http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 166
இதழ் 166 [ ஜூலை 2022 ] இந்த இதழில்.. In this Issue.. |
பாடல் 18: கனவிலேனும் வாராயோ? மூலப்பாடம்: காஞ்சி எழுத்துருக்களில் 住の江の 岸による波 よるさへや 夢の通ひ路 人めよくらむ கனா எழுத்துருக்களில் すみのえの きしによるなみ よるさへや ゆめのかよひぢ ひとめよくらむ ஆசிரியர் குறிப்பு: பெயர்: கவிஞரும் ஓவியருமான தொஷியுக்கி காலம்: பிறப்பு தெரியவில்லை. இறப்பு: கி.பி. 901. அரசராக முடிசூட்டிக்கொள்ள இயலாத துணைக்குடும்பத்தைச் சேர்ந்த இவர் அரச குடும்பத்தினருடன் தலைமுறை தலைமுறையாக மண உறவு கொள்ளும் குடும்பத்தில் பிறந்தவர். நம் சோழர்களுக்குக் கொடும்பாளூர் வேளிர்களும் பழுவூர் வம்சத்தினரும் அமைந்தது போல ஜப்பானின் அரசர்களுக்கு இவர்கள். இவரது வாழ்வின் உச்சம் பெற்ற பதவியாக அரசரின் மெய்க்காவல் வலங்கைப் பிரிவின் தலைவராக இருந்தார். இவரும் காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்று இருக்கிறார். இந்தப்பாடல் தவிரப் பிற தொகுப்புகளிலும் இவரது பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவரது பெயரிலேயே தொஷியுக்கிஷு என்ற தனிப்பாடல் திரட்டும் ஜப்பானிய இலக்கியத்தில் இவரது பங்களிப்பாகத் திகழ்கிறது. இவர் சிறந்த ஓவியரும் கூட. முந்தைய பாடலான "கடவுளும் காணா அதிசயம்" பாடலை இயற்றிய புலவர் நரிஹிராவின் மனைவியும் இவரது மனைவியும் சகோதரிகள். பாடுபொருள்: சந்திக்க வர மறுத்த காதலியை நினைத்து ஏங்குதல் பாடலின் பொருள்: சுமினோயேவின் கடற்கரைக்குக் கூட அலைகள் வந்து செல்கின்றன. ஆனால் என்னைக்காண வர மறுக்கிறாய் நீ. நேரில் வந்தால் பிறர் கண்ணில் படலாம், இருப்பினும் கனவிலும் வர மறுப்பது ஏனோ? சுமியோஷி என்பது இன்றைய ஓசகா மாகாணத்தில் இருக்கும் ஒரு நகரம். இதன் அருகில்தான் சுமினோயே கடற்கரை இருக்கிறது. கொக்கின்ஷு தொகுப்பிற்காகப் பாடல்களைத் தேர்ந்தெடுக்க கி.பி897ல் அரசவையில் ஒரு கவிதைப்போட்டி நடைபெற்றது. இப்பாடல் அதில் எழுதப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது. முந்தைய பாடல்களைப் போலவே இதிலும் வார்த்தை விளையாட்டுகள் இருக்கின்றன. யொரு என்ற சொல்லுக்கு அணுகுதல் என்ற பொருளும் இரவு என்ற பொருளும் உள்ளன. 2வது வரியிலும் 3வது வரியிலும் இரண்டு சொற்களுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இரவிலும் பிறர் கண்படாமல் கடலலை கரையைத் தழுவுவதுபோல் வரலாம். ஆனால் அதையும் நீ தவிர்க்கிறாய். கனவு வழியாகவாவது வரலாமே என்பது தலைவி கூறுவதுபோல் இங்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாடலை எழுதியவர் ஆணாக இருந்தாலும் ஒரு பெண் பாடும் தொனியிலேயே இருக்கிறது. நம் அகப்பாடல்களுடன் பல கோணங்களில் ஒப்பு நோக்கத்தக்கது இப்பாடல். தலைவன் தலைவியைக் காணப் பகலில் வந்தால் ஊராரின் அலர்ப்பேச்சுக்கு ஆளாகலாம் என்றெண்ணி இரவில் வரச்சொல்லலாம் என்றாலும் வழியில் இருக்கும் கொடிய விலங்குகள் துன்புறுத்துமே எனத் தலைவி கலங்குவதாக ஓர் அகநானூற்றுப் பாடல் கூறுகிறது. இதிலும் தலைவி தலைவன் வர மறுப்பதற்குக் காரணம் பிறர் கண்ணில் பட வாய்ப்புள்ளது என்று நினைக்கிறாள். பழங்கால ஜப்பானிய வழக்கத்தில் திருமணம் முடிந்தபின் மனைவி தன்வீட்டில் இருக்கத் தலைவன் அங்குச் சென்றுவருவான். தலைவியை விட்டு விலக நினைத்தால் அவள் வீட்டுக்குச் செல்வதை நிறுத்திக்கொள்வான். எனவே, பெண்களும் தலைவன் எப்போது தன் வீட்டுக்கு வருவதை நிறுத்துவானோ என்ற அச்சத்திலேயே பாதுகாப்பற்ற உணர்வுடனேயே வாழ்வார்கள். அத்தகைய அச்சம் கலந்த ஏக்கத்துடன் ஒரு பெண் பாடுவதுபோல் இப்பாடல் இயற்றப்பட்டிருக்கிறது. நம் அகப்பாடல்களைப் போலவே, ஜப்பானிய இலக்கியங்களிலும் கனவு என்பது வருமுன் உரைக்கும் கருவியாகக் கருதப்பட்டு வந்திருப்பதைப் பல பாடல்களில் காணலாம். காதலன் அல்லது காதலி தன் கனவில் வந்தால் தன்மீது அளவற்ற அன்பு கொண்டிருக்கிறார்கள் எனக் கருதியிருக்கிறார்கள். வெண்பா: கரைதனைத் தொட்டிடத் துள்ளித் தவழும் நுரைமிகு நீரலை அன்ன - அரையிருள் சூழினும் கவ்வை வருமெனின் காணவும் தீதோ உனையென் கனவு? (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் 24-ஜூலை-2022 அன்று வெளியானது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |