http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 166

இதழ் 166
[ ஜூலை 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

நெடுங்களநாதர் கோயில் -2
நெடுங்களநாதர் கோயில் கல்வெட்டுகள் - 3
திருச்சென்னம்பூண்டி - மருத்துவச் சிற்பம்
வடகுரங்காடுதுறை
மன்னார்கோயில் குறுஞ்சிற்பம்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 19 (எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 18 (கனவிலேனும் வாராயோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 17 (கடவுளும் காணா அதிசயம்)
இதழ் எண். 166 > கலையும் ஆய்வும்
நெடுங்களநாதர் கோயில் -2
இரா.கலைக்கோவன், மு.நளினி

இரண்டாம் கோபுரம்

இருதள இரண்டாம் கோபுரம் சாலைப்பத்தி முன்தள்ளலுடன் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவும் சுவர் கொண்டு எழுகிறது. சுவரின் கிழக்குமுகத்தில் கோபுரவாயிலின் இருபுறத்துமுள்ள ஆழமான செவ்வகக் கோட்டங்களில் வாயிலுக்காய் ஒருக்கணித்த முற்சோழர் காலக் காவலர்கள். சடைமகுடம், சரப்பளி, நிவீதமாய் அணிந்த அலங்கார முப்புரிநூல், உதரபந்தம், சிம்மமுக அரைக்கச்சு இருத்தும் இடைக்கட்டுடனான சிற்றாடை, கீர்த்திமுகத் தோள்வளைகள், கைவளைகள், சலங்கைகள் பெற்றுக் கோரைப் பற்களுடனுள்ள அவர்தம் பனையோலைக் குண்டலங்கள் பறவைக் குண்டலங்களாய் அழகுபடுத்தப்பட்டுள்ளன. தெற்கர் இடக்கையையும் வடக்கர் வலக்கையையும் அருகிலுள்ள பாம்பு தவழும் மரக்கிளை மேல் தாங்கலாக்கியுள்ளனர். தெற்கரின் இடக்கை வியப்பில். புன்னகைக்கும் வடக்கரின் இடக்கை அச்சுறுத்துகிறது. இருவருக்குமே அடர்த்தியான சடைக்கற்றைகள் தோள்களில் நெகிழ்ந்து படர்கின்றன. வடக்கரின் சரப்பளி அழகிய தொங்கல்களுடன் வளையமிட, தெற்கரின் கைகளில் முத்துவளைகள்.







தூண்களின் மேலுள்ள தரங்க வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகளில் வலபி தாமரையிதழ் கொள்ள, மேலே கூடுவளைவுகளுடன் கபோதம், பூமிதேசம், வேதிகை. மூலைகளில் கர்ணகூடங்களும் நடுவில் முன்தள்ளிய சாலையும் இடையில் பஞ்சரங்களும் பெற்றுள்ள ஆறங்கஆரம் சுதையுருவங்களுடன் பொலிகிறது. சாலையின் சுவர்க்கோட்டத்தில் லிங்கத் திருமேனியும் அதை வழிபடுபவரும் அமைய, இருபுறச் சுவர்களில் பிள்ளையார், முருகன், அடுத்துப் பக்கத்திற்கொருவராகக் காவலர்.

இரண்டாம் தளம் உயரக்குறுக்கமாகத் திருப்பங்களில் நான்முக அரைத்தூண்கள் தழுவும் சுவருடன் கூரையுறுப்புகளில் வலபி மதலை கொள்ள, கபோதத்துடன் முடிகிறது. மேலே வேதி கையில் நான்கு மூலைகளிலும் நந்திகளுக்கு இடைப்பட்டு சங்கூதும் பூதங்கள். நான்முக அரைத்தூண்கள் தழுவும் கிரீவசுவரின் பெருநாசிகளில் வடக்கில் நான்முகன், தெற்கில் ஆலமர்அண்ணல், கிழக்கு, மேற்கு நாசிகைகள் சாளரமாய் அமைந்து இருபுறத்தும் காவலர்கள் பெற்றுள்ளன. கிழக்கில் காவலர்களை அடுத்துத் தெற்கில் பிள்ளையார், வடக்கில் முருகன். மேற்கில் விஷ்ணுவும் கண்ணனும். கோபுரத்தின் வடக்கு உட்சுவரில் காகத்திற்கு உணவிடுவது தொடர்பான கல்வெட்டும் விஜயநகர அரசர் தேவராயரின் நிறைவடையாக் கல்வெட்டும் இடம்பெற்றுள்ளன. 10

