http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 177

இதழ் 177
[ மே 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 4
திருவிளையாட்டம் மாடக்கோயில் - 1
கீழ்வேளூர் மாடக்கோயில் - 3
சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர் - 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 70 (உள்ளும் புறத்தும் தனிமையே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 69 (கரையோர மேப்பிள்கள்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 68 (விழியிலிருந்து நினைவுக்கு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 67 (அலர்கூட்டும் வசந்தகாலக் கனவு)
இதழ் எண். 177 > கலையும் ஆய்வும்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 4
இரா.கலைக்கோவன், மு.நளினி

நல்லூர்

‘நல்லூர்’ எனும் பின்னொட்டுக் கொண்ட ஊர்கள் பெரும்பாலும் புதிதாக உருவாக்கப்பட்டனவாகவே அமைந்தன. வலஞ்சுழிக் கல்வெட்டுகளில் இருபத்தைந்து நல்லூர்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் உயிரெழுத்துக்களைத் தொடக்க எழுத்துக்களாய்க் கொண்டவை அழகிய மணவாள நல்லூர், இடையறநல்லூர், உத்தமநல்லூர் எனும் மூன்று மட்டுமே. ‘க, த, வ’ ஆகிய உயிர்மெய்களின் வருக்க எழுத்துக்களில் ஒவ்வொரு வருக்கத்திற்கும் நான்காய்ப் பன்னிரண்டு ஊர்கள் உள்ளன. ‘ப, ம’ ஆகிய எழுத்துக்களில் எழுத்துக்கு இரண்டும் ச, ந எழுத்துக்களில் எழுத்துக்கு ஒன்றும் உள்ளன. ஜனநாதநல்லூர், ஜயங்கொண்ட சோழ நல்லூர் எனும் இரண்டு ஊர்ப்பெயர்கள் ‘ஜ’ எனும் எழுத்தில் தொடங்குவனவாய் உள்ளன. ‘ரா’ எனும் உயிர்மெய்யில் ராஜகேசரி நல்லூரும் ராஜராஜ நல்லூரும் உள்ளன.

இந்நல்லூர்களுள் பதின்மூன்று அரச மரபினர் பெயர்களை ஏற்றுள்ளன. அவற்றுள் மூன்று குந்தவை நல்லூர், தீனசிந்தாமணி நல்லூர், வானவன் மாதேவி நல்லூர் என அரசியர் பெயர்களில் உள்ளன. அரசர் தம் பெயரேற்றுள்ள நல்லூர்களில், முதல் இராஜ ராஜர் பெயருடன் அமைந்தவை மூன்று. புகழ்பெற்ற பெருமாள் கோயில்கள் உள்ள ஊர்களின் பெயர்களை முன்னொட்டுகளாகக் கொண்டு திருவெள்ளறை நல்லூர், திருவரங்க நல்லூர், திருவேங்கட நல்லூர் எனும் பெயர்களும், பெருமாளின் நன்கறியப்பட்ட பெயரான ‘அழகிய மணவாளன்’ எனும் பெயர் கொண்டு அழகிய மணவாள நல்லூரும் திகழ்கின்றன.

கலயநல்லூர், அருமொழி தேவச் சதுர்வேதிமங்கலமாகப் பெயர் பெற்றுள்ளமை நோக்க, இப்பெயரேற்றம் முதல் இராஜராஜர் காலத்தில் நிகழ்ந்திருக்கும் எனக் கருதலாம். நல்லூர்களுள் மிகச் சுருங்கிய பெயருடையது பாப்பநல்லூர். பெரும் பெயரினவை மலைப்பவர் கேசரி நல்லூரும் விக்கிரம பாண்டிய நல்லூரும் ஆகும். வலஞ்சுழி ஈனும் ஊர்ப்பெயர்களுள் பாண்டிய மன்னர் ஒருவர் பெயரேற்று அமைந்துள்ள ஒரே ஊர் விக்கிரம பாண்டிய நல்லூர்தான்.

இருபத்தைந்து நல்லூர்ப் பெயர்களில், அதிக அளவிலான ஊர்ப்பெயர்களை, அதாவது ஒன்பது நல்லூர்களை நம் பார்வைக்கு வழங்கும் கல்வெட்டு மூன்றாம் இராஜராஜரின் பதினெட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டு வலஞ்சுழி வாணர் கோயில் இரண்டாம் சுற்றின் வடசுவரில் இடம்பெற்றுள்ளது.23

புரம்

‘புரம்’ என முடியும் பெயர்களை உடைய ஊர்கள் பொதுவாக நகரத்தார் ஊர்களாக அமையும் என்பர். வலஞ்சுழிக் கல்வெட்டுகளில் ஆறே ஊர்கள்தான், ‘புரம்’ என முடியும் பெயர்களைக் கொண்டுள்ளன. அவற்றுள் இராஜராஜபுரம் அகரம் என்றழைக்கப்பட்டமையால் அதை பிரமதேய ஊராகக் கொள்ளலாம். திருவனந்தபுரம் கேரளத்து ஊர். எஞ்சிய பாம்புரம், தென்கோமபுரம், முடிகொண்ட சோழபுரம், நந்திபுரமான இராஜேந்திர சோழபுரம் ஆகியவை நகரத்தார் ஊர்களாக இருந்தனவா அல்லது வேறு வகுப்பார் அங்கு வசித்தனரா என்பதற்குக் கல்வெட்டுகளில் சான்றுகள் இல்லை.

பிற பின்னொட்டுகள்

மங்கலம், ஊர், குடி, நல்லூர், புரம் தவிர்ந்த பிற பின்னொட் டுகளில் முடியும் ஊர்ப்பெயர்களாக நூற்றுப் பதினொரு ஊர்ப் பெயர்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் இருபத்தைந்து பெயர்கள் ‘த’ மற்றும் அதன் வருக்க எழுத்துக்களில் அமைந்துள்ளன. இருபத்தைந்து பெயர்கள் ‘க’ மற்றும் அதன் வருக்க எழுத்துக்களிலும் பதினாறு பெயர்கள் பவ்வருக்க எழுத்துக்களிலும் அமைய, இருபத்தொரு பெயர்கள் ‘வ, ச’ விலும் அவற்றின் வருக்க எழுத்துக்களிலும் உள்ளன. ‘ம, ந’ விலும் அவற்றின் வருக்க எழுத்துக்களிலும் பன்னிரண்டு ஊர்கள் பெயரேற்றுள்ளன. உயிரெழுத்துக்களில் அகர, இகரத் தொடக்கம் கொண்டு ஆறும் ஆகாரத்தில் இரண்டும் ‘ஈ, ஒ’ எழுத் துக்களில் எழுத்திற்கு ஒன்றும் பெயர் கொண்டுள்ளன. அவற்றுள் ஒருதாழைப்பள்ளி கேரளத்து ஊர். பல்லாரி ஆந்திராவில் உள்ளது.

இந்த நூற்றுப் பதினொரு ஊர்களுள் மிகச் சிறிய பெயரைக் கொண்டிருப்பது சேனை. இரண்டே எழுத்துக்களில் பெயர் கொண் டமைந்துள்ள இவ்வூர் வெள்ளை விநாயகச் சதுர்வேதி மங்கலத்தின் பிடாகையாகப் பதிவாகியுள்ளது. ஈங்கை, கலசை, குரடி, செஞ்சி, பசலை, பூண்டி, மதுரை, விற்கா, விழிஞை, திட்டை, புன்றை, நகரி ஆகிய பன்னிரண்டு ஊர்களின் பெயர்கள் மூன்றெழுத்துக்களில் முடிகின்றன. அன்பில், கருப்பு, கீழையில், குறுக்கை,24 குறும்பு, குன்றம், கோனிலம், கோமடம், கோட்டை, சிறிஞார், செடலம், செம்புறை, திருவாலி, பல்லாரி, பழையாறு, பாடகம், பெருவலி, நெல்வேலி, மாந்துறை, வாம்பறை, விழிஞர், வெள்ளறை, வல்லம் ஆகிய இருபத்து மூன்று ஊர்களின் பெயர்கள் நான்கெழுத்துப் பெயர்களாக அமைந்துள்ளன. மிக நீளமான பெயர்களாக ஐய்யூர் நியமத்து நந்திபுர வாழ்க்கையையும் தெராணக்குறி அம்பலத்தையும் பனங்கன்று ஐயாயிரவனையும் குறிப்பிடலாம்.

‘திரு’ என்ற முன்னொட்டுடன், பல்வேறு பின்னொட்டுக்களைக் கொண்டமைந்துள்ள ஊர்களின் பெயர்களாக இருபத்தொன்று அமைந்துள்ளன. அவற்றுள் பல பழம் பெரும் கோயில்களின் இருப்பிடங்களாக உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கனவாகத் திருவையாறு, திருவரங்கம், திருப்பேர், திருக்குடமூக்கு, திருப்பூவணம், திருவெண்காடு, திருவிடைமருது, திருநாகீசுவரம், திருவீழிமிழலை, திருக்குரங்காடுதுறை, திருமழபாடி, திருப்புறம்பியம் ஆகியவற்றைச் சுட்டலாம். இவற்றுள் திருப்புறம்பியம் தமிழ் மண்ணில் சோழப் பேரரசை நிறுவிய போர்க்கள ஊர்.

