http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 178

இதழ் 178
[ ஜூன் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர் - 3
Nitheeswarar temple of Srimushnam
கூரம் கோயில்களின் கல்வெட்டுகள்
திருவிளையாட்டம் மாடக்கோயில் - 2
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 5
ஜப்பானியப் பழங்குறுநூறு - 74 (கேட்டதும் கிடைத்ததும்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 73 (முகிலில் மறையும் மலர்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 72 (காதல்மொழிகள் கடலலை போலே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 71 (நெல்வழிசெல் இசை!)
இதழ் எண். 178 > கலையும் ஆய்வும்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 5
இரா.கலைக்கோவன், மு.நளினி

ஊரவை

வெள்ளான் வகை ஊர்களை நிர்வகித்த அவையே ஊரவை. இவ்ஊரவை உறுப்பினர்கள் தங்களைச் சுட்டிக்கொள்ளுமிடத்து, ‘ஊர்க்குச் சமைந்த ஊரோம்’ என்று குறிப்பிடுவதைப் பல கல்வெட்டுகளில் காணமுடிகிறது. வலஞ்சுழியில் பதிவாகியுள்ள இரண்டாம் இராஜராஜரின் மெய்க்கீர்த்தியோடு அமைந்த பதினாறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் கோனிலத்து ஊரவையாரைப் படம்பிடிக்கிறது.35 இக்கோனிலம் காவிரியின் வடகரையிலிருந்த விக்கிரமசோழ வளநாட்டின் கீழமைந்த இன்னம்பர் நாட்டில் இணைந்திருந்த ஊர்களுள் ஒன்றாய் விளங்கியது.

நித்த விநோத வளநாட்டு நல்லூர் நாட்டுப் பெருங்கறையூர் கிழவர் வேளார் திருவேகம்பம் உடையாரான இராஜராஜச் சோழவதரையர் வலஞ்சுழி இறைவனுக்கு நந்தாவிளக்குப்புறமாக அளித்த நிலம் இக்கோனிலத்தில் அன்றாடு நற்காசு முந்நூறுக்கு விலைக்குப் பெறப்பட்ட ஊர்ப் பொதுநிலமாகும் இந்நிலத்தின் விற்பனை ஆவணத்துக் கையெழுத்தாளர்களாக மலையாண்ட நாயகன், வேளான் வாமனன், சேக்கிழான் கயிலாயன், அம்பர் நாட்டு வேளான், வடகரைநாட்டு வேளான், திருசிற்றம்பல வேளான், வேளான் திருவலஞ்சுழி உடையான், வேளான் நாயகன், வில்லி திருவலஞ்சுழி, சிறியான் பெருங்காடன், தில்லை நாயகன், உகின்துறையன், பெருங்காவிதி மலை எனும் ஊரவை உறுப்பினர்கள் வெளிப்படுகின்றனர்.

இவ்ஊரவை உறுப்பினர்களுள் சிலர் தற்குறிகளாக இருந்தமையால், அவர்களுக்கு மாற்றாகப் படிப்பறிவு பெற்றிருந்தவர்கள் ஆவணத்தில் தற்குறிகளின் பெயர்களை எழுதி, அவர்கள் சார்பில் தாங்கள் கையெழுத்திட்டிருப்பதாகக் குறித்துள்ளார்கள். இதைக் கல்வெட்டு, ‘திருச்சிற்றம்பல வேளானும் வடகரைநாட்டு வேளானும் சயிஞ்சாதன்மை ஆனமைக்கு இவை ஊர்க்கணக்கு நெற்குப்பை உடையான்’ என்று குறிப்பிடுகிறது. விற்கப்பட்ட நிலத்தை, ‘எங்கள் ஊரில் ஊர்ப் பொதுவாய் எங்கள் காணியாய் நாங்கள் இறுத்து வருகிற நிலம்’ என்று சுட்டுவதும் நோக்கத்தக்கது. இந்த ஆவணத்தை ஊர்க்கணக்கு நெற்குப்பை உடையான் துலையாத செல்வன் எழுதியுள்ளார்.