உள்சுற்று மண்டபம்

கதிரவனும் சந்திரனும்

இரண்டாம் கோபுரவாயில் வழி நுழைவாரைச் செவ்வக மண்டபமென விரியும் உள்சுற்றின் முதற்பகுதி வரவேற்கிறது. வாயிலின் தென்புறம் பிற்சோழர் காலக் கதிரவனும் வடபுறம் பின்னாளைய சந்திரனும் சமபாதத்தில் மேற்குப்பார்வையிலுள்ளனர். இருவருமே ஒளிவட்டம் சூழ்க் கரண்டமகுடம், தோள், கை வளைகள், உதரபந்தம், தாள்செறிகள் பெற்றிருப்பினும் சந்திரனின் செவிகளில் மகரகுண்டலங்கள். அரும்புச்சரம், தோள்மாலையுடன் கைகளில் மலர்மொட்டுகள் கொண்டிருக்கும் அவரது இடையில் இடைக்கட்டுடன் பட்டாடை. இதழ்களில் இளகிய புன்னகையுடன் பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ள சூரியனின் கைகளில் தாமரைகள்.



மண்டபத்தூண்கள்

மண்டபக் கூரையை முச்சதுர இருகட்டுத் தூண்களும் உருளைத்தூண்களும் தரங்க வெட்டுப் போதிகைகள் கொண்டு தாங்குகின்றன. ஓரிரு தூண்கள் மேல் பூமொட்டுப் போதிகைகள். சில தூண்களின் கட்டுப்பகுதிகள் நீண்டுள்ளன. பொதுவாகவே அனைத்துக் கட்டுப்பகுதிகளும் இரண்டல்லது மூன்று இடைப்பட்டைகள் கொண்டுள்ளன. போதிகைகள் மேல் கூரையுறுப்புகளமைய, மேலே கற்பலகைகள்.

முதல் வகைத் தூண்களின் சதுரங்கள் சிலவற்றில் சிற்பங்கள். இடுப்பிற்குக் கீழ்ச் சிதைந்துள்ள இளம்பெண் ஒருவர் இடக்கையைத் தொடையிலிருத்தி வலக்கையில் மலருடன் ஒரு சதுரத்தில் காட்சிதர, மற்றொன்றில் ஆடற்காட்சி. வலக்கை பதாகமாக, இடக்கையை அர்த்தரேசிதமாக்கி, பனையோலைக் குண்டலங்கள், கழுத்தணி, இடைச்சிற்றாடையுடன் மண்டலப் பார்சுவத்திலுள்ள ஆடலரசிக்கு அருகிலுள்ள ஆடவர் உடுக்கையில் தாளம் தருகிறார். மற்றொரு சதுரத்தில் எதிர்ப்பார்வையிலுள்ள இரண்டு தாவுயாளிகள் கருக்கணிகள் உமிழ, வேறொரு சதுரம் பெண்ணொருவரைக் கருக்கணிக் காரிகையாகக் காட்சிப்படுத்துகிறது.





பனையோலைக் குண்டலங்களுடன் வலக்கையை மடியிலிருத்தி, இடக்கையில் தாமரையுடன் அழகே உருவாய் அமர்ந்துள்ள அவரைப் பிறையெனச் சூழ்கிறது கருக்கணி. இன்னொரு சதுரத்திலும் ஆடற்காட்சி. வலக்கையைப் பதாகமாக்கி, இடக்கையை அர்த்தரேசிதத்தில் ஓச்சியுள்ள ஆடலரசியின் இடமுழங்கால் மார்பளவு உயர்ந்து அவரது கரணத்தைத் தண்டபட்சமாக அடையாளப்படுத்துகிறது.11 பனையோலைக் குண்டலங்களும் பெருங்கொண்டையும் இடைச்சிற்றாடையும் பெற்றுள்ள அவரது வலப்புறமுள்ள கருவிக்கலைஞர் தோளிலிருந்து தொங்கும் இடக்கைக் கருவியை முழக்கி ஆடலுக்குத் தாளம் தருகிறார். மற்றொரு தூண் சதுரத்திலுள்ள ஆடவர் அத்தூணை அளித்தவராகவோ, மண்டபத் திருப்பணிக்கு உதவிய பேராளராகவோ இருக்கலாம்.