இந்த நூற்றுப் பதினொரு ஊர்களுள் கவித்தலம், எந்த்ர வியா கரண பண்டித சதுர்வேதிமங்கலமாகப் பெயர் மாற்றம் பெற்றது. மதுராந்தக ஈசுவரத்தின் தேவதானமாக விளங்கிய குறுக்கை பெருங் குறுக்கை, சிறுகுறுக்கை எனும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. தளி என்ற பின்னொட்டைக் கொண்டிருந்த முள்ளூர்த் தளி, நங்கத்தார் தளி ஆகிய இரண்டு ஊர்களில், நங்கத்தார் தளி நகரத்தார் ஆட்சி யிலிருந்தது. செடலம், கொறுவட்டி, வக்கானம், காஞ்சிக்குறி, குரடி, கோளிக் கிராமம், வாம்பறை, சிறிஞார், புதான்கோட்டகம், முடும்பியம் முதலிய பெயர்கள் பொருளறிய முடியாத பெயர்களாக உள்ளன.

நிர்வாக அமைப்புகள்

கல்வெட்டுகளில் ஊரோம், சபை, நாட்டார் எனும் அமைப்புகள் ஊர், நாடு சார்ந்த நிர்வாக அமைப்புகளாகச் சுட்டப்படுகின்றன. மகாசபை, பெருங்குறி மகாசபை எனக் குறிப்பிடப்படும் சபைகள் அந்தணர் குடியிருப்புகளான பிரமதேயங்களை நிர்வகித்தன. வெள்ளான் வகை ஊர்கள், ‘ஊரோம்’ என்றழைக்கப்படும் ஊர் உறுப்பினர்களின் நிர்வாகத்தில் அமைந்தன. கூற்றங்களும் நாட்டுப் பிரிவுகளும், ‘நாட்டார்’ எனும் அமைப்பின் கீழ் இயங்கின. வலஞ்சுழிக் கல்வெட்டுகளில், மதுராந்தக ஈசுவரம் தொடர்பான உத்தமசோழரின் ஆணைக் கல்வெட்டில் மட்டுமே நாட்டார் குறிக்கப்பெறுகின்றனர். இந்நாட்டார், ‘நாடு’ எனும் அமைப்பைச் சார்ந்த நிர்வாக அமைப்பினராவர்.

சபை

வலஞ்சுழிக் கல்வெட்டுகளில் முப்பத்தைந்து மங்கலங்கள் இடம் பெற்றுள்ளமையால், அம்மங்கலங்களை நிர்வகித்த பெருங்குறி மகா சபைகள் சிலவற்றின் செயற்பாடுகள் பற்றிய தரவுகள் கிடைத்துள்ளன. இச்சபைகளுள் பெரும்பான்மையன சோழவேந்தர் மூன்றாம் இராஜராஜர் காலத்தைச் சேர்ந்தவையாகவே உள்ளன. விருதராஜ பயங்கர வளநாட்டு நல்லாற்றூர் நாட்டு துர்க்கையார் அகரமான இராஜேந்திர சோழச் சதுர்வேதிமங்கலத்து சபை மூன்றாம் இராஜராஜரின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டில் அவ்வூர் அபிமுக்தீசுவரம் கோயில் திருமண்டபத்தில் கூடியது. ஏறத்தாழப் பதினைந்திற்கும் மேற்பட்ட சோழர் கல்வெட்டுகள் பெருங்குறி சபைகளின் நடவடிக்கைகளைப் பற்றிப் பேசியபோதும், இப்பத்தொன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு மட்டுமே சபை கூடிய இடத்தைப் பற்றிய தகவலைத் தருகிறது.25

துர்க்கையார் அகரம் நெடுங்காலம் பல்வேறு வகையான துன் பங்களை அநுபவித்து வந்த ஊர் என்பதை, ‘நம்மூர் நெடுங்காலம் உபத்திரமங்கள் பட்டும் பழிபட்டும் நோவுபட்டும் வருகையாலே’ எனும் கல்வெட்டுத் தொடர் நிறுவுகிறது. ஊரின் துன்பங்களை நினைத்து வருந்திய சபையார் அவற்றைக் களையும் பொருட்டுச் சில அறக்கட்டளைகளை அமைத்தமையை, ‘இக்கிராமத்துக்கு இரக்ஷாத்தமாகவும், விசையாத்தமாகவும்’ எனும் கல்வெட்டுத் தொடர் விளக்குகிறது. கிராமத்தின் நலம் பற்றிய சிந்தனை இச்சபைக்கு இருந்தாற் போலவே, தங்களை ஆண்ட பேரரசரின் நலம் பற்றிய கவலையும் இருந்தமையை, ‘உலகுடைய பெருமாள் திருமேனி கல்லியாண திருமேனி ஆகவும்’ எனுஞ் சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது.