வலஞ்சுழிக் கோயிலின் வடக்குச் சுவரிலுள்ள மூன்றாம் இராஜராஜரின் ஆட்சியாண்டு தெரியாத கல்வெட்டொன்று ஆரலூர், சிறுகடம்பூர், பாப்பநல்லூர், கூத்தனூர் கொடியாலம், மணக்குடி, ஆலைவேலி எனும் நல்லாற்றூர் நாட்டு ஊர்களையும் அவ்வூர்களின் ஊரவரையும் வெளிப்படுத்துகிறது. இவ்வூர்களை பிடாகைகளாக உள்ளடக்கி இருந்த இராஜேந்திரசோழச் சதுர்வேதிமங்கலத்து சபையார், ஊர் நலத்திற்கும் மன்னரின் நலத்திற்கும் வேண்டி, வெள்ளைப் பிள்ளையாருக்கு ஆலைவேலியில் ஊர்க்கீழ் இறையிலியாக நிலமளித்தனர். இந்தக் கொடைக்கு ஒப்புதலளித்த ஊரார், அந்நிலத்துண்டுக்குரிய கடமை, குடிமை உள்ளிட்ட வரியினங்களைத் தாங்களே ஏற்றுச் செலுத்துவதாக உறுதிகூறி அதை ஆவணப்படுத்தினர். அந்த ஆவணத்தில் ஆறு ஊர்களைச் சேர்ந்த ஊரவரும் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களுள் சிலர் தற்குறிகளாக இருந் தமையும் அவர்கள் சார்பில் வேறு சிலர் கையெழுத்திட அனுமதிக்கப்பட்டமையும், ‘இவை குமாரக்குடையானும் குன்றமுடையான் பரமாந்தனும் கைம்மாட்டாங்கானமைக்கு இவை குன்றமுடையான் எழுத்து’ எனும் தொடரால் தெரியவரும் உண்மைகளாம்.36

நகரத்தார்

வலஞ்சுழி சார்ந்த ஊர்களுள் நகரத்தார் ஆளுகையில் இருந்த ஊராகச் சுட்டப்படும் ஒரே ஊர் நங்கத்தார் தளியாகும். இவ்வூர் நிலத்துண்டொன்று சேத்ரபாலர் கோயிலுக்கு விற்கப்பட்டதைத் தெரிவிக்கும் புதிய கல்வெட்டு சேத்ரபாலர் கோயில் விமான வடக்குச் சுவரிலிருந்து கண்டறியப்பட்டது. இதன்படி நங்கத்தார் தளி நகரத்தார் அன்றாடு நற்காசு இருபத்திரண்டைப் பெற்றுக்கொண்டு ஊர்ப் பொதுநிலத்தின் ஒரு பகுதியை சேத்ரபாலர் கோயிலுக்கு விற்றுத்தந்தனர். ‘கேட்டு நிகழ்ந்த விலையாவணமாக’க் கல்வெட்டில் குறிக்கப்படும் இந்த ஆவணத்தை வெண்ணெய்ப்புத்தூர் உடையான் அரையன் இராஜாதித்தன் எழுதியுள்ளார்.37 மதுராந்தக ஈசுவரத்துக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள நகரத்தார் எவ்வூரினர் என்பதைக் கல்வெட்டுச் சிதைவினால் அறியக்கூடவில்லை.

வரிகள்

சோழர் காலத்தில் வழக்கிலிருந்த வரியினங்களைப் பற்றிப் பல வலஞ்சுழிக் கல்வெட்டுகள் குறிப்பிட்டாலும், உத்தமசோழரின் மதுராந்தக ஈசுவரத்து நிலக்கொடைக் கல்வெட்டே அவற்றின் பட்டியலைத் தருகிறது. நாடாட்சி, ஊராட்சி, வட்டிநாழி, பிதாநாழி, கண்ணாலக் காணம், வண்ணாரப் பாறை, குசக்காணம், நீர்க்கூலி, இலைக்கூலம், ஈழம்பூட்சி, மன்றுபாடு, மாவிறை, தீயெறி, நல்லா, நல்bலருது, நாடுகாவல், ஊடுபோக்கு, விருதுபடி, உல்கு, ஓடக்கூலி, இடைப்பாட்டம், வாலமஞ்சாடி, அட்டுக்கறை, தறிப்புடவை, ஊர்க் கழஞ்சு, தட்டார்பாட்டம் எனும் இந்த இருபத்தாறும் உத்தமசோழர் காலத்தே அரசால் பெறப்பட்ட வரியினங்கள் என்பதை, ‘தட்டார் பாட்டமுள்ளிட்டுக் கோத்தொட்டுச் சென்ற பாலது எவ்வகைப் பட்டதும் கோக் கொள்ளாததாகவும்’ எனும் அரசாணைத் தொடர் தெளிவாக்கும். நிலக்கொடை, அது தொடர்பான வரிவிலக்குப் பற்றிப் பேசும் சோழர் கால அரசாணைகள் பலவற்றுள் இவ்வரியினங்கள் இடம்பெற்றிருப்பது கண்கூடு. இவ்வரியினங்களை விரிவாக ஆராய்ந்த ப. சண்முகம், சோழர் ஆட்சிக்காலத்தை நான்கு பருவங்களாகப் பகுத்து, ஒவ்வொரு பருவத்தும் எந்தெந்த வரியினங்கள் வழக்கிலிருந்தன என்பது குறித்து அட்டவணைகள் வெளியிட்டுள்ளார்.38 அவற்றுள் முதல் பருவத்து வரியினங்களாக உத்தமசோழர் அரசாணைக் கல்வெட்டில் இடம்பெறும் அத்தனை வரியினங்களும் குறிக்கப்பட்டுள்ளன.