பைரவர் திருமுன்

மண்டபத்தின் வடகிழக்கிலுள்ள பைரவர் திருமுன் கபோதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி கொண்டெழுகிறது. அதன் சுவரைப் பாதம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் தழுவ, அவற்றின் பாதவிளிம்புகளில் பாம்புப்படங்கள். தூண்களின் மேலுள்ள தரங்க வெட்டுப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, கபோதம் கூடுவளைவுகளுடன் மிளிர்கிறது. கருவறையில் தளத்தின்மீது சமபாதத்தில் பைரவர். சுடர்முடி, மகர, பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், மண்டையோட்டு மாலை, இடுப்பைச் சுற்றி முறுக்கிய நிலையில் படமெடுத்த பாம்பு, கழல்கள் பெற்று ஆடையற்றவராய்க் காட்சிதரும் அவரது பின் கைகளில் தமருகம், பாசம். வல முன் கை முத்தலைஈட்டி கொள்ள, இட முன் கையில் தலையோடு கொண்டுள்ள பைரவரின் பின் அவரது ஊர்தியான நாய். பைரவர் திருமுன்னையடுத்து நீளும் மேடையில் பேரளவிலான சந்தனம் அரைக்கும் கல்.



சேத்ரபாலர்

மேடையின் வடகோடியில் சிராப்பள்ளி மாவட்டக் கோயில்களில் வேறெங்கும் காணப்பெறாச் சிறப்புத் திருமேனியராகச் சோழர் கைவண்ணமாய் சேத்ரபாலர்.12 சடைப்பாரம் போல் விரிந்துள்ள சுடர்முடியுடன் ஆடையற்றவராய்ச் சமபாதத்திலுள்ள அவரது கால்களைச் சுற்றியுள்ள பாம்புகள் கணுக்காலருகே படமெடுத்துள்ளன. அவரது குண்டலங்களாகவும் தோள் வளைகளாகவும் பாம்புகளே சூழ்ந்துள்ளன. இடப் பின் கையிலும் படமெடுத்த பாம்பு. சரப்பளி, முப்புரிநூல், மண்டையோட்டு மாலை பெற்றுள்ள அவரது வலக்கைகளில் முத்தலைஈட்டி, தமருகம். இட முன் கை தலையோடேந்தப் பாம்பு பாலராய்க் காட்சியளிக்கும் அவரது முகத்தில் இளமை பொலிகிறது.

மண்டபத்தின் வடமேற்கு, தென்கிழக்குப் பகுதிகள்

சேத்ரபாலரையடுத்து நீளும் மண்டபத்தின் வடமேற்குப் பகுதியில் இரு அறைகளும் சுற்றின் வெளிப்பகுதிக்கான வடக்கு வாயிலும் உள்ளன. மண்டபத்தின் தென்கிழக்கில் மடைப்பள்ளி அமைய, அதன் வாயிலையடுத்துள்ள தெற்கு மேடையில் நால்வருடன் சேக்கிழார். சரப்பளி, தோள், கை வளைகளுடன் நின்ற கோலத்திலுள்ள நால்வரில் சம்பந்தரும் சுந்தரரும் குதம்பை, தோள்மாலை கொள்ள, அப்பரும் மாணிக்கவாசகரும் பனையோலைக் குண்டலங்கள் பெற்றுள்ளனர். சம்பந்தர் செண்டுதாளங்களுடன் நிற்க, கைகளைக் கூப்பியுள்ள அப்பரின் வலத் தோளில் உழவாரப்படை. கைகளைக் கூப்பியுள்ள சுந்தரரின் இடையில் பட்டாடை. அக்கமாலையுடனுள்ள வலக்கையில் காக்கும் குறிப்புக் காட்டி, இடக்கையில் சுவடி ஏந்தியுள்ள மாணிக்க வாசகரின் தலையில் ருத்திராக்கமாலை. வாசகர் போலவே கைகள் கொண்டு வீற்றிருக்கும் சேக்கிழாரின் செவிகளில் பூட்டுக்குண்டலங்கள். மேடையின் மேற்கில் ஓர் அறை அமைய, அதையடுத்து உள்சுற்றின் வெளிப்பகுதிக்கான தெற்கு வாயில். இவ்வாயிலின் வடபுறத்தே மண்டபத்தின் தென்மேற்கில் கிழக்குப் பார்வையாகவுள்ள சோமாஸ்கந்தர் திருமுன் தற்போது வெறுமையாக உள்ளது. அதையடுத்துப் பண்டகசாலை.

குறிப்புகள்

10. SII 26: 745-6.
11. தண்டபட்சம் பற்றி விரிவாக அறிய: இரா.கலைக்கோவன், முழங்கால் (ஜாநு), வரலாறு 26 பக். 130-149.
12. கோயிலார் காலபைரவராகக் கருதியிருந்த சேத்ரபாலரைக் களஆய்வில் அடையாளப்படுத்தியவர்கள் இந்நூலாசிரியர்கள். சேத்ரபாலர் வழிபாடு பற்றி அறிய: மு.நளினி, இரா.கலைக்கோவன், வலஞ்சுழி வாணர், பக். 160 - 175.

- வளரும்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.