ஊர் நலத்திற்காகவும், பேரரசர் நலத்திற்காகவும் அறச்செயல் ஒன் றைச் செய்யுமாறு இம்மகாசபைக்குப் பரிந்துரைத்தவராக ஆண்டார் அரனென்னும் பணி நல்லவரைக் கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. அவர் வழிகாட்டலை ஏற்ற சபை, வெள்ளைப் பிள்ளையார் கோயில் நிர்வாகிகள், வெள்ளைப் பிள்ளையாரின் பூசைக்கும், படையலுக்கும் முதலாக துர்க்கையார் அகரத்தில் வாழ்ந்த பலரிடமிருந்து விலைக்குப் பெற்றுத் திருநாமத்துக் காணியாக அநுபவித்துவந்த நிலம் நான்கு மாக்காணி முந்திரிகைச் சின்னத்தை ஊர்க்கீழ் இறையிலியாக்கியது.

இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள துர்க்கையார் அகரத்து சபை உறுப்பினர்கள் அனைவருமே தங்கள் பெயரின் பின்னொட்டாக, ‘பட்டஸ்ய’ என்னும் இனக் குறிப்புச் சொல்லைக் கொண்டுள்ளனர். இவர்களுள் சிலர், திருக்கோடிக்காவுடையான் பட்ட°ய, திருநாகீசுவரமுடையான் பட்டஸ்ய என ஊர்ப் பெயரினராகவும், வேறு சிலர், மணவாள பட்டஸ்ய, சங்கர பட்டஸ்ய என ஊர்ப் பெயரின்றித் தங்கள் பெயரை மட்டும் குறித்த நிலையிலும் கையெழுத்திட்டுள்ளனர்.

இதே போல் ஊர் நலத்திற்காக மற்றொரு சபையினர் கூடி நிறை வேற்றிய அறச்செயலை மூன்றாம் இராஜராஜரின் பதினான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று சுட்டுகிறது. ‘நம் ஊர் நெடு நாள் பட அழிந்து பயிர் ஏறாது . . . அழிந்தமையில் நம் ஊரில் சர்வ உபத்திரமங்கள் சமிக்கவும் உலகுடைய பெருமாள் திருமேனி கல்லியாண திருமேனியாகவும் விசையாத்தமாகவும் நம் ஊர்க்கு இரக்ஷாத்தமாகவும்’ என வேண்டி விக்கிரமசோழ வளநாட்டு ஸ்ரீபராந்தகச் சதுர்வேதிமங்கலத்து கிராமகாரியம் செய்யும் கூட்டப் பெருமக்கள், வலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார் கோயில் பூசைக்கும் பணியாரப் படையலுக்கும் உடலாகச் சிறிது நிலத்தை ஊர்க்கீழ் இறையிலியாகத் தந்தனர். இங்கும் ஊர் நலத்திற்காக இதனைச் செய்ய வழிகாட்டியவர் ஆனாங்கூரைச் சேர்ந்த ஆண்டார் அரbனன்னும் பணி நல்லவரே என்று கல்வெட்டுக் கண்காட்டுகிறது.26

சபையின் இந்த அறச்செயல் ஆவணத்தின் வழி, பராந்தகச் சதுர் வேதிமங்கலத்தின் ஊர்க்கணக்கு உத்தமபிரியனின் பெயர் கிடைத்திருப்பதுடன், ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள சபை உறுப்பினர்கள் பலருடைய பெயர்களும் கிடைத்துள்ளன. அத்துடன், ‘குடிமைக் கணக்கு’ என்ற பெயரில் தனியே ஒரு கணக்கர் ஊரளவில் இருந்தமையையும் அறியமுடிகிறது. பராந்தகச் சதுர்வேதிமங்கலத்துக் குடிமைக் கணக்காகத் திருநறையூர் உடையான் நாலாயிரப் பிரியன் வெளிச்சத்திற்கு வருகிறார். இந்த ஆவணத்திலும் கையெழுத்தாளர்களுள் சிலர் தங்கள் பெயரை மட்டும் எழுதிக் கையெழுத்திடப் பிறர் தங்கள் ஊர்ப்பெயரையும் இணைத்துக் கையெழுத்திட்டுள்ளனர்.

இரண்டு ஆவணங்கள், பராந்தகச் சதுர்வேதிமங்கலத்து கிராம காரியம் செய்த கூட்டப் பெருமக்களின் முடிவுகளைத் தெரிவிப்பன வாக அமைந்துள்ளன. அவர்கள் சபைப் பெருமக்களே என்பதை, ‘செய்யக் கடவதாகச் சொன்னோம், இப்படி செய்க பணியால்’ என்று ஊர்க்கணக்குகளுக்கு அவர்கள் உத்தரவிட்டுள்ள முறை தெளிவுபடுத்துகிறது. ஏற்கனவே வெள்ளைப் பிள்ளையார் கோயிற் செயற்பாடுகளுக்கு ஊர்க்கீழ் இறையிலியாகத் தரப்பட்ட நிலத் துண்டு ஒன்றிற்கு மாற்றாக வேறு நிலப்பகுதியை அளித்த இப்பெரு மக்கள் அது தொடர்பான வரியினங்களையும் நேர்செய்தமையை, ‘இந்நிலத்தால் சில்வரி பெருவரியும் சபாவிநியோகமும் நினைப்பிட்டு வரும் கடமை குடிமை உள்ளிட்டனவும் புஞ்சை நியோகப் படியே செய்யக் கடவதாகவும் சொன்னோம்’ எனும் கல்வெட்டுத் தொடர் நிறுவுகிறது. புஞ்சை நியோகப்படி வரியினங்களை அவர்கள் மாற்றியமைக்கக் காரணம் மாற்றாகத் தரப்பட்ட நிலங்கள் வாம்பறைப் பாழாகவும் புன்பயிரிடு நிலமாகவும் இருந்தமைதான் என்பதையும் இக்கல்வெட்டுத் தெளிவாகத் தெரிவிக்கிறது.27