சோழர் கால வரியினங்களுள் பெரும்பான்மையன நிலஞ் சார்ந்த வரியினங்களாகவே அமைந்தன. உல்கு, தரகு, தரகுகூலி முதலியவை சுங்க வரிகளாகப் பெறப்பட்டன. பல வரிகள் தொழில் சார்ந்து கொள்ளப்பட்டன. தறிப்புடவை, தட்டார்பாட்டம், குசக்காணம், ஓடக்கூலி, வண்ணாரப்பாறை முதலியன இவ்வகையின. சிறு வரியினங்களாக நல்லா, நல்லெருது, கண்ணாலக் காணம் ஆகியவற்றைச் சுட்டலாம். நிர்வாகச் செலவினங்களுக்காகப் பெறப்பட்ட வரியினங்களாக நாடாட்சி, ஊராட்சி, நாடுகாவல், மன்றுபாடு, ஊர்க்கழஞ்சு ஆகியவற்றைக் கூறலாம்.

பெரும்பாலான மூன்றாம் இராஜராஜர் கல்வெட்டுகளில் நிலஞ் சார்ந்த வரியினங்களாகச் சில்வரி, பெருவரி, நினைப்பிட்டு வரும் கடமை, குடிமை, சபா விநியோகம் ஆகியன குறிக்கப்படுகின்றன. ஓரிரு கல்வெட்டுகளில்,39 ‘மாவீந்த சில்வரி’ எனும் சொல்லாட்சி இடம்பெற்றுள்ளது. மாவீந்த என்ற சொல்லிற்கு நில விழுக்காட்டுப்படி பகிர்ந்து எனப் பொருள் உள்ளமை நினைக்கத் தக்கது. நினைப்பிட்டு வரும் கடமை என்பது போலவே, நினைப்பிட்டு வரும் வற்கங்கள் எனும் தொடரும் காணப்படுகிறது.40

சபா விநியோகம் தவிர, காவேரிக் குலை உள்ளிட்ட விநியோகங்களும் வரியினங்களாகச் சில கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. ஊரவரின் ஆவணமாக அமைந்துள்ள இதே காலக் கல்வெட்டொன்று, ‘காவேரிக் குலை அணைக்கு சென்Üர் வெட்டி உள்ளிட்டு தேவைகளும்’ எனக் குறிப்பது கவனிக்கத்தக்கது.41 குலை எனும் சொல் ஆற்றின் கரைகளைக் குறிக்கப் பயன்பட்டாலும், காவேரிக் குலை, காவிரியின் கரைப் பராமரிப்புக்குச் செலுத்தப்பட்ட வரியாகவே கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.

சென்னீர்வெட்டி கால்வாய்ப் பராமரிப்பிற்கான கட்டாய ஊழியமாகும். ‘அணை’ நீர்த்தேக்கத்தைக் குறிப்பதால், காவேரிக் குலை அணைக்குச் சென்னீர் வெட்டி எனும் தொடர், அணைக்கரைப் பராமரிப்பு ஊழியம் எனும் பொருள் தருவதாகக் கொள்ளலாம்.

