின் ஆறு பழம்புலவர்களின் பட்டியலிலும் இடம்பெற்று இருப்பவர். ஜப்பானிய இலக்கியத்தில் இவரது பங்களிப்பாக மொத்தம் 87 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவரது பெரும்பாலான பாடல்கள் சிலேடையாகவும் நுட்பமான பொருள் கொண்டதாகவும் இருப்பதால் உரையாசிரியர் குறிப்புகள் சற்று நீளமாக அமைந்துள்ளன. பழைய ஜப்பானின் Don Juan என அழைக்கப்பட்ட இவர் ஆணழகனாகத் திகழ்ந்தார்.

ஆணழகனாக இருந்ததாலேயே பல பெண்களைக் கவர்ந்திருக்கலாம். அதில் குறிப்பிடத்தக்கது பேரரசர் செய்வாவின் பட்டத்தரசி தக்காகோவுடனான காதல். இதனாலேயே ஐந்தாம்நிலை அதிகாரியாக இருந்தவர் ஆறாம்நிலை அதிகாரியாகப் பதவியிறக்கம் செய்யப்பட்டுக் கிழக்கு ஜப்பானுக்குத் துரத்தப்பட்டார் என நம்பப்படுகிறது. இவரது காதல்களை ஆவணப்படுத்தியிருக்கும் "இசேவின் கதைகள்" புதினம், இத்தொடரின் 13வது செய்யுளை இயற்றிய பேரரசர் யோசெய் (பேரரசர் செய்வாவின் மகன்) இவருக்கும் தக்காகோவுக்கும் பிறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறது.

இசேவின் கதைகள், யமாதோவின் கதைகள், கொக்கின்ஷு ஆகிய நூல்கள் இவர் கிழக்கு ஜப்பானுக்கு இரண்டு உதவியாளர்களுடன் இடம்பெயர்ந்ததைக் குறிப்பிட்டுள்ளன. ஆனால் இரண்டு காரணங்களுக்காக இவ்விடப்பெயர்வு சந்தேகத்துக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. தலைநகர் கியோத்தோவிலிருந்து கிழக்கு நோக்கி இன்றைய தோக்கியோ வரை பயணப்பட்டதில் வழியிலுள்ள முக்கியமான இடங்களில் ஒவ்வொரு பாடலைப் புனைந்தார் என இசேவின் கதைகள் குறிப்பிடுகிறது. ஆனால் பாடல்களின் எண்ணிக்கையும் முக்கியமான இடங்களின் எண்ணிக்கையும் பொருந்தவில்லை. இது முதல் காரணம். மேலும், அரச குடும்பத்தில் பிறந்து உயர் பதவியில் இருக்கும் ஒருவர் வெறும் இரண்டே இரண்டு உதவியாளர்களை மட்டுமே அழைத்துக்கொண்டு அவ்வளவு தூரம் பயணம் செய்வார் என்பதும் பொருத்தமாக இல்லை.

இவரது கல்லறை எங்குள்ளது என்பதில் இன்றளவும் குழப்பமே நிலவுகிறது. இவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் இவர் புத்தரின் அவதாரமாகவே கருதப்பட்டதால் புதைக்கப்பட்ட இடம் நிச்சயம் புனிதமாகக் கருதப்படும் இடமாகத்தான் இருக்கும் என ஊகிக்கப்படுகிறது. 業平塚 - Narihira-zuka என்றோர் இடம் கிழக்குக் கியோத்தோவில் உள்ளது. 十輪寺 - Jūrin-ji என்றோர் இடம் மேற்குக் கியோத்தோவில் உள்ளது. இவ்விரண்டு இடங்களில் ஜூரின்ஜியே இவரது நினைவிடமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஏனெனில், இவருக்குப் பிறந்ததாகக் கருதப்படும் பேரரசர் யோசெய்யின் கல்லறையும் இங்குதான் உள்ளது.

பாடுபொருள்: தட்சுதா ஆற்றின் அழகு

பாடலின் பொருள்: சிவப்புநிற மேப்பிள் இலைகளால் பவளப்படுக்கை போல் காணப்படும் தட்சுதா ஆறு புராண காலங்களிலும் காணப்படாத அதிசயம்.

இன்றைய நரா மாகாணத்தில் இகாருகா எனும் நகரில் உள்ள தட்சுதா மலையின் அடிவாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தட்சுதா ஆற்றின் கரையில் இருக்கும் மேப்பிள் மரங்கள் இலையுதிர் காலத்தில் அடர்சிவப்பு நிற இலைகளைக் கொண்டிருக்கும். அவை காற்றில் உதிர்ந்து நீரின் மேற்பரப்பில் மிதந்துகொண்டிருப்பது, செம்பவளக் கற்களைப் பரப்பி வைத்தது போல் இருக்கும். கற்பனைக்கு எட்டாத அதிசயங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படும் புராண காலங்களில்கூட இப்படிப்பட்ட அதிசயத்தைக் கண்டிருக்க முடியாது.

கடைசிவரி இரு பொருள்களைத் தரக்கூடியது. 水くくるとは என்ற சொல்லுக்கு இலைப்பரப்புக்கு அடியில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் இலைகள் நீருக்கு வண்ணம் பூசுகின்றன என்றும் இருவேறு பொருள்கள் தொனிக்கும். இப்பாடல் இயற்றப்பட்ட காலத்தில் வண்ணம் பூசப்பட்ட பொருளே கூறப்பட்டு வந்தது.

கொக்கின்ஷூ தொகுப்பிலும் இடம்பெற்றிருக்கும் இப்பாடலுக்கு உரையாசிரியர்கள் எழுதி வைத்திருக்கும் குறிப்பு இதைத் திரைக்குறிப்புப் பாடல் என்கிறது. திரைச்சீலைகளில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களின் அருகில் அது தொடர்பான கவிதைகள் ஒரு காகிதத்தில் எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். இப்பாடலும் நரிஹிராவால் மேப்பிள் இலைகள் மிதக்கும் நதியின் ஓவியத்துக்கு அருகில் ஒட்டி வைக்கப்பட்டிருந்தது என்கிறார்கள்.

வெண்பா:

எழினிகொள் ஓவியம் அன்ன இலையால்
எழிலுறு நீர்மையின் வண்ணம் - அழியா
இறையும் அறியாச் சிவப்பு அதிசயம்
காட்டும் பவள நதி

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் 24-ஜூலை-2022 அன்று வெளியானது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.