இதே போல், மூன்றாம் இராஜராஜரின் பதினெட்டாம் ஆட்சி யாண்டில் இக்கூட்டத்தார், மன்னரின் பதினேழாம் ஆட்சியாண்டில் வெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கு அளிக்கப்பட்ட திருநாமத் துக்காணி நிலப்பகுதி ஒன்றிற்கு மாற்றாக, அதே அளவு நெல் விளைவு தரத்தக்க வேறு சில நிலத்துண்டுகளைப் பல்வேறு ஊர்களிலிருந்து தொகுத்து அளித்தமையை மற்றொரு கல்வெட்டு எடுத்துரைக்கிறது. இதனால், நிலைமைக்கு ஏற்றவாறு கொடைநிலங்களை அவற்றின் விளைச்சல் அளவிற்குக் குறைவில்லாத வகையில், வேறாக மாற்றித் தரும் உரிமையும் அப்படி மாற்றித் தரப்படும் நிலப்பகுதிகளுக்கு எத்தகு முறையில் வரி பெறலாம் என்பதைத் தீர்மானிக்கும் அதிகார மும் அது தொடர்பாக வரிப்பதிவுகளில் மாறுதல்களைச் செய்து கொள்ளுமாறு ஊர்க் கணக்கர்களுக்கு உத்தரவிடும் பொறுப்பும் சபையாரிடம் இருந்ததை அறியமுடிகிறது.28

அகிலநாயகச் சதுர்வேதிமங்கலத்துத் தேவதானம் அகிலநாயகச் சேரியின் மகாசபையார் வலஞ்சுழிக் கோயிலுக்குச் சில நிலத்துண்டுகளையும் மனைகளையும் திருநாமத்துக் காணியாக அன்றாடு நற்காசு 4500க்கு விற்றனர். இந்நிலத்துண்டுகளும் மனைகளும் படக்கைக் கொற் றங்குடியான குலோத்துங்க சோழ நல்லூரைச் சேர்ந்த கோமடத்து திருநட்டமாடி பட்டன் மகன் யஞ்ஞ பட்டன், அவர் தம்பி சுந்தரத் தோளுடையான், அவர்தம் தாயார் வண்டுவாழ்குழலிச் சாணி ஆகி யோருக்குச் சொந்தமானவை. இம்மூவரும் தாங்கள் செலுத்த வேண்டிய வரியினங்களைச் செலுத்தத் தவறியதுடன் ஊரை விட்டும் ஓடிப்போன நிலையில் சபையார் அவர்களுக்குப் பொறுப்பேற்று நெடுநாளாக அவ்வரியினங்களை வல்லத்து வருவாயிலிருந்து செலுத்தினர். இறுதியில் சிற்றரசர் நிலையிலிருந்து அப்பகுதியை நிர்வகித்து வந்த வந்தராயரின் ஆணைப்படி, ஓடிப்போனவர்களின் சொத்துக்களை அவர்கள் ஏற்கனவே எழுதி வைத்திருந்தவாறு கோயிலுக்கு விற்று வரிக்கணக்கை நேர்செய்தனர்.

கோப்பெருஞ்சிங்கர் காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டுச் செய்தியால், வரி தராது ஓடிப்போனவர்கள் நிலங்களை விற்கும் உரிமையை மகாசபை பெற்றிருந்த போதும், மேலாணையாக அப்பகுதிச் சிற்றரசர்களின் ஒப்புதல் தேவையாக இருந்தமையையும் கட்டப்படாத வரித்தொகைக்கு சபையார் தங்களைப் புணைத்து ஏதாவதொரு வகையில் அவ்வரி பாக்கியை நேர்செய்து வந்தமையையும் அறியமுடிகிறது. இந்த ஆவணத்தை இன்னம்பர் கோயில் தேவர்கன்மி நாயக பட்டன் எழுதினார்.29