வெட்டி எனும் சொல் தனித்து வரும்போது கட்டாய உழைப்பாகச் செலுத்தும் வரியைக் குறிக்கிறது. சிறப்புக் கால வரியினங்களுள் ஒன்றாகச் சுட்டப்பட்டுள்ள, ‘திருநாள் குடிமை’ தொடர்புடைய கோயிலாம் திரிபுவன வீரேசுவரத்தின் பெயரோடு பதிவாகியுள்ளது. திருநாள் குடிமை உள்பட்ட தேவைகளும் எனும் தொடர் இவ்வரியினம் மேலும் சில சிறு வரிகளை உள்ளடக்கி இருந்ததோ எனக் கருதச்செய்கிறது. திருநாள் குடிமை எனும் வரியினத்திற்கு இணையாகத் திருநாள் தேவை எனும் வரியினத்தையும் கல்வெட்டு களில் காணமுடிகிறது.42

சென்னீர் வெட்டி போல வெள்ளான் வெட்டி எனும் வரியினமும் கல்வெட்டொன்றில் இடம்பெற்றுள்ளது. இது நிலக்கிழாருக்கான கட்டாய ஊழியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்தராயம், அந்தராயக் குடிமை, கடமை, குடிமை, தேவை எனும் வரியினங்கள் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் அந்தராயம் நிலவரி தவிர்ந்த பிற சிறு வரிகளைக் குறிக்கக் குடிமை, கடமை என்பன உழுகுடிகள் செலுத்திய வரிகளைச் சுட்டுகின்றன.

அந்தராயம், குடிமை எனும் இருவரியினங்களையும் இணைத்த சொல்லாக அந்தராயக் குடிமையைக் கொள்ளலாம். வெட்டி போல ஊழியமாகக் கொள்ளும் வரியினங்களுள் ஒன்றாகத் தேவை அமைந்துள்ளது. இவை தவிர, பஞ்சவாரம், தண்டக் காணம் எனும் வரிகளும் வழக்கிலிருந்தன. தண்டக் காணம் குற்றங்களுக்காகப் பெறப்பட்ட அபராதப் பொன்னைக் குறிக்க, பஞ்சவாரம் அந்தணர் ஊர்களில் அரசுக்குச் செலுத்தப்பட்ட குறைந்த வரியாக அமைந்தது.

அர்ச்சனாபோகத் தேவதானமாக அளிக்கப்பட்டிருந்த இன்னம்பர் நாட்டுத் தத்தன்குடி, ஒதியன்குடி நிலம் மூன்று வேலிக்கு, உத்தமசோழராகக் கருதப்படும் பரகேசரிவர்மரின் ஆட்சிக்காலத்தில் பஞ்சவாரமாக அளக்கப்பட்ட நெல் பத்துக் கலமாக இருந்ததை முதல் இராஜராஜரின் இருபத்தொன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. இந்நெல்லுடன் ஐந்தே முக்கால் கழஞ்சு மூன்று மஞ்சாடி இரண்டு மாப் பொன்னும் பஞ்சவாரமாகத் தரப்பட்டது.43

வரிகள் முழுமையாக நீக்கப்பட்டமைக்கும் வரிகளுள் சில கொள்ளப்பட்டுச் சில நீக்கப்பட்டமைக்கும் வலஞ்சுழிக் கல்வெட்டுகளில் சான்றுகள் உள்ளன. ‘பெருவரி இறுத்து சில்வரியும் வெள்ளான் வெட்டியும் இம்மடத்துக்கு உடலாவதாக’ என அறிவித்து மடப்புற நிலம் விற்கப்பட்டதை முதல் குலோத்துங்கர் கல்வெட்டு உணர்த்துகிறது. விலக்கப்பட்ட வரிகளைக் கொடையாளர் செலுத்தாமல், நிலத்துண்டைக் கொடையாக அளித்த ஊராரே அவ்வரிகளைச் செலுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிலையையும் ஊர்க்கீழ் இறையிலி ஆவணங்களில் காணமுடிகிறது. கடமை, குடிமை வரிகளைச் செலுத் தமுடியாமல் நிலங்களைத் துறந்து உரிமையாளர்கள் ஓடிப்போன நிலைகளும் இருந்தமையைக் கோப்பெருஞ்சிங்கரின் இருபத்து நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு எடுத்துரைக்கிறது.

குறிப்புகள்
35. SII 8 : 226.
36. வரலாறு 14 - 15, பக். 31 - 33.
37. பு.க. 5.
38. P. Shanmugam, The Revenue System of the Cholas 850 -1279, New Era Publications, Madras, 1987.
39. வரலாறு 14 - 15, பக். 35 - 37.
40. வரலாறு 14 - 15, பக். 33 - 37.
41. வரலாறு 14 - 15, பக். 31 - 33.
42. வரலாறு 14 - 15, பக். 31 - 33.
43. SII 8 : 222.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.