மூன்றாம் குலோத்துங்கரின் முப்பத்தாறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டால், ஸ்ரீவெள்ளை விநாயகச் சதுர்வேதிமங்கலத்துப் பெருங்குறி மகாசபையார், வெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கு ஊர்க்கீழ் இறையிலியாக்கித் தந்த திருநாமத்துக்காணி நிலத்தின் நெல் வருவாயை அக்கோயில் தொடர்பான சில நிவந்தங்களுக்கென திட்டம் செய்து ஆணையிட்ட தகவலைத் தருகிறது. ‘இந்நெல்லு நாறு திருப்பள்ளித்தாமந் திருநந்தவனஞ் செய்கிற குடிகளுக்கும் திருப்பள்ளித்தாமம் பறித்து ஒடுக்குவாருக்கும் கொற்றுக்கு உடலாக நிவந்தங்கட்டப் பண்ணுக’ எனும் கல்வெட்டாணை கருத்தில் கொள்ளத்தக்கது. இந்த ஆவணத்தை ஊர்க்கணக்குக் கச்சினம் உடையான் சுந்தரத்தோளுடையான் நீறணிந்தான் எழுத, சபை உறுப் பினர்கள் நாற்பத்தெழுவர் கையெழுத்திட்டுள்ளனர்.30

இராஜேந்திர சோழ வளநாட்டு நெடுமணலான மதனமஞ்சரிச் சதுர்வேதிமங்கலத்துப் பெருங்குறி மகாசபையின் மூன்று ஆவணங்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒன்று மகாசபை வெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கான நிலத்துண்டுகளை இறையிலியாக்கியதையும் மற்றொன்று வெள்ளைப் பிள்ளையாரின் திருப்படிமாற்றுச் செலவி னங்களுக்காக இச்சபை அளித்திருந்த நிலவிளைவு ஊர்க்கீழ் இறையிலியாக்கப்பட்டதையும் தெரிவிக்கின்றன. இரண்டாம் ஆவணத்தை எழுதியவர் ஊர்க்கணக்கு பல்லவன் மாதேவி உடையான் ஐநூற்று நாற்பதின் பிரியன். இவ்விரு ஆவணங்களிலும் கையெழுத்திட்டுள்ள சபை உறுப்பினர்களுள் பெரும்பான்மையோர் ஆதனூர், இராயூர், மாங்களூர், கோமடம் ஆகிய நான்கு ஊர்களைச் சேர்ந்தவர்களாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் இராஜராஜசோழரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாக அமைந்திருக்கும் மற்றோர் ஆவணம், கிராமகாரியம் செய்யும் கூட்டப் பெருமக்கள், வெள்ளைப் பிள்ளையார் கோயில் தேவர்கன்மி, கோயில் கணக்கன் ஆகியோருக்கு அனுப்பிய ஓலையாக அமைந்துள்ளது. வெள்ளைப் பிள்ளையார் கோயில் நடைமுறைச் செலவினங்களுக்காக திருநாமத்துக்காணியாக அளிக்கப்பட்டிருந்த நெல்லின் அளவு குறிக்கும் இவ்ஆவணத்தை ஊர்க்கணக்கு திருவரங்கப் பிரியன் எழுதியுள்ளார். இதனால் சபைப் பணியில், ‘நிலக்கணக்கு’ என்றொரு கணக்கர் இருந்தமையும் தெரியவந்துள்ளது.31

மூன்றாம் இராஜராஜர் காலத்ததாகக் கொள்ளத்தக்க முற்றுப் பெறாத நிலையிலுள்ள கல்வெட்டொன்று மன்னரின் நலத்திற்காகக் குலோத்துங்கசோழ வளநாட்டு வேளா நாட்டு பிரமதேயமான இராஜேந்திரசோழச் சதுர்வேதிமங்கலத்து கிராம கூட்டப் பெருமக்கள், வலஞ்சுழிப் பிள்ளையாருக்குத் திருவமுதுக்கு உடலாக ஆண்டு தோறும் நூறு கலம் நெல்லளிக்க சபா விநியோகத்தில் எழுதிக் கொண்டு கோயிலாருக்கு ஓலையனுப்பிய தகவலைத் தருகிறது.32 ஆள்வோரின் நலம் வேண்டியும் தங்கள் ஊர் வளமாக விளங்கக் கருதியும் இது போல் கொடைகளை சபைகள் அளித்தமை வேறு சில ஆவணங்களாலும் தெரியவரும் உண்மையாகும். இவற்றால், மூன்றாம் இராஜராஜர் காலத்தில் வலஞ்சுழிப் பகுதி ஊர்களும் பொதுவாகவே சோழநாடும் துன்பமுற்ற நிலையில் இருந்தமை தெளிவாகிறது.

சபை நடவடிக்கைகள் சிலவற்றை அரசு அப்படியே ஏற்றுப் போற்றிய நிலையைப் புதிதாகக் கண்டறியப்பட்ட முதல் குலோத்துங்கரின் இருபத்தொன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுத் தெரியப் படுத்துகிறது. வலஞ்சுழியில் மன்னர் நலம் கருதி அமைக்கப்பட்ட இராஜேந்திரசோழன் மடத்திற்கு மடப்புறமாகக் குலோத்துங்க சோழ வளநாட்டு இன்னம்பர் நாட்டுப் பராந்தகச் சதுர்வேதிமங்கலத்து சபையார் சிறிதளவு நிலத்தை விற்றனர். இந்த ஆவணத்தைக் கல்வெட்டாக வெட்ட உத்தரவிட்டுத் திருமுகம் அனுப்பிய மன்னர் குலோத்துங்கர், ‘சபை விலை விற்ற பிரமாணப்படியே அந்நிலம் மடப்புறமாக நாமும் தந்தோம். இந்நிலம் மடப்புறமாகக் கைக்கொண்டு திருத்திப் பயிரேற்றி அனுபவித்து இறையிறுத்து பிரமாணப்படியே கல்வெட்டுவிக்க’ என்று அறிவித்திருப்பது நோக்கத்தக்கது.

இரண்டு ஊர்களைச் சேர்ந்த சபையாரும் அவ்வூர்களில் வெள்ளான் காணி உடையோரும் இணைந்து செயலாற்றிய நிலையைப் புதிய கல்வெட்டொன்று வெளிச்சப்படுத்துகிறது. அதன் வழி, வலஞ்சுழிக் கோயில் தேவதானமான குலோத்துங்க சோழ மங்கலத்து சபையாரும் கலிகடிந்த சோழ மங்கலத்து சபையாரும் அவ்வூர்களில் வெள் ளான் காணி உடையாரும் இணைந்து முடியாழ்வார் கன்மிகளுக்கு அன்றாடு நற்காசு இருபதிற்கு நிலம் விற்றுத்தந்த தகவலைப் பெற முடிகிறது.33

‘விவஸ்தா பத்திரம்’ எனும் பெயரிலமைந்த ஆவணம் ஒன்றை மற்றொரு புதிய கல்வெட்டு வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ளது.34 இராஜராஜச் சதுர்வேதிமங்கலத்து சபை, ‘ஊர்க்கீழ் இறையிலி’ என்ற வருவாய்ச் சொல்லை விளக்குமிடத்து, ‘இறுக்க வேண்டும் இந்நெல்லு முந்நூற்று ஒருபத்து எண்கலனே எழு குறுணியும் ஊர்மாவிந்த சில்வரி பெருவரி ஊரிலே மகா மடக்கிலே கூட்டிக் கொள்ளவும் திருநாமத்தில் ஊர்க்கீழ் இறையிலியாகக் கழிக்கவும் என்று எழுதின விவஸ்தா பத்திரப்படியே’ என இப்பத்திரத்தை நினைவு கூர்ந்துள்ளது. ‘ஊர்க்கணக்கு மகாசனப்பிரியனும் திருச்சிற்றம்பலப் பிரியனும் உள்ளிட்ட கணக்கர் கண்டு’ எனும் இந்த ஆவணத்தின் தொடர், ஒவ்வோர் ஊரவையிலும் பல கணக்கர்கள் இருந்தமையைத் தெளிவுபடுத்துகிறது. தனியருக்கோ, நிறுவனத்திற்கோ ஊராரால் கொடையாகத் தரப்படும் நிலவிளைவிற்கான வரிகளைச் செலுத்தும் பொறுப்பை ஊராரே ஏற்றுக்கொண்ட நிலையையே கல்வெட்டுகள், ‘ஊர்க்கீழ் இறையிலி’ எனும் கலைச்சொல்லால் வெளிப்படுத்துகின்றன.

புதிதாகக் கண்டறியப்பட்ட முதல் குலோத்துங்கரின் திருமுகக் கல்வெட்டுப் பராந்தகச் சதுர்வேதிமங்கலத்து மகாசபை உறுப்பினர் கள், அவ்வூரின் பல்வேறு சேரிகளில் வசித்தமையை நிறுவுகிறது. இராஜேந்திர சோழச் சேரி, உத்தமசோழச் சேரி, இராஜராஜச் சேரி, பராந்தகச் சேரி, திரிபுவனமாதேவிச் சேரி, குந்தவைச் சேரி, வீரநாராயண சேரி, மும்முடிசோழச் சேரி, விக்கிரமசோழச் சேரி, மண்ணை கிடாந்தகச் சேரி, முடிகொண்டசோழச் சேரி எனும் இப்பல்வேறு குடியிருப்புகளும் சேர்ந்தே பராந்தகச் சதுர்வேதிமங்கலத்தை உருவாக்கியுள்ளாற் போலவே பிற அந்தணக் குடியிருப்புகளும் பல்வேறு சேரிகளின் தொகுப்புகளாக அமைந்திருந்தன.

நடுநிலைத் தன்மையுடைய கணக்கர்களான மத்யஸ்தர்கள் சபை ஆவணங்களில் அவற்றை எழுதியவர்களாகவோ, சான்றாளர்களாகவோ தவறாது இடம்பெறுவர். ஆனால் வலஞ்சுழியில் கிடைக்கும் பெரும்பாலான சபை ஆவணங்கள் ஊர்க்கணக்குகளாலும் கூட்டப் பெருமக்களாலுமே எழுதப் பெற்றுள்ளன. விதிவிலக்காகச் சில ஆவணங்கள் மத்யஸ்தர்களாலும் எழுதப்பெற்றுள்ளன. சேத்ரபாலருக்காக உலகமாதேவியாரின் அலுவலருக்குக் கூழையூர்ப் புதுமங்கலத்து நாராயணன் வாசுதேவன் விற்றுத்தந்த நிலத்திற்கான ஆவணத்தை எழுதியவராகக் கூழையூர் மத்யஸ்தன் வலியன் சண்டேசுவரரின் பெயர் பதிவாகியுள்ளது. மூன்றாம் இராஜராஜர் காலத் தனியார் நிலவிலை ஆவணம் ஒன்றை எழுதியவராகப் பேராவூருடையான் திருஅகத்தீசுவரமுடையானைச் சந்திக்க முடிகிறது. மூன்றாம் இராஜராஜரின் பதிbனட்டாம் ஆட்சியாண்டில் வெள்ளைப் பிள்ளையாருக்கு ஆதிதேவனான நாராயண பட்டன் தந்த நிலவிலைத் திரிவுத்தீட்டை எழுதியவராக ஆனாங்கூர் மத்யஸ்தன் கணவதீசுவரமுடையான் பொன்னம்பலக் கூத்தன் அறிமுகமாகிறார்.

முதல் குலோத்துங்கர் கால மடப்புற ஆவணத்தில் பன்னிரண்டு மத்யஸ்தர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களுள் அலங்காரத்தான் புள்கையான் ஊரன் மஹாயன், மன்றத்துள் ஆடிய பெருமானான ஸ்ரீராமப் பிரியன், வெண்காமன் ஆடவலானான ஜனவாரப் பிரியன், அரவணையான் நாராயணனான பிரியன், அரங்கன் மாலறி கேசுவன், அம்பலத்தாடி பிரியாதான், அம்பலத்தாடி அரங்கத்தரசன், வேளான் திருவரங்கமுடையான், முந்நூற்றுவன் சிராமன், மலைக்கினிய நின்றான் சிகாரி மாறன், திருவரங்கன் பெரியானான திருச்சிற்றம்பலப் பிரியன் எனும் பதினொருவர் பெயர்கள் கிடைத்துள்ளன. பன்னிரண்டாவது மத்யஸ்தரின் பெயர் கல்வெட்டில் சிதைந்துள்ளது.

வலஞ்சுழிக் கல்வெட்டுகளால் வெளிப்படும் பிற ஊர்க்கணக்கு களாகப் பாதிரிக்குடியில் பணியாற்றிய பறியலூர் கிழான் பட்டப் பிரியனையும் இராஜராஜச் சதுர்வேதிமங்கலத்து வாரியக் கணக்கு மகாசனப் பிரியனையும் கொள்ளலாம்.

நிலவிற்பனை, வரிநீக்கம், ஊர், அரசு ஆகியவற்றின் நலம் கருதி நிறுவனங்களுக்கு நிலக்கொடை அளித்தல், கொடை நிலங்களின் வரியினங்களைச் செலுத்தும் பொறுப்பு, வரிக்கணக்குகளைப் பதிவு செய்தல், அரசாணைகளை நிறைவேற்றல், பிற ஊரவைகள், தனியார் அமைப்புகள் ஆகியவற்றோடு இணைந்து கூட்டுறவாகச் செயலாற்றல் முதலிய பல பணிகளில் சபை முனைந்திருந்தமையை வலஞ்சுழிக் கல்வெட்டுகளால் அறிகிறோம்.

குறிப்புகள்
23. வரலாறு 14 - 15, ப.28.
24. குறுக்கையில் வர்க்கபேதத்துடன் பாதபந்தத் தாங்குதளம் பெற்ற இருதள வேசர விமானம் இன்றும் கல்வெட்டுகளுடன் திகழ்வதைக் காணமுடிந்தது. பார்வையிட்ட நாள்: 15.10.2005.
25. வரலாறு 14 - 15, பக். 35 - 37.
26. வரலாறு 14 - 15, பக். 44 - 45.
27. வரலாறு 14 - 15, பக். 33 - 35.
28. வரலாறு 14 - 15, ப. 28.
28. வரலாறு 14 - 15, பக். 22 - 24.
30. SII 8 : 231.
31. திருவலஞ்சுழி கல்வெட்டுகள்: 206 - 208.
32. திருவலஞ்சுழி கல்வெட்டுகள்: 198.
33. வரலாறு 14 - 15, பக். 4 - 6.
34. வரலாறு 14 -15, பக். 14 - 15.

- வளரும